ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
‘உங்களுக்குத் தெரியுமா ? நான் ‘அந்தக் குரு ‘வின் சீடனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன் என்று சொல்கிறார்கள். ‘ என்று அவர் ஆரம்பித்தார். ‘நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா ? நான் ‘அந்தக் குரு ‘ சார்ந்த நிறுவனத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த நிறுவனத்திற்காகத் தன்னார்வ பணிகள் செய்கிறேன். அதனைப் பார்த்து என்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டார்களாம். எதிர்காலத்தில் முதல்நிலை தீட்சை பெறுவதற்கான வாய்ப்பும் எனக்கு இருக்கிறதாம். அந்த நிறுவனத்தை உள்ளார்ந்து அகவழி நடத்தும் ‘அந்தக் குருவை ‘, புறவயமாக வெளியுலகிற்கு பிரதிநிதித்துவப் படுத்துகிற தலைவர்கள்தான் எனக்கு இதைச் சொன்னார்கள். நிஜமாகவே நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ‘ என்று தொடர்ந்தார் அவர். அதையெல்லாம் அவர் மனப்பூர்வமாக நம்பிக் கொண்டிருக்கிறார் என்று அவர் பேச்சில் புரிந்தது. நாங்கள் அதுபற்றி சற்று ஆழமாகப் பேசினோம்.
வெகுமதி எந்த வடிவில் வந்தாலும் அது மிகவும் சந்தோஷமும் திருப்தியும் தருகிறது. அதுவும், வாழ்வின் மற்ற கீர்த்திகளைப் பெரிதும் பொருட்படுத்தாதவர்க்கும், திரஸ்கரித்தவர்க்கும், ஆன்மீகத்தால் வருகிற வெகுமதி நிச்சயம் உவகை சேர்க்கிறது. அல்லது, இந்த உலகில் வெற்றிகள் ஈட்ட முடியாத ஒருவர், ஆன்மீகத்தில் ‘கரைகண்டவர்கள் ‘ நடத்துகிற அமைப்பில் அனுமதிக்கப்பட்டு, தானும் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்கிற பிடிப்போடு, அந்த அமைப்பின் தோழர்களோடு அதன் இலட்சியங்களுக்காக உழைத்து , பணிவுடனும் தியாகத்துடனும் தன் பணியைச் செய்யும் போது, ஒருவர்க்கு வெகுமதி தரப்படத்தான் வேண்டும். இது வெகுமதி என்கிற வரையறைக்குள் வராது எனில், ஒருவரின் ஆன்மீகத் தேடலுக்கு, ஆன்மீக வளர்ச்சிக்குக் கிடைக்கிற அங்கீகாரம் எனக் கொள்ளலாம். அல்லது, லாபத்தின் பொருட்டு செம்மையாக நிர்வகிக்கப்படுகிற நிறுவனங்களில், ஒருவரின் சிறப்பான பணிக்குக் கிடைக்கிற உயர்வும் வெகுமானமும் அவரை மேலும் எப்படி ஊக்குவிக்கின்றனவோ அதுமாதிரி என்றும் சொல்லலாம்.
வெற்றிகள் துதிக்கப்படுகிற உலகத்தில், இத்தகு சுயமுன்னேற்றம் புரிந்து கொள்ளவும் ஊக்குவிக்கவும் படுகிறது. ஆனால், ஒருவர் தன்னை இன்னாருடைய சீடன் என்று மற்றவர் சொல்ல அனுமதிப்பதும், அல்லது அப்படித் தன்னைத் தானே நினைத்துக் கொள்வதும், ஒருவர் தான் மிகவும் மோசமாக சுரண்டப்படுவதற்கு வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த ‘சீட – குரு ‘ உறவிலே, சுரண்டப்படுபவர், சுரண்டுபவர் இருவரும் பரஸ்பரம் பெருமையே கொள்கிறார்கள். இப்படி விரிவடைகிற சுய சந்தோஷமும் பெருமையும் ஆன்மீக வளர்ச்சி என்று அடையாளம் காணப்படுகிறது. இதிலே, குருவானவர் வெளிநாட்டிலோ, நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாதவராகவோ, நேரடியாகத் தரிசிக்க முடியாதவராகவோ இருந்து, சீடனுக்கும் குருவுக்கும் நடுவிலே ‘இடைத் தரகர்கள் ‘ இருப்பார்களேயானால், அந்தச் சுரண்டல், மிக விரும்பத் தகாததும், கொடுமையானதும் ஆகும். இத்தகைய நேரடித் தொடர்பில்லாத நிலை, சீடன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்கும், சிறுபிள்ளைத்தனமான மாயைகளில் சிக்கிக் கொள்வதற்கும் வழி வகுக்கிறது. இத்தகு மாயைகளை, புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்படுகிற சாமர்த்தியசாலிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, மேலும் சுரண்டுகிறார்கள்.
