ஜனவரி இருபது

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

குரல்செல்வன்



சாமி தடித்த போர்வையிலிருந்து மெதுவாக விலகி, படுக்கையிலிருந்து எழுந்து, அறையின் கதவைச் சத்தம் எழாமல் சாத்திவிட்டுக்கீழே இறங்கிச்சென்றான். ஆனாலும் சரவணப்ரியாவுக்குத் தூக்கம் கலைந்து விட்டது. போர்வைக்குள்ளிருந்த வெம்மையிலிருந்து வெளிவர மனமில்லை. சாமி காப்பி போட்டு பாலைக் கொதிக்கவைப்பதற்குப் பத்து நிமிடம் பிடிக்கும். அதற்குப்பிறகு எழுந்து செல்லலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டாள். தலையைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறு:பத்து. அடுத்த வரியில் 01:20 டியுஈ. அப்படி என்றால் இன்று 01.20.2009. அந்த எண்களை மட்டும் காரின் பின்புறத்தில் ஒட்டியிருப்பதை முதல்தடவை பார்த்தபோது சரவணப்ரியாவுக்கு அவற்றின் முக்கியத்துவம் விளங்கவில்லை. கார்களின் பின்சட்டங்களில் எவ்வளவோ வாசகங்கள். சில வெளிப்படை. திருமணம் = ஓர் ஆண் + ஒரு பெண். ஏன், இருமனம் கலந்தால் திருமணம் இல்லையோ? இன்னும் சில சட்டென்று அர்த்தம் தராது. கொஞ்சம் யோசிக்கும்போதுதான் ‘ஆகா அப்படியா!’ என்று தோன்றும். டெக்சஸில் ஏதோ ஒரு கிராமத்தின் முட்டாளைச் சில ஆண்டுகளாகக் காணவில்லை. அது போலத்தான் 01.20.2009. பார்த்தவுடன் அதன்பொருள் மூளைக்கு உறைக்கவில்லை. பதினைந்து மாதங்களுக்குமுன் அதை விளக்கிய பெருமை அவளுடன் உடற்பயிற்சி செய்யும் ஒருபெண்ணுக்குக் கிடைத்தது.

——————–

காலையில் முதல் ரயில்வண்டியின் சத்தத்திலேயே பாரிஜாதத்திற்கு விழிப்பு வந்துவிட்டது. சற்றுத்தள்ளி படுத்திருக்கும் அத்தையின் உருவம் இருளிலும் அச்சத்தைத் தந்தது. அவளுக்காக அந்த அறையில் இருந்த ஒருஜன்னலும் சாத்தப்பட்டிருந்தது. அதனால் தெருவிளக்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ‘இன்னிக்கித்தான் குளிச்சிருக்கே. என்னோடவே படுத்துக்க. நாளைக்கு நல்ல நாளா இருக்கு’ என்று முதல்நாள் பணித்துவிட்டாள். தை மாதத்தின் முதல் திங்கள்கிழமை. எந்தவிதத்தில் அத்தைக்கு நல்லநாள் என்று அவளுக்குத் தெரியாது, ஆனால் அவள் வாழ்க்கையில் மாற்றத்தைத்தரும் புதுநாள். அப்படி ஒருதிருநாள் வரப்போகிறது என்று இரண்டு மாதத்திற்கு முன்புதான் தெரியவந்தது. சொந்த சாமான்களுக்காக இரண்டு பெட்டிகளும் பல அளவுகளில் தேயிலைத்தூள் பொட்டலங்கள் அடுக்கிய அட்டைப்பெட்டியும் பக்கத்தில் இருக்க அத்தான் திருச்சிக்குக் கிளம்பத் தயாராகிவிட்டார். குதிரைவண்டி இன்னும் வரவில்லை.

“போய் வரேம்மா!”

“போயிட்டு வா! இன்னும் எத்தினி நாளைக்கு இந்த ஊரைச்சுத்தற வேலையோ? சாப்பாடு சரியில்லாம ஒடம்பு தேஞ்சுபோயிரிச்சு பாரு! தை முடிஞ்சி மாசி வந்தாக்க முப்பத்தோரு வயசாகிடும்.” அவருக்கு ஒருவாரம் உள்ளுரில் அலைச்சல். திருச்சி, திண்டுக்கல், கரூர் என்று இன்னும் மூன்றுவாரங்கள் வாடிக்கைதேடி ஊர்சுற்ற வேண்டும். சமூக அந்தஸ்த்தில் தேனீர் காப்பிக்கு ஒருபடி தாழ்வாகக் கருதப்பட்ட காலம். அதை மாற்றவேண்டியது அவர் தொழில்.

