சீனா – துயிலெழுந்த டிராகன்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

நரேந்திரன்


எங்கு நோக்கினும் சீனாதான் இன்றைய தேதிக்கு. Made in China என்ற வார்த்தை உலகம் முழுவதும் காற்றைப் போல வியாபித்துக் கிடக்கிறது. தினசரி செய்தியில், தொலைக்காட்சியில், நீங்கள் வேலை செய்யும் இடத்தில், ஏதேனும் கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும்….உங்களின் பார்வையிலிருந்து சீனா குறித்த தகவல்கள் தப்புவதில்லை. உலகின் எந்த நாட்டையும் விட சீனா அதிக ஆடைகளைத் தைக்கிறது; அதிக ஷூக்களைத் தயாரிக்கிறது; அதிக குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக் பொருட்களில் பெரும்பகுதியும் சீனாவில்தான் தயாரிக்கப்படுகிறது. இன்றைய உலகம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள், டி.வி.டி ப்ளேயர்கள், செல்ஃபோன்களில் பெரும்பகுதி சீனத் தயாரிப்புகளே. அத்துடன் நில்லாது, பயோடெக்கிலும் (Biotech), கம்ப்யூட்டர் தயாரிப்பது என டெக்னாலஜியிலும் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கிறது சீனா. உலகின் எந்தவொரு நாடும் சீனாவைப் போல இவ்வாறான பலதுறை முன்னேற்றத்தை இதுவரை கண்டதில்லை. உலகப் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்ததில்லை. சீனா வளர்கையில் உலகம் சுருங்குகிறது என்றால் அது மிகையல்ல.

சீனாவின் அசுர வேகப் பொருளாதார வளர்ச்சி பல மேற்கத்திய நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவை மிகவும் அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கவைக்குதவாத கம்யூனிச பொருளாதார சித்தாந்தங்களின் மூலம் அழுத்தப்பட்டு, வறுமையிலும், ஏழ்மையிலும் வாடிக் கொண்டிருந்த இப் பெரிய நாடு, முதலாளித்துவத்தின் முதன்மை இடமாக இன்று மாறியிருக்கின்றது. உலகின் ஒரே வல்லரசான அமெரிக்காவை விட மும்மடங்கு வேகமாக சீனா இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகில் உற்பத்தியாகும் மொத்த காங்கிரீட்டில் 40 சதவீதமும், 25 சதவீத இரும்பு எஃகும் சீனாவின் பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டவும், சாலைகள் அமைக்கவும், ஆறுகளின் குறுக்கே பெரும் அணைகள் கட்டவும் உபயோகப் படுத்தப்படுகிறது என்பதே சீனாவின் மிக வேக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுக்கள். சீனாவின் இத் துரித வளர்ச்சி மானுடம் அறியாதது.

உலகின் ‘வொர்க் ஷாப் ‘

மேலோட்டமான ஒரு பார்வையிலேயே சீனாவின் இன்றைய வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. சீனா, அமெரிக்க போயிங் 757 விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் அதே நேரத்தில், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வல்லமையும் கொண்டிருக்கிறது. உலகின் எந்த ஒரு நாட்டையும் சீனாவுடன் ஒப்பீடு செய்ய இயலாது என்பதே இன்றைய நிலைமை. வல்லரசான அமெரிக்காவும்டன் ஒப்பு நோக்குகையில், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்களே தென்படுகின்றன. உதாரணமாக, சீனாவில் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகை உள்ள நகரங்கள் 100-இலிருந்து 160 வரை உள்ளன. அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்கள் வெறும் 9 மட்டுமே (மொத்த ஐரோப்பிய யூனியனிலும் உள்ள, 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 36).

