சுடர் விட்டெரிந்த இளஞ் சூரியன் ஏ.ஜே.கனகரட்னா (1934-2006) – அஞ்சலிக் கூட்டம்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

அறிவிப்பு


;

பலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், உலக இலக்கியத்துடன் இறுதிவரை தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தவர். எந்த அறிவுப் புலமும் அவருக்கு அந்நியமானதல்ல. அவற்றில் தன் தனி ஆளுமையை வெளிப்படுத்தியவர்.

ஈழத் தமிழ் இலக்கியத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த திரு ஏ.ஜே.கனகரட்னா நேற்று 10-10-2006 இல் கொழும்பில் காலமானார். பல எழுத்தாளர்களுக்கு தோன்றாத் துணையாகவும், அவர்களின் எழுத்துக்களுக்கு ஊக்கமும், ஆக்கமும், ஊட்டமும் அளித்தும் வந்தவர். ஈழத் தமிழ் எழுத்தை உண்மையாக விசுவாசித்தவர். நேர்மை, அடக்கம், பண்புடைமை அவரது இயல்பும் சிறப்பும்.

காலம் அவருக்கு தனது 16 வது இதழைச் சிறப்பிதழாக வெளியிட்டுக் கௌரவித்தது.

அவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்குமுகமாக கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் 50,000 ரூபா பணத்தை கடந்த மாதம் அவருக்கு அளித்தது குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணத்து ஆங்கில தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் கடைசிக் கொழுந்தாக வாழ்ந்தவர்.

முற்போக்குக் கொள்கைகளில் மிக்க பற்றுள்ளவர். அதேவேளை ஆத்மீகத்தில் நம்பிக்கை வைத்தவர். மனித நேயமிக்க பெரும் மனிதர். மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து இறந்துள்ளார். சாதி, மதம், இனம், மொழி ஆகிய சின்னத்தனங்கள் தீண்டாத, அகண்ட மானிடத்தை மதித்த பெரும் மனிதன் அவர். சிறியன சிந்தியாதான் என்று நண்பர்களால் புகழப்பட்டவர். நண்பர்களுக்கு இனிய நண்பன்.

அவரின் இழப்பு உண்மையிலே பல எழுத்தாளருக்கும் ஈழத் தமிழ் இலக்கியத்துக்கும் நண்பர்களுக்கும் பெரும் இழப்பு.

ஏ.ஜே.கனகரட்னாவின் அஞ்சலிக் கூட்டம் ரொறன்டோ கனடாவில் ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்றரில் காலம் சஞ்சிகையின் சார்பில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
மயடயஅ@வயஅடைடிழழம.உழஅ

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு