சொல்லப்படாத மௌனங்களினூடே

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

சித்ரா ரமேஷ்


(01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் பேசியதன் சுருக்கமான பகுதி உங்களுக்காக)

எதைபற்றி வேண்டுமானலும் பேசுங்கள் என்று நூலாசியர் அற்புதமான ஒரு சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். ஆனால் சுதந்திரம் என்று கிடைத்ததுமே பொறுப்பு வந்துவிடுகிறது என்றுச் சொல்லி வாழ்க்கை இலக்கியம் என்ற தலைப்பில் அவர் பேசியவை

நவீனத்துவவாதிகள் மரபை எதிர்ப்பதில்லை. மரபின் நீட்சியாகத்தான் நவீனத்தை பார்க்கிறார்கள். நவீனத்துவம் என்கிற ஒரு விசயத்தை நாம் உணர ஆரம்பித்துவிட்டால் எந்த ஒருவிசயமும் நமக்கு புரிபடாமல் இருக்கப்போவதில்லை, ஏன் என்றால் அதில் சொல்லப்படாத மௌனங்கள் இருக்கிறது. அந்த மௌனத்தை உணர்வது எப்படி என்பதை சின்ன ஒரு வழிமுறையாக நான் காட்டுகிறேன். இதை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. இது நவீனத்துவம் நமக்கு கொடுக்கும் சுதந்திரம். நமக்கு கொடுக்கப்பட்ட அற்புதமான பொறுப்பு. இந்த பொறுப்போடு அணுகும்பொழுது நவீனத்துவம் என்பது உங்களுக்கும் புரியும்.

இலக்கியவாதிக்கும் வாசகனுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளிதான் உள்ளது, அதை எப்பொழுது வேண்டும் என்றாலும் இருவரும் தாண்டிக்கொள்ளலாம். ஒரு நல்ல வாசகன் தனது வாசகத்தன்மையை விட்டு சற்றே விலகினால் நல்ல எழுத்தாளனாக, விமர்சகனாக எந்த நிமிடமும் மாறலாம், இந்த சுதந்திரம்தான் நவீனத்துவம். எப்பொழுது உங்களின் வாழ்க்கையை நேர்மையாக பதிவுசெய்து எழுத ஆரம்பிக்கிறீர்களோ, அப்பொழுது மிகச்சிறந்த இலக்கியவாதி நீங்கள்தான். சாதரணமான மனிதனின் வாழ்க்கையும் கவிதையாக, சிறுகதையாக, கட்டுரையாக, நாவலாகவோ உருவெடுப்பதுதான் நவீனத்துவம் இதை புரிந்தால் நாம் எல்லோருமே இலக்கியவாதிதான்.

பல்வேறு சிதைவுகளுக்கு பின் நமக்கு கிடைத்த மிகச்சிறிய அளவிலான சங்க இலக்கியங்களில் நாம் முழுவதையும் படிப்பதில்லை. திரும்ப திரும்ப சில காப்பியங்களை தான் படிக்கின்றோம் மணிமேகலை, சிலப்பதிகாரம் இதைதாண்டிய சிறப்பான மூன்றாவது இலக்கியத்தின் பக்கம் நாம் செல்வது இல்லை. ஏன் எனில் அதில் கடினமான நடையோ அல்லது நமக்கு பிடிக்காத விசயங்களோ இருக்ககூடும்போல. இது ஏன் என்று தெரியிவில்லை, இது பழங்கால இலக்கியங்களின் நிலமை. இப்பொழுது கடந்த 100ஆண்டுகளாக நவீனத்துவம் வளர்ந்தபிறகு தற்பொழுது தமிழ் இலக்கியத்தின் நிலைமை என்ன என்றால், ஓலைச்சுவடியிலிருந்து முதலில் எழுத்துக்கள் அச்சேறின. நவீனத்துவம் என்பது உலகம் அனைத்திலும் மனிதனின் வாழ்க்கை முறையிலும் புகுந்து கொண்டது. பண்டிதர்கள் கையிலிருந்த இலக்கியம் பாமரனின் கையில் அச்சுக்கோர்க்கப்பட்டபொழுது புது வடிவம் பெற்றது. இலக்கணம் தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால் மட்டுமே ரசிக்க அனுபவிக்க கூடிய இலக்கியங்களை, சாதரண பேச்சுத் தமிழில் உரைவிளக்கம் கற்றுத்தர ஆசிரியர்கள் எதுவும் தேவையில்லை என்ற சுதந்திரம் வாசனுக்கும் எழுத்தாளனுக்குமான இடைவெளியை குறைத்தது.