இன்றைக்கு லட்சக்கணக்கான சீன விவசாயிகள் தங்கள் விளை நிலங்களைத் துறந்து நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 90-இலிருந்து 300 மில்லியன் சீனர்கள் இவ்வாறு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில் இதுபோன்றதொரு பிரம்மாண்டமான இடப்பெயர்ச்சி இதுவரை நடந்ததில்லை. 2010-இல் ஏறக்குறைய அரைவாசி சீனர்கள் நகரங்களில் வாழ்வார்கள் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வதற்கு இதுவரை இல்லாத பல பிரம்மாண்டமான நகரங்கள் தோன்றும் எனவும் கணித்திருக்கிறார்கள்.

2003-ஆம் வருடம் சீனாவின் வியாபாரங்களிலும், கட்டிடங்களிலும் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டவர்களே. சிறிது காலத்திற்கு முன்வரை அம்மாதியான முதலீட்டார்கள் விரும்பிச் செல்லும் இடமாக அமெரிக்கா இருந்தது. ஏறக்குறைய $50 பில்லியன் டாலர்கள் 2003-ஆம் வருடம் சீனாவில் முதலீடு செய்யப்பட்டது. ஒருவருட காலத்தில் சீனாவில் செய்யப்படும் முதலீட்டின் அளவைப் போன்று உலகில் எந்த நாட்டிலும் இல்லை. அதே 2003-ஆம் வருடம் அமெரிக்காவில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடு $40 பில்லியன் டாலர்கள். அதே வருடத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதி வர்த்தகம் முந்தைய ஆண்டை விடவும் 40 சதவீதம் அதிகரித்து விட்டது. இன்றைக்கு ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க தொழில் நுட்ப வல்லுனர்கள், வங்கிகள், கணிப்பொறி வல்லுனர்கள், விளம்பரத்துறை விற்பன்னர்கள், என்ஜினியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் சீனாவை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் பாதிக்கும் மேற்பட்ட தொழில்கள், தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் இங்ஙனம் புதிதாகக் குடியேறி இருக்கும் வெளிநாட்டவர்களே.

அமெரிக்காவின் Dell, Gateway, Apple போன்ற கம்ப்யூட்டர் ஜாம்பவான்களுக்கு இணையாக சீனா தனது சொந்த பிராண்டுகளை ஏற்றுமதி செய்கிறது. இன்றைய சீனாவின் வளர்ச்சி ஒரு கட்டுக்கடங்கா ரயிலைப் போல அசுர வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்த நிலைமை இன்று இல்லை. மாவோ போன்ற கம்யூனிசத் தலைவர்களால் செய்ய இயலாத தொழிற்புரட்சி இன்று சீனா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வேலையின்மையும், வறுமையும் நிலவிய சீனாவில் இன்று Citibak-இலிருந்து டிஸ்னி, நோக்கியா, ஜி.இ., டொயோட்டா, மைக்ரோ சாஃட் என அத்தனை பணம் படைத்த கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்கின்றன.

சீனாவில் மோட்டார் வாகனங்கள் உபயோகிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகமாகி வருவதால், உலகச் சந்தையில் பெட்ரோலிய எண்ணை விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. தொடர்ச்சியான பெட்ரோலிய எண்ணை இறக்குமதியில் எந்தச் சுணக்கமும் ஏற்படாத வகையில் சீன அரசாங்கம் சவூதி அரேபியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் அதே நேரத்தில், உலகின் பல வளமான பெட்ரோலிய எண்ணைக் கிணறுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

