ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

ராபின் ரைட்


ஜஸ்வந்த் சிங் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்.

இந்தியப்பிரதமர் வாஜ்பாயி அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது, அவருடன் வந்த ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் இதழுக்கு அளித்த பேட்டி.

கேள்வி: வெகுகாலம் உறைந்து போயிருந்த உறவுகளுக்குப் பின்னர், இந்தியாவும் அமெரிக்காவும் இன்று நெருங்கிய தோழர்களாகப் பார்க்கப்படுகின்றன. இதற்கு காரணமாக பரவலாக எல்லோரும் உங்களையே காரணமாகச் சொல்லுகிறார்கள். ஏன் இந்த மாற்றம் ?

பதில்: நான் இதற்கு காரணமல்ல. நேரமும், சூழ்நிலையும், மாறும் உலக நிலையும்தான் காரணங்கள். இரண்டாம் உலகப்போர் முடிந்த வருடங்களில் அமெரிக்கா தனது தேவைகள் ஒரு குறிப்பிட்ட கூட்டணியில் நிறைவேறும் என்று உணர்ந்திருந்தது. அந்தக் கூட்டணியில் இந்தியா அப்போது இல்லை. இந்தியாவும், தான் சுதந்திரம் அடைந்த வருடங்களில், போரிடும் இரண்டு பெரும் சக்திகளுக்கு இடையில் ஒரு சமநிலை நோக்கி ‘கூட்டுசேரா நாடுகள் ‘ அமைப்பில் முக்கிய பங்கு வகித்தது. இன்று இந்திய அமெரிக்க உறவு, ஒரு உறுதியான, தெரிந்த எதிர்பார்ப்புகளோடு கூடியதாய் அமைவது தேவை. இன்னும், இருவரும் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அடுத்தவரின் தேவைகளும், உணர்வுகளும் புரிந்ததாக அவை அமைய வேண்டும்.

கேள்வி: உறவு மேம்பட்டிருந்தாலும், 1998 அணுகுண்டு சோதனை போது இந்தியா-பாகிஸ்தான் இருவர் மீதும் விதிக்கப்பட்ட அமெரிக்க தடைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. அந்த தடைகள் இந்தியாவை எவ்வாறு பாதித்திருக்கின்றன ?

பதில்: விதிக்கப்பட்ட தடைகள் நீங்கள் எதிர்பார்த்த விளைவுகளை தந்தனவென்று நாங்கள் நம்பவில்லை. 100 கோடி மக்களை தாங்குகிறது இந்தியப் பொருளாதாரம். இதுவரை தடைகள் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே தந்திருக்கின்றன. சென்ற வருடம் வியாபாரம் 27 சதம் அதிகரித்திருக்கிறது. தடைகளால் இந்திய பொருளாதாரம் தன் முழுமையான அளவு வளரவில்லையென்று சொல்லலாம். இந்திய ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்து வரும் இறக்குமதி அதிகரிக்கவில்லை. எனவே நீங்கள்தான் உங்களை காயப்படுத்திக்கொள்கிறீர்கள்.

கேள்வி: அணு பரிசோதனைகளிலும், Comprehensive Test Ban Treaty கையெழுத்துப்போடுவதிலும் இந்திய நிலைப்பாடு மாறும் என்று எதிர்பார்க்கிறீர்களா ? எந்த சூழ்நிலையில் இந்தியா அணுகுண்டுவை உபயோகப்படுத்தும் ?

பதில்: எந்த சூழ்நிலையையும் நான் பார்க்கவில்லை. எந்தப் போரிலும் முதலில் நாங்கள் அணுகுண்டு உபயோகிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறோம். மேலும் அணுகுண்டு வைத்திராத தேசங்கள் மீது அணுகுண்டு பிரயோகம் செய்யமாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறோம். இந்த பெரும் அழிவுதரும் ஆயுதங்கள் மற்ற நாடுகள் எங்கள் மேல் எதையும் உபயோகிக்காமல் இருக்க நாங்கள் வைத்திருக்கும் தடைப்பொருட்கள்தாம்.