“இன்னும் ரெண்டு மாசந்தாம்மா.”

“அப்புறம் என்ன?”

“தேயிலைத்தூள் பாக்கிங் பண்ற இடத்திலே சூபர்வைசராப் போடறேன்னு முதலாளி சொல்லிருக்காரு.”

“அப்ப தெனம் பெரம்பூர் போனாப்போரும்னு சொல்லு.”

“ஆனாக்க காலைலே ஏழு மணிக்குள்ளார கிளம்பிடணும்.”

“என்னால அவ்வளவு சுருக்க எளுந்திருக்க முடியாது. பாரிஜாதம் இட்டிலியோ, தோசையோ ஊத்தி உன்னை அனுப்பிச்சுருவா.”

புதிதாக வேலையில் சேர்ந்த இளைஞன் ஒருவன் அத்தானுடன் மூன்று ஊருக்கும் இரண்டு தடவை சென்றான். நாள்முழுவதும் அவர்கூடவே இருந்து வாடிக்கைக்காரர்களைப் பார்த்தான். கௌரவமான சிலவீடுகளில் சாம்பிள் பொட்டலங்களையும், முதுகில் உயரமான கூடையை மாட்டிக்கொண்டு தேயிலை கொய்யும் பெண்ணின் படம்போட்ட அட்டை விசிறியையும் இனாமாகக் கொடுத்துவிட்டுத் தேனீரின் பெருமையை அளக்கக் கற்றுக்கொண்டான். இன்றிலிருந்து அவருக்குப் பெரம்பூர் வேலை. நேற்று கணக்கைத்தீர்த்துவிட்டு வருவதற்கு வெகு நேரமாகிவிட்டது. பாரிஜாதம் பரிமாற அவர் சாப்பிடும்போது, “இந்த மாதிரி உன் கையிலே மூணுமாசம் சாப்பிட்டேன்னா புது மனுசனாயிருவேன்” என்று புகழ்ந்தது வரும் வாழ்க்கைக்குக் கட்டியம் சொல்வதுபோல் இருந்தது. ‘பல்லாவரம் ஜனதாலே சிவாஜியோட கர்ணன் படம் வந்திருக்குதாம். கூட்டிட்டுப்போறீங்களா?’ என்றுகூட கேட்க நினைத்தாள்.

——————–

சரவணப்ரியா அவளை எப்போதாவதுதான் பார்ப்பது வழக்கம். அதனால் பெயர்தெரியாமல் முகத்தைமட்டும் அடையாளம்செய்து “ஹாய்! எப்படி இருக்கிறாய்?” என்பதோடு பேச்சு நின்றுவிடும். அந்த வாரத்தின் வான்டர்பில்ட் மருத்துவ செய்தித்தாளின் முதல்பக்கத்தில் அவள்படம் பெரிய அளவில் முழுவர்ணங்களில் வந்திருந்தது. டாக்டர் லோரா ஷ்ரைவர் தலையில் அடிபட்ட நோயாளிகளைக் கவனிக்கும் பகுதியின் தலைவி. சமீபத்தில் ஈராக்கிலிருந்து திரும்பும் போர்வீரர்களை அவளிடம் சிகிச்சைக்கு அனுப்புகிறார்கள். முன் ஆயத்தமின்றி தயாரித்த வெடிகளின் தாக்குதலால் தலைக்குச்சேதம் ஏற்படும்போது அவர்களின் கண்பார்வை, நினைவுத்திறன், சுயக்கட்டுப்பாடு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. சிலருக்குத் தூக்கமின்மை, குழந்தைத்தன்மை, நடத்தையில் மாற்றம் ஆகிய குறைபாடுகளும் வரலாம். அவர்களுக்கு அவள் செய்யும் சிகிச்சை பற்றி விவரமாகப் பக்கம் முழுக்க எழுதப்பட்டிருந்தது. அன்றுமாலை உடற்பயிற்சி வகுப்பிற்கு அவளும் வந்திருந்தாள். அதுமுடிந்து வெளியில் வரும்போது சரவணப்ரியா அவளை எதிர்கொண்டாள். “ஹலோ லோரா! வான்டர்பில்ட் செய்திப் பத்திரிகையில் உன்படத்தைப் பார்த்தேன். நீ செய்யும் வேலையைப்பற்றியும் படித்தேன். உன்னைப்பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. என் பெயர் சாரா.”

