சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

B. R. ஹரன்


“திராவிட மாயை – ஒரு பார்வை” என்கிற அட்டகாசமான தலைப்பே புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டிவிட்டது. கருப்பு அட்டையின் நடுவில் “திராவிட மாயை” என்று சிகப்பில் எழுதி அதன் கீழே “ஒரு பார்வை” என்பதை காவி நிறத்தில் போட்டிருப்பது, ஒரு சிறந்த கவிதையைப் போல், சொல்லாமல் சொல்லுகிறது.

புத்தகத்தைத் திறந்தவுடனேயே “தமிழ்ஹிந்து இணைய இதழில் ‘போகப் போகத் தெரியும்’ என்ற பெயரில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு” என்று அறிவித்துள்ளார்கள். அட்டையின் பின்புறமும், ஆசிரியர் சுப்புவைப் பற்றிய எளிய அறிமுகத்தின் கீழ், இதே தகவலைச் சொல்லியுள்ளார்கள். தமிழ்ஹிந்து இணைய இதழில் கட்டுரைகள் அளித்து பங்காற்றுபவன் என்கிற முறையில் மட்டுமல்லாமல், அந்தத் தளத்தின் வாசகன் என்கிற முறையிலும் ‘போகப் போகத் தெரியும்’ தொடரை விரும்பிப் படித்து ரசித்தேன். உண்மையில் அந்தத் தொடரை அவர் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் எனக்கு அறிமுகமானார் சுப்பு.

ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் கட்டுரை ஒன்றைப் பாராட்டிச் சொல்ல, நானும் அவரும் அன்று மாலையே பெஸண்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சந்தித்துப் பின்னர் திருவான்மியூர் கடற்கரையில் அமர்ந்து பல விஷயங்கள் பேசினோம். குறுகிய காலத் தொடர்பு என்றாலும் நட்பு நெறுக்கமானது ஆண்டவன் சித்தம்.

நண்பர் சுப்புவின் மூலமாகத் தான் ரமணன் அறிமுகமானார். ரமணன் ஒரு அற்புதமான மனிதர். எழுத்தாளர், கவிஞர், பாடகர், ஆன்மீகவாதி என்று பல இனிய முகங்கள் அவருக்கு.

சரி, இங்கு ஏன் ரமணனைப் பற்றிச் சொல்லவேண்டும், என்று கேட்ர்கிறீர்களா?

நண்பர் ரமணன் தான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ள திரிசக்தி பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர். இவர் மூலமாகத் தான் எனக்குப் பதிப்பாளர் டாக்டர் திரிசக்தி சுந்தர்ராமன் அறிமுகமானார். இவரும் பல இனிய முகங்கள் கொண்டவர் என்று ஓரளவிற்குத் தெரியும் என்றாலும், இவரைப் பற்றிப் பலர் பாராட்டிப் பேசிய விஷயங்களைக் கேட்டு வியந்திருக்கிறேன். இவர் ஆரம்பித்துள்ள புதிய நிறுவனம் தான் திரிசக்தி பதிப்பகம்.

சரி, பதிப்புரைக்கு வருவோம்.

“இருப்பதை மறைப்பது மாயை, எனில், இல்லாததை இருப்பது போலவே காட்டுவதும் மாயை. முன்னது, மெய் மேல் போர்த்திய பொய். பின்னதோ, பொய்யையே மெய்யெனக் காட்டுவது…” என்று அழகாக அரம்பிக்கிறது பதிப்புரை. “ஆரிய-திராவிட வரலாறு” என்கிற புளுகு மூட்டையை எளிதாக எடுத்துக்காட்டி, அதில் ஆரம்பித்த திராவிட மாயை, பிரசார வலிமை, அரியணை தந்த வசதி, மக்களின் பரவலான அறியாமை, படித்தவர்களின் மெத்தனம், அறிவுள்ளோரின் துணிவின்மை ஆகியவற்றின் மூலமாகத் தமிழகத்தைச் சூழ்ந்து தமிழ் மக்களைத் திணற அடித்துக் கொண்டிருப்பதைச் சொல்கிறது பதிப்புரை.