ஒரு தீவிர வாசகன் எந்த கணமும் ஒரு எழுத்தாளனாகவோ, விமர்சகனாகவோ மாறக்கூடிய சாத்தியங்கள் இதனால் அதிகமாயின. எழுத்தாளருக்கு கிடைத்த எல்கையற்ற சுதந்திரத்தில் எட்டமுடியாத சிகரங்களையும் எட்டமுடிந்தது, அதள பாதாளத்திலும் அவனால் விழ முடிந்தது. மொழியை வசப்படுத்தி அதன் வசீகரங்களோடு சாதாரண வாழ்வின் அசாதரண தருணங்களை கவிதை, சிறுகதை, கட்டுரை என பல வகைகளில் பதிவுசெய்யப்பட்டன. இதில் நவீனத்துவம் என்ற சொல் அவ்வப்பொழுது அதுவரை கட்டிக்காத்துவந்த வாழ்வியல் மரபுகள் பண்பாடு என்று உடைத்தெறிய துவங்கியது.

மனிதனின் நுண்ணிய உணர்வுகளை பதிவுசெய்வதுதான் நவீன இலக்கியங்கள். வெறும் சுவாரஸ்யத்திற்காக எழுதப்பட்ட இலக்கியங்களாக தொடர்கதைகள் வெளிவந்தது. இவை மத்திய வர்க்கத்திற்கு சுவைமிகுந்ததாக இருந்தது. அதன் பின் கனவுகளால் நெய்யப்பட்ட இலக்கியங்கள் பிரபலடைந்தது இது யாருக்காக என்றால் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருவடிகாலாக குறிப்பாக பெண்களுக்காக வெளிவந்தது. லச்சியவாதிகளை முன்னிறுத்தி ஒரே நேர்கோட்டில் ஒரு தனிமனிதன் அவன் சார்ந்திருந்த கொள்கைகள் சமூகத்தின் மீது கொண்ட முரண்பாடுகள் என்று தொடர்ந்தவை இன்றுவரை வெற்றிகரமான ஒரு இலக்கியத்திற்கான உக்தியாக கருதப்படுகிறது.

அறிவியல் பயன்பாடுகள், பெண்கல்வி, பெண்ணுரிமை, கம்யுனிசம், சோசலிசம் என்று எழுபதுகளில் திரும்ப திரும்ப பேசப்பட்டது. இதையும் சிலர் ஏற்றுக்கொண்டாலும் நவினத்துவம் இலக்கியத்தில் வந்தபொழுது மட்டும் இதையெல்லாம் எழுதுவார்களா என்று பெரிதாக குரல் எழுந்தது.

இலக்கியத்தில் மட்டும் ஏன் இதை எதிர்த்தார்கள் என்றால் நாம் செய்வனவற்றை ஆவணப்படுத்துகிறோம். பொது அடையாளங்களை எங்கோயோ எழுத்தின் மூலம் சீர்குலைக்க வருவதாக நினைக்கின்றனர். பரவலாக பேசப்பட்டு எழுதப்பட்டுவரும்பொழுது அது உண்மையாகிவிடுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சக்தி நம்மிடமுள்ள பொதுஅடையாளங்களை அழிக்கிறதே என்ற உணர்ச்சி வரும் பொழுது நவீனத்துவத்தை எதிர்க்கிறார்கள் இதை ஏற்றுக்கொள்ளலாமா மறுபரிசீலனை செய்யலாமா என்று யோசிக்கும் பொழுது பின்நவீனத்துவம் என்ற ஒரு பேரலை எழுகிறது.

