எஸ். இராமச்சந்திரன்
ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரில், கி.பி. 1800-1802ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனின் தம்பியர்களான செவத்தையாவும் குமாரசுவாமி என்கிற ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1800ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், சிவகங்கைச் சீமையின் மக்கள் தலைவர்களான மருது சகோதரர்களின் திட்டப்படி, திருச்செந்தூருக்குத் திருத்தலப் பயணம் மேற்கொள்ளும் பரதேசிகளைப் போல வேடமிட்ட புரட்சியாளர்களால் செவத்தையாவும் ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதன் பின்னர் இந்த எழுச்சி பாளையக்காரர்களின் போராட்டம் என்ற நிலையைக் கடந்து, மாபெரும் மக்கள் இயக்கம் என்ற நிலையை எய்திற்று. இக்கால கட்டத்தில், தூத்துக்குடிப் பகுதியின் முதன்மையான சமூகத்தவர்களான சான்றார் (நாடார்), பரதவர் ஆகிய சாதியினர், புரட்சியாளர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். இக்கால கட்டத்தில், இராமநாதபுரம் சீமை ஆப்பனூர் மயிலப்பன் சேர்வை, திருநெல்வேலி மணியக்காரர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் இரகசியமாக ஆலோசனை நடத்தி, புரட்சியாளர் கூட்டணிப் படைகளுக்கு வெடிமருந்து, துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்றுத் தந்தார் என்று கி.பி.1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆவணங்களை ஆராய்ந்துள்ள பேராசிரியர் கே. இராஜையன், தமது “South Indian Rebellion” என்ற நூலில் (பக். 98, 201) குறிப்பிடுகிறார். மேலும் தூத்துக்குடித் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் புரட்சியணியினர் கொணர்ந்தனர் எனவும் குறிப்பிடுகிறார்.
இக்கால கட்டத்தில், தூத்துக்குடி முத்துக்குளி துறையின் தலைநகராகவும், பருத்தி ஏற்றுமதிக் கேந்திரமாகவும் விளங்கிற்று. மதுரைக் கடற்கரை என வழங்கப்பட்ட பாண்டி மண்டலக் கடற்கரைப் பகுதியின் குளித்தெடுக்கப்படும் முத்துக்களைப் பொருத்தவரை, மதுரை நாயக்க அரசு, இராமநாதபுரம் சேதுபதி அரசு ஆகியவற்றுக்கு உரிய பங்குகளைத் தவிர, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர்க்குப் பிற பங்குகள் உரியவனவாகும். ஆர்க்காட்டு நவாப், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆகியோரின் மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டபோது, பிற சிற்றரசர்களின் உரிமைகளும் பரதவர் சாதித் தலைவரின் உரிமைகளும் கேள்விக்குரியவையாயின. பருத்தி ஏற்றுமதியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் ஏகபோகமாக மாறியபோது, பருத்தி விளை நிலங்களில் விளைந்த பருத்தியிலிருந்து நூற்கப்பட்ட நூலைக் கொண்டு துணி நெய்து விற்றுப் பிழைத்த நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாயிற்று. ஆயினும், விளைந்த பருத்தியை ஜின்னிங் செய்து கொட்டை நீக்கி அவற்றைப் பொதிகளாகக் கட்டி, தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலமாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கும் கப்பல்கள் மூலம் கொண்டு செல்வதற்கு உள் நாட்டுப் பாளையக்காரர்கள் மற்றும் நிலவுடைமையாளர்கள் தொழிலாளர்கள் ஆகியோரின் உதவி