ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அறிவிப்பு


====

ஜெயமோகன் சிறுகதைகள்

====

உயிர்மை பதிப்பகம். சென்னை . பக்கங்கள் 512 கெட்டி அட்டை . விலை ரூபாய் 275

**

உயிர்மை பதிப்பகம் ஜெயமோகனின் சிறுகதைகளை ‘ஜெயமோகன் சிறுகதைகள் ‘ என்ற பெரிய தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான, உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் .அத்தேடலை அன்றாடவாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலாற்றிலும் ,அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ளது இது. ‘பரிணாமம் ‘ போன்ற மிகைபுனைவுக்கதைகளும் ‘தேவகிச்சித்தியின் டைரி ‘ போன்ற யதார்த்தவாதக் கதைகளும் இவற்றில் உள்ளன. ‘ கண்ணாடிக்கு அப்பால் ‘ போல அதீத உளவியலைச் சார்ந்த கதைகளும் வரலாற்றை மறுஆக்கம் செய்யும் ‘பாடலி புத்திரம் ‘ போன்ற கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சிகள் கொந்தளிக்கும் ‘ கரியபறவைவின் குரல் ‘ போன்ற கதைகளும் ‘மாடன்மோட்சம் ‘ போன்ற நகைச்சுவைக் கதைகளும் உள்ளன. அறிவியல் ஊகமொன்றைச் சார்ந்த ‘ஜகன்மித்யை ‘ யும் , தொன்மக் கதையான ‘படுகையும் ‘ , படிமக்கதையான ‘நாக ‘மும் அவை வெளிவந்த காலத்தில் வாசகர்களை பெரிதும் கவர்ந்தவை. மகாபாரதப் பின்னணி கொண்ட ‘திசைகளின் நடுவே ‘, மரபிசையைப்பற்றிய ‘ ஏறும் இறையும் ‘ கிரேக்கத் தொன்மமரபுக்குள் செல்லும் ‘முடிவின்மையின் விளிம்பில் ‘ போன்று முற்றிலும் புதிய சூழல்களுக்குள் செல்லும் கதைகள் பல உள்ளன. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவை தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள்.

ஜெயமோகன் பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தவர். கல்லூரி நாட்களில் பிரபல வார இதழ்களிலும் தீபம் இதழிலும் தன் பெயர் உட்பட பலபெயர்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் தன் பெற்றோரின் மரணம் அதன் விளைவான அலைச்சல் ஆகியவற்றால் மன அமைப்பு மாறியபிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தபோது கணையாழி இதழில் 1986 ல் வெளியான ‘ நதி ‘ என்ற படைப்பே தன் முதல் சிறுகதை என்று கருதுகிறார். ஞானி நடத்திய நிகழ் இதழ் 1989 ,90 களில் வெளியிட்ட ‘படுகை ‘ , ‘ போதி ‘ முதலிய கதைகள் தமிழில் பரவலாக கவனிக்கப்பட்டு ஜெயமோகனின் இலக்கிய வருகையை நிறுவின. கோமல் சுவாமிநாதனின் ‘ சுபமங்களா ‘ மாத இதழ் ‘ ஜகன்மித்யை ‘ ‘ ரதம் ‘ ‘நிழலாட்டம் ‘ ‘வெள்ளம் ‘ போன்ற சிறுகதைகளின் வழியாக அவருக்கு பொதுமக்களிடையே ஈர்ப்பை உருவாக்கியது. வாசந்தியின் ஆசிரியத்துவத்தில் இந்தியா டுடே இதழ் ‘நாகம் ‘ ‘ ஆயிரங்கால் மண்டபம் ‘ போன்ற கதைகளின் வழியாக அந்த ஈர்ப்பு பரவலான அங்கீகாரமாயிற்று. காலச்சுவடு, புதியநம்பிக்கை, காலம் போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதினார். சமீபத்தில் ஓம்சக்தி மாத இதழ் அவரது பல கதைகளை வெளியிட்டுள்ளது.

இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது.

ஜெயமோகன் குறுநாவல்கள்

====

உயிர்மை பதிப்பகம். சென்னை . பக்கங்கள் 272 கெட்டி அட்டை . விலை ரூபாய் 175

நாவலின் விரிவை அடையமுயலும் சிறுகதைகளே குறுநாவல்கள். இத்தொகுதியில் உள்ள பத்து குறுநாவல்களில் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் உள்ளது. திகில் என்ற ஆதார உணர்வை எழுப்பியபடி விரியும் ‘டார்த்தீனியம் ‘ ‘நிழலாட்டம் ‘ போன்ற குறுநாவல்களும் , மகாபாரதப் பின்னணியில் ஆழ்ந்த வாழ்க்கைத் தரிசனத்தை முன்வைக்கும் ‘பத்மவியூகம் ‘ ‘ இறுதிவிஷம் ‘ போன்ற கதைகளும் , முதிரா இளமைக்காலத்தில் காமத்தின் மலர்தல்தருணத்தைச் சொல்லும் ‘கிளிக்காலம் ‘ மற்றும் தொன்மப்பின்னணி கொண்ட ‘ அம்மன்மரம் ‘ போன்ற கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. கலைக்கும் வாழ்க்கைக்குமான உறவை விசாரணைசெய்யும் ‘லங்காதகனம் ‘ இயற்கையுடனான வாழ்க்கைச்சமரை பிரம்மாண்டமாகச் சித்தரிக்கும் ‘ மண் ‘ போன்ற குறுநாவல்கள் வெளிவந்த காலம் முதல் பரபரப்பாகப் பேசப்படுபவை. பத்து தனி நாவல்களுக்குச் சமானமான இக்கதைகளினூடாக ஒரு வாசகன் விதவிதமான நிலக்காழ்ச்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம்செய்யும் அனுபவத்தை அடையலாம். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது.