இந்த மாயையைக் களைந்து, அதைப் பரப்பி வருவோரின் முகமூடியைக் கிழித்து, மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு அறச்சீற்றமும், அறிவுப்பூர்வமான அணுகுமுறையும், ஆதாரங்களை அடுக்கும் பொறுப்பும், எந்தத் தனிநபரையும் இழிவாகப் பேசாத நாகரிகமும் தேவை என்றும், அந்த அனைத்து குணநலன்களையும் சுப்புவின் கட்டுரைத் தொகுப்பில் காணமுடிந்தது என்றும் சொல்லுகிறது பதிப்புரை.

புத்தகத்தை வெளிக்கொணர்வதில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள பதிப்பகத்தார் தமிழ்ஹிந்து நிறுவனத்தாருக்கும் தங்கள் நன்றியைச் சொல்லியுள்ளது பாராட்டத் தக்கது.

புத்தக ஆசிரியர்கள் சாதாரணமாகத் தங்கள் எழுத்து புத்தகமாக வெளிவரும்போது “முன்னுரை” எழுதுவார்கள். அதையே சற்று வித்தியாசமாக “என்னுரை” என்று சுப்பு எழுதியுள்ளதில், தான் துர்வாசரிடம் கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். சிறந்த எழுத்தாளரான வண்ணநிலவன் தான் ‘துர்வாசர்’ என்பது துகளக் வாசகர்களுக்கே பலருக்குத் தெரியாது. சரி, சுப்பு துர்வாசரிடம் கற்றுக் கொண்ட விஷயம் தான் என்ன என்று கேட்டால், புத்தகத்தை வாங்கிப்பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள், என்பது தான் என் பதில்.

நீதிக்கட்சியில் ஆரம்பித்துப் பின்னர் திராவிட இயக்கமாக வளர்ந்து, பல கிளைகளெனத் திராவிடக் கட்சிகளாகப் பிரிந்து, இன்று அவை அனைத்தும் சேர்ந்து ஒரு மாபெரும் தீய விஷவிருட்சமாக தமிழகத்தில் வேரூன்றியுள்ளது. மரம் தரும் நிழல் குளுமையானது. அனால் இந்தத் தீய விருட்சமோ தமிழகத்தை இருளில் போர்த்தி மக்களைப் புழுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. திராவிட மாயை என்னும் இந்த இருளைக் கிழித்துத் தமிழகத்தை ஒளி பெறச் செய்து வீசும் தென்றலை அனுபவிக்க வைப்பதே புத்தகத்தின் நோக்கம் என்பதைத் தெளிவாகத் தன் முன்னுரையில் எடுத்து வைக்கிறார் சுப்பு. அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால், “நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து நேர்மையாக விமரிசனம் செய்ய முடியாத சூழல் இங்கே நிலவுகிறது. இதிலிருந்து விடுபட்டு திராவிட மாயையின் வரலாற்றை ஒளிவு மறைவு இன்றி ஆய்வு செய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.”

1917 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக நிகழ்வுகளைப் பெரிய அளவிலும், அவைக்குச் சம்பந்தமுள்ள கலை, இலக்கிய நிகழ்வுகளையும் ஆங்காங்கே சிறிய அளவிலும், விவரித்து, ஆதாரங்களுடன் எழுதியுள்ளார் சுப்பு. அந்தக் காலகட்டத்தில் பிறப்பெடுத்த திராவிட இனவாதத்தை அறிவுப்பூர்வமாக மறுக்கிறார் சுப்பு. இது திராவிட மாயையின் முதல் பாகம்.

தனக்காகத் தட்டச்சு செய்தவர் முதற்கொண்டு, தகவல் சேகரிக்க உதவியவர்கள், ஊக்கம் அளித்து தன்னை இணையத்தில் இறக்கிவிட்டவர்கள், நிதியுதவி அளித்தவர்கள், தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு, பதிப்பகத்தார் என்று அனைவரையும், ஒருவர் விடாமல் குறிப்பிட்டுத் தன் மன்மார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார் சுப்பு.