சீனாவின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் மிகப் பெரும் மக்கள் தொகை. ஏறக்குறைய 1.5 பில்லியன் மக்கள் சீனாவில் வசிக்கிறார்கள் (1.3 என்ற அரசாங்க கணக்கு மிகக் குறைவான ஒன்று என்பது மேற்கத்திய நாடுகளின் கணிப்பு). அதே சமயம், உலகின் மற்ற பல ஏழை நாடுகளை விட சீனத் தொழிலாளர்கள் பெறும் சம்பளம் அதிகமானது. வறுமை மிக்க ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளின் தொழிலாளர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான ஊதியமே ஈட்டுகிறார்கள். இருப்பினும் சீனா உலகின் ‘வொர்க் ஷாப்பாக ‘ மாறக் காரணம் அங்கு நிலவும் சீரான, நிலையான அரசாங்கமும், தெளிவான அரசு இயந்திரமும், வியாபாரக் கொள்கைகளுமே. அதையும் விட சீன கம்யூனிச அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகளும், ஒழுக்கம் மற்றும் கல்வி அறிவுள்ள, திறமையான, கடின உழைப்பிற்குத் தயாராக உள்ள தொழிலாளர்களும்தான்.

2003-இல் சைனாவின் GDP (Gross domestic product) ஏறக்குறைய $1.4 டிரில்லியன் டாலர்கள்! அதை வைத்துப் பார்க்கையில், சீனா உலகின் ஏழாவது மிகப் பெரிய பொருளாதாரம். (அதனுடன் ஒப்பிடுகையில், 2003-ஆம் வருடம் ஏறக்குறைய $10.4 டிரில்லியன் டாலர்கள் GDP உடையதாக இருந்தது அமெரிக்கா. சீனாவை விட ஏறக்குறைய ஏழு மடங்கு). அதே சமயம் சீன GDP-இன் அளவு 10 சதவீதத்திலிருந்து பதினைந்து சதவீதம் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது மேற்கத்திய நோக்கர்களின் கருத்து. சீன மத்திய அரசு வளமை குறைந்த மத்திய மற்றும் கிழக்குப் பகுதி முன்னேற்றப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. அதனால் வளமான மேற்குப் பகுதியைச் சார்ந்த சீன நிர்வாகிகள், தங்கள் பகுதிக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் குறைவின்றி பெறுவதற்காக அளவுகளைக் குறைத்துக் கூறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. சென்ற சில வருடங்களில் அவ்வாறு குறைத்துக் கூறிய ஏறத்தாழ இருபதினாயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை அளித்திருக்கிறது சீன அரசாங்கம்.

முப்பது வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, சீனப் பொருளாதாரம் ஒவ்வொரு வருடமும் 9.5 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த முப்பது வருடங்களில் சீனப் பொருளாதாரம் மூன்று முறை இரட்டிப்பாகி இருக்கிறது. மனித குல வரலாற்றில் இதுவரை எங்கும் நடந்திராத அதிசயம் இது. 2002-03-ஆம் வருடங்களில் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் பொருளாதார ரீதியாக தடுமாறிக் கொண்டிருக்கையில் சீனப் பொருளாதாரம் எந்தத் தொய்வும் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருந்தது. அதையும் விட, சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்த ஒவ்வொரு முறையும் சீனப் பொருளாதாரம் நிமிர்ந்து நின்று அவர்களை அதிசயிக்க வைத்தது. அதிசயிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எல்லோரும் நினைப்பது போல அமெரிக்கப் பொருளாதாரம் சீனப் பொருள்களை வாங்குவதால் நசிந்து வருவதாக வரும் தகவல்களில் பல உண்மையில்லை. 2003-ஆம் வருடம் மட்டும் சீனா $152 பில்லியன் டாலர் பொறுமானமுள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அந்தப் பொருள்களில் பெரும்பாலானவற்றை அமெரிக்கா முன்பு ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து இறகுமதி செய்து கொண்டிருந்தது. சீனா அந்நாடுகளை விடவும் மிகக் குறைந்த விலைக்கு அதே பொருட்களைத் தயாரித்து அனுப்புவதால் தனது போட்டி நாடுகளின் பொருளாதாரத்தை நசிந்து போகச் செய்து விட்டது என்பதுதான் உண்மை. எனவே இதன் பாதிப்பு அமெரிக்காவை விட வேற்று நாடுகளுக்கே அதிகம். ஏழ்மை மிக்க நாடுகளை மட்டுமல்லாது, வளர்ச்சியடைந்த நாடுகளூம் சீனப் போட்டிக்கு ஈடு கொடுக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஜப்பானியர்களின் டெலிவஷன் மார்கெட்டையும், இத்தாலியர்களின் பட்டுத்துணி ஏற்றுமதியையும், ஜெர்மனியர்களின் கிறிஸ்துமஸ் அலங்கார அணிகலன்களின் மார்க்கெட்டையும் சீனா குறுகிய காலத்தில் கைப்பற்றி இருக்கிறது.

