சென்னை மாரத்தான்!!

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

விபா


கோழி பிரியாணி மற்றும் கட்டிங் இல்லாமல் கூட்டம் தமிழகத்தில் சேராது என்னும் விதி 31-08-08 அன்று தகர்ந்தது. ஜகத் கஸ்பார், கனிமொழி, அகிலா ஸ்ரீனிவாசன் முதலியோரின் முயற்சியில், சென்னை மாரத்தான் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தொழில் முனைவோர், விளையாட்டு வீரர்கள், அரசியலர் எனப் பலதரப்பினரும் சேர்ந்து குரல் கொடுக்க, நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நிறைய மக்கள் வந்திருந்தனர். சிறு குழந்தைகள், மாணவ மாணவியர், முதியவர், கார்ப்பரேட் குடிமக்கள், தொழில் முனைவோர் என அனைவரும் ஓடினர்.

துவக்க மேடையில் சூர்யா, கனிமொழி, குரல் கொடுக்க ஜகத் கஸ்பார், விளையாட்டு மந்திரி கில், நடிகர் நெப்போலியன் முதலியோர் இருந்தனர். ஓட்டம் துவங்கும் அந்த இடத்தை அடையவே 15 நிமிடங்கள் ஆயிற்று.

பள்ளிச் சிறுவர்களின் உற்சாகமும், குறும்புகளும் ரசிக்கும் படியாக இருந்தது. அதுவும் எங்களுக்கும் முன் சென்ற வரிசையில், ஒரு சின்னப் பெண் அடித்த பிகில் (விசில் என்பதன் சென்னைத் தமிழாக்கம்) காதுகளைப் பிய்த்தது. “சூர்யா எங்கய்யா??” என்று அந்தப் பெண் செய்த கலாட்டா கண்களில் நிற்கிறது. விடலைப் பையன்களின் சைட் அடிக்கும் முயற்சிகளும், பள்ளி செல்லும் பெண்களின் திடீர் விடுதலையின் பரவசமும் கொள்ளை அழகு. கிட்டத்தட்ட 1.5 லட்சம் மக்கள் நிரம்பிய கூட்டத்தின் energy levels எல்லோரையும் தொற்றிக் கொண்டது.

சூர்யாவைக் கண்ட பெண்கள் விட்ட ஜொள்ளில், பலர் வழுக்கி விழுந்தனர். ஆங்காங்கே சில வெளி நாட்டவர்களையும் பார்க்க நேர்ந்தது. Cheer leaders மேடைகளும் இருந்தன – அவர்களின் உற்சாக நடனமும், “அதோ அந்தப் பறவை” பாடலும், ஹை டெசிபல் ஸ்பீக்கர்களும் ஜிவ் வென இருந்தன. Cheer leader களின் உடை, 20:20 கிரிக்கெட் அளவுக்கு இல்லையென நண்பன் வருத்தப் பட்டான். அடுத்த முறை அதைச் சரி செய்ய ஜகத் கஸ்பாருக்கு வேண்டு கோள் விடுப்போம் (பிதாவே, எங்களை மன்னியும்!!)

சென்னையை நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை. நகரத்தின் முதல் குரலான ஆட்டோ ஓட்டுனர்களின் நடத்தை அதற்கு முக்கிய காரணம். சென்னை ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவர்களுடன் மல்லாட வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு பொறுமை சாலியையும் சோதித்துவிடும். உடன் நாசியை மோதும் கூவத்தின் நாற்றம் மற்றும் அழுக்கு, சென்னையைப் பற்றி ஒரு மோசமான எண்ணத்தையே அனைவர் மனத்திலும் ஏற்படுத்தும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு, சென்னையின் ஒருமை (இன்னா?) பாஷை பிடிப்பதில்லை. அது அவர்களுக்கு மரியாதைக் குறைவாகவே தோன்றும்.

ஆனால், இதையெல்லாம் மாற்ற வேண்டிய சரித்திர நிர்ப்பந்தம் இப்போது உள்ளது. தமிழகத்தின் அரசியல் கலாச்சாரம் வெளியில் மிக மோசமாகச் சித்தரிக்கப் பட்டதினால், சென்னை அதன் நிலையை இழந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தை விடக் கீழே வந்து விட்டது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தின் தொழில் முனைவோர் மற்றும் அரசியல் வாதிகள் அந்நகரங்களை மிக புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்றனர். 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளைத் தமிழகம் இழந்து விட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் தான், சென்னையில் குடி நீர்ப் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. அரசும் பாஸிட்டிவ்வான அணுகு முறையைக் கைக்கொண்டு, தொழில் துறையை ஊக்குவித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளும், சிறந்த கல்வி நிறுவங்களின் சிறப்புகளும், சென்னையை ஒரு cosmopolitan நகரமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

சென்னை ஒரு நல்ல நகரமாவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இதை மாற்றுவதற்கு சென்னை வாழ் மக்களின் முயற்சிகளும், ஈடுபாடும் மிக அவசியம். சென்னை மாரத்தான் ஒரு மிக முக்கிய துவக்கம். இதனால் திரட்டப்படும் நிதி, குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்குப் பயன்படப் போகிறது. இந்த முயற்சியில் சென்னை வாழ் மக்கள் நேரடியாகப் பங்கு கொள்ளும் வாய்ப்பை இந்த மாரத்தான் அளித்தது. ஸ்ரீராம், கவின்கேர் போன்ற நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு நிதியுதவிகள் செய்து வருகிறார்கள். டி.வி.எஸ், இந்தியா சிமெண்ட்ஸ், முருகப்பா போன்ற பழம்பெரும் நிறுவனங்களும், டி.சி.எஸ், இன்ஃபோஸிஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இம்முயற்சிகளில் கை கொடுத்தால், சென்னை உண்மையிலேயே மிக அழகான, சுத்தமான, அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கொடுக்கும் உலகத்தரமான நகரமாக மாறிவிடும் சாத்தியங்கள் அதிகம்.

கனிமொழி என்னும் மிக ஸ்மார்ட் ஆன பெண்மணியும், ஜகத் கஸ்பார் என்னும் சிறந்த ஆர்கனைஸரும், அகிலா ஸ்ரீனிவாஸன், ரங்கநாதன் போன்ற புரவலர்களும் சென்னை என்னும் மாநகரம் தனக்கென்று ஒரு தனித்துவத்தைப் பெற வேண்டும் என்னும் ஆர்வத்தில் இது போன்ற பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இதில் சென்னை வாழ் மக்களும் கை கோர்த்து, சென்னையை, விரைவில் சீர்மிகு சென்னையாக்க முயல வேண்டும். ஏனெனில், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் ஒரிஜினல் காஸ்மோபாலிடன் ஸ்டேட்மெண்ட் நம்முடையது.


m_bala_s@hotmail.com

Series Navigation

விபா

விபா