முதல் அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, “வரலாற்றுச் சுவடுகள்” என்கிற முகாந்திரத்தில், படிப்பவர்கள் திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக, 1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதில் ஆரம்பித்து, கிழக்கிந்தியக் கம்பெனி, மெக்காலே கல்வித் திட்டம், கால்டுவெல் பாதிரியின் வருகை, ஆங்கில அரசின் ஆட்சி என்று பல நிகழ்வுகளை வருடம் வாரியாகக் குறிப்பிட்டு, 1920-ல் எல்.சி.குருசாமி அருந்ததிய மகாசபை அமைத்தது வரையிலான வரலாற்றுப் பின்னணியைக் கொடுத்துள்ளார் சுப்பு.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் துவங்குவதற்கு முன்னால், வேறு எழுத்தாளர்களின் ஒரு நூலின் பகுதியையோ, ஒரு கவிதையின் பகுதியையோ, ஒரு கட்டுரையின் பகுதியையோ, அல்லது ஒரு அரசியல் சம்பவத்தையோ, சொல்லியிருக்கிறார் சுப்பு. அதே போல் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு “மேற்கோள்” இணைகப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள முன்பகுதியும் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோளும் இடையில் உள்ள கட்டுரைக்கு (அத்தியாயத்திற்கு) பொறுத்தமாக இருப்பது தான் விசேஷம்.

முதல் அத்தியாயத்திலேயே தீண்டாமையை எடுத்துக்கொண்டு, நீதிகட்சியினர் / திராவிட இயக்கத்தினர் ஆகியோரின் காழ்ப்புணர்ச்சியை ஓரிரு சம்பவங்களின் மூலம் விவரித்துவிட்டு, இறுதியில் இத்தாலியப் பாதிரி ராபர்ட்-டி-நொபிலி சொன்னதை மேற்கோளாகக் காட்டியது நயமானது என்றால், அடுத்த அத்தியாயத்திலேயே “கால்டுவெல்லின் தாயாதிகள்” என்று தலைப்பிட்டு டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிஃரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வழியில் கிறுத்துவப்பாதிரிகள் கட்டவிழ்த்து விட்ட ‘மதம்’ பிடித்த ஆட்டங்களை விவரிக்கிறார். மூன்றாவது கட்டுரையிலேயே “ஏசுநாதர் ஏன் வரவில்லை” என்கிற பாரதிதாசன் கவிதையைச் சொல்லி கிறுத்துவத்தில் உள்ளச் சாதிப் பாகுபாடுகளை ஆதாரங்களுடன் விவரிக்கிறார் சுப்பு.

தீண்டாமை, சாதிப்பாகுபாடுகள் போன்றவற்றில் நீதிக்கட்சியினர், சுயமரியாதை இயக்கத்தினர், திராவிட இயக்கத்தினர் ஆகியோரின் இரட்டைவேடத்தையும் கய்மைத்தனத்தையும் தோலுரித்து காட்டியதோடு மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ராவின் பங்கு பற்றி நான்கு அத்தியாயங்களில் விவரிக்கிறார். இங்கே ஈ.வெ.ராவின் “உண்மையான” பங்கு என்ன என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

1920-களில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை எளிமையாகவும் அதே சமயத்தில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் சுப்பு. அதே நேரத்தில் விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்பதையும், இருபதாம் நூற்றாண்டில் முதல் இருபத்தாறு வருடங்களில் ஏழு வருடங்கள் தமிழகம் பஞ்சத்தில் உழன்றுகொண்டிருந்தது என்பதையும் சொல்லி, அப்போது சென்னை மாகாணத்தில் அமைச்சர்களாக இருந்த நீதிக்கட்சியினர் விவசாயிகள் நலனில் சிறிதும் அக்கரை காட்டாமல் மாதம் ரூ.4333-60 சம்பளம் பெற்று வந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார் சுப்பு.