கணையாழி இதழின் தி ஜானகிராமன் நினைவுக் குறுநாவல்திட்டம் குறுநாவல்கள் எழுத தூண்டுதலாக இருந்தது என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ‘கிளிக்காலம் ‘ ‘டார்த்தீனியம் ‘ ‘ பூமியின் முத்திரைகள் ‘ போன்ற குறுநாவல்கள் அதில் பிரசுரமானவை. அவரது எழுதும் வேகத்துக்கு கணையாழி போதாமலானதால் ‘அம்மன் மரம் ‘ பாலசங்கர் என்று அவரது அண்னன் பெயரில் பிரசுரமானது. பிரசுர வசதி இல்லாமல் ‘லங்காதகனம் ‘, ‘மடம் ‘ போன்ற குறுநாவல்கள் நேரடியாகவே தொகுப்புகளில் சேர்க்கப்பட்டன. கண்ணன் – மனுஷ்யபுத்திரன் ஆசிரியத்துவத்தில் காலச்சுவடு இதழில் பத்மவியூகம் வெளியாகி ஜெயமோகன் குறுநாவல்களிலேயே அதிக அளவுக்கு வாசக அங்கீகாரத்தைப் பெற்றது. கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் பிரசுரமான ‘மண் ‘ பெரிதும் விரும்பப்பட்ட ஆக்கம்.

ஜெயமோகன் வாழ்க்கைக் குறிப்பு

====

ஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குமரிமாவட்டம் திருவரம்பு கிராமத்தில் எஸ்.பாகுலேயன் பிள்ளைக்கும் பி. விசாலாட்சி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார் . வணிகவியல் இளங்கலை படித்தாலும் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டைவிட்டு துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந்தார். அப்போது பல ஆசிரமங்களில் தங்கி ஆன்மீகக் கல்வியில் ஈடுபட்டிருக்கிறார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலைபேசித்துறையில் தொலைபேசி உதவியாலராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1987ல் ஜவகர் யாத்ரி என்ற பொதுப்பயணச்சீட்டுடன் இருமுறை இந்தியா முழுக்க தனியாக நீண்ட பயணங்கள் நடத்தினார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு ஊரில் வேலைக்குச் சேர்ந்தார். 1991 ல் வாசகியாக அறிமுகமான அருண்மொழிநங்கையை மணம் புரிந்துகொண்டார். இரு குழந்தைகள் அஜிதன் , சைதன்யா. 1997 முதல் நாகர்கோவில் வாசி.

முதல் பிரசுரம் கெ ஆர் மகாதேவன் நடத்திய ரத்னபாலா சிறுவர் இதழில். 1986ல் முதல் கதை எனக்கருதும் ‘நதி ‘ வெளிவந்தது.1990ல் வெளிவந்த ‘ரப்பர் ‘ நாவல் அமரர் அகிலன் பரிசு பெற்றதன் மூலம் பொதுவாக அறியப்படலானார். 1991ல் அகரம் வெளியீடாக முதல் சிறுகதைத் தொகுதி ‘திசைகளின் நடுவே ‘வெளிவந்தது. ‘மண் ‘ [1995] , ‘ஆயிரங்கால் மண்டபம் ‘ [1998] , ‘கூந்தல் ‘ [2003] ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ‘விஷ்ணுபுரம் ‘[1997] ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ [1999] ‘கன்யாகுமரி, ‘ [2000] ‘காடு, ‘ [2003] ‘ஏழாம் உலகம் ‘ [2004] ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன.

பத்து திறனாய்வுநூல்களை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ‘ இலக்கியமுன்னோடிகள் வரிசை ‘ ஏழு நூல்கள் தமிழினி வெளியீடாக 1993 ல் வெளிவந்தன. ‘நாவல் ‘[1991] நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் [ 1998] நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க்கவிதை- தேவதேவனை முன்வைத்து [ 2001] ஆகியவை பிற நூல்கள். சிறுவர்களுக்கான நாவலாகிய ‘பனிமனிதன் ‘ சங்க இலக்கிய ரசனையான ‘சங்க சித்திரங்கள் ‘ அனுபவக்கதைகளான ‘ வாழ்விலே ஒருமுறை ‘ தத்துவ நூலான ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் ‘ ஆகியவை பிற நூல்கள்.