இந்தியா அணுகுண்டு சோதனை செய்வதை நாங்களாக நிறுத்திவைத்திருக்கிறோம். Comprehensive Test Ban Treaty அமலுக்கு வருவதற்கு தடையாக இருக்க மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறோம். அதுவரை எங்களது தானாக மேற்கொண்ட நிறுத்தமும் தொடரும். Comprehensive Test Ban Treatyயைப்பற்றி நாங்கள் சிந்தித்து வருகிறோம். எங்கள் நாட்டுக்குள் இது பற்றி ஒருமித்த கருத்து வரும்வரை காத்திருக்க வேண்டும். தயை செய்து பொறுமையாக இருங்கள். நவம்பரில் மீண்டும் பாராளுமன்றம் கூடுகிறது. அப்போது இது பற்றி முழு விவாதம் நடக்குமென்றும், எங்களது அரசியல் தலைவர்கள் இது பற்றி ஒரு பொதுக் கருத்துக்கு வருவார்கள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: Central Intelligence Agency CIA அமெரிக்க உளவுஸ்தாபனம் இன்னும் இரண்டு வருடங்களில் காஷ்மீர் காரணமாய் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நிகழ 40திலிருந்து 60 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்று கணக்குப் போடுகிறது. நீங்கள் இந்த ஆபத்து நிகழ எவ்வளவு வாய்ப்பு இருக்குமென்று கருதுகிறீர்கள் ?

பதில்: அமெரிக்க உளவுஸ்தாபனம் பற்றி எனது கருத்தை கூற இயலாது. இந்த பெரிய ஸ்தாபனம் கணக்குபோட்டு எத்தனை தவறியிருக்கிறது என்று யோசித்துப்பார்த்தீர்களென்றால் உங்களுக்கே உண்மை தெரியும்.

போர் நடக்க வாய்ப்பே இல்லை. நான் கொள்கை வகுக்கும் இடத்தில் இருப்பவன். எனக்கு என்ன நடக்கிறது என்றும் நாங்கள் என்ன செய்வோம் என்றும் தெரியும். 1999இல் கார்கில் போரின்போது எங்களுக்கு பெரிய சோதனை நடந்தது என்பதையும், அதை நாங்கள் எப்படி சமாளித்தோம் என்பதையும் நீங்களே அறிவீர்கள். அந்த கட்டுப்பாடு உங்களிடமோ அல்லது மற்ற நாடுகளிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமென்றோ வந்ததல்ல. எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. உலக மனித சமுதாயத்தின் மேல் எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. எங்கள் ராணுவம் காயப்பட்டது. என் மகன் கார்கிலில் போர் புரிந்தான். நாங்கள் 500க்கும் மேல் மிகச்சிறந்த போர் வீரர்களை இழந்தோம். இருந்தும் எங்களது கொள்கை மிகுந்த கட்டுப்பாடோடு காப்பாற்றப்பட்டது.

கேள்வி: இந்திரா காந்தி முதல் பல அரசாங்கங்கள் காஷ்மீருக்கு சுயாட்சி தர ஒப்புக்கொண்டன. உங்கள் அரசாங்கம் ஏன் அந்த சுயாட்சியை தரக் கூடாது ?

பதில்:உள்நாட்டு பிரச்னைகளையும், அதிகாரப்பரவலையும் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளோம். எல்லா மாநிலங்களும் பங்கு பெறும் இந்தக் குழுவின் கூட்டத்தில் 10 நாட்களுக்கு முன்புதான் கலந்து கொண்டேன். நாங்கள் மாநிலங்களுக்கு இன்னும் பல அதிகாரங்களை தருவது எப்படி என்று விவாதித்தோம். இது காஷ்மீர் பற்றி மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் அதிக அதிகாரங்களை தருவது என்று இந்த அரசாங்கம் முனைந்து வருகிறது.

நீங்கள் காஷ்மீர் பிரச்னை வெறும் நிலம்பற்றிய சண்டை என்று கருதுவீர்களேயானால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றுதான் நான் கருதுவேன். 38000 மைல் சதுர நிலம் சீனாவுடன் நிலத்தகறாறில் இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதை ஆச்சரியத்தோடுதான் நான் பார்க்கிறேன். முழு வடக்கு பிராந்தியமும் நிலப்பிரச்னையில் இருக்கிறது.