ஆங்கிலேயர்க்குத் தேவைப்பட்டது. நிலவருவாய் நிர்வாக அமைப்பில், பூர்வீகமாக நிலவி வந்த உள்நாட்டு அமைப்புகளான தலையாரி, மணியக்காரர் ஆகியோர்க்கு மேலே தாசில்தார், வருவாய் தண்டல் நாயகர் (கலெக்டர்) ஆகிய பதவிகளைப் புதியனவாக உருவாக்கி அந்த அமைப்பின் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பருத்தி கொள்முதலை ஆங்கிலேயர்கள் ஏகபோக உரிமையாகப் பெற்றனர். இந்த ஏற்பாட்டுக்கு ஒத்து வராதவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் சட்டங்களும் இயற்றினர். இங்கிலாந்து நாட்டில் கி.பி. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி நிகழ்ந்ததன் விளைவாக, அந்நாட்டில் நூற்பு – நெசவுத் தொழில் உற்பத்தி பெருகிற்று. குறைந்த மனித உழைப்பைக் கொண்டே காற்றின் விசையாலும் நீரின் விசையாலும் குதிரைகளாலும் இயக்கப்படும், இயந்திரங்கள் மூலமாக விரைவாகவும் அதிக அளவிலும் துணியினை உற்பத்தி செய்யத் தொடங்கினர். நம் நாட்டிலிருந்து பருத்தியை இங்கிலாந்தில் இறக்குமதி செய்து நூலாக நூற்றுத் துணியாக நெய்து மீண்டும் நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விற்றுக் கொள்ளை லாபமடைந்தனர். ஆங்கிலேயர் இந்திய நெசவாளர்களைப் பட்டினியில் ஆழ்த்தி, லங்காஷயர் முதலிய இங்கிலாந்து நகரங்கள் துணி உற்பத்தித் தொழிற்கேந்திரங்களாக உருவாயின.
கி.பி.18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழகத்தின் கரிசல் காட்டுப் பகுதிகளில் விளைந்த பருத்தி தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் இங்கிலந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்தும், ஆங்கிலேயரின் நிலவருவாய் நிர்வாக எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும் புரட்சியில் இறங்கிய பாளையக்காரர்களின் அணிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமை தாங்கினார். அவர் ஆங்கிலேயரால் வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுக் கயத்தாற்றுப் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட பின்னர், கட்டபொம்மனின் இளவல்களும் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியை விரிவான தளத்துக்கு மாற்றினர் என்பதையே இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.
மருது சகோதரர்களின் தலைமையிலான படைகளுக்குத் தூத்துக்குடி பரதவர் சாதித்தலைவர் வெடிமருந்து, துப்பாக்கி, பீரங்கி முதலையவற்றைச் சேகரித்து வழங்கினார் என்ற செய்தி ஆங்கிலேயரின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரரும் திருநெல்வேலி நாகராஜ மணியக்காரரும் இப்பணியில் அவருக்கு உதவி புரிந்தனர் என்று தெரிகிறது. கி.பி. 1787ஆம் ஆண்டிலேயே ரிபெல் சேதுபதி எனப்படும் முத்துராமலிங்க சேதுபதியின் சார்பாகப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு ஆளுநரைச் சந்தித்த மயிலப்பன் சேர்வைக்காரர், படை உதவியும் வெடிமருந்தும் கேட்டார் என்றும் அப்போது அவருக்கு அவ்வுதவிகள் கிடைக்கவில்லையென்றும் “History of Maravas” என்ற நூலில் பக்கம் 220-222இல் முனைவர் எஸ். கதிர்வேல் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால் 1801ஆம் ஆண்டில் வெடிமருந்து, ஆயுதங்கள் ஆகியவை புரட்சியணியினர்க்கு கிட்டியுள்ளன.