பொய்யும், புளுகும், புனைச்சுருட்டும் கலந்த ஆரியர்-திராவிடர் கட்டுக்கதையைச் சொல்லி ஈ.வெ.ராவும் அவர் இயக்கத்தினரும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தது, ஈ.வெ.ராவின் பிராம்மண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர் நலனில் ஈ.வெ.ராவின் இரட்டை வேடம், தமிழ்மொழியின் வளர்ச்சியில் போலி அக்கறை ஆகியவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

இடையே, திரைப்படங்கள் திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் தளர்ச்சிக்கும் எவ்வாறு காரணமாயின என்பதை விளக்கும்போது, “காங்கிரஸ் ஆதரவு திரைப்படங்கள் அடக்குமுறையை மீறி வெளிவந்தவை. திராவிட இயக்கத் திரைப்படங்கள் சுதந்திர இந்தியாவின் உரிமையை முழுமையாகப் பயன்படுத்தியவை” என்று அழகாகச் சொல்லுகிறார் சுப்பு.

சுதந்திரப் போராட்டச் சமயத்தில் திரைப்படங்களின் பங்கு காங்கிரஸுக்குக் கிடைத்தாலும் அக்கட்சி திரைப்படத்துறைக் கலைஞர்களைச் சரியாக மதிக்காத காரணத்தால், சுதந்திரத்திற்குப் பிறகு அவர்கள் பெரும்பான்மையினர் திராவிட இயக்கங்களுக்குச் சென்று விட்டனர் என்பதை அண்ணாதுரையில் ஆரம்பித்து கருணாநிதி, எம்.ஜி.ஆர், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா என்கிற ஒரு பெரிய பட்டியல் மூலம் தெரியப்படுத்துகிறார்.

அன்றைய நாளிதழ்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் தாக்கம் விருவிருப்பான சம்பவங்கள் மூலம் சொல்லப்படுகிறது. விடுதலைப் போராட்ட வரலாறும் உண்டு; நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெளிப்பட்ட கவர்ச்சி பற்றிய சேதிகளும் அங்கங்கே உண்டு. பாரதியாரின் பாடல்களைத் தடை செய்த நீதிக்கட்சியினர் திரைப்படங்களில் ஆபாசம் தலை தூக்குவதைக் கண்டுகொள்ளாமல் விட்டதையும் குறிப்பிடுகிறார் சுப்பு.

திராவிட இயக்கத்தினர் அன்றிலிருந்து இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கும் “இடஒதுக்கீடு” கூத்து பற்றி விவரமாக எழுதியுள்ள சுப்பு, பிற்சேர்க்கையில் “தலித்துகளுக்கு ஜீரோ ஒதுக்கீடு” என்ற தலைப்பில், அரசு நிதி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் ஒரு தலித் கூட வேலைக்குச் சேர்க்கப் படவில்லை என்பதை ஆதாரத்துடன் காட்டுகிறார்.

சுயமரியாதை இயக்கம், சுயமரியாதைத் திருமணம் பற்றியெல்லாம் விவரித்துள்ள சுப்பு, அதே சுயமரியாதை போட்ட ‘ரிவர்ஸ் கியர்’ பற்றியும் சுவாரஸ்யமாகச் சொல்லுகிறார்.

பூம்புகார் திரைப்படத்திற்காகப் பின்னணி குரல் கொடுக்க வந்த கே.பி.சுந்தராம்பாள் கடவுளை மறுத்துப் பாடமாட்டேன் என்று சொன்னபோது என்ன நடந்தது? சிருங்கேரி மகா சந்நிதானம் பெரியாருக்கு அழைப்பு விடுத்தாரா? போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடைகள் உண்டு;

வாரியார், எம்.ஆர்.ராதா சந்திப்பு, நாகூர் அனீபாவின் அழுக்கு புத்தி, அதற்கு அண்ணாதுரையின் மறைமுக ஆதரவு, கட்சி மாறிய கருணாநிதி, அண்ணாதுரைக்குக் கிடைத்த அதிர்ச்சி, பூகோளத்திலும் முட்டை வாங்கிய அண்ணாதுரை, போன்ற வெகு சுவாரஸ்ய்மனான தகவல்களும் இப்புதகத்தில் உண்டு.

