சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

வ ஐ ச ஜெயபாலன்


11

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என அம்மா அடிக்கடி சொல்வார். இனி பெரு மகிழ்ச்சியும் இன்பமும் நிறையும் நாட்கள் ஆரம்பமாகப் போகிறது என கனவு கண்டேன். யாரிடம் அத்தனை முட்டைகளை வாங்குவது என்பது புரியவில்லை. வழியில் சந்தித்த வண்டிக்கார மாவிடம் ஒரு வாரத்துக்குள் ஐம்பது முட்டைகள் தேவை எனச் சொல்லி வைத்தேன். மாமா அதற்க்காக நான்கு ரூபாய் பணம் கேட்டார். நானோ பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்தில் கொண்டுவந்து தருவதானால் ஐந்து ரூபா தருவதாகப் பேரம் பேசிவைத்திருந்தேன்.

எனது தேவதைக்காக அந்த ஐம்பது முட்டைகளைச் சேகரிக்க இன்னமும் ஒருசில நாட்கள் மட்டுமே எஞ்சி இருந்தன. ஒருநாள் பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடையில் இருந்த சித்தப்பா என்னை அழைத்தார். அப்பா மன்னாரில் இருந்து ஊருக்கு வந்திருப்பதையும் கொஞ்சம் முன்னம்தான் கடையில் இருந்து வீட்டுக்குப் போனார் எந்பதையும் அவர் எனக்கு அறிவித்தார். அதைக் கேட்டதும் என்னக்குள் இருண்டது. எனது முட்டை விவகாரத்தை அப்பா கண்டு பிடித்து விடுவாரோ என எனது மனசு அடித்துக் கொண்டது. சித்தப்பா மீண்டும் பேசினார். பக்கத்தில் எங்கோ ஆட்டிறைச்சி அடிக்கிறார்களாம். ‘அண்ணனுக்கு ஆட்டிறைச்சி விருப்பம் ‘ என்றவர் தனது சைக்கிளை எடுத்த படியே ‘கடையில் நிற்கிற பெடியன் வீட்டுக்குப் போயிற்றான். நீ கொஞ்ச நேரம் கடையில் இருந்துகொள். அதற்க்குள்ள நான் ஒடிப்போய் உங்களுக்கும் சேர்த்து இறைச்சி வாங்கி வருகிறேன் ‘ என்றார்.

கடையில் அப்பாவின் `காண்ட் பாக்` இருந்தது. ஏன் அப்பா அதனை இங்கே விட்டு விட்டுப் போயிருக்கிறார் என்பது தெரியாமல் குழம்பினேன். அந்த பயனப் பையின் பூட்டை முன்னரும் திருட்டுத் தனமாகத் திறந்திருக்கிறேன். சித்தப்பாவின் தலைக் கறுப்பு தூரத்தில் மறைந்ததும் பயணப் பையை எடுத்துத் திறந்தேன். அதற்குள் இருந்த ஆங்கிலப் புத்தகம் என்னை ஆச்சரியப் படுத்திது. அந்த நாவலின் பெயர் ஓல்ட் மான் அண்ட் த சீ. அந்த நாவலைப் பற்றி தமிழில் வந்த ஒரு கட்டுரையை சின்னத்தம்பி மாஸ்ட்டர் எங்களுக்கு வாசித்துக் காட்டி இருக்கிறார். அவர் எங்களுக்கு அரசியல் படிப்பித்தார். அவர் படிப்பிக்கும் அரசியற் பாடத்துக்கும் அந்த நாவலுக்கும் எந்த வொரு சம்பந்தமும் இருக்க வில்லைத்தான். சின்னத்தம்பி மாஸ்டரைக் கேட்டால் உலகில் எல்லாவற்றிலும் அதன் அதன் அரசியல் இருக்கவே செய்கிறது என வாதிடுவார். உண்மையில் அவர் படிப்பிக்கும் அரசிலை விட அவர் சொல்லும் ஏனைய விடயங்களில் இருந்துதான் நாம் அதிகம் அரசியல் கற்றுக் கொண்டோம்.