கேள்வி: சிறுபான்மையினர் மீதான வன்முறைக்காகவும், முக்கியமாக கிரிஸ்தவ மிஷனரிகள் மீதான வன்முறைக்காகவும், காஷ்மீரிலும் பஞ்சாபிலும் வன்முறைகொண்டு அரசாங்கம் செயல்படுவதும், பள்ளிகளில் இந்து தேசீயவாதத்தை திணிப்பதையும், ஒரு கலாச்சாரம், ஒரு மதம் ஒரு அடையாளம் என்பதில் அழுத்தம் செய்வதையும் மனித உரிமை குழுக்கள் விமரிசிக்கின்றன.

பதில்: இதில் பெரும்பகுதி தவறான செய்தி, மற்றொரு பாதி இது பற்றி எழுதுபவர்கள் கொண்டிருக்கும் மனச்சாய்வு. இந்திய அரசாங்கம் மதம் சாராததாகத்தான் இருக்க முடியும். .. மூன்றே மூன்று மாநிலங்களில் சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன, அதுவும் சர்ச்சுகளுக்கு எதிராக அல்ல. ஒரு விஷயம் ஒரு சாதாரண குற்றவாளி செய்தது. மற்ற நிகழ்ச்சிகளை ஆராய நீதிபதியை விசாரணை செய்ய நியமித்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் ஒரு குற்றவாளியை கைது செய்திருக்கிறது. மற்ற நிகழ்ச்சிகளில் ஒரு குற்றவாளி கும்பல் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த கும்பலும் கைது செய்யப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் பெயர் கெடவேண்டும் என்ற காரணத்தோடு இந்த வேலைகள் அந்த குழுவினால் செய்யப்பட்டிருக்கின்றன. 6.கிபியில் முதல் இந்திய கிரிஸ்தவ சமூகம் அமைக்கப்பட்டதிலிருந்து, கிரிஸ்தவர்கள் என்றுமே இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள்.

பஞ்சாபிலோ, காஷ்மீரிலோ எந்த வித மனித உரிமை மீரல்களும் இல்லை என்று நம்புகிறேன். காஷ்மீரில் மிகப் பெரிய மனித உரிமை மீரல்கள் தீவிரவாதterroristகளால் செய்யப்படுபவை. 100 அப்பாவி யாத்ரீகர்கள் ஒரு புராதன யாத்திரையை மேற்கொள்ளும்போது அவர்கள் பனியில் சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மனித உரிமை மீரல்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பங்கு வகிக்கவும், வளர்ந்துவரும் நாடுகளுக்கான தலைமையை மேற்கொள்ளவும் இந்தியா முயன்று வருகிறது. இந்தியா எந்த பங்கு வகிக்கும் ? அது எவ்வாறு world balance of powerஐ எப்படி பாதிக்கும் ?

பதில்: ஐக்கியநாடுகளின் ஆரம்ப வருடங்களில் பாதுகாப்பு குழுவில் ஒரு இடத்தை எடுத்துக்கொள்ளச்சொல்லி இந்தியாவிடம் கேட்டார்கள் என்பது irony. மகத்தான வரலாற்று மறுதலிப்பாக அன்றைய பிரதமர் ‘வேண்டாம் ‘ என்று சொன்னார். முதலில் சைனாவுக்கு அந்த இடத்தை தரச்சொன்னார்… கலாச்சரார ரீதியாவும், நாகரிகப்பாரம்பரியம் காரணமாகவும் இந்தியாவுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அது குரலற்றவர்களின் குரலாகவும் வலிமையற்றவர்களுக்கு ஒரு வலிமையாகவும் அது குரல் கொடுக்க வேண்டியதுதான் அதன் கடமை. இது இந்தியாவின் கடமை மட்டுமல்ல, ஐநாவின் கடமையும் கூட.

balance of powerஐ பொறுத்தமட்டில், அதிகாரத்தின் எல்லையை உணர்ந்துகொள்வதுதான் அதிகாரவலிமையின் சாரம் என்றே கருதுகிறேன்.

