பி.கே. சிவகுமார்
பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசிய பேச்சில் இருந்து சிவவாக்கியர் என்கிற பெயர் அறிமுகமானது. ‘நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா – நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ‘ என்று பெரியாரின் பாதி பகுத்தறிவாதத்தை முழுமையாக்குகிற சிவவாக்கியரின் வரிகளை ஜெயகாந்தன் மேற்கோள் காட்டியிருந்தது அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமூட்டியது.
அப்புறம் அவரை இன்னும் சற்று அறிந்து கொள்ள சுஜாதா உதவினார். ‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே – வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ ‘ என்றும், ‘பறைச்சி ஆவதேதடா பனத்திஆவ தேதடா ? – இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம் போட்டிருக்குதோ ‘ என்றும் அவர் எழுதிய வரிகளைச் சுஜாதா சிலாகித்து எழுதியதைப் பார்த்து, இவரை மேலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகியிருந்தது. வாய்ப்பு மட்டும் கிடைக்காமலேயே இருந்தது. போனவார விடுமுறையில் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தபோது வழக்கம்போல் அவரிடமிருந்து நிறையப் புத்தகங்களைத் தள்ளிக் கொண்டு வந்தேன். அப்படிக் கேட்டு வாங்கி அழைத்து வந்தவர்களுள் சிவவாக்கியரும் ஒருவர்.
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்து மதம் சனாதன மதமாக மெதுவாக மாறத் தொடங்கியது. அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றினுள் போவது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்டது. சடங்குகளின் தொகுப்பாகவும் பஜனைகளின் கூச்சலாகவும் இந்து மதம் மாற ஆரம்பித்திருந்த காலம் அது. மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்களும், கடவுளை அடையத் தடையாய் அகழிகளும் தோன்றி வளர்ந்த காலம் அது. சித்தர்களின் காலம் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து செழித்தது என்று சொல்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்துமதம் சனாதன தர்மத்தை நோக்கி நிறையவே முன்னேறியிருந்தது எனலாம். இந்தக் காலகட்டங்களில் தோன்றியவர்கள் சித்தர்கள். மறுமலர்ச்சிக் கருத்துகளை மொழிந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்துக்கு மட்டுமல்ல இன்றைக்கும் பல சித்தர்களின் கருத்துகள் புரட்சிகரமாகவும் புதுமையாகவும் விளங்குவதைக் காண இயலும். அப்படிப்பட்ட புரட்சிக்காரர்களுள் சிவவாக்கியர் முக்கியமானவர். திருமூலரை விளக்க வந்தவர் என்றும் இவரைச் சொல்கிறார்கள். இவர் பாடல்கள் சீர்திருத்தக் கருத்துகளை மட்டுமல்ல பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டவை. பகுத்தறிவைப் பயன்படுத்தி இறைவனை மறுக்கிற நாத்திகர்களிடையே, பகுத்தறிவால் இறைவனை உணர்ந்து அறிய முடியும் என்று சொன்ன ஆத்திகர் இவர். நாத்திகமும் ஆத்திகத்தில் அடக்கம் என்பதற்கு சிவவாக்கியர் கருத்துகளை உதாரணமாய்ச் சொல்லலாம்.
இவர் பாடல்களை அனுபவித்தும் ரசித்தும் படித்தேன். இன்றைக்கும்கூட சடங்குகளிலும் பஜனைகளிலும் நம்பிக்கை கொண்டிருப்பதுதான் மதம் என்று நினைப்பவர்களைப் நிற்க வைத்துப் பொட்டில் அறைகிறப் பாடல்கள் அநேகம். அவைகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். இவர் பாடல்கள் பெரும்பாலும் எளிமையாகவும் பொழிப்புரை தேவையில்லாமலும் இருப்பது சிறப்பாகும். கருத்துகளில் புதுமையைப் போலவே, பாடலையும் எளிமையாக அமைத்திருக்கிறார்.