கத்தோலிக்க சமய அடிப்படையில் பிரெஞ்சு ஆட்சியாளர்களுடன் தூத்துக்குடிப் பரதவ சாதித் தலைவர்க்கு நல்லுறவு இருந்திருக்கலாம் என்றும் அந்த அடிப்படையில் வெடி மருந்து முதலியவற்றை அவர் பெற்றிருக்கலாம் என்றும் நாம் ஊகிப்பதற்கு அடிப்படை இருக்கிறது. ஆயினும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் இது பற்றிய குறிப்பு இல்லை. தூத்துக்குடித் துறைமுகத்தைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்த பாளையக்காரர்கள் பரதவர் கூட்டணி, இலங்கை வழியாகவும் வெடிமருந்துக்குரிய மூலப் பொருளான வெடியுப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) முதலியவற்றைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. மேலும், மருது சகோதர்களிடம் ராக்கெட் (ஏவுகணை) இருந்ததாக ஆங்கிலேயக் கர்னல் அக்னியு தெரிவித்துள்ளார். தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் வெடியுப்பினை மட்டும் இறக்குமதி செய்து இப்பகுதியிலேயே வெடிமருந்துத் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு போன்றவை தொடர்பான சில சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. தூத்துக்குடித் துறைமுகத்தின் வணிக முதன்மை, பரதவர் சமூகத்தவரின் கடல் கடந்த (இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளுடனான) தொடர்புகள், கர்ப்பூரச் செட்டிகள் போன்ற வாணம் தயாரிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்ப அறிவு படைத்த சமூகத்தவருடனான வணிக உறவுகள், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையான தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கிய தச்சர் – கொல்லர் சமூகத்தவரின் சந்ததியினரிடம் மறைந்து போய்விடாமல் நீடித்து வந்த உலோகபாஷாணக் கலவைகள் குறித்த அறிவு ஆகியன இத்தகைய சோதனை முயற்சிகளுக்கு அடிப்படை உந்த சக்தியாக இருந்திருக்கலாம்.
கட்டக்கருப்பன் காலாடி எனப்பட்ட வீரன் சுந்தரலிங்கம் (மள்ளர் குலத்தவர்) வெள்ளையத் தேவன் (மறவர் சமூகத்தவர்) பொட்டிப்பகடை, வாலப்பகடை (அருந்தததியர் குலத்தவர்) முதலான பல்வேறு சமூகத்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் இடம் பெற்றிருந்தனர் என்றாலும், ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் திரட்டிய படையில் மேற்படி சமூகத்தவர் மட்டுமின்றி, பெரும்பாலான இதர சமூகத்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். அப்படியிருந்தாலும் இந்த மக்கள் இயக்கம் தோல்வியையே தழுவிற்று. புரட்சியணித் தலைவர்கள் ஒவ்வொருவராக வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது மட்டத் தலைவர்கள் 72 பேர் பினாங்குப் பகுதியிலிருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட அட்மிரல் நெல்சன் என்ற பெயர் கொண்ட கப்பலில் 72 போராளிகளும் தீவாந்தர சிட்சை (தண்டனை) அனுபவிப்பதற்காக அனுப்பப்பட்டனர்.
இக்கால கட்டத்தில் தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் ஆங்கிலேயரின் கைகளில் அகப்படாமல் தலைமறைவாகிவிட்டார். பரதவர் சாதியினரின் அடைப்பனார் பதவியை வகித்த ஹென்றி லெயோன் என்ற பெயருடைய இன்பகவிராயரும் இவருடன் சேர்ந்து தலைமறைவானார். (இவ்விருவரும் இலங்கைக்குச் சென்றிருந்தனர் எனக் கருதப்படுகிறது). கி.பி.1804 ஆம் ஆண்டில் பரதவர் சாதித்தலைவர் மணப்பாடு என்ற கடற்கரைச் சிற்றூரில் இருப்பதாக அறிந்த திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் கொக்ரேன், அவரை எவ்விதத்திலும் துன்புறுத்துவதில்லை என வாக்குறுதியளித்து, அவரைத் தூத்துக்குடிக்கே வரவழைக்க முயன்றார். அதற்காகக் கடிதம் ஒன்று எழுதி, தமது நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாகப் பரதவர் சாதித் தலைவரிடம் கொண்டு சேர்ப்பித்தார். அக்கடிதத்தில் கொக்ரேன் “பரதவர் சாதித் தலைவர் சார்ந்துள்ள கிறிஸ்துவ சமயத்தைத்தான் ஆங்கிலேயர்களும் பின்பற்றுகின்றனர்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். பரதவர் சாதித்தலைவர் ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கவில்லை. ஆயினும் போராட்டச் சூழல் முற்றிலும் மாறிப்போய் உயிர்த்தோழர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் மீண்டும் புரட்சியணியைக் கட்டியமைப்பதற்குரிய அவகாசமும் ஆற்றலும் இவருக்கு இல்லாததால் மணப்பாட்டிலேயே ஒதுங்கி வாழ்ந்திருந்து, 1808 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு இவரது குடும்பத்தினர் இவரது உடலைப் பல்லக்கு ஒன்றில் வைத்துத் தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அடக்கம் செய்தனர்.