மினுக்கும் ‘ஷாங்காய் ‘

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் – 1930களில் – ஷாங்காய் உலகின் மிக முக்கியமான ஐந்து பெரு வணிக நகரங்களில் ஒன்றாக – மற்றவை, இலண்டன், நியூயார்க், பாரிஸ் மற்றும் டோக்கியோ – இருந்து வந்தது. உலகின் இரண்டாவது மிக அதிக சரக்கு போக்குவரத்து நிரம்பிய துறைமுகமாகவும் அறியப்பட்டிருந்தது ஷாங்காய். அந்நகரின் மத்தியில் ஓடும் ஹுவாங்பு (Huangpu) நதியின் கரைகளில் ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும், ஆசியர்களும் நிரம்பி வழிந்தார்கள். தரமான ஆடைகள், காகிதங்கள், மற்ற உற்பத்திப் பொருள்கள் அந்நகரின் வழியே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வணிகம் தழைத்துக் கொண்டிருந்தது. அங்கு குடியேறிய வெளிநாட்டினர் அற்புதமான கலையழகுடன் கூடிய கட்டிடங்களைக் கட்டினார்கள். ஜெர்மனிய நாஜிக்களிடமிருந்து தப்பி வந்த யூதர்கள், ஈராக்கியர்கள், ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள், இந்தியர்கள் எனப் பலதரப்பட்ட மக்களை காந்தமென கவர்ந்திழுத்தது ஷாங்காய் நகரம். 1949-ஆம் ஆண்டு நடந்த சீன கம்யூனிசப் புரட்சிக்குப் பின், அடுத்த நாற்பது ஆண்டுகள் ஷாங்காய் தனது முக்கியத்தை இழந்தது. கலையழகுடன் கட்டப்பட்ட ஐரோப்பிய பாணிக் கட்டிடங்கள் பல கவனிப்பாரின்றி இடிந்து விழுந்தன. ஷாங்காய் தன் பொலிவையும், உலகின் பார்வையிலிருந்தும் மறைந்தே போனது.

இன்றைய ஷாங்காய் பள பளப்பான, மிக நவீனமான, சீனர்களின் பெருமிதத்திற்கு அடையாளமான ஒரு நகரம். ஷாங்காய் நகரின் இன்றைய வளர்ச்சிக்குப் பின்னனியில் இருப்பவர்கள் வெளிநாட்டினரே. ஒரு காலத்தில் ‘Whore of Asia ‘ என்றழைக்கப்பட்ட ஷாங்காயின் மறுபிறப்பு பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. நியூயார்க் மற்றும் பாரிஸ் நகரங்களுக்கு இணையான நவீன வசதிகள் கொண்ட ஷாங்காயின் ரியல் எஸ்டேட் கடந்த 10 வருடங்களில் ஆகாயத்தைத் தொடுமளவு உயர்ந்து விட்டது. ஒரு சாதாரண அப்பார்ட்மெண்ட்டின் விலை குறைந்தது $100,000 டாலர் என்பது சர்வ சாதாரணம். பணமழை பொழிகிறதோ என்று ஆச்சரியப்படும் வகையில் அந்நகரத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஷாங்காயில் வாழும் ஒரு சாதாரண சீன நடுத்தரக் குடும்பத்தின் வருட வருமான $10,000 டாலர்கள். வாகனப் போக்குவரத்து தாறுமாறாகி, நகரெங்கும் வெளிநாட்டுக் கார்களின் அணிவகுப்பு (கவனிக்க, கார் வாங்க நினைப்பவர்கள் பர்மிட் வாங்க மட்டும் $5000 டாலர்கள் ஷாங்காய் முனிசிபாலிட்டிக்குச் செலுத்தியாக வேண்டும்!).