“நன்றி சாரா! என்வேலை பலருக்குப் பயன்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால்தான் என்னைப்பற்றி எழுத நான் சம்மதித்தேன்.”

——————–

பாரிஜாதத்திற்கு வியப்பாக இருந்தது. திருமணத்திற்கு முன்னால்கூட அவள் இப்படி நாட்களை எண்ணியதில்லை. அப்போது விவரம் தெரியாத பதினாறு வயது. ஏதோ புதிதாக நடக்கப்போகிறது என்று உடலில்; உண்டான மாற்றங்களும், மற்றபெண்களின் கேலியில் ஒளிந்திருந்த ரகசியங்களும் அவளைத் தயார்செய்தன. ஆனால் அந்த இனம் தெரியாத எதிர்பார்ப்புகள் சீட்டுக்கட்டுக் கோபுரம் போல ஒரு ஊதலில் சரிந்துவிழுந்தன. திருமணம் முடிந்த சில வாரங்களுக்குப்பிறகு அவள் தந்தை அவளை அத்தை வீட்டில் விட்டுச்செல்ல வந்தார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வந்து, பிறகு மின்சார ரயிலில் பரங்கிமலை வரும்வரைக்கும் அவர் சிரித்த முகம் மாறவில்லை. மதியம் சாப்பிட்டுவிட்டு எல்லோரிடமும் விடை பெற்றுச்செல்லும் போதுதான் மகளை விட்டுப்பிரிகிறோமே என்று கண்ணீர் வந்துவிட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டார். பாரிஜாதத்திற்கு அவர்முகம் புதுவாழ்க்கையின் ஓட்டத்திலும் மறக்கவில்லை. அன்றிரவு கேட்ட வார்த்தைகள் இப்போதும் அவள் நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தன. “ஒனக்கு எப்படியோ தெரியாது, எனக்குத் தூக்கம் கண்ணை சுழட்டுது. அது போதாதுன்னு நேத்து திருச்சியிலே நாலு மணிக்கே வேலை முடிஞ்சிபோயிரிச்சு. தூத்துக்குடி பத்துமணிக்குத்தான். அதனாலே காரியத்தை அங்கியே முடிச்சிட்டேன்.” என்ன காரியம்? எப்படி முடியும்? தெரிவதற்குச் சிலமாதங்கள் சென்றன.

செங்கல்பட்டில் வீட்டிற்குப் போகும்போது அம்மா எப்போதும் கேட்கிற கேள்வி. “ஏண்டி! இன்னுமா தலைமுளுகிட்டிருக்கே?”

சென்ற தீபாவளியின்போது நான்கு ஆண்டுகள் கடந்து விட்டதால் அம்மா ஒருபடி மேலேயே சென்றாள். சமையலறையில் விறகு அடுப்பின்மேல் வைத்த வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பொறிக்கத்தயார் செய்யும்போது கேட்டாள். “ராத்ரிலே ஒண்ணாதானே படுக்குறீங்க?”

அம்மாவுக்குக் கைஊன்றாது. அதனால் பாரிஜாதம் சற்றுத்தள்ளி உட்கார்ந்து முறுக்குக்கு மாவுபிசைந்து குழலில்போட்டு இலையில் பிழிந்துகொண்டிருந்தாள். அப்போது அவள் தங்கை சரவணப்ரியா கிணற்றடியில் பாத்திரங்களைக் கழுவி இரண்டு கைகளிலும் சுமந்துகொண்டு சமயலறைக்குள் நுழைந்தாள். “படுக்கையை வெய்யில்லே போடணும்மா. காலைலே மூட்டைப்பூச்சி ஒண்ணு பாத்தேன்” என்றாள் பாரிஜாதம்.

“அங்கே மூலைலே வச்சிட்டுக் கூடத்துப்பக்கம் போடி! அடுப்புப் புகை உனக்கென்னாத்துக்கு?”

சரவணப்ரியா அகன்றபிறகு “அவளுக்கு அடுப்புப்புகையும் வேணாம், மாதாந்திரக்கடன், மாமியாரு, புருசன்கிற கவலையும் வேணாம். பாடத்தை ஒழுங்கா படிக்கட்டும். எனக்குத்தான் பள்ளிக்கூடம் முடிச்சதும் கல்யாணம் பண்ணிவச்சிட்டீங்க” என்று மெல்லப் பொருமினாள் பாரிஜாதம்.

“அவதான் அப்பால போயிட்டாளே. இப்ப எனக்குப்பதில் சொல்லுடி!”