எடுத்ததுமே வேதம் ஓதுவதிலே இறைவனைக் காண முடியாது என்கிறார்:
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள்! அறிகிலீர்
ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர், கனாவிலும் அஃதில்லையே
ஆணும் பெண்ணும் வேறுவேறு. சிலபல காரணங்களால் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக முடியாது என்று சிலர் நம்புகிறார்கள். சில மதங்களில் பெண்களை ஆண்களுடன் சேர்ந்து வழிபடுவதை ஏன் அனுமதிப்பதில்லை என்பதை நியாயப்படுத்த முனைவர்களும் மதங்களை மீறிய பார்வை கொள்ள வேண்டிய எழுத்தாளர்களும் முனைந்திருக்கிறார்கள். கற்றவர்களும் கூட அபிமானத்தால் மூடநம்பிக்கை கொள்வதும், நெருக்கமான மனிதர்களின் அல்லது நெருக்கமான விஷயங்களின் தவறுகளை நியாயப்படுத்துவதும் இயற்கைதானே. ஆனால், சிவவாக்கியர் சொல்கிறார் – ‘பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம் ‘ என்று.
நம்முடைய அரசியல்வாதிகளும் சினிமாப் பாடலாசிரியர்களும் (முக்கியமாக நாட்டுப்புறப் பாடல்களிலே) திடாரென ‘அட, நன்றாக இருக்கிறதே ‘ என்று தோன்றும்படியான வரிகளையோ உவமைகளையோ பயன்படுத்திவிடுவார்கள். பாதி நேரங்களில் அவற்றை எங்கிருந்தாவது சுட்டும், மீதி நேரங்களில் சொந்தமாகவும் சொல்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. அப்படிப் புகழ்பெற்ற உவமைகளுள் ஒன்று ‘கருவாடு மீனாகாது ‘ என்று தொடங்குகின்ற உவமை வரிசை. காங்கிரஸை விமர்சிக்க இதைக் காளிமுத்து முதலில் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். சிவவாக்கியரைப் படிக்கும்போது இத்தகைய உவமைகளின் மூலம் சிவவாக்கியரோ என்று தோன்றுகிறது.
கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.
கோயில் கட்டுவோம் என்ற கோஷத்துடன் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் இருக்கின்றன. புறப்பொருள்களை அகநம்பிக்கையின் அடையாளங்களாக அனுமதிப்பதற்கும், அந்த அடையாளத்தை அடுத்தவர் தம் குறுகிய நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும் மதங்கள் வழிவகுத்துவிட்டன. இந்துமதம் மட்டுமில்லை எல்லா மதங்களிலுமே இது இருக்கிறது. ஆலய வழிபாடு – அது கோயிலானாலும் சரி, மசூதியானாலும் சரி, சர்ச் ஆனாலும் சரி – மதத்தை நிறுவனமாக்குகிறது. கோயிலாவது குளமாவது என்று சிவவாக்கியர் கேட்கிறார்.
கோயிலாவது ஏதடா ? குளங்க ளாவது ஏதடா ?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
சிவவாக்கியரைப் படிக்கப் படிக்க நம்முடைய பகுத்தறிவுவாதிகள் செய்த செய்கிற தவறுகளை விளங்கிக் கொள்ள முடிகிறது. கடவுள் மறுப்பு என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கெதிரான இயக்கமாக பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்ததும், போலிச் சடங்குகளை எதிர்க்கிறேன் என்று காலம் காலமாக அழிக்கப்பட முடியாமல் நிற்கிற ஒரு மதத்தை – நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பகுதியே என்று உணராமல் – அதன் நல்ல கூறுகளுடனும் சேர்த்துப் பழித்ததுமே பகுத்தறிவுவாதிகள் செய்த தவறுகள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்க வேண்டிய ஆன்மீகத் தேடலையும் மதவாதமென்று நினைத்துத் தூற்றியதும் பகுத்தறிவு இயக்கம் செய்ததே. சிவவாக்கியர் பழிக்காத மூடப் பழக்கங்கள் இல்லை. எள்ளாத சடங்குகள் இல்லை. ஆயினும், மதம், கடவுள் ஆகியவற்றின் அடிப்படையை அவர் அறிந்து வைத்திருக்கிறார். நம் பகுத்தறிவுவாதிகள் இவற்றையெல்லாம் ஆழமாக ஆராயாமல், மேல்மட்டத்தில் நின்று, உணர்வுகளின் அடிப்படையிலான ஒரு பாபுலிஸ்ட் மூவ்மெண்டாக தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்கள். சிவவாக்கியர் அப்படியில்லை. ‘முனிவருள் நான் கபிலர் ‘ என்ற கிருஷ்ண பரமாத்மாவையும், ‘முக்குணங்களுடன் வளர்ந்து நிற்கும் வேதங்கள் என்ற மரத்தை வேருடன் வெட்டி வீழ்த்துவாயாக ‘ என்ற கீதையையும் சிவவாக்கியர் அறிந்திருக்கிறார் போலும். அதனாலேயே, மதத்தின் பெயரால் நடக்கிற மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்கிற் அவர், மனிதனுக்கான ஆன்மிகத் தேடலின் அவசியத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.