பின்நவீனத்துவம் பழைய மரபுகள் எல்லாவற்றையும் தூக்கிவீசியது. கண்ணில் பட்ட அத்தனை பண்பாடுகளையும் கேள்விக்கு உட்படுத்தியது. பின் உருமாறி எதிமறையாகியது பழைமைகளை தேடிச்செல்வதும் பின்நவீனத்துவத்தின் ஒரு முக்கிய கூறாகும். ஆனால் மனிதன் வசதியாக எது எல்லாம் இருக்கிறதோ அதை உடனே ஏற்றுக்கொள்வான். இரண்டு உலகப்போருக்கு பின் மனிதர்கள் எல்லோரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் நம்பிக்கையையே இழந்துவிட்டார்கள். உயிர்வாழ்தலின் நம்பிக்கையே தொலைந்த பொழுது இறுத்தலியம் என்ற வார்த்தை தோன்றுகிறது இதன் அடையாளம்தான் நவீனத்துவம்.

ஒரு ஊரில் நரி அதோடு சரி இது ஒரு கதை. இதுவும் ஒரு நவீனத்துவும் என்று வைத்துக்கொள்ளலாம். இது கதை என்று முதலில் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் மிச்ச தொடர்ச்சியை நீங்கள் எழுதுங்கள் இது நவினத்துவத்தின் ஒரு போக்கு. இப்படிபட்ட சுதந்திரம் தருவதுதான் நவீனத்துவம்

எனக்கு தெரிந்து யாருமே நிசவாழ்வில் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை, மாகாத்மா கூட. இதையும் நான் அவரின் சத்தியசோதனை நூலைபடித்த பின்னேதான் கூறுகிறுன். நிச வாழ்வில் அறநெறி கருத்துக்கு மாறாக, பல அபத்தங்கள் முரண்பாடுகள் கொண்ட முடிவற்ற சுழற்ச்சியாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையும், இலக்கியமும் சேராமல் தனித்து நிற்பதுபோல் ஒரு தோற்றம். இது நெருப்பு தொட்டால் சுடும் என்று சொல்லி அறிவுறுத்தும் நிலையை நவீன இலக்கியம் தவிர்க்கிறது. கதாசிரியனுடன் சேர்ந்து வாசகனையும் பயணிக்கவைக்கிறது. இரட்டை பரிமாணங்கள், முப்பரிமாணங்கள் என்று எண்ணிலடங்கா அளவிடமுடியாத பரிமாணங்களை கொண்ட பிரமாண்டங்களாக விரிகிற வாழ்க்கையை, சிறு வார்த்தைகளை அடக்க முயற்சிப்பதுதான் நவீன இலக்கியம். சங்க இலக்கியத்திலும் இதே விசயம் உள்ளது, ஆனால் அதை நாம் உணராமல் தமிழாசிரியர்களை வைத்து படித்து முடித்துவிட்டோம். ஒரு மொழியை கற்றுக்கொள்ள ஒரு ஆசிரியர் தேவை, இலக்கியத்தை ரசிக்க ஆசிரியர்கள் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.

நிறையபேர் தன்னுடைய இயற்கையான ஆசைகள் கனவுகளை பரிட்சை என்ற வட்டத்திற்குள் தொலைத்துவிடுகிறார்கள். இப்படி இருக்கையில் நாம் இலக்கியத்தை ரசிக்க எந்த ஆசிரியரும் தேவையில்லை, நம் மனதுதான் ஆசிரியர். இந்த மனதை பழக்கப்படுத்த வேண்டும் இடைவிடாது படிப்பதன் மூலம்தான் நுட்பமான உணர்வுகளை அடையமுடியும். அடுக்கடுக்காக மனதை வளர்த்துக்கொள்ளும் பொழுது நவீனத்துவும் பின்நவீனத்துவம் சங்கஇலக்கியம் எல்லாம் நம் கையில் வந்துவிடுகிறது.

உலகத்தரம், இலக்கியத்தரம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் நாம் இன்னும் விக்கரமாதித்யர்களாக உலகத்தரம் என்றால் என்ன, இலக்கியத் தரம் என்றால் என்ன என்று அந்த வேதாளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். நல்ல இலக்கியம் என்பதை காலம் தீர்மானிக்கட்டும் என்கின்றனர். எனக்கு தெரிந்து 50வருடமாக சித்துபாத் கதை வருகிறது. தொடர்ந்து வருவதால் அது நல்ல இலக்கியமா, அல்லது தொடர்ந்து ஒரு இலக்கியத்தை ஒதுக்கிவிட்டதால் தரமற்றதாக ஆகிவிடுமா?


Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்