கேள்வி: இந்தியர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அதிக சதவீதத்தில் அமெரிக்க கம்பெனிகளில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறார்கள். இது எவ்வாறு இந்திய – அமெரிக்க உறவை பாதித்திருக்கிறது ?

பதில்: இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் இந்திய- அமெரிக்க உறவுக்கு ஒரு catalystஆக நடந்திருக்கிறார்கள். இந்த உறவு 10 வருடங்களுக்கு முன் இல்லை. அமெரிக்காவின் மக்கள்தொகையில் 1%க்கும் கீழேதான் அவர்கள் இருக்கிறார்கள். இருந்தும் அவர்களது சாதாரண சம்பளம் சாதாரண அமெரிக்கரின் சம்பளத்தைவிட இரண்டுமடங்கு அதிகம். சுமார் 80 தேசீய குழுக்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக, இந்திய அமெரிக்கர்கள் எப்போதுமே கல்வியிலும் சம்பளத்திலும் முதல் எண்ணில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உங்களது சிந்தனையை பாதிக்க பாதிக்க அவர்கள் இன்னும் முக்கியமான பங்கு வகிப்பார்கள்.

எது catalyst ? Knowledge-based industry தான். நியூயார்க் மருத்துவமனைகளின் குறிப்பேடுகள் மும்பையில் மேற்பார்வை பார்க்கப்படுகின்றன. இது மிகவும் வசதியானது. H1B விசாக்கள் 47.5% இந்தியர்களுக்கு செல்கின்றன என்று கேள்விப்படுகின்றேன். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் தொடங்கப்படும் புதிய கம்பெனிகளில் 30% சதவீதம் இந்தியர்களால் தொடங்கப்படுகின்றன என்றும் கேள்விப்படுகின்றேன்.

கேள்வி: 1990களில் பெண்களை அதிகாரப்பதவிகளிலும் அரசியலிலும் ஈடுபடுத்தவேண்டுமென்று முன்மாதிரியான வழிமுறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவந்து ஏறத்தாழ பத்துலட்சம் பெண்களை பிராந்திய மற்றும் நகராட்சிபதவிகளில் ஒதுக்கீடு செய்து வலிமைப்படுத்தியது. ஆனால் பாராளுமன்றத்தில் அதுபோல ஒதுக்கீடு செய்வதற்கு ஏராளமான எதிர்ப்பு இருக்கிறது. ஏன் இப்படி பெண்களை அதிகாரத்தில் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு இருக்கிறது ?

பதில்: எனது கட்சியும், எங்களது கூட்டணிகட்சிகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கின்றன. மூன்றில் ஒருபங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் எங்களுக்கு மூன்றில் இரண்டுபங்கு வலிமை பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். இருந்தால்தான் எங்களால் சட்டதிருத்தம் செய்ய இயலும். மீண்டும் நவம்பரில் இந்த முயற்சியை மேற்கொள்ளுவோம். இந்த முயற்சியில் தோற்கமாட்டோம்.

கேள்வி: அரசாங்கம் பிரதமர் வாஜ்பாயியின் சமீபத்திய உடல்நிலை பிரச்னைகள் அவரது முழங்காலிலும் அவரது தொண்டைப்புண்ணும் மட்டுமே என்று கூறுகிறது. இருந்தும் அவர் ஜனாதிபதி கிளிண்டன் அவர்களுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பையும் கேள்வி நேரத்தையும் ரத்து செய்து விட்டார்கள். இப்போதுகூட அவர் உடல்நிலை குன்றியவர் போல் காணப்பட்டார்.

பதில்: அவர் நலமாகவே இருக்கிறார். அவருக்கு முழங்கால் பிரச்னை இருக்கிறது. இந்தியாவுக்கு திரும்பியதும் அவருக்கு சிகித்சை அளிக்கப்படும்.

Series Navigation

ராபின் ரைட்

ராபின் ரைட்