சீனம் கற்க தமிழில் முதல் நூல்

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

நாதன்


இந்திய மொழியொன்றில் சீனம் கற்பது தொடர்பாக வெளியாகும் முதல் நூல்; ‘சீன மொழி — ஓர் அறிமுகம் ‘ என்ற நூலாகும். பழைய மொழிகள் பற்றிய பிரஸ்தாபத்தில் தமிழோடு சீனம் பெரும்பாலும் இடம்பெறும். ஆனால் தன்மைகளில் –பண்புகளில் ஒப்பிட்டோ, நுட்பங்களைத் தெரிவித்தோ எங்கும் எழுதப்படவில்லையெனத் தெரிகிறது.

உலகம் முழுக்க இந்திய என்றால் ‘இந்தி ‘ என்கிற சூழலில் அம்மொழி கூட இது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்பது வியப்பாய் இருக்கிறது. பல நூறு ஆண்டுகால அரசு அதிகாரிகள், இந்தியர்கள் யாரும் நினைக்கவில்லை போலும். அல்லது வேறு பல ஜோலிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்திருக்கலாம்.

தமிழகத்தில் இரயில்வேத்துறையில் அலுவலராக இருந்தபோது இலக்கியம், கலை என்று இருந்த ஸ்ரீதரன், ‘ஐக்யா ‘ என்ற நாடகக்குழுவை நண்பர்களோடு இணைந்து நடத்தியவர். நாடகம் என்கிற வட்டம் மீறி இலக்கியம் –விமரிசனம் என்று பார்வை விரிய , அவரது பார்வை தமிழ் நாடகத்துறைக்கும் உதவியது. புதிய பார்வையாளர்களை தமிழுக்குத் தந்தவர்களில் ‘ஐக்யா ‘ குழுவினரும் அடக்கம்.

ஸ்ரீதரன், ஐஎ:ப்எஸ்ஸில் தேறி, சீன நாட்டில் பதவி பெற்றதுமே மொழி பற்றி சிந்திக்கலானார். முதல்முறை இந்தியா திரும்பியபோதே பல்வேறு அகராதிகள் பற்றியும் அவற்றை உருவாக்கியவர் பற்றியும் ஆவலாய் தேடலில் ஈடுபட்டிருந்தார். பலரிடம் ஆலோசித்தார். அந்தத் தேடல் –உழைப்பின் விளைவால் உருவானதுதான் ‘சீனமொழி — ஓர் அறிமுகம் ‘

தமிழ் மூலம் சீனமொழியை எளிதாகக் கற்கும் படி எழுதப்பட்ட இந்த நூல் ஹாங்காங்கில் வெளியிடப்பட்டது. சீனாவுக்கான இந்தியத் தூதர், அசோக் கே.காந்த் வெளியிட்டு பேசும்போது, ‘மொழிப்பிரிவுகள் மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் என்றாலும் நாடுகளுக்குள் பாலங்கள் போட இணைப்புகளை உருவாக்க அவசரத் தேவையும் உள்ளன ‘ என்றார்.

நூலாசிரியர் ஸ்ரீதரன், ‘தமிழ் மூலம் சீனமொழியைக் கற்பது, வேறு பலவழிகளை விட எளிதாக இருக்கிறது ‘ என்கிறார். எண்பது பக்கமுள்ள இந்த நூலில் சீனமொழி கற்றல் முறைகள், சில சூழல்களில் எப்படி சீனமொழியைப் பயன்படுத்துவது, சீன மொழியை உச்சரிக்கும் விதங்கள் தமிழில் இடம்பெற்றிருப்பது, சீன – தமிழ் இலக்கண ஒப்பீடு, சீனமொழி வரலாற்றுச் சுருக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

எதையும் நுட்பமாகப் பார்க்கும் ஸ்ரீதரன் ஹாங்காங்கில் சமீபமாக சுந்தரராமசாமியின் ‘யந்திரத்துடைப்பான் ‘, ஸீக்ஃபிரிட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம் ‘ (ஜெர்மன் மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. மொ.பெ: கிருஷ்ணமூர்த்தி) ஆகிய இரு நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அதில் ‘நிரபராதிகளின் காலம் ‘ என்ற நாடகத்தை வீடியோவில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றபோது, அது நேர்த்தியாக சுத்தமாகத் தயாரிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தேன். ‘கூத்துப்பட்டறை ‘ சென்னையில் அதை மேடையேற்றியபோது முக்கிய பாத்திரமொன்றில் நான் நடித்தவன். அதை ஒரு ஜெர்மானியப் பெண்மணியுடன் இணைந்து தனுஷ்கோடி இயக்கியிருந்தார். ஸ்ரீதரனின் தயாரிப்பில் பாத்திரங்களுக்கு புதிய விளக்கம் தரப்பட்டிருந்தன. இப்படியான காத்திரமான நாடகங்களுக்குப் பழக்கப்படாதவர்களைக் கொண்டு சரியாக மேடையேற்றியது மிக முக்கியமாகப்படுகிறது.

ஸ்ரீதரன், தமிழ்க் கலைக்கும் இலக்கியத்திற்கும் பங்களிப்பைச் செய்வார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

***

(rayaa@sify.com)

Series Navigation

நாதன்

நாதன்