கடந்த 2004-ஆம் ஆண்டில் மட்டும் ஷாங்காயில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட, பதினைந்து மாடிகளுக்கு மேலுள்ள கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதிலிருந்தே அந் நகரத்தின் வளர்ச்சி வேகத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தைவானிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் முதலீடுகளுடன் வந்து குவிந்த பிஸினஸ் மேக்னெட்டுகள் அசுர வேகர்த்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களையும், பள பளக்கும் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்களையும் கட்டினார்கள். ஷாங்காயில் மட்டும் சுமார் 250,000 முதல் 500,000 வரையிலான தைவானியர்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய $10 பில்லியன் டாலர்கள் அவர்களால் சீனாவில்/ஷாங்காயில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது.

2003-ஆம் ஆண்டின் இறுதிவரை ஷாங்காயில் துவக்கப்பட்ட, பிரபல வெளிநாட்டுக் கம்பெனிகளின் எண்ணிக்கை 14,400. மேலும் 13,000 கம்பெனிகள் வெளிநாட்டு முதலீட்டின் உதவியுடன் துவக்கப் பட்டிருக்கின்றன. 2004-இல் ஷாங்காயில் மட்டும் $12 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது (மொத்த சீனாவின் செய்யப்பட்ட முதலீடு இதனை விடப் பலமடங்கு அதிகம்). வேறுவகையில் சொல்வதென்றால், ஷாங்காயில் செய்யப்பட்ட ஒரு வருடத்திய முதலீடு, இந்தோனேஷியா, மெக்ஸிகோ மற்றும் பல சிறு நாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளை விட அதிகமானது. 1990-களில் வெளிநாட்டில் வசிக்கும் சீனர்கள் மட்டுமே அதிகமாக ஷாங்காயில்/சீனாவில் (70 சதவீதம்) முதலீடு செய்து வந்தார்கள். இன்று எல்லா நாட்டினரும் முதலீடு செய்ய விரும்பும் ஒரு இடமாக சீன வளர்ந்திருக்கின்றது.

ஷாங்காயில் ‘இந்தியா Town ‘ இருக்கிறது என்பது நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

சீன அரசாங்கம் உள்நாட்டுக் கட்டுமானத்திற்குச் செய்யும் செலவு நம்மை மலைக்க வைக்கும். எங்கெங்கும் புதிதாக நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சீன முக்கிய நகரங்களை இணைத்து மிக வேக புல்லட் ட்ரெயின் பாதைகள் (செலவு, $19 பில்லியன்கள்) அமைத்து வருகிறது. மஞ்சள் ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அமைக்கப்பட்டுவரும் த்ரீ கோர்ஜஸ் அணைக்கட்டு ஏறக்குறைய முடியும் தறுவாயில் இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக் சீனாவில் நடக்க இருக்கிறது. அதற்கான திட்டங்களை இப்பொழுதிருந்தே தீட்டப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. கல்விக்கும், மருத்துவ வசதிக்கும் சீனா ஏராளமாக செலவு செய்கிறது. சீன மாணவர்கள் உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற பல்கலக்கழகங்களில் பயின்று வருகிறார்கள்.

அதே சமயம், இப் பெரிய பொருளாதார வளர்ச்சியின் பின் மறைந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், காடு மற்றும் இயற்கை வள அழிப்பு போன்றவற்றை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் கண்டு கொள்வதில்லை. சுய நலத்திற்காக சர்வாதிகளுடன் கை கோர்த்துக் கொள்ளும் மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்த்துக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. சீனாவை எதிர்ப்பதற்குத் துணிச்சலுள்ள நாடுகள் எதுவுமில்லை என்பதுதான் இன்றைய உண்மை.