அடக்கம் இல்லாத இடத்திலேயே வெகுமதிக்கும் தண்டனைக்கும் இடம் உண்டு. ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றுவதாலோ, மறுதலிப்பதாலோ வருவதல்ல அடக்கம். அடக்கம் ஒரு சாதனையும் அல்ல. உரமிட்டால் வளரக்கூடிய நற்பண்பின் வகைகளுள் ஒன்றுமல்ல, அடக்கம். ஏனெனில், எந்த நற்பண்பும் போதனை என்கிற முயற்சியால் வளர்க்கப்படும்போது, நற்பண்பு என்கிற இயல்பை இழந்து விடுகிறது. அதற்குக் காரணம், போதிக்கப்படும்போது, அது சாதனையின் ஒரு வடிவமாகவும், அடையப்பட வேண்டிய ஒரு மைல் கல்லாகவும் மாறிவிடுகிறது. போதனையால் வளர்க்கப்படுகிற பண்பு எதுவும், அந்தப் பண்பினைப் பெற ஒருவர் செய்யும் தியாகத்தின் அடையாளமோ, அந்த ஒருவரைப் பற்றிய குணாதிசயமோ அல்ல; அது அந்த ஒருவரைப் பற்றிய எதிர்மறையான வலியுறுத்தலும், பிரேமையுமே ஆகும்.
அடக்கத்திற்கு மேலோர் கீழோர் என்கிற பாகுபாடு இல்லை. குரு சீடன் என்கிற வித்தியாசம் இல்லை. குரு சீடன் என்கிற வித்தியாசம் இருக்கிற வரை, உண்மைக்கும் ஒருவர்க்கும் இடைவெளிகள் இருக்கும் வரை, புரிந்து கொள்ளுதல் சாத்தியப் படாது. உண்மையைப் புரிந்து கொள்ளுவதில் குரு சீடன் என்கிற வரையறைகள் இல்லை. அங்ஙனமே, அறிந்தவர் அறியாதவர் என்பதும் இல்லை.
உண்மை என்பது, கணம் தோறும், ‘இது என்ன ‘ என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதாகும். அந்தப் புரிந்து கொள்ளல், கடந்து போன கணங்களின் எச்சங்கள் என்கிற சுமை இல்லாமல் அமைதல் வேண்டும்.
வெகுமதியும் தண்டனையும் ஒருவரைப் பலப்படுத்தலாம். ஆனால் அது அடக்கத்தைத் தடுக்கிறது. அடக்கம் நிகழ்காலத்தில் இருக்கிறது; எதிர்காலத்தில் இல்லை. ஒருவர் அடக்கமுடையவராக ஆகுதல் என்பது இயலாது. ஒன்றாக ஆகுதல் – ஒன்றாக மாறுதல் – என்பதே கர்வத்தின் தொடர்ச்சியாகும். நற்பண்புகளைப் பயில்வதில் கூட கர்வமே ஒளிந்துள்ளது. வெற்றியடைவதில் ஒருவருக்கு உள்ள உறுதியே, ஒன்றாக ஆகுதலும், ஒன்றாக மாறுதலும். எனவே எளிமையான அடக்கத்தையும், வெற்றியையும் எப்படி ஒன்றாகச் சேர்க்க முடியும் ? ஆனாலும், ஆன்மீக சுரண்டல்வாதிகளும், சுரண்டப்படுவோரும் இதையே செய்வதால், முரண்பாடுகளும், துன்பங்களுமே மிஞ்சுகின்றன.