ஆங்காங்கே திராவிட இயக்கத்தினர் சிறுபான்மையினத்தவரிடம் காட்டும் உறவாடலும், ஹிந்து மதத்தை எதிர்க்கின்ற அளவிற்கு அவர்கள் இஸ்லாமையோ, கிறுத்துவத்தையோ எதிர்க்காமல் பயப்படுவதும் வெளிப்படுகிறது. பிற்சேர்க்கை-1-ல், “எருமைத் தலையனுக்கு எக்ஸ்ட்ரா டைம்” என்கிற தலைப்பில், சிறு குடிசைகளில் ஆரம்பித்துச் சிறைச்சாலை வரை பாயும் கிறுத்துவ மதமாற்றம், அதோடு நிற்காமல் தூக்குமேடை வரையிலும் செல்வதை நன்றாக விளக்கியுள்ளார் சுப்பு. அதற்கு மேற்கோளாக ஈழத்தமிழர் பற்றிய டாக்டர் ராமதாஸின் மேற்கோளைக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. ராமதாஸின் இந்த ஒரு மேற்கோளே போதும் “தமிழ் ஈழம்” என்பது ஒரு கிறுத்துவ சதி என்கிற உண்மையை நிலைநாட்ட.

புத்தகம் முழுவதும் பல இடங்களில் சுப்புவின் மென்மையான நகைச்சுவை இழையோடுவதால் தொடர்ந்து படிப்பது சுகமான அனுபவமாக இருக்கிறது. அவரின் நகைச்சுவைக்கான சில மாதிரிகள்: –

“திராவிட இயக்கங்களால் இன்று சொந்தம் கொண்டாடப்படும் இலக்கியம் சிலப்பதிகாரம். ஈ.வெ.ராவிற்குப் பயந்துகொண்டு இவர்கள் சிலப்பதிகாரச் சிறப்பைப் பேசாமல் இருந்த காலமும் உண்டு. இப்போது நிலைமை மாறிவிட்டது. கண்ணகி சிலை ஞாபகமாக மஞ்சள் துணியல் மூடப்பட்டு பிறகு திறக்கப்படுகிறது”

“நீதிகட்சியோடு உறவு கண்டதால் ஈ.வெ.ராவின் கொள்கை நிறைவேறியதா? வைரமோதிரங்களையும் சரிகைத் தொப்பிகளையும் வயலில் இறக்கிவிட முடிந்ததா?”

“தமிழ்ச் சமுதாயத்தில் குறுக்குச் சுவர் எழுப்பி பிராம்மணர், பிராம்மணரல்லாதார் என்று பிரிப்பதே திராவிட கழகத்தின் நோக்கம். இந்தக் காரியம் இன்றுவரை கைகூடவில்லை. ஐயப்பன்மார் போடும் அதிர்வேட்டு முழக்கத்தில் பிரிவினைப் பேச்சு காதில் விழவில்லை”

“கைபர் கணவாய் என்பதை இப்போது கலைஞர் வசனத்தில் மட்டுமே கேட்க முடிகிறது.”

“வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த வசன நிர்வாகிகளின் வழக்கமல்லவா?”

“குடி அரசின் கொள்கை எது என்று அறிய விரும்புவோரின் தலையில் முடி மிச்சமிருக்காது.” (“குடி அரசு” பத்திரிகை பற்றி)

“ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டி வைத்தது தான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

ஆனால் இந்தத் தகவல்களை இப்போதைய கழக வீரர்கள் அறிவதில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா. என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.”

“இவர்கள் நாவலர் என்றும் காவலர் என்றும் பாவலர் என்றும் நாலுவிதமாகப் புகழ்ந்துரைத்துக் கொண்டதை நேர்மையான இலக்கியவாதிகள் புறக்கணித்தனர்.”