இந்திய சுதந்திரப் போராளிகளின் வரிசையில் இடம் பெற்றுவிட்ட இப்பரதவர் சாதித் தலைவரின் பெயர் தொன் கபரியேல் தக்ரூஸ் வாஸ்கோம்ஸ் என்பதாகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்கக் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய பின்னர் இப்பகுதியைச் சேர்ந்த பரதவர் சமூகத்தவர் போர்ச்சுகீசியப் பாணியிலமைந்த பெயர்களையே ஏற்றனர். அந்த மரபின்படி இவரது பெயர் போர்ச்சுகீசியப் பெயராக அமைந்திருந்தாலும் இவர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழரேயாவார். இவருடைய வம்சத்தவர்கள் தூத்துக்குடியிலுள்ள கிரகோப் தெருவில் வசிக்கின்றனர் பீட்டர் கோயில் சந்தில் வசிக்கும் “செல்வராஜ் மிராந்தா” என்ற கவிஞர் – ஆராய்ச்சியாளர் மூலமாக இவரைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியவந்தன. இவரது வம்சத்தவரான பெர்க்மான்ஸ் மோத்தா என்பவரின் வீட்டில் இவரது ஆளுயரக் கான்வாஸ் ஓவியமும், இவரது உடலை மணப்பாட்டிலிருந்து எடுத்து வரப் பயன்படுத்தப்பட்ட பல்லக்கின் பாகங்களும், கலெக்டர் கொக்ரேனின் கடிதம் முதலிய சில ஆவணங்களும் உள்ளன. ஒர்னல்லோஸ் பள்ளி வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. (கல்வெட்டு வாசகங்கள் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன).
தொன் கபரியேலின் உருவ ஓவியம், கி.பி. 1808ஆம் ஆண்டில் வரையப்பட்டிருக்கலாம். இது காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிற்பங்களுக்கு இணையாகப் போற்றத்தக்கது. இவ் ஓவியத்தில் திருச்செந்தூர் முருகனுக்குரிய சேவலும் மயிலும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொன் கபரியேல் கல்லறைக் கல்வெட்டு
தூத்துக்குடியிலுள்ள ஒர்னல்லோஸ் பள்ளிக்கூட வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. தமிழ், போர்ச்சுகீசிய மொழி ஆகியவற்றில் கல்வெட்டு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ் வாசகங்கள்
“மதுரைக் கடல்துறை முதல் மற்றுந்தலங்களிலுண்டான பரதவர் சாதிகட்கெல்லாம் சாதித் தலைமையென்ற ஸ்தானத்துக்கு மிகவும் யோக்கியமுள்ளவராயிருந்த சீ.சீ.தொங்கவுரியேல்1 தற்கரூஸ்2 வாஸ் கோமுஸ்3 அவர்கள் பிறந்தது ? ? ? ௫ ௰ ? வரு4 அவர்களுக்குச் சாதித் தலைமையென்ற பட்டாபிஷேகம் சூடினது ? ? ? ? ௰ ? வரு5 அவர்கள் தெய்வீகமானது ? ? ? ? வரு6 அவர்கள் தேவியாராகிய சீ. தொன் மரிய அந்தோனி தற்குரூஸ் கொறெயப் பறனாந்திஸ்7 அவர்கள் அந்த ஆண்டிலே தானே புரட்டாதி மீ ௨ ௰ உ தெய்வீகமானார்கள்.”