“என்னத்தம்மா சொல்றது? அவரு வேலை அப்படிம்மா. திருச்சி, திண்டுக்கல், கரூர்னு மூணுவாரம் போயிடறார். வீட்டிலே இருக்கிற ஒருவாரத்திலேயும் நான் வெளிலே இருந்துக்கறேன்” என்று சப்பைகட்டினாள். முழுவிவரமும் சொல்ல விருப்பமில்லை. அம்மாவுக்கு எதையும் அப்பாவிடமிருந்து மறைக்கத்தெரியாது. உடனே சொல்லியாகவேண்டும். என்னதான் தினத்தந்தி செய்தியை தினமணி அளவுக்கு வெட்டிஒட்டினாலும் செய்தி செய்திதானே. அதைக்கேட்டு ஐயா மனம் வருந்துவார். ஏற்கனவே சிலமாதங்களாக வயிற்றுவலி அவரைப்படுத்துகிறது. தமிழ் ஆசிரியரான அவர் இலக்கியக்கூட்டங்களில் முன்போல அடிக்கடி பேசமுடிவதில்லை.

“டூர் போரச்ச ஒன்னையும் அளைச்சுட்டுப்போறது.”

“போனவருசம் ஒருவாரம் பெங்களுரு போகவேண்டி வந்திச்சு. அத்தைகூட சொன்னாங்க, பாரிஜாதத்தைக் கூட்டிப்போன்னு. வேலைலே தெரிஞ்சவங்களோட போயிட்டு வந்துட்டாரு.” ‘சிலருக்குப் பாண்டிச்சேரி, கொடுத்து வச்சவங்களுக்குப் பெங்களுரு’ என்று சொல்லவந்தாள், ஆனால் சொல்லவில்லை. “எண்ணை காஞ்சிடிச்சிமா!”

——————–

சாரா உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறிச் சாலையின் ஓரத்தில் கட்டிடங்களின் நிழலில் நடந்து செல்லும்போது லோராவும் கூடவேவந்தாள்.

“லோரா! நீயும் எங்களைப்போல் வெஸ்ட் கராஜில்தான் காரை நிறுத்துகிறாய் போலிருக்கிறது. நான் அங்கேதான் போகிறேன்” என்றாள் சாரா.

பாதிவழியில் திடீரென எதையோ நினைத்து, “சாரா! உனக்குக் குழந்தைகள் உண்டா?” என்று லோரா கேட்டள்.

“உண்டு. ஒரு பையன். கிராஜூவேட் ஸ்கூலில் இருக்கிறான்.”

“எனக்கும் ஒரே பையன். இப்போது ஈராக்கில் இருக்கிறான்.”

பாராட்டுவதா, இல்லை ஆறுதல் சொல்வதா என்று சாராவுக்குக் குழப்பமாக இருந்தது. “உனக்குப் பெருமையாக இருக்கும்” என்றாள்.

“ஒரு விதத்தில் பெருமைதான். ஆனாலும் கவலையாகத்தான் இருக்கிறது. அதை மறக்க அங்கிருந்து அடிபட்டுத் திரும்பிவரும் இராணுவவீரர்களுக்குச் சிகிச்சை செய்கிறேன்.”

“உனக்கு ஏதாவது உதவி வேண்டுமானால், சொல்! முடிந்தால் செய்வேன்.”

“தாங்க்யூ சாரா!”

கார் நிறுத்தும் அடுக்கில் இரண்டு மாடிப்படிகள் ஏறி ஐந்து கார்வரிசைகளைத் தாண்டினார்கள். சாரா தன் காருக்குள் எட்டிப்பார்த்தாள், காலியாக இருந்தது.

“இன்னும் என் கணவன் வரவில்லை, லோரா! நான் இங்கே காத்திருக்கிறேன்.”

“என் காரும் பக்கத்தில்தான் இருக்கிறது” என்று லோரா எதிர்வரிசையில் நின்றிருந்த ஒரு சாடர்ன் காரைக் காண்பித்தாள். அந்தக்கார் அந்த இடத்தில் நிற்பதைப் பலமுறை சாரா கவனித்திருக்கிறாள். அதன் பம்ப்பரில் டார்வின் எழுத்துகள் அடங்கிய ஒரு தாமரை வடிவம் இருக்கும். அதன் அர்;த்தம் என்ன என்று அந்தக்காரின் உரிமையாளரைக் கேட்கவேண்டும் என்று அவள் நினைத்ததுண்டு. இன்று அதற்குத்துணையாக 01.20.2009 என்று இன்னொரு அட்டை ஒட்டியிருந்தது. சாராவின் பார்வை அதில் பதிந்தது.