ரப்பர் நாவலுக்காக ஜெயமோகன் 1989 ல் அகிலன் நினைவுப்பரிசு பெற்றார்.. ஜகன்மித்யை கதைக்காக 1991ல் ‘கதா ‘ விருது பெற்றார். 1992 ல் இலக்கியத்துக்கான தேசிய விருதான ‘சன்ஸ்கிருதி சம்மான் ‘ அவருக்கு வழங்கப்பட்டது. மலையாளத்திலும் எழுதிவருகிறார்.

ஜெயமோகனின் அனைத்துக் கதைகளையும் ஒருசேரப்படிக்கும் வாய்ப்பை இந்நூல்கள் அளிக்கின்றன.

uyirmmai pathippagam

11/29 Subramanniyam Street

Abiramapuram

Chennai -600018

Phone [044] 24993448

uyirmmai@yahoo.co.in

****

தமிழினி வெளியீடுகள்

====

உள்ளுணர்வின் தடத்தில்

கவிதைகளைப்பற்றி

ஜெயமோகன்

ஒரு திறனாய்வாளராக ஜெயமோகன் ஆரம்பித்த நாள்முதலே கவிதைகளைப்பற்றி எழுதிவருகிறார். பலசமயங்களிலாக அவர் கவிதை குறித்து எழுதியவை இத்தொகுப்பில் உள்ளன. பிரமிள், அபி, பசுவைய்யா, கலாப்ரியா ஆகியோரைப் பற்றிய விரிவான மதிப்பீட்டாய்வுகளும் முக்கியமான சில மதிப்புரைகளும் மலையாளக்கவிதைகளுடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகளும் இத்தொகுதியில் உள்ளன. கவிதை என்பது அகவயமானதும் அருவமானதுமான ஆழ்தளத்துக்குச் செல்லும் இலக்கியவெளிப்பாடு என்று நம்பும் ஜெயமோகன் கவிதைத் திறனாய்வு என்பது அதை புறவயமானதாகவும் திட்டவட்டமானதாகவும் வகுத்துக் கொள்ளும் முயற்சி என்று எண்ணுகிறார். ஆகவே இக்கட்டுரைகள் தெளிவான மொழியில் நுட்பங்களைப்பற்றி பேசக்கூடியவையாக உள்ளன. கவிதைத் திறனாய்வும் கவிதைத்தன்மை கொள்ள முடியும் என்பதற்குச் சான்றாகும் அழகிய படிமங்கள் கொண்ட தீவிரமான நடையில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை

பக்கம் 250 விலை ரூபாய் 150

****

எதிர்முகம்

இணைய விவாதங்கள்

ஜெயமோகன்

இணையம் ஜெயமோகனின் முக்கிய ஊடகமாக கடந்த சிலவருடங்களாக மாறியுள்ளது. இந்நூலில் மரத்தடி இணையதளத்தின் வாசகர்கள் கேட்ட வினாவுக்கான பதில்களும் அதையொட்டிய சில விவாதங்களும் தொகுக்கபட்டுள்ளன. இலக்கியம் குறித்தும் இலக்கியத் திறனாய்வு குறித்தும் அடிப்படைகளைத் தெளிவுபடுத்தும் ஜெயமோகன் இத்தளங்களில் அவர்மீது பரவலாக முன்வைக்கப்பட்டுவரும் ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆணித்தரமாக பதில் சொல்கிறார். சமூகவியல் சார்ந்தும் மதம் சார்ந்தும் எழுப்பப்பட்ட ஐயங்களையும் தன் கோணத்தில் விளக்குகிறார். தெளிவுக்கும் திட்டண்ட்டத் தன்மைக்கும் இப்பதில்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன. ஜெயமோகனின் இலக்கியத் திறனாய்வுக்கட்டுரைகளைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியான நூல் இது

பக்கம் 250 விலை ரூபாய் 150

Thamizini Pathippakam

Vasanthkumar

130/2 Avvai Shanmugam Salai

Gopala Puram

Chennai 86

Ph [044] 28110759

tamizhininool@yahoo.co.in

கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு

==== ====

தீராநதி இதழில் ஜெயமோகன் எழுதிய வாழ்விலே ஒருமுறை என்ற அனுபவக்கதைத்தொடர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய இதழ்களில் எழுதப்பட்ட அனுபவக் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது . அந்தரங்கமான அனுபவத்திலிருந்து பொதுவான சிந்தனைத் தளம் நோக்கி நகரக்கூடிய கட்டுரை- கதைகள் இவை. வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது ஒரு சுயசரிதையைப் படிக்கும் அனுபவத்தை அளிப்பவை. தெளிவும் உற்சாகமும் கொண்ட நடையில் கவித்துவச்சாயலுடன் எழுதப்பட்ட படைப்புகள்

பக்கம் 180 விலை ரூ 90

Kavitha Pathippakam

Sethu Sokkalingkam

15, Masilamani Theru

T Nagar

Chennai 17

Phone [044] 24364243

நூல் தொடர்புகளுக்கு

Dilip kumar,

Book Shop

Near Ramakirshna Madam

26 /10 RK Mut Salai Ist floor

Mylapore

Chennai 4

Ph : 28353063

dilipbooks@eth.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு