புதியமாதவி, மும்பை
அண்மையில் சிங்கையிலிருந்து ஜெயந்தி சங்கர் எழுதி வெளியிட்டிருக்கும் மூன்று புத்தகங்கள் என்னைத் தேடி
வந்தன.(நாலே கால் டாலர் -16 சிறுகதைகள், முடிவிலும் ஒன்று தொடரலாம் – மூன்று குறுநாவல்களின்
தொகுப்பு,ஏழாம் சுவை – 11கட்டுரைகள்),எவ்விதமான சின்னத் துண்டு கடிதமும் இணைக்கப்படாமல்.
எப்படி முகவரி கிடைத்திருக்கும் என்று வழக்கமான துப்பறிதலை விலக்கி வைத்து விட்டு புத்தகங்களைப் புரட்ட
ஆரம்பித்தால் ஒன்றிலிருந்து ஒன்றாக மூன்று புத்தகங்களையும் ஒருசேர வாசிக்க வைத்த எழுத்தின் ஆளுமையும்
ஜெயந்தி கதை மாந்தர்களும் என் கண்ணாடிக் கதவுகளில் பளிச்சிட்டு மின்னும் மும்பையின் மழை மேக
மின்னலைப் போல மின்னி கொட்டி நனைத்து இருப்பதை நானே புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது
உண்மை.
ஜெயந்திசங்கரின் கதைகள் பலவற்றை மின்னிதழ்களில் தொடர்ந்து வாசிக்கும் வாசக அனுபவம் ஏற்கனவே
இருந்தாலும் ஒருசேர வாசிக்கும்போது தான் ஏழாம் சுவையை அனுபவிக்க முடிகிறது.
கதை மாந்தர்களிடமிருந்து விலகி நிற்காமல் அதே நேரத்தில் அவர்களின் உணர்வுகளில் கலந்து
அதிகப்படியாக
அழாமல், கூச்சலிடமால ரொம்பவும் சர்வ சாதாரணமாக கதைகளை நகர்த்திச் செல்வது தான் ஜெயந்தியின்
கதைச் சொல்லும் பாணியாக அமைந்துள்ளது.
கதைகளும் கதை மாந்தர்களும் பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே இருப்பதால் ஜெயந்தியின் கதை
மாந்தர்களின் நிஜமுகம் அலங்காரங்கள் இன்றி அன்றாடம் சந்திக்கும் பெண்களாக அமைந்து விடுகிறார்கள்.
சிங்கையும் சிங்கையின் புலம்பெயர்ந்த வாழ்வும் அந்த வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும்
கதையின் கருப்பொருளாகி ஜெயந்தியின் கதைகளைத் தனித்துவமாக்கி சிறப்பு செய்கின்றன.
சட்டமும் ஒழுங்கும் மனித நேயத்தைக் கொன்றுவிட்டு என்ன சாதிக்க முடியும் என்பதை மிகவும் நேர்த்தியாக
படைத்திருக்கும் கதை “ஈரம்” . கதையின் முடிவில் மகன் மகிழ்ச்சியுடன் வந்துடும்மா என்று சொல்வதை
எதிர்பார்ப்பவளுக்கு ஏமாற்றம். மகன் சொல்கிறான்.’எடுத்ததுமே, ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு
கிளம்பி இங்க வரேன்ற?’ கதை முடிகிறது நாம் அப்போதுதான் இன்னும் ஆழாமாக யோசிக்க
ஆரம்பிக்கின்றோம்
வாழ்க்கையின் பொருளியல் தேவைகள் முன்னிறுத்தப்படும்போது தாயன்பு, மனித நேயம் எல்லாமே
இரண்டாவது, மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவதை. சிங்கையின் சட்டம் ஒழுங்கான சமுதாயம், இந்திய
வாழ்வின் பொருளியல் தேடலின் அவலம் இரண்டையும் ஒரு சேர ஒரே கதையில் -ஒரு கல்லில் இரண்டு
மாங்காய்’ அடித்த மாதிரி சாதித்திருக்கிறார் ஜெயந்தி.
திரிசங்கு கதை முழுக்க முழுக்க ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதை.
கதை முழுக்கவும் சிறுவனின் மனநிலையில் அவனுடைய வயதுக்கு ஏற்ற வார்த்தைகளுடன் எவ்விடத்திலும்
அதை மீறாமல் எழுதப்பட்டிருக்கும் கதை.
பாலர் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுகள் என்றாகிவிட்ட போட்டிகள் நிறைந்த
உலகத்தை புதிய முறையில் சொல்லும் கதை பந்தயக்குதிரை.
மிருகன் என்ற கதையும் கதைக்கருவும் எவரும் தொடாத செய்தி. பல இடங்களில் பத்திரிகைகள் வாயிலாக
இப்படிப்பட்ட மிருகங்களும் மனித வடிவில் நடமாடுவதை வாசித்துவிட்டு மறந்துவிடுகின்றோம்.
ஒரு குழந்தையை, குழந்தையின் பெற்றவர்களை எப்படி எல்லாம் அச்சம்பவம் பாதிக்கும் என்பதும் இம்மாதிரி
நிகழ்வுகள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டால்தான் தன் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம் இன்னொரு
குழந்தைக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்ற சமூக அக்கறையும் தொனிக்க எழுதப்பட்டிருக்கும் கதை.