“திரவிட இயக்கத்தவர் எழுத்துக்கு விலையும் இல்லை, விற்பனையும் இல்லை என்பது தான் உண்மை.”

“மதிமுக நிறுவனரான வைகோவின் பெட்டியில் ஏதோ ஒரு ஏற்பாடு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.”

“உலக மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ் என்ற கொள்கைக்கு அறிவியல் அடிப்படை எது என்று இந்தப் பகுத்தறிவுவாதிகள் இதுவரை சொல்லவில்லை.”

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கின்றன புத்தகத்தில்.

மேலும் சில இடங்களில் மென்மையான நகைச்சுவயினூடே அவரின் வேதனையும் வெளிப்படுவதை நம்மால் உணரமுடிகிறது. உதாரணத்திற்கு:

“மோனையையும் எதுகையையும் மட்டும் முதலீடாக வைத்துத் தொழில் நடத்தியவர்கள் அவர்கள். அடுத்தவர் துன்பத்திலும் அவர்களுக்கு வசூல் உண்டு.”

“அகலமும் ஆழமும் இல்லாத புலமையை வைத்துக்கொண்டே இவர்கள் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு விட்டார்கள்.”

“இம்ரானாவின் துன்பத்தில் இவர்களுக்குப் பங்கில்லை. இவர்கள் பிரியாணி விருந்தில் மனித உரிமையை மறந்துவிட்டார்கள்.”

புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வாசகர் யாரும் இது அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை’ என்கிற புத்தகத்திற்குப் பதில் என்று நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால் அப்படி மறுப்புத் தெரிவித்து ஒரு புத்தகம் எழுதுகிற அளவிற்கு ஆரிய மாயையில் ஒரு விஷயமும் கிடையாது.

இந்தப் புத்தகத்தில் ‘ஆரிய மாயை’ பற்றி சுப்பு இரண்டே இடங்களில் தான் சொல்கிறார்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொன்றியதைச் சொல்லும் சுப்பு, “தி.மு.க.வில் “ர்” இல்லை என்பதை குறிப்பிட்டுக் காட்டி, “இனப்பிரிவுக்கும் பூகோளப் பிரிவுக்கும் உள்ள வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. தி.மு.க.வின் தோற்றத்திலேயே இன அடையாளம் கைவிடப் பட்டது என்பதையே இது காட்டுகிறது” என்று திறம்பட உரைக்கிறார்.

சரி, பின்னர் ஏன் அவர்கள் ஆரிய மாயை என்றும் ஆரிய-திராவிட கட்டுக் கதைகளையும் இன்று வரைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்? அது தான் இவர்களின் அரசியல். மக்களை ஏமாற்றுவது தானே இவர்களின் அரசியல் விளையாட்டு!

“கிறுத்துவ பாதிரிமார்கள் இந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்தது தான் ‘ஆரிய மாயை’ என்கிற இந்த நூல்” என்று குறிப்பிடுகிற சுப்பு, வேறொரு இடத்தில், “திராவிட இயக்கத்திற்குச் சரித்திரம் தான் தெரியாது என்று யாரும் நினைக்க வேண்டாம். பூகோளத்திலும் அவர்கள் வாங்கியது முட்டை தான். நர்மதை நதிக்குத் தெற்கே உள்ள பகுதிகள் தான் ‘திராவிட நாடு’ என்று ‘ஆரிய மாயை’ புத்தகத்தில் அறிவித்தார் அண்ணாதுரை. நர்மதை நதிக்குத் தெற்கே ஹிந்தி, குஜராத்தி, மராத்தி பேசும் மக்களும் குடியிருக்கிறார்கள் என்பதை அவர் அறியவில்லை. பூகோளப் படத்தைக் கூடப் புரட்டிப் பார்க்காமல் எழுதப்பட்டது இந்த அறிஞரின் புத்தகம்” என்று ஆரிய மாயை புத்தகத்தின் லட்சணத்தைக் காட்டுகிறார்.