அப்பாவால் அந்தப் புத்தகங்களை ஒருபோதுமே படிக்க முடியாது. அம்மாவுக்காக அவர் ஒருபோதும் அன்பளிப்புகளோ புத்தகங்களோ வாங்கிவருவதில்லை. பையுள் ஒரு கட்டு பத்துரூபா தாள்களும் கட்பரிஸ் சாக்கிளேட்டுகளும் இருந்தன. ஒரு பத்துரூபா தாளை மட்டும் திருடிக் கொண்டு மெதுவாக அந்தப் பயணப் பையைப் பூட்டி இருந்ததுபோல் வைத்து விட்டேன். புதிதாக ஊருக்கு வந்திருக்கிற டாக்டர் தமிழரசுக் கட்சி அனுதாபி, அதனால் அப்பாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பிருந்தது. அவருக்குத்தான் அப்பா ‘ஓல்ட் மான் அண்ட் த சீ ‘ என்கிற நாவலை வாங்கியிருப்பார் எனத் தோன்றியது.

12

அன்றுதான் எங்கள் தேவதை ரீச்சருக்கு ஐம்பது முட்டைகள் கொடுக்க வேண்டிய கடைசி நாள். ஐம்பது முட்டைகளை லாம் ரீச்சரிடம் தந்து எனது வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றப் போகிறேன் என்கிற பெருமிததிலும் தொடர்ந்த இன்பக் கனவுகளிலும் நான் கரு கரு மீசை முளைத்த வாலிபனானேன். அந்த தேவதையிடம் நல்ல பெர் வாங்கி நெருக்கமாகப் போகிறோம் என்கிற உணர்வின் போதையில் எதிலுமே நிலைகொள்ள முடியாமல் தடுமாறினேன். காலையில் குழித்து விட்டுக் கண்ணாடியின்முன் நின்றபோது எனது தொண்டை கட்டியிருப்பதை உணர்ந்தேன். முகத்தில் ஓரிரு பருக்கள் வேறு தலைகாட்டி என்னை மனமுடைய வைத்தன. எனக்கு தொண்டைக் கரப்பன் வந்துவிட்டதாக அஞ்சினேன். எனது குரலுக்குள் ஏதோ கீச்சிட்டது. லாம் ரீச்டன் இந்தக் கீசுக் குரலிலா பேசுவது என திகைத்தேன். எனினும் நான் முன்னைவிட வளர்ந்திருப்பதை உணர்வது மகிழ்ச்சி தந்தது. எனது புயங்கள் பருத்து மார்பு விரிந்திருக்கிற அழகில் நானே மயங்கினேன். அது நிச்சயம் லாம் ரீச்சருக்குப் பிடிக்கும் எனத் தோன்றியது. மீசை மயிர்கூட அதிகமாய் வளர்ந்திருந்தது. சமையலறையில் இருந்து ஐந்தாறு தடவை அம்மா குரல் கொடுத்தாள். உள்ளே படுத்திருந்த அப்பா நித்திரை குழம்பிய ஆத்திரத்தில் புரண்டு படுத்த படியே ‘உனக் கென்னடா காது செவிடா ‘ எனக் கத்தினார். எரிச்சலுடன் சாப்பிடப் போனேன். எனது குரலில் வந்த கீச்சம் அம்மாவை ஒருகணம் திகைக்க வைத்தது. ‘பாலனும் பஞ்சமும் பத்து வருடம் ‘ என்றபடி அவள் என்னை அணைத்து உச்சி முகர்ந்தாள். என்னம்மா சொல்கிறாய் என்றேன். ‘நீதானேடாஎன்ர மூத்த ஆம்பிளைப் பிள்ளை ‘ என்ற படி உணர்ச்சிக் குமுறலில் தடுமாறிக் கண்கலங்கினாள். வயிரவரே நீ என்னைக் கைவிடவில்லை என்று எங்கள் குல தெய்வத்தை வாழ்த்தியபடி வானை நோக்கி கைதூக்கி இறைஞ்சினாள். . ‘ஒரு நாள் நீ வளந்து என்னை சிறை மீட்பாய் என்கிற நம்பிக்கையிலதான் தனே ராசா நான் உயிரோட இருக்கிறன் ‘ என்ற போது எனக்கும் கண்கள் கலங்கியது. அம்மாவைவை அணைத்துக் கொண்டு அழுதேன். ‘ஆம்பிளைப் பிள்ளை அழக்கூடாது ‘ என்றபடி சாப்பிட அழைத்தாள். சாப்பிட்ட பின்னர் எனது தொண்டைக்கு நல்லதென்றபடி கற்கண்டு தந்தாள்.