அதைக்கவனித்த லோரா, “அதன் அர்த்தம் தெரிகிறதா?” என்று கேட்டாள்.

“இல்லையே. ஜனவரி 22 என்றால் பெண்கள் கருச்சிதைவு செய்ய சட்டம் அனுமதி தந்ததைக் குறிக்கும் தினம்.”

“அதுவும் முக்கியமான நாள்தான். இது அதைவிட முக்கியமான திருநாள். அன்றுதான் புஷ்ஷின் அதிகாரம் முடிந்து அடுத்த ஜனாதிபதி பதவி ஏற்கும் நாள். 9-11க்குப் பிறகு என்பையன் மரீனில் சேர்ந்தபோது ஆஃப்கானிஸ்தான் போர் ஒன்றைத்தான் எதிர்பார்த்தோம். அது அவ்வளவாக எங்களுக்குக் கவலை தரவில்லை. ஆனால் சென்றமாதம் அவன் ஈராக்கிற்கு இரண்டாவது தடவையாகச் சென்றிருக்கிறான். இன்னும் பதினாறு மாதங்கள்.” இறுதி வாக்கியம் ஒவ்வொரு வார்த்தையாக மிகநிதானமாக வந்தது. “புஷ்ஷ_ம் திமிர்பிடித்த சேனியும் பதவியில் இருக்கும்வரைக்கும் ஈராக் போருக்கு முடிவு கிடையாது.” குரலில் சிறிது வெம்மை தெறித்தது.

சாராவுக்கும் அந்த எண்ணம்தான். இருந்தாலும் புதிதாகச் சந்தித்த ஒருத்தியிடம் தன் அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கினாள். “என்ன செய்வது? முதலை இருக்கும் குளத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு எளிதாக விடுவித்துக்கொள்ள முடியாது” என்று வேதாந்தமாகப் பதில்தந்தாள்.

“முதலில் அங்கே சென்றதே முட்டாள்தனம். பெருந்தவறு. தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். உலகெங்கும் மில்லியன் கணக்கான மனிதர்கள் போருக்கு எதிராகக் கூட்டமாக நடந்து என்னபயன்? ஒருவனின் பிடிவாதத்தை மாற்றமுடியவில்லையே. என்னிடம் வரும் பாதிபேருக்குச் சிகிச்சை முடிந்த பிறகு பி-3 சான்றிதழ் கொடுத்து படையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். ஆனால் இராணுவ மேலதிகாரிகள் என் தீர்மானத்தை மதிப்பதில்லை. மறுபடியும் அவர்களை ஈராக்கிற்கு அனுப்பப்பார்க்கிறார்கள்.”

“என்ன கொடுமை!” லோராவின் ஆதங்கம் சாராவுக்குப் புரிந்தது. ஆனால் அதேசமயத்தில் ஈராக் மக்கள் படும் எல்லையற்ற துயரத்திற்கு விடிவுகாணத்தான் போர் முடியட்டுமே என்று அவள் சொல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

“ஜனவரி 20, 2009 எப்போது வருமென்று காத்துக்கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் பார்” என்று காரிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினாள் லோரா. ஒரு கடிகாரம். அது நானூற்றி சொச்சம் நாட்கள், இருபது மணிகள், நாற்பது நிமிடங்கள் என்று காட்டியது. நொடி பத்து, ஒன்பது, எட்டு… என்று இறங்கு முகமாக எண்ணிக்கொண்டிருந்தது. ஒரு சட்டையில் 01.20.2009 வரை நான் சிரிக்கமாட்டேன் என்றது ஒரு கோமாளியின் சோகம்ததும்பும் முகம். தூங்கிக்கொண்டிருக்கும் ரிப் வான் வின்க்ல் போஸ்டரில் அவன் தலைக்குப்பக்கத்தில் ஒரு பெரிய கடிகாரம். அதில் 01.20.2009க்கு அலாரம் வைத்திருக்கிறது.

புதியன புகுவதற்காகப் பழையன கழிவதற்குக் காத்திருப்பதில் வியப்பு ஒன்றுமில்லைதான், இருந்தாலும் ஒரு ஜனாதிபதியின் ஆட்சி முடிவதை இவ்வளவு ஆவலுடன் இதற்குமுன் எதிர்பார்த்ததாக சாராவுக்கு நினைவில்லை.