தையல் சிறுகதையும் எம்.ஸீ சிறுகதையும் பெண்ணியத்தளத்தின் மிகத் தீவிரமானக் கருத்துகளை நறுக்கு
தெறித்தாற்போல கச்சிதமாக படைத்திருக்கும் கதைகள்
இவருடைய பெண்கள் குடும்பம், குடும்ப உறவுகளின் பின்னணியில் குடும்பத்திற்கு முதலிடம் கொடுத்து
தன்னை, தனக்கான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்படுபவர்களாக படைக்கப்பட்டிருந்தாலும்
அவர்களிடம் ஏற்படும் சிலச் சிந்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் சொல்லிச்செல்கிறார்.
முடிவுலும் ஒன்று தொடரலாம் குறுநாவலில் ‘ பலமாதங்கள் சேர்ந்துவாழ்ந்து ஒத்திகை பார்த்துவிட்டு ஒத்து
வரும் போலிருந்தால் மணமுடிக்கலாமென்று யோசித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டு பிறகு
சம்பிரதாயப்படி ஒருமுறை ஊரைக் கூட்டி மணமுடிப்பார்களாம். லாவண்யாவிற்குக் கேட்கக்கேட்க அப்படியே
தலைகீழாய் நடக்கும் விநோதத்தை அறிந்து ஒரு புறம் நெருடலாய் இருந்தாலும் மறுபுறம் அதில் இருந்த
நடைமுறை சாதகங்களையும் யோசிக்க ஆரம்பித்தாள்’ (பக் 72) என்று அவள் யோசிக்க ஆரம்பிப்பதில்
சொல்லாமல் சொல்லிச்செல்வார்.
ஆண்-பெண் இல்லற வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பதுதான் முக்கியம்.
அந்தப் புரிதல் இல்லை என்றால் அழகு, அறிவு, வேலை, சம்பாத்தியம் எல்லாமே அர்த்தமிழந்துவிடுகின்றன.
‘பொல்லாதவனனோட குடித்தனம் நடத்திடலாம், புரியாவதனோட எப்படி குடித்தனம் நடத்த?’ (பக் 79) என்று
கதைப்போக்கில் சொல்லிச் செல்வதை ரசிக்கலாம்.
கதை மாந்தர்களில் போக்கில் கதை நகர்த்திச் செல்லும்போது கதையாசிரியர் எவ்வளவு கவனமாக இருந்தாலும்
நுழைந்துவிடுவது ஏற்படுவதுண்டு. வேண்டியது வேறில்லை என்ர குறுநாவலில் செல்வி என்ற வீட்டுவேலைக்கு
வந்திருக்கும் பெண் ‘இந்த முறை அலங்காரங்கள் வழக்கத்தைவிடக் கொஞ்சம் கலையுணர்வோடு இருந்ததாகச்
செல்விக்குத் தோன்றியது’ (பக் 38) என்று சொல்லும் போது கலையுணர்வு என்ற பெரிய விசயத்தை
புரிந்து கொள்ளக்கூடிய திறன் செல்வியின் மீது விழுந்திருக்கும் ஆசிரியரின் பார்வை. ஆனாலும் அடுத்து வரும்
உரையாடல்கள் அதை ஓரளவு சமன் செய்திருப்பது இதம் தருகிறது.
குழந்தையை எடுத்துக்கொண்டு கிஷோர் ஓடிவிடுகிறான். லி·ப்டில் தேடி ஓடும் தாயின் மனநிலையில்
அந்த நேரத்தின் உணர்வு கொந்தளிப்பில் மூளை ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களில் ஓடுவதாக காட்டியிருப்பதை
ஏற்றுக்கொள்வதற்கில்லை.
ஜெயந்தியின் ஏழாம்சுவை உயிர்மை, அமுதசுரபி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.தன்னுடைய
அரைநிர்வாண உடையையே ஓர் ஆயுதமாக்கியவர் மகாத்மா காந்தி என்ற வரலாற்று செய்தியுடன் விரிகிறது
ஆடைமொழி என்ற கட்டுரை. சிங்கையின் பல்வேறு விழாக்கள், நம்பிக்கைகள், செய்திகள் தரும் கட்டுரைகளாக
ஏழாம்சுவை கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
புலம் பெயர்ந்த வாழ்க்கை நம்மில் பலருக்கு திணிக்கப்பட்டுள்ளது, சிலருக்கு கை கூடிய கனவாகி இருக்கிறது.
ஆனால் அந்தப் பின்புலத்தில் எழுதுபவர்கள் அதிகமில்லை என்ற ஒரு குறைபாட்டை முழுக்கவும் இல்லாது
செய்திருக்கிறது ஜெயந்தி சங்கரின் ஒவ்வொரு பக்கங்களும்.தோழி ஜெயந்திசங்கருக்கு வாழ்த்துகள்.
———–
puthiyamaadhavi@hotmail.com
- கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!
- கபாலகார சுவாமி கதைப்பாடல் அறிமுகம்
- 500 டாலர் நகைச்சுவை
- SIVANANDA ORPHANAGE IN CHENNAI TAMIL NADU
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4
- ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?
- விரைந்து தமிழினி வாழும்
- வானலையில் நூல் வெளியீடு
- ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்
- பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு
- தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்
- கடித இலக்கியம் – 13
- கலக்… கலக்… கானிஸ்பே
- வண்ணக் கோலங்கள் !
- ஒரு கோரிக்கை
- அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது
- கண்ணகியும் ஐயப்பனும்
- கஅபா ஒரு சிறுவிளக்கம்
- மனிதகுல எதிரிகள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29
- பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி
- இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது
- முத்தம் போதும்
- “ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”
- கணிதம் என்பது அறிவியல் மொழி
- பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை
- இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
- தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!
- யு க ங் க ள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9)
- க ட வு ளே !