பள்ளிக்கூடம் போகிற பாதையில்தான் வண்டிக்கார மாமாவின் வீடு இருந்தது. ஐம்பது முட்டைகளையும் மூன்று மைல் தூரத்துக்குச் சைக்கிளில் கொண்டுபோக எனக்குப் பயமாக இருந்தது. எனது வாழ்வின் வரப்பிரசாதமே அந்த ஐம்பது முட்டைகளுக்குள்தான் இருந்தது. அவற்றை பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். வயிரவரை தொழுதபடிக்கு வண்டிக் கார மாவின் குடிசை வீட்டுப் படலில் நின்று சைக்கிள் மணியை அடித்தேன். மாவின் வண்டி தெருவின் மறுபக்கத்தில் ஒங்கி உயர்ந்திருந்த வேப்ப மரத்தின்கீழ் இழுத்துவிடப் பட்டிருந்தது. வண்டிக்குப் பின்புறமாக தினைச்சாமி வைக்கோல் தின்று கொண்டிருந்த மாமாவின் வண்டி மாடுகள் இரண்டும் தலை தூக்கி என்னைப் பார்த்தன. வா மருமகன் என்ற படி வண்டிக் கார மாமா புழித்த தென்னங்கள் மணக்க வெளியில் வந்தார். மாமா என்றேன். எனது கீச்சிடும் குரலைக் கேட்டதும் மாமா மகிழ்ச்சியாகச் சிரித்தார். ‘என்ன மருமகன் சேவல் கூவீற்றுதுபோல, இனி என்ன கல்யாணச் சாப்பாடுதான் ‘ என்றபடி சிரித்தார்..

அது கிறிஸ்மஸ் காலமானதால் கடையில் ஒரு முட்டை பதினைந்து சதத்துக்கே கிடைக்கவில்லை. வண்டிக்கார மாமாவோ ஒரு முட்டைக்கு பத்துச் சதப் படி பணம் கேட்டிருந்தார். முட்டைக்காக அப்பாவின் பயணப் பையில் இருந்து திருடிய பத்து ரூபாவையும் மாவிடம் கொடுத்தேன். ‘என்னிட்ட மிச்சம் தரச் சில்லறைக் காசில்லையே மருமகன் ‘ என்றார். ‘மிச்சம் தரவேண்டாம் மாமா ‘ என்ற எனது பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது முகம் ஆச்சரியத்தில் மலந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்க்காக ‘என்ன சொல்லிர ‘ என்றபடி என்னை ஏறெடுத்துப் பார்த்தார். பின்னர் தான் கிழக்கே ஆஸ்பத்திரி வரைக்கும் போக இருப்பதாகவும் மத்தியானம் பள்ளிக்கூட வாசலுக்கே முட்டைகளைக் கொண்டுவந்து தருவதாகவும் சொன்னார். மமா என்றபடி தயங்கினேன். ‘என்னவேனுமோ கேள் மருமகன் ‘ என்றவர் தனது வலது கையை உயர்த்தி வீதிக்கு மறுபுறமாக நின்ற தனது வண்டியைச் சுட்டிக் காட்டினார். ‘ புசுப்பக விமானம் மருமகன். இராவணன் வைச்சிருந்த அதே புசுப்பக விமானம். உனக்குச் சீதை வேணுமென்றாலும் என்ற புசுப்பக விமானத்தில கடத்தியந்து தருவன் ‘

