செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

மணி வேலுப்பிள்ளை


____

ஆம்! அது மிகவும் கனதி வாய்ந்த கதை என்று அடித்துக் கூறலாம். கதை முற்றிலும் உரையாடலில் அமைவதால், அதன் பேச்சு வழக்கு பச்சையாய் இருப்பது நியாயமே. ‘மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது. இலக்கியத்துக்கு மொழியே அவசியமில்லை. கதையிலிருந்து ‘கதை ‘யை வெளியேற்றுவதுதான் என் வேலை. கதை சொல்வது என் வேலை இல்லை ‘ (சா.கந்தசாமி).

மாஸ்டர், சுவாமியார், சார்ஜன்ட் போன்ற ஊர்ப் பெருச்சாளிகளால் தட்டிக்கேட்க முடியாத ஒரு காட்டுப்பூனையை யேசுமணி என்னும் சுண்டெலி தீர்த்துக் கட்டியிருக்கிறது. தவிரவும், யேசுமணியின் உரோசம் பெரும் புள்ளிகளுக்கு விமோசனம் அளித்திருக்கிறது. எனினும் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும் என்பதற்காக அவன் சண்டியனைத் தாக்கவில்லை. ஏன் ? அது ஒரு திட்டமிட்ட கொலையே அல்ல. சண்டியன் வாய்த்துடுக்கு நோஞ்சானை வெகுண்டெழ வைக்கிறது. அப்பொழுது அவனுக்கு வருவது தன்னை மறந்த ஆவேசம். அப்புறம் நடந்தது அவனுக்கே தெரியாது. அதை யேசுமணியே எதிர்பார்த்திருக்க மாட்டான். அதைப் போய்ச் சண்டியன் எதிர்பார்ப்பது எங்கனம் ? சண்டியன் தன்னைச் சுதாகரித்துக் கொள்வதற்குத் தருணம் வாய்க்கவே இல்லை. அத்துணை பன்முனை அதிரடித் தாக்குதல் என்பது தலைப்பின் மூலமும், ஈற்றில் கம்பர் வாயிலாகவும் உணர்த்தப்படுகிறது.

ஒரு தரப்பினர் எதிர்நோக்கிய ஒரு பொதுப்படையான பிரச்சனைக்கு (ஆரோக்கியநாதனின் சண்டித்தனத்துக்கு) உரிய தீர்வு, ஒரே ஒருவன் (யேசுமணி) எதிர்நோக்கிய சொந்தப் பிரச்சனைக்கு (அவமானத்துக்கு) உரிய தீர்வுடன் இரண்டறக் கலப்பது கவனிக்கத்தக்கது. யேசுமணியை (அகராதியில் வரையறுத்தவாறான) ஒரு கொலைஞன் என்று கொள்வதற்கில்லை. அத்தகைய ஒரு கொலைஞர் கையோடு காவல் துறையிடம் போய்ச் சரணடையப் போவதில்லை. யேசுமணி சரணடையுந் தறுவாயில் சார்ஜன்ட் கூட தனது சமூகத்தவருடன் சமூகத்தவராக இணைந்து விடுகிறார். சண்டியன் பொது எதிரி அல்லவா ? யேசுமணி புரிந்த காரியத்தை அப்பழுக்கற்ற கொலை என்று வரையறுக்க முடியாது என்றால், சார்ஜன்ட் கடமை திறம்பிவிட்டார் என்றும் சொல்ல முடியாது அல்லவா ?

வைக்கம் பஷீர் முகமது எழுதிய ஒரு கதை… தலைப்பு நினைவில் இல்லை… அதில் நாட்டுப் புறத்திலிருந்து பிழைப்பு நாடி நகரப் புறத்துக்கு வரும் ஒரு கூலியாளைக் கைகாட்டிக் கூப்பிடும் ஒரு சீமான் தன்னை அண்டிப் பிழைப்பவர்கள் மத்தியில் அவனை நிறுத்தி வைத்து ‘அடே! உன் பெண்சாதி அழகாய் இருப்பாளா ? ‘ என்று கேட்கிறான். கூலியாள் தலைகுனிந்து நிற்கிறான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதே சீமான் அதே கூலியாளிடம் சொல்லுகிறான்: ‘பரவாயில்லையடா! உன் பெண்சாதி அழகாய்த்தான் இருக்கிறாளடா… ‘ அதனைத் தொடர்ந்து அவளுக்கும் கணவனுக்கும் சீமானே எசமான் ஆகின்றார். அது அவர்களுக்கு ஒரு பிழைப்புக் கிடைத்த மாதிரி ஆகிறது. அப்புறம் அவன் தனது குடிசைக்குத் திரும்பும் வேளைகளில் அங்கு எசமான் வந்து போகும் தடயங்கள் கண்டு தனது மனைவிமீது மனம் இரங்குகிறான். அவளும் கணவன்மீது மனம் இரங்குகிறாள். அவர்கள் வாழ்வில் உரோசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. உரோசம் என்ற பேச்சு எழுந்தால், அவரகளுக்கு வாழ்வே இல்லை. இவ்விரு கதைகளும் ஒப்புநோக்கத் தக்கவை.

‘கொடு வாளினை எடடா, மிகு கொடியோர் செயலறவே ‘ என்று அல்லது என்றவாறு பாடுகிறார் பாரதிதாசன். மாறாக, ‘கதையில் வருகிற பாத்திரம் வேண்டுமானால் கத்தி வைத்திருக்கலாம். ஆனால், ‘கத்தி எடு ‘ என்று ஓர் எழுத்தாளன் எப்போதும் எழுதக்கூடாது ‘ என்கிறார் ஜெயகாந்தன். ஆனால் யேசுமணி சாகத் தயார், மண்டியிடத் தயாரில்லை. அப்படி என்றால் இந்தக் கதையின் படிப்பினை என்ன ? இது சர்ச்சைக்கு இடம் கொடுக்கும் கேள்வி. ஓர் ஆக்கம் ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிடுகிறது என்றால், அந்த ஆக்கம் அதன் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது என்றுதான் கொள்ள வேண்டும்.

____

மணி வேலுப்பிள்ளை manivelupillai@hotmail.com 2005-03-12

Series Navigation

மணி வேலுப்பிள்ளை

மணி வேலுப்பிள்ளை