அடிக்குறிப்புகள்:
1. “சீதாதி சீதாதி தொன் கபரியேல்” என்ற போர்ச்சுகீசியப் பெயர். கபரியேல் என்பதே இவரது பெயர். சீதாதி என்பது “மரியாதைக்குரிய பட்டினவர்” எனப் பொருள்படும். தொன் (Don) என்பது பிரபு எனப் பொருள்படும் பட்டமாகும்.
2. De cruz (of the cross)
3. Vaz Gomes என்ற குடும்பப் பட்டப் பெயர். இது தாய்வழிப் பட்டப் பெயராகத் தெரிகிறது.
4. கி.பி. 1753ஆம் வருடம்
5. கி.பி. 1779ஆம் வருடம்
6. கி.பி. 1808ஆம் வருடம்
7. Coreia Fernandez என்ற குடும்பப் பட்டப் பெயர் “கொறெயப் பறனாந்திஸ்” எனத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. Coreia என்ற குடும்பப் பட்டப் பெயர் தற்போது Coreira என எழுதவும் உச்சரிக்கவும் படுகிறது. இச் சொல், கரையார் என்ற பட்டத்தின் திரிபே என்றும் பெரைரா என்ற போர்ச்சுகீசியக் குடும்பப் பட்டப் பெயரையட்டிக் கொரைரா என மாற்றி உச்சரிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது.
(நன்றி: பழங்காசு, நாணயவியல் வரலாற்றியல் காலாண்டிதழ், இதழ் 13, நிறுவனர்: ப. சீனிவாசன், 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019, தொலைபேசி: +91-431-2532043, ஓரிதழ் நன்கொடை ரூ. 25/- ஓராண்டு நன்கொடை ரூ. 80/-)
maanilavan@gmail.com
- கடித இலக்கியம் – 19
- அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள்
- பேச்சு
- திருப்பெரும்புலியூர் தலப்பெருமை
- கடிதம்
- மங்கையராகப் பிறப்பதற்கே..
- மக்களின் மொழி சம்ஸ்க்ருதம்
- நாசா விண்வெளித் தேடல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்
- தமிழ் மக்களின் பழமொழிகளைத் தொகுத்துப் பதிப்பித்த தரமிக்கவர்கள்
- புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள் – ஆய்வு முன்னோட்டம்
- மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் – (ஆய்வு முன்னோட்டம்)
- தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி -தொடர்ச்சி
- ஏலாதி இலக்கிய விருது 2006
- நளாயினி தாமரைசெல்வன் எழுதிய ‘நங்கூரம்’, ‘உயிர்த்தீ’ ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும்
- செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய
- கடிதம்
- கள்ளர் சரித்திரம்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- என் – ஆர் – ஐ
- மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்கள்
- வ னா ந் தி ர ரா ஜா
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 35 ( முடிந்தது )
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-15)
- திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள்
- பின்நவீன ஜிகாத்தும் தலித்தும்
- எண்ணங்கள் – இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம்
- எண்ணச் சிதறல்கள் – நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்..
- வந்தே மாதரம் படும் பாடு
- கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்
- ஓதி உணர்ந்தாலும்!
- சுதந்திர தேவியின் மகுடத்தில் ஒரு தூத்துக்குடி முத்து
- வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்
- பறவையின் பாதை
- மெய் காட்டும் பொய்கள்
- கீதாஞ்சலி (87) அவளைத் தேடிச் செல்கிறேன்!
- பெரியபுராணம் – 101 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (1-20)
- என்ன செய்து கொண்டு இருக்கிறோம்