‘இல்லை மாமா ‘

‘பயப்பிடாமல் கேள் மருமகன் ‘

‘இது ஒருதருக்கும் தெரியக் கூடாது ‘

‘இதானா ஒருதருக்கும் சொல்லமாட்டன் மருமகன் ‘

‘மெத்தப் பெரிய உபகாரம் மாமா ‘

‘நீ இங்கிலீசு படிக்கிற பிள்ளை. எ, பி, சி, டி கிழவன்ர தாடி எண்டு என்ர வண்டியில வாற வெள்ளைக்காரன் பேசிறமதிரி தாங்கு சொல்லு. ‘

‘தாங்ஸ் மாமா ‘

‘எத்தின பெடி பெட்டயள் என்னை நம்பி கடிதம் தருகுதுகள். உங்க பள்ளியில படிக்கிற எத்தின நளமகாராசருக்கும் தமயந்திகளுக்கும் நான் தபால்க் காறன் வேலை பாற்கிரன். ‘ மாமா உற்சாகமாகப் பேசினார். பின் மெதுவான குரலில் கேட்டார் ‘கொஞ்சம் தென்னங் கள்ளு இருக்கு குடிச்சுப் பார்க்கப் போறியா ‘

எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ‘வேண்டாம் மாமா ‘ என்றேன்.

‘இந்த வயதில களவும் கற்று மறக்க வேணும் மருமகன். ‘ என்றவர் ‘தென்னங்கள்ளு வேண்டாம் பனங்கள்ளுக் காலம் வரட்டுக்கும் மருமகனுக்கு நல்ல கள்ளா வாங்கித் தாறன் ‘

‘ஒருதருக்கும் சொல்லிப் போடாதயுங்கோ மாமா ‘

‘ பயப்பிடாமப் போ மருமகன் நடு மத்தியானம் ஐமபது முட்டையோட உங்க பள்ளிக்கூட வாசலில வந்து நிக்கிறனா இல்லையா என்டு பார். ‘

13

காலையில் தமிழ் வகுப்பு ஆசிரியர் வரவில்லை. அதற்க்குள் மூன்றுதடவை சத்தம் போட வேண்டாம் என்று பக்கத்து வகுப்பு ஆசிரியர்களிடமிருந்து எச்சரிக்கை வந்து விட்டது. பையன்கள் ஐம்பது முட்டை பற்றிக் கேட்டார்கள். கேட்டவர்களுக் கெல்லாம் எனது கீச்சுக் குரலை மறைத்து ‘எந்த நேரம் முட்டை தேவையோ அந்த நேரம் முட்டை வரும் ‘ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘முட்டை என்ன பறக்கும் கம்பளத்திலா வருகிறது ‘ என்று கேட்டு மாணவர்களும் மாணவிகளும் கிண்டல் பேசினார்கள்.

முட்டையில்லாமல் வெறும் கையோடு வந்திருக்கிறேன் எனத்தான் வகுப்பில் எல்லோரும் நினைத்தார்கள். லாம் ரீச்சரின் முன்னே நான் அவமானப் படப்போகிறதைப் பார்க்கிற சந்தோசத்தில் அவர்கள் கிளர்ச்சி அடைந்திருந்தார்கள். அவர்களது எதிர் பார்ப்புகளை எல்லாம் தகர்த்து வெற்றி வீரனாக நிமிரப் போகிற திமிரோடு நான் மெளனம் காத்தேன். மனசுக்குள் லாம் ரீச்சரோடு என்ன பேசுவது எப்படி எனது கீச்சுக் குரலை மறைப்பது என்கிற ஒத்திகை தீவிரப் பட்டிருந்தது. முட்டைகளை கொடுக்கிறபோது தென்றலில் ஆடுகிற டபோடில்ஸ் மலர்கள் போல லாம் ரீச்சர் மகிழ்ச்சி பூத்துக் குலுங்குவார். தங்க்ஸ் என்பார். நன்றி எதற்கு என்றபடி கைகளைத் தீண்டியபடி முடைகளை அவரிடம் தருவேன். அன்பாக தலையை நீவி விடுவார். காசு தருகிற போது வாங்க மறுப்பேன். வற்புறுத்தினால் ‘வீட்டில் அப்பாவும் அம்மாவும் லாம் ரீச்சரிடம் பணம் வாங்க வேண்டாம் ‘ என்று சொன்னார்கள் எனக் கூறி அவரது காசுடன் நீழும் தங்கக் கைகளை மெதுவாகத் தொட்டுத் தள்ளி விட வேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன். கண்களை மூடியபடி எனது உட்கண்ணுள் நடனமிடும் லாம் ரீச்சருடன் கற்பனையில் பேசுகிற போதையில் திளைத்துப்போயிருந்தேன். திடாரென குட் மோனிங் ரீச்சர் என்று மாணவர்கள் கோஸ்டி கானம் வைத்ததில் திடுக்குற்று கண்திறக்க நேர்ந்தது.