பின்னர் தனக்கே உரிய நகைச்சுவையுடன், “‘மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்’ என்று மானாவுக்கு மானா போட்டு எழுதி மதிமயக்கத்தில் இருப்பது தானே இவர்களுடைய சித்தாந்தம். இதில் அடிப்படையையும் ஆதாரத்தையும் தேடுபவரின் கதை கந்தலாகிவிடும்.” என்று இவர்கள் ஆதாரமில்லாமல் கதை அளப்பவர்கள் என்பதைத் தமாஷாகச் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை ஆராய்ச்சி பூர்வமாக எழுதவும், ஆதாரங்களைத் தேடவும், இவர் எந்த அளவிற்கு பிரயாசைப் பட்டிருக்க வேண்டும் என்பது புத்தகத்தைப் படிக்கும்போதே நமக்கு தோன்றுவதால், உண்மையிலேயே மலைத்துப் போகிறோம். தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மகத்தான சேவை புரிந்துள்ளார் சுப்பு. ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.

இதன் ஆங்கில வடிவம் வருவது பாரதத்தின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல் அது மிகவும் வரவேற்பு பெறும் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்த விமரிசனக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் ஒரு செய்தி என் பார்வைக்கு வந்தது. ஆனைமுத்து அவர்கள் தொகுத்துள்ள “ஈ.வெ.ரா., சிந்தனைகள்” எனும் 20 நூல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார் (தினமலர், 22-03-2010) என்ற செய்தியைப் படித்ததும், சுப்புவின் புத்தகம் இதைவிடச் சரியான நேரத்தில் வந்திருக்க முடியாது என்று தோன்றியது.
திராவிட இயக்கத்தினர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி என்கிற பெயரில் ஆயிரம் புத்தகங்கள் வெளியிடலாம். ஆனால் சுப்புவின் இந்தப் புத்தகத்திற்குப் பதில் எழுதுவதைச் சவாலாக எடுத்துக் கொள்ளட்டும் பார்க்கலாம். செய்வார்களா? நண்பர் ம.வெங்கடேசனின் “ஈ.வெ.ரா.வின் மறுபக்கம்” புத்தகம் வெளிவந்து ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்னும் இவர்களால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை. அதே போல் தான் திராவிட மாயைக்கும் இவர்களால் பதிலளிக முடியாது.

இதனிடையே பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நண்பர் திரு.மலர்மன்னன் அவர்களின் “தி.மு.க. உருவானது ஏன்?” என்னும் புத்தகமும் சில மாதங்கள் முன்பு வெளியாகி வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளையும் தமிழ் மக்கள் அறியாத பல விஷயங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் அப்புத்தகம் மற்றுமொரு சிறந்த ஆவணம்.

“ஈ.வெ.ரா.வின் மறுபக்கம்” அவரைத் தோலுறித்துக் காட்டித் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்றால், “தி.மு.க உருவானது ஏன்?” திராவிட அரசியலைச் சரியான சிறப்பான முறையில் அணுகி உண்மைகளை வெளிக்கொணர்ந்து தமிழக அரசியல் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாகத் திகழ்கிறது. அதே போல் “திராவிட மாயை” தமிழக வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

மலர்மன்னன், சுப்பு, ம.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர்கள் வளர்வதோடு மட்டுமல்லாமல், உருவாக்கவும் படவேண்டும். இதை ஒவ்வொரு உண்மையான தமிழனும் தன் கடமையாக நினைத்துச் செயல்படவேண்டும்.

திராவிட மாயை விலகட்டும்; தமிழகம் ஒளி பெறட்டும்!

திராவிட மாயை – ஒரு பார்வை

(பக்கம்: 320, விலை: ரூ.125/=).

ஆசிரியர்: சுப்பு.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம், 56/2. முதல் அவின்யூ, சாஸ்திரி நகர், சென்னை – 600020. தொலைபேசி: 044-42970800.
E-Mail: trisakthipublications@trisakthi.com

இணையம் மூலம் புத்தகம் வாங்க: www.ezeebookshop.com செல்லவும்.

Series Navigation