‘குரு என்று எவரும் இல்லை. குருவுக்கான அவசியமோ தேவையோ இல்லை. சீடனாக என்னை பாவித்துக் கொள்ளுவதே ஒரு மாயை, நம்ப வைக்க ஏற்படுத்தப்பட்ட தோற்றம் என்று சொல்கிறீர்களா ? ‘ என்று அவர் கேட்டார்.
குரு என்று ஒருவர் அவசியமா, தேவையா என்பது ஓர் அற்பமான விவாதம். குரு என்கிற படிமம், இங்கே சுரண்டுபவர்க்கும், பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் முக்கியமானது. ஆனால், மேன்மையான இன்பத்தைக் கொணரும் உண்மையைத் தேடும் மனிதர்க்கு, குரு என்று ஒருவர் தேவையா, அவசியமா என்கிற கேள்வி அநாவசியமானது. பணம் படைத்தவனும், அவனுக்கு வெகுமானம் வாங்கிக் கொண்டு பணிவிடை செய்யும் கூலிக்காரனும் போன்ற முக்கியத்துவம் உடையதே, குரு சீடன் உறவும். குரு என்று ஒருவர் தேவையா, குரு என்று ஒருவர் இருக்கிறாரா, தீட்சைகளும் பதவிகளும் கிடைக்குமா, எத்தனை சீடர்கள் இருக்கிறார்கள் என்பவை எல்லாம் ஒருவர்க்கு முக்கியம் அல்ல. ஒருவர் தன்னைத்தான் அறிவதே முக்கியம். சுய அறிவு இல்லாமல், காரணிப்படுத்துகிற எண்ணங்களுக்கு அடிப்படை இல்லை. உங்களைப் பற்றியே அறிந்து கொள்ளாமல், ‘இது சரி, இது தவறு ‘ என்று எப்படி உங்களால் சொல்ல முடியும் ? சுய அறிவு இல்லாவிட்டால், மாயைகளில் சிக்கிக் கொள்வதையும் தவிர்க்க இயலாது. ‘நீ இப்படி, நீ அப்படி ‘ என்று மற்றவர் சொல்வதும், அதை ஒருவர் ஏற்றுக் கொள்வதும் சிறுபிள்ளைத்தனமாகும். இந்தப் பிறவியிலோ அடுத்தப் பிறவியிலோ உங்களுக்கு ஆன்ம ஞான வெகுமதி அளிக்கப் போவதாகச் சொல்கிற மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!
(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – தொகுப்பு: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி (Commentaries on Living – Volume: 1 – J. Krishnamurthi))
- மரணத்தின் யோசனையில்…
- நகுலன் கவிதைகள்
- புனித வெள்ளி.
- வினை தீர்க்க வந்த விநாயகன் தம்பியே
- அரும் பிறவி
- அழகு…
- அவரவர் வலி…..
- இலவசம்! இலவசம்!
- இந்தியாவின் காமம் தோய்ந்த கலையின் சில காட்சிகள் – ‘கஜுராஹோ ‘, ‘இந்திய காம நூல்கள் ‘ புத்தகங்கள் விமர்சனம்
- கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்
- கோழி கறி சாண்ட்விச்
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி
- எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.
- ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்
- மகாத்மாவின் பொம்மைகள்
- நினைவுகள் இனிக்கும்!
- இன்னொரு நான்…
- தலைமை ஆசிரியர்
- அன்னையின் நினைவுகள்!
- பனிக்கட்டிச் சிறகுகள்.
- தயவுசெய்து எனக்காக…
- ஏறக்குறைய வெண்பா – 4
- விவாதி!
- சீடனும் குருவும்
- பேரரசின் புதிய விசுவாசிகள்
- கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்
- ஒட்டுதல்
- கெஸ்ட்ஹவுஸ்