“அந்த நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும். சாரா! இந்தா உனக்கு, எடுத்துக் கொள்” என்று 01.20.2009 போட்ட அட்டை ஒன்று கொடுத்தாள்.

“நன்றி லோரா! உன் வேலை பலருக்குப் பலனளிக்கட்டும்!”

“தாங்க்யூ! பை சாரா!”

சாரா தன் காருக்குச்சென்று கதவைத் திறந்தபோது சாமியும் வேலைமுடிந்து அங்கே வந்தான். “சாமி! இதை நம் கார் பம்ப்பரில் ஒட்டி வைக்கலாமா?” என்று சாரா கேட்டாள்.

சாமி அந்த அட்டையை அவளிடமிருந்து வாங்கிப்பார்த்தான். “ஏன்? புஷ் கோட்டையான ப்ரென்ட்வுட்டில் போட்ட வேகத்துக்கு ஒரு மைல் அதிகமாப்போய் போலிஸிடம் டிக்கெட் வாங்கணும்னு ஆசையா இருக்கா?”

——————–

இரண்டு மாதமும் புதுவாழ்க்கையைப் பாரிஜாதம் ஆவலுடன் எதிர்பார்த்தாள். வருஷப்பிறப்பிற்குப் பிறந்தவீடு போகும்போது நானே அம்மாவிடம் எப்போதும் சொல்லும் சால்ஜாப்புக்குப் பதிலாக “ரெண்டு மாசம் தாண்டிரிச்சு” என்று சொல்லலாமா? வேண்டாம், அவளே கவனித்துவிட்டு, “இப்ப எத்தனையாவது மாசம்?” என்று கேட்கட்டும். அதை நினைத்து அவளுக்கு வெட்கமாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தலைக்குக்குளித்துவிட்டுக் கோவிலுக்கு எண்ணெய் ஊற்றப் போகும்போது ‘ஒரு வாரம் தாண்டியாகிவிட்டது’ என்று திருப்திப்பட்டாள். அத்தையுடன் படுக்கும் ஒவ்வொரு இரவும் ‘ஒரு நாள் குறைந்து விட்டது’ என்று கணக்குப்போட்டாள்.

எழுந்திருந்து பாயைச்சுருட்டி வைத்துவிட்டுக் கூடத்திற்கு வந்தாள். சுவர்க்கடிகாரம் நாலரைக்காக ஒருமுறை அடித்தது. புது வாழ்க்கைக்காக இந்தக்குளிரிலும் இத்தனை சுருக்க எழுந்திருக்க அவள் தயார். அவள் அப்பா அதிகாலையில் எழுந்து, குளித்து, தோட்டத்தில் பூக்களைப் பறித்துவந்து, அவற்றைத் தூவியவண்ணம் ஒருமணி பூஜை செய்த பிறகுதான் மற்ற வேலைகளைக் கவனிப்பது வழக்கம். அவர் சொல்லும் தேவாரத் திருவாசகப் பாடல்களில் சில அவளுக்கும் மனப்பாடம். வாசலைப் பார்த்த முன்னறையில் தூங்கும் அத்தானை வணங்கி விட்டு அலாரம் ஆறுமணிக்கு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கத்தொடங்கினாள், ‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’

——————–

காப்பியின் மணம் அழைக்கச் சரவணப்ரியா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். வாசற்புறம் பிரகாசமாகத்தெரியவே கதவின் ஜன்னல்; வழியாக வெளியே எட்டிப்பார்த்தாள். வானிலை அறிக்கையில் அறிவித்தபடி பனி விழுந்து எங்கும் வெண்மை பரவியிருந்தது. அந்த ஆண்டின் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாகச்சூடாக இருந்ததால் இதுதான் முதல் பனிமழை. நான்கு அங்குலமாவது இருக்கும். இன்று நிச்சயம் பள்ளிகளை மூடிவிடுவார்கள். நேற்று மார்டின் லூதர் கிங் பிறந்த நினைவுநாள் என்று விடுமுறை. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். எட்டுமணி வரையில் கூடத்தூங்கலாம். அப்புறம் வீட்டின்முன் சறுக்குப் பலகைகளோடு விளையாட வரலாம். அந்தச்சரிவில் கூக்குரல் போட்டுக்கொண்டு அவர்கள் சறுக்குவதையும், பனிமனிதன் செய்வதையும் வேடிக்கை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் சமையலறைக்குள் நுழைந்தாள்.

“பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே.” சாமி முன்னிரவில் நடந்த கூடைப்பந்து ஆட்டங்களின் சிறப்புப்பகுதிகளை ஈஎஸ்பிஎன்னில் பார்க்காமல் சிஎன்என் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் காப்பிகலந்து குடிக்கவில்லை.

“பாட்டெல்லாம் என்ன பலமா இருக்கு, இன்னைக்கு?”

அவள் கவனம் டிவி திரையின் பக்கம் சென்றது. புதிய ஜனாதிபதியைக் கேள்விகள் கேட்பதற்காகப் பிரத்தியேகமாகச் சீனாவில் தயாரித்த உடையில் ஜொலிக்கும் பெண்ணைப் பார்த்தமாதிரி இருந்தது. சாமியையும், சாராவையும் சேர்த்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் ‘கடவுளில்லாதவர்;கள்’ என்று பழித்த புத்தகத்தை வெளியிட்டுப் பணம்பண்ணிய புண்ணியவதிதான். பெயர் மறந்துவிட்டது.

“திரு ஜனாதிபதி! முந்திய அரசிலிருந்து உங்கள் ஆட்சி வேறுபட்டிருக்கும் என்று தேர்தலின்போது பலமுறை சுட்டிக்காட்டினீர்கள். அதற்காகச் சிலகேள்விகள். டார்வினின் பரிணாம சிந்தனையைப்பற்றி தங்கள் கருத்து என்ன?”

“அது இன்னும் திட்டவட்டமாக நிரூபிக்கப் படவில்லை. அது இடதுபக்கம் சாய்ந்திருக்கும் சில விஞ்ஞானிகளின் வெற்று நம்பிக்கை. அதைப்பள்ளிகளில் போதிப்பது கடவுளின் கட்டளைகளை அடிப்படையாக அமைக்கப்பட்ட நம் நாட்டிற்குப் பொருந்தாது.”

நாட்டிலுள்ள எல்லோருடைய வாழ்க்கையின் குறிக்கோளையும் நிர்ணயிக்கும் பொறுப்பைக் கடவுள் தனக்குத்தான் வழங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மதத்தலைவர் பின்னால் தெரிந்தார். பதவி ஏற்பின்போது பிரார்த்தனை செய்யக் காத்திருக்கிறார் போலிருக்கிறது. அவர் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை. ‘நாம் கூட்டமாக அவருக்கு ஓட்டுப்போட்டதை அவர் மறக்கவில்லை.’

“பூமியின் சூட்டைக்குறைக்க உங்களுடைய அரசு செய்யப்போவது என்ன?”

“இயற்கையின் மாற்றங்களால் பூமி அவ்வப்போது வெப்பம் மிகுந்தும், பனியால் குளிர்ந்தும் போயிருக்கிறது. தற்போது நாம் காணும் சூடு மனிதன் ஏற்படுத்தியது என்று நிச்சயமாக சொல்வதற்கில்லை. அப்படி இருக்கும்போது நம் அமெரிக்க வாழ்க்கைமுறையைப் பெருமளவில் மாற்றிக்கொண்டால் நம் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும்.”

க்;ளோபல் மோடர்ஸ், க்;ளோபல் எலக்ட்ரிக், க்;ளோபல் பெட்ரோலியம் – இவற்றின் தலைவர்கள் திரு மூர்த்திகளைப்போல் உலகத்தைத்தாங்கி நடத்திச்செல்லத் தயாராக முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.

“ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் எப்போது திரும்புவார்கள்?”

“இது மிகவும் நிச்சயமில்லாத காலம். அதனால் நான் தலைவராக இருக்கும்வரை ஈராக்கின் மக்களைக் காப்பாற்ற நம்படை அங்கே இருப்பது மிகவும் அவசியம் என்றுதான் நினைக்கிறேன்.”

டாமஹாக் ஹெலிகாப்டர் தயாரிக்கும் கம்பெனி முதல் கறுப்புப்பூனைக் காவல் போன்ற கூலிப்படைகள் வரை, போருக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் போட்டியின்றி கணக்கு எதுவும் காட்டாமல் கொள்ளை கொள்வதில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குக் கவலை இல்லை என்று பெருமூச்சு விட்டன. ‘நாம் தேர்தலின்போது செலவழித்த காசு வீண்போகவில்லை.’

“நன்றி திரு ஜனாதிபதி.”

