துக்காராம் கோபால்ராவ்
கட்டடங்களை நேரடி சூரிய வெப்ப ஒளியிலிருந்து மறைப்பதன் மூலமோ, உள்ளே வந்துவிட்ட வெப்பத்தை வெளியே அனுப்புவதன் மூலமோ சூரிய வெப்பத்திலிருந்து கட்டடங்களை குளிர்ப்படுத்துவதை ‘மறைமுக குளிர்ச்சாதனம் ‘ எனலாம்.
ஜன்னல்களின் மேல் தடுப்புகள் அமைப்பதன் மூலமும், காற்றோட்டமான வீடுகளைக் கட்டுவதம் மூலமும் உச்சிவெயில் சூரியனிடமிருந்து கட்டடத்தை காப்பாற்றுவதும் மாலைவெயில் சூரியனிடமிருந்து வெளிச்சத்தை பெறுவதையும் எளிதாக்கலாம்.
வெப்பத்தடுப்புப் பொருள்கள் – முக்கியமாக சுவர்களிலும் கூரையிலும் சுண்ணாம்பு வர்ணத்துக்குக் கீழே பொருத்திய மெல்லிய அலுமினியத் தகடுகள் – கூரையிலிருந்தும், சுவரிலிருந்தும் கட்டடத்துக்குள் வரும் வெப்பத்தில் 95 சதவீதத்தை தடுத்துவிடுகின்றன. இப்படிப்பட்ட எளிய வெப்பத்தடுப்பு பொருள்களே, தெற்கத்தி வீடுகளுக்கு மிகச்சிறந்த குளிர்ச்சாதனமாக பயன்படக்கூடியவை என்று கேப் கெனவராலில் உள்ள ப்ளோரிடா சூரிய சக்தி மையம் கூறுகிறது.
தண்ணீர் ஆவியாவதும் மிகச்சிறந்த முரையில் கட்டடங்களை குளிர்ப்படுத்த உபயோகிக்கலாம். ஏனெனில் தண்ணீர் ஆவியாகும் போது, அருகாமையில் உள்ள வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கிறது.
வீடுகளுக்கு அருகில் மரங்களை வளர்ப்பதும் நல்லது. மரங்களும் செடிகளும் தங்கள் இலைகளிலும் தண்டுகளிலும் உள்ள சிறு ஓட்டைகள் வாயிலாக நீராவியை வெளியேற்றுகின்றன. இது அருகாமையில் உள்ள காற்றின் வெப்பத்தை 4 முதல் 14 டிகிரி வரை குறைக்கிறது. மரங்களின் நிழல், கட்டடத்தின் மீது விழும் சூரிய ஒளியையும் குறைக்கும். கட்டடத்தின் தெற்குப் புறத்தில் மரங்கள் நடுவது கோடைக்காலத்தில் தெற்கு நோக்கிய ஜன்னல்களுக்கு நிழலும் தரும். குளிர்காலத்தில் மரத்தின் இலைகள் குறைந்து விடுவதால் வெளிச்சமும் வெப்பமும் கிடைக்கும்.
நேர்முக சூரிய குளிர்சாதனம்
நேர்முக சூரிய குளிர்சாதனத்துக்கு பலவழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
முதல்வழி ‘பூமியில் குளிரும் குழாய்கள் ‘ பற்றியது. பூமியில் புதைந்திருக்கும் பெரிய நீண்ட குழாய்கள் வெளிப்புறத்தில் உள்ள காற்றை உள்ளே இழுக்கின்றன. பூமி வெளிக்காற்றைவிட குளிர்ந்து இருப்பதால் பூமிக்கு காற்றின் வெப்பம் செல்கிறது. இவ்வாறு குளிர்ந்த வெளிகாற்று கட்டடத்துக்கு அனுப்பப்படுகிறது.
இரண்டாவது வழி dessicant குளிர் சாதன முறை பற்றியது. dessicantகள் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சவும் வெப்பத்தை உறிஞ்சவும் ஏற்றவை. இதனால் வெப்பமான புழுக்கமான இடங்களான தமிழ்நாடு போன்ற இடங்களுக்கு ஏற்றவை. ஸிலிகா ஜெல்லிகள் (Silica Gels) மற்றும் ஒரு வகை உப்புகூட்டுகள் போன்றவை இந்த Dessicant வகையைச் சார்ந்தவை. இவை பெரும்பாலும் ஈரப்பதமான காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. ஈரம் மிகுந்த இந்த பொருள்கள் சூடாக்கும் போது தம்மிடம் உள்ள ஈரத்தை வெளிப்படுத்துகின்றன. இதனால் இவற்றை மறு உபயோகம் செய்ய முடியும்.
சூரிய dessicant முறையில் சூரியன் இந்த dessicantகளை மறு உபயோகம் செய்யத் தேவையான வெப்பத்தை தருகிறது. சூடான புழுக்கமான ஈரப்பதம் மிகுந்த காற்று dessicantகள் மூலம் ஈரப்பதம் நீக்கப் பட்டபின்னர் மற்ற வகையில் குளிர்ப்படுத்தப்படுகிறது. இந்த குளிர்ந்த ஈரப்பதம் அற்ற காற்று கட்டடத்துக்குள் அனுப்பப் படுகிறது. கேப் கேனவராலில் இருக்கும் ப்ளோரிடா சூரிய சக்தி மையம் இந்த dessicantகள் கொண்டு ஒரு கட்டட குளிர்சாதன அமைப்பைக் கட்டியிருக்கிறது. இந்த அமைப்பு கட்டடங்களுக்கு குளிர்சாதனம் செய்யத் தேவைப்படும் மின்சாரத்தில் 65 சதவீதம் முதல் 95சதவீதம் வரை சேமிக்க உதவுகிறது.
திண்ணை
|