கண் திறக்க முன்னமே லாம் ரீச்சர் என்னருகே மல்லிகைச் சரமாய்க் கமழ்ந்தார். பூப்போட்ட மயில் தோகை போன்ற பசிய நீலச் சேலையில் ஏரியின் பக்கதில் காற்றிலாடும் டபோடில்ஸ் புதராக மிகவும் அருகில் அவர் அசைந்தார். மறு கணமே டபோடில்ஸ் மலர்கள் இதழ்கள் பட்டு என் மேனி சிலிர்த்தது. லாம் ரீச்சர் எனக்கு விசேடமாக குட் மோணிங் சொன்னார். நானும் பதிலுக்கு ‘குட் மோணிங் ரீச்சர் ‘ என்றபடி விருட்டென எழுந்தேன். திடாரென மனசு நொருங்கிச் சிதறியது. லாம் ரீச்சரின் கையில் புத்தம் புதிய ‘ஓல்ட் மான் அண்ட் த சீ ‘ புத்தகம் இருந்தது. ஆத்திரத்தையும் கண்ணீரையும் கட்டுப் படுத்தியபடி உடல் நடுங்க லாம் ரீச்சரைப் பார்த்தேன். லாம் ரீச்சர் சிரித்தபடி ‘முட்டை எங்கே.. ? ‘ என வினவினார்.

முட்டை இல்லை என்றேன். இருபத்தி எட்டு மணவ மாணவிகளின் கேலிச் சிரிப்பில் வகுப்பு அதிர்ந்தது.

‘என்ன முட்டை இல்லையா ? ‘ லாம் ரீச்சர் அதிர்ந்து போனார்.

‘இல்லை ‘ அவரது முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னேன். எனது கலங்கிய கண்கள் அவரது கைகளில் இருந்த `ஓல்ட் மான் அண்ட் த சீ` புத்தகத்தில் மொய்த்துப் போயிருந்தன.

‘வீட்டில் அறுபது கோழி இருப்பதாக சொன்னாயே ‘

‘கோழி இருக்குது. சேவல் இல்லையே. ‘ சொல்லி வாய் மூடமுன்னமே சிரிப்பில் வகுப்பறை இரண்டு பட்டது. மாணவர்களின் சிரிப்பின் மத்தியில் ‘சேவல் வேலி பாய்ந்து ஓடிற்றுது. ‘ என்றேன்

மீண்டும் வகுப்பு அதிர்ந்தது. லாம் ரீச்சர் வெடுக்கெனத் திரும்பி ஓட்டமும் நடையுமாக மறைந்தார். எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. சொண்டுகளைக் கடித்து அழுகையை அடக்கப் போராடினேன். பொறாமை பிடித்த பிசாசுகளான எனது சக மாணவ மாணவிகளின் முன்னம் கண்கலங்குவதை நான் வெறுத்தேன். வெளியில் ஓடிவிட எழுந்த போது வாசலில் வந்த லாம் மாஸ்டர் என்னைப் பார்த்து ‘வாயாடி நம்பர் வண் ‘ என கத்தினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. வளமைக்கு மாறாக அவரது கையில் பிரம்பு சுளன்றது. அவரது முகத்தில் ஆத்திரம். எனது முகத்தில் கண்ணீர்.

(முற்றும்)

Series Navigation