எது எப்படி இருந்தாலும் சீனாவின் பொருளாதார வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியை சீனா தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் மாவோவின் கம்யூனிசப்பாதைக்குத் திரும்புமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

உங்களுக்குத் தெரியுமா ?

– அடுத்த பதினைந்து வருடங்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த முன்னூறு மில்லியன் சீனர்கள் நகரங்களில் குடியேறுவார்கள். அவர்களைக் குடியமர்த்த சீன அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்திற்கு இணையான அளவுள்ள நகரங்களை (சுமார் 600 சதுர மைல்கள்) கட்டியாக வேண்டும்.

– சீனாவில் சென்ற ஒருவருடத்தில் மட்டும் ஏறக்குறைய 220 பில்லியன் எஸ்.எம்.எஸ் செய்திகள் செல் ஃபோன்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்பட்டன.

– 2025-ஆம் வருடத்தில் சீன மோட்டார் வாகனச் சந்தை, அமெரிக்காவை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கும் என்கிறது உலகின் மிகப்பெரும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ். 2025-இல் ஏறக்குறைய எழுபத்தைந்து மில்லியன் சீனக் குடும்பங்கள் தங்களுக்கென ஒரு கார் வாங்கும் வசதியுடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

– ஆங்கிலம் பேசும் மொத்த அமெரிக்கர்களின் தொகையை விட, ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்கள் அதிகமுள்ள நாடு சீனா.

– சீனாவில் முதலீடு செய்யும் ஒவ்வொரு அமெரிக்க கம்பெனியும் தோராயமாக 42 சதவீத இலாபத்தை ஈட்டுகின்றன.

– அமெரிக்காவின் தொழில்களிலும், தொழிற்சாலைகளிலும் ஏறக்குறைய 140 மில்லியன் மக்கள் வேலை செய்கிறார்கள். சீனாவின் மத்திய, மற்றும் மேற்குப் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 220 மில்லியன் அதிகப்படியான (surplus) தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

– ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கத் தொழிலாளிக்கு $9.56 ஒரு மணிநேர ஊதியமாக வழங்கப்படுகிறது. தென் அமெரிக்க எல்-சால்வடோரில் அதே தொழிலாளி பெறும் ஊதியம் $1.65. சீனத் தொழிலாளர்கள் பெறுவது 68-லிருந்து 88 சென்ட்கள் (1 சென்ட் = 43 காசு).

– இன்றைய நிலவரப்படி, பத்திலொரு அமெரிக்கத் தொழிலாளியின் வேலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆபத்தில் இருக்கிறது.

– 186 விதமான எம்.பி.ஏ புரோகிராம்கள் சீனக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.

– ஒவ்வொரு வருடமும் 1 பில்லியன் ஆணுறைகள் சீனாவின் விபச்சாரச் சந்தைக்கு மட்டும் தேவைப்படுகிறது.

– ஏறக்குறைய 320 மில்லியன் சீனர்கள் பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள். இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விடவும் அதிகம்.

– இன்டர்நெட்டை (Internet) உபயோகிக்கும் சீனர்களின் தொகை அமெரிக்கர்களை விடவும் அதிகமானது.

– அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 40,000 சைனீஸ் ரெஸ்ட்டாரெண்ட்கள் இருக்கின்றன. இது மெக்டொனால்ட், பர்கர் கிங், கே.எஃப்.சி போன்ற பிரபல அமெரிக்க உணவங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகமான ஒன்று.

(இக் கட்டுரையில் காணப்படும் பல தகவல்கள் Ted G. Fishman எழுதிய China * Inc. என்ற புத்தகத்திலிருந்தும், பிற வலைத்தளங்களின்றும் எடுத்தாளப்பட்டுள்ளன).

—-

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்