எந்தப் பகுத்தறிவுப் பகலவரின் பேச்சும் பின்வரும் பாடலின் வீச்சையும் ஆழத்தையும் எட்டிப் பிடித்து மதத் தூய்மைவாதிகளைச் சாடிவிட முடியும் என்று தோன்றவில்லை.
ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்
போகங்களான எச்சில்; பூதலம் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில்; ஒளிஎச்சில்,
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே
‘எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள்மட்டும் ஆவதேயில்லை ‘ என்று பெண்கவிஞர் எழுதிய புதுக்கவிதை ஒன்று சிலாகிக்கப்படுகிறது. பெண்ணியம் பேசுகிற பெண்கவிகளுக்கெல்லாம் தகப்பன் கவியாக சிவவாக்கியர் தெரிகிறார்.
மாதமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதமாற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது ?
நாதமேது, வேதமேது, நாற்குலங்கள் ஏதடா ?
வேதம்ஓதும் வேதியர் விளைந்த வாறும்பேசடா ?
சிவவாக்கியரின் நக்கல் கலந்த நகைச்சுவை அபாரமானது. யோசிக்காமல், முறைப்படுத்தாமல், இலக்கணங்கள் பார்க்காமல், தானாக விழுகின்ற அருவி போன்ற கிண்டல் கலந்த நகைச்சுவையை அவர் பாடல்களிலும் உவமைகளிலும் காணலாம். ஓர் உதாரணம்:
காலைமாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள்
காலைமாலை நீரிலேகிடந்த தேரை என்பெறும் ?
புலால் உண்ணாமை மதக்குறியீடு என்றும் வேள்விக்காலங்களில் புலால் உண்ணக் கூடாது என்றும் புலால் உண்ணுவோர் கடவுளை நெருங்கி வழிபட இயலாது என்றும் விதவிதமாக வித்தியாசங்கள் இருந்த காலம் அது. ‘புலால்புலாலென்று பேதமைகள் பேசுகிறவரை ‘ சிவவாக்கியர் கேட்கிறார்:
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததொன்று இரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசம் புலால் அதென் ?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான முடரே ?
‘சரஸ்வதி தேவி நாவில் குடியிருக்கிறாள் என்றால் அவள் மலஜலம் கழிப்பதும் அங்கேதானா ? ‘ என்கிற பகுத்தறிவு வாதத்தை அறிந்திருப்பீர்கள். இந்தக் கோஷத்திலே கடவுள் மறுப்பு வாதத்தை விட, மூடநம்பிக்கை வாதத்தைவிட, கடவுளை நம்புபவர்களைக் கழிவறை என்று சொல்கிற நேரடியான தனிமனித வெறுப்பே தொக்கி நிற்கிறது. இத்தகைய கோஷங்கள் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கின. சிவவாக்கியர் எந்தத் தளத்தில் நின்று இதையே பேசுகிறார் பாருங்கள்.
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
ஆட்டிறைச்சி அல்லவொ யாகம்நீங்கள் ஆற்றலே ?
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது ?
மீனிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
மீனிருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும் ?
மானிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
மானுரித்த தோலலோ மார்பு பூணூல் அணிவதும் ?
கடவுளை அடையும் வழிகளாகச் சிவவாக்கியர் சொல்கிற வழிகள் மிகவும் எளிமையானவை; ஆழ்ந்த பொருளுள்ளவை:
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்தது எவ்விடம், அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகிவாழல் ஆகுமே.
இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர் ?
அந்தஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே ?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியரின் நையாண்டியின் கூர்மைக்கு இன்னும் சில உதாரணங்கள்:
ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே ?
வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாயிலென்பது எவ்விடம் ?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம் ?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல் ?
மந்திரத்தை எச்சிலுக்கு ஒப்பிடுகிற சிவவாக்கியர் தான் தாக்கித் தகர்க்க வேண்டியது மூடப்பழக்கங்களை மட்டுமே என்று உணர்ந்திருக்கிறார். அவற்றைக் கொண்டிருக்கிற மாந்தர்களை அழிக்கத் தேவையில்லை, திருத்தி விடலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கிறது. பகுத்தறிவின் முதிர்ச்சியல்லவா இது.
நிஜமான துறவு இல்வாழ்க்கையில் இருக்கிறது என்கிறார் சிவவாக்கியர். மாதர்தோள் சேர்ந்தால் மனிதவாழ்வு சிறக்கும் என்று பெண்களை உயர்வுபடுத்துகிறார்.
மாதர் தோள்சே ராததேவர் மானிலத்தில் இல்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்து கொண்டான் ஈசனே.
மதங்களின் மூர்க்கத்தனத்துக்கு எதிரான குரல் சிவவாக்கியருடையது. போலிச் சடங்குகளுக்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல் சிவவாக்கியருடையது. ஜாதிவேறுபாடுகளுக்கெதிரான குரல் சிவவாக்கியருடையது. சமத்துவத்துக்கான குரல் சிவவாக்கியருடையது. பெண் விடுதலைக்கான குரல் சிவவாக்கியருடைது.
அவரைப் பற்றியக் கட்டுரைகளை விடவும் வர்ணனைகளை விடவும் அவர் பாடல்கள் எழுப்பும் உணர்வுகளும் சிந்தனைகளும் ஆழமானவை. அந்தரங்கமானவை. வாசிக்க வாசிக்க யோசிக்க வைத்துப் புரட்சிக் கருத்துகளும் புதுப்பொருள்களும் தரவல்லவை. முதலில், அவர் பாடல்களில் சிலவற்றை மட்டும் என் கருத்துகள் எதுவும் சொல்லாமல் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்புறம் வாசிப்பவரின் சிந்தனையை வழிநடத்துகிற அல்லது மயக்குகிற விவரமான வாதங்கள் இல்லாமல் சுருக்கமாகப் பாடல்களைப் பற்றிச் சிலவரிகள் சொல்லலாம் என்று தோன்றியது. அதைச் செய்தேன். நீங்களாகச் சிவவாக்கியரைப் படிக்கும்போது என்னைவிட அதிகமான அனுபவத்தையும் ஆனந்தத்தையும் அடையக் கூடும். அந்த வாசிப்பு அனுபவத்துக்கு என் கட்டுரை தடையாக இருக்கக் கூடாது என்பதால் நிறைய இடங்களில் விளக்காமலும், சுருக்கமாகவும் விட்டிருக்கிறேன். சிவவாக்கியரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவு இயக்கம் ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செய்யாததை (பகுத்தறிவு இயக்கம் அதன் தவறான வழிமுறைகளால் எதிர்மறை விளைவுகளையே அதிகம் உண்டாக்கி மதவாதம் வளரத் துணைபோனது என்று நான் நம்புகிறேன்) அவர்தன் பாடல்களிலே செய்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. (இந்த வரியை எழுதியதற்கு எவ்வளவு அடி வாங்கப் போகிறேனோ ?)
இக்கட்டுரை எழுத உதவிய இன்னோர் நூல்: இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்
**** **** ****
http://pksivakumar.blogspot.com
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- கரடி ரூம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- சூன்யம்
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- ஆறுவது சினம்
- தவிப்பு
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- கவிதை உருவான கதை – 4
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கேள்வியின் நாயகனே!
- வரவுயில்லாத செலவு
- கடல் தினவுகள்
- கவிதை
- முகத்தைத் தேடி
- இரண்டு கவிதைகள்
- இன்னும் விடியாமல்
- உடலால் கட்டிய வாழ்வு
- உள்ள இணையாளே
- தமிழவன் கவிதை-3
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- விடியல்
- கடைசியாய்….
- கதவுகளும் சுவர்களும்
- நட்பாராய்தல்
- கவிதை
- பிசாசின் தன் வரலாறு – 3
- விழிமீறல்
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- உடல் தீர்ந்து போன உலகு
- போய்வருகிறேன்.
- தாலாட்டு
- இயக்கம்
- ஏமாற்றுக்காரி
- ஞாபக மழை
- அன்புடன் இதயம்- 15
- கவிதைகள்
- இன்னொரு தினம்:
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17