சாமியின் முகத்தைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. சரவணப்ரியா அவனுக்கும், தனக்கும் காப்பி கலப்பதற்காக அடுப்பின் பக்கம் திரும்பினாள். இந்தநாளின் கொண்டாட்டத்திற்காக வாஷிங்டன்வரை சென்றிருக்கும் லோராவுக்கும் மிகவும் ஏமாற்றமாக இருக்கப் போகிறது. அடுத்தமுறை பார்க்கும்போது என்ன சொல்லி அவளைத் தேற்றலாம்? பாரிஜாத அக்காவின் ஞாபகம் ஏனோ அப்போது அவளுக்கு வந்தது.

——————–

கடைசி தோசையை வார்த்தாகிவிட்டது. வாசலில் யாரோ கூப்பிடுகிறார்கள். மணி ஆறுகூட ஆகவில்லை, யாராக இருக்கும்?

நடைவழியைப் பெருக்கிக் கொண்டிருந்த ரூபாவிடம், “யாருன்னு போய்ப்பாருடி! கறிகாக் காரின்னா நான் வரேன்னு சொல்லு” என்றாள் பாரிஜாதம்.

“ஐயா இருக்காங்களா?” குரல் திறந்தகதவு வழியாகப் புகுந்துவந்தது.

“நீங்க யாரு?”

அடுப்பை அணைத்துவிட்டு, தோசையை எடுக்காமல் கல்லைமட்டும் நகர்த்திவைத்தாள். மொரு மொரு என்றிருந்தால் அத்தானுக்குப் பிடிக்கும். நடைவழிக்கு வந்து கதவுக்குத் தள்ளியே நின்று ரூபாவின் தலைக்குமேல் எட்டிப்பார்த்தாள். இவ்வளவு என்று குறிப்பிடமுடியாத ஆனால் இளமை தளும்பும் பெண். இரண்டாம் முறை பார்க்கவைக்கும் முகம். குள்ளமாக இருந்தாலும் சேலையைக் கணுக்காலுக்குமேல் கட்டியிருந்தாள். முந்தானை விசிறிபோல் விரிந்து முன்னால் தொங்கியது. வீட்டுக்கு வெளியில் வந்த வெளிச்சம் இன்னும் உள்ளே நுழையவில்லை. அதனால் அவள் பாரிஜாதத்தைப் பார்க்கவில்லை என்றுதான் தோன்றியது.

அவள் மொழியில் வார்த்தைகளோடு சிரிப்புக்கும் பாதிபங்கு இருந்தது. “மவுண்ட் டேஷன்லே இறங்கி கிழக்கால கருணீகர் தெருவிலே போனாக்க கடேசிலே ஓடு போட்ட மச்சுவீடு வரும், அதுதான்னு ஒருதபா சொன்னாங்க. அதே கணக்காத்தான் இருக்கு” என்று கையைச் சுற்றிக் காண்பித்தாள். “வீட்டுப்பக்கம் வந்து ரெண்டுமாசம் போல ஆயிரிச்சு. ஒடம்பு சொகமில்லையோன்னு கவலையாப் போச்சுது.” இந்த விவரமெல்லாம் யார் கேட்டார்கள்?

“திருச்சிலேர்ந்து வர்ற மொதவண்டியைப் புடிச்சேன். இறங்கினதும் நேரா இங்கிட்டுதான் வாரேன்.” யார் காதில் விழவேண்டும் என்று இத்தனை சத்தமாகச் சொல்கிறாள்?

முன்னறையில் அலாரம் அடித்தது, உடனே நிறுத்தப் பட்டது. காலைவேளைகளில் ரூபாவுக்குத் தலைக்குமேல் வேலை. இங்கே முடித்துவிட்டு இன்னொரு வீட்டிற்கும் போகவேண்டும். கதைகேட்க நேரமில்லை. “யாரு ஓணும்னு சொல்லுங்க?” என்று அவசரப்படுத்தினாள்.

வந்தவளுக்கு நேரம் கொட்டிக்கிடந்தது. மெதுவாகத்தான் பதில் வந்தது. “கோயிந்தராசு முதலி இங்கிட்டுதானே இருக்காக?”

அந்தப்பெயரைச் சொல்வதற்கு அவள் ஏன் இப்படி உடலை வளைத்துக்கொண்டு, கன்னத்தில் கை வைத்து, இவ்வளவு வெட்கப்பட வேண்டும்? பாரிஜாதத்திற்கு அதில் ஒருசேதி இருக்கிறது. இரண்டு மாதங்களாக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த திங்கள்கிழமையும் இதுவரை இந்தவீட்டில் அவளைக்கடந்து சென்ற நாட்களின் குவியலில் தள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்.


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்