சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன – பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

எச்.பீர்முஹம்மது


கடலோட்டத்தில் நிழல் படிந்திருந்தது. அது தன்னை உள்வாங்கி கொண்டு வெகு தூரம் சென்றது. இருபுறமும் பாதை அமைத்துக் கொண்டு தன் போக்கில் நகர்ந்தது. ஆழமற்ற நீர்ப்பரப்பிற்குள் நின்ற மணல் மேட்டிற்கு பின் ஆழமான கடலிலே சுறாக்கள் தென்பட ஆரம்பித்தன. சூரிய அஸ்தமனம் சிலாகிக்கத்தக்கதாக இருந்தது. பல வடிவங்களிலான மேகங்கள் நிறமாலையின் எல்லா நிறங்களினாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. கடல் நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் தொடுவானிற்கு நேர்த்தியான பாதை அமைத்திருந்தது. படகுகள் நீரின் ஒட்டத்தை கிழித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தன. அவை எதையோ தேடுவது மாதிரியான உணர்வோடிருந்தன. இரவில் கப்பல்கள் ஒளியை உமிழ்ந்து கொண்டு ஆங்காங்கே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

துண்டுகளாக சிதறிக் கிடக்கும் பாரசீக வளைகுடா மற்றும் அது சூழ்ந்திருக்கும் நாடுகளின் வரலாறு நெடியது. புனைவு சார்ந்தது. மனித நாகரீகத்தின் எல்லா உட்கூறுகளையும் கொண்ட இவை அதற்கான நிகழ்வு போக்குகளையும் கொண்டுள்ளன.அரபிக்கடலை வெட்டி விட்டு ஈரானிலிருந்து தொடங்கும் இவை சவூதியில் போய் முடிகின்றன. அரபிக்கடலையும் பாரசீக வளைகுடாவையும் ஹர்மஸ் ஜலசந்தி பிரிக்கிறது. இதன் பெயரிடல் குறித்து பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன். சிலர் அரேபிய வளைகுடா என்கிறார்கள். வேறு சிலர் அந்தந்த நாட்டின் பெயரோடு அழைக்கிறார்கள். பாரசீக வளைகுடாவானது சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. சுமேரியர்கள் முதன்முதலாக இப்பகுதியில் குடியேறி அதை ஆண்டு வந்திருக்கிறார்கள். இது ஈரானின் தெற்கு பகுதியில் யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் நதிக்கரையை ஒட்டி தொடங்குகிறது.சுமேரியர்களை தொடர்ந்து அசிரியர்களும்,பாபிலோனியர்களும் இதனோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு ரோமானியர்களின் வர்த்தகதலமாக மாறுகிறது.நறுமணபொருட்கள், பவள, ரத்தினங்கள் போன்றவற்றை அதிக அளவில் ரோமானியர்கள் அவர்களிடமிருந்து வாங்க தொடங்கினர். பின்னர் பாபிலோனியர்கள் அதன் அதிகாரத்தைக்கைப்பற்றினார்கள்.அதன் பின்னர் அகெமியர்கள், பார்த்தீனியர்கள், சசானியர்கள் ஆகியோரின் அதிகார வரம்பிற்குள் இது வந்தது. இவர்கள் இந்தியாவோடும், சீனாவோடும் கடல்வழி வர்த்தகத்தை நடத்தினார்கள். அதன் வழியாக பல இலக்கியங்கள் பிறந்தன.பாரசீகர்களின் கடல் வழி வர்த்தகத்தைகுறிக்கும் கதைத்தொகுப்பான ” ஆயிரத்தோர் இரவுகள்” இன்றும் பலரால் கவனிக்கப்படுகிறது.பாரசீக வளைகுடா பகுதிகளை பொறுத்தவரை நிலவியல் அடிப்படையில் ஈரானிலிருந்து தொடங்கினாலும் அரசியல் அடிப்படையில் ஈரான், ஈராக் ஆகியவற்றை தவிர்த்தே பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் நீங்கலாக ஓமன், கத்தர்,குவைத் பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியசு ஆகிய நாடுகள் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை ஏற்படுத்தி உள்ளன. இதன் வரலாறு அதன் போக்கில் நகரக்கூடியதும், ஒன்றைஒன்று முந்திக்கொள்வதும்,உரையாடுவதுமாகும்.

சவூதியானது அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது. மத்தியகிழக்கின் பல்வேறு இனக்குழுக்களின் துவக்க இடமும் இது தான்.

சவூதியானது நபூத், நஜ்த், ஹிஜாஸ், ரப்-உல்-ஹாலி ஆகிய நான்கு பெரும் பாலைவனங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் நஜ்த் நீங்கலாக மற்ற பகுதிகள் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. நஜ்த் பகுதி தற்போதைய ஆட்சி பரம்பரையான சவூத் குடும்பத்திடம் இருந்தது. இந்த தீபகற்பம் இங்குள்ள இனக்குழுக்களின் வேறுபட்ட வாழ்வனுபவத்திற்கு மூலாதாரமானதாகும். அவர்களின் வாழ்க்கை பாங்கு பாலைவனச்சூழலை எதிரொளிப்பதாக இருந்தது. இவர்கள் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். அப்பகுதியில் கூடாரமிட்டு தங்களுக்குதேவையானவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் ஒட்டக கூட்டங்களோடு நகர்ந்தார்கள். வேறு சிலர் தங்களுக்கு தேவையானவற்றை தேடி பல பகுதிகளுக்கும் நகர்ந்தார்கள். இவர்களுக்கென்று எவ்விதமான இலட்சிய உணர்வு இருக்கவில்லை. இவர்களே பதூயீன்கள். இந்த தீபகற்பத்தில் பேரீத்தப்பழ விவசாயம் பெருமளவில் இருந்தது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள்.

இன்றைய சவூதியானது 1932 ல் அப்துல் அஸீஸ் இப்னு சவூத் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதன் முன்னர் அது ஒருங்கிணைவை அடைந்திருக்கவில்லை. பல்வேறுபட்ட நபர்களின் கட்டுப்பாட்டில்அதுஇருந்தது. நஜ்தை அதிகாரம் செய்த சவூத் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டார். இவரே வஹ்ஹாபிசத்தின் அரசதிகார வடிவம்.
இந்த இடத்தில் பிரிட்டனின் வார்ப்பான அப்துல் வஹ்ஹாபை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. வஹ்ஹாபியத்தின் தந்தையான அப்துல் வஹ்ஹாப் நஜ்த் பாலைவனத்தை அடுத்த உயைனாவில் பிறந்தார். மதகல்வியை முடித்த பிறகு அடுத்துள்ள பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டன் ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது. மத்தியகிழக்கின் பெரும்பகுதி அப்போது துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் இருந்தது. மத்திய கிழக்கை கைப்பற்றுவதற்கான குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதிகளை சொந்தமாக்குவதற்கான கருவியாக பிரிட்டன் இவரை பயன்படுத்திக் கொண்டது. பிரிட்டன் காலனிய அமைச்சக அதிகாரியான ஹெம்பரை இதற்காக களம் இறக்கியது. இந்த பணிக்காக இஸ்லாமிய அடிப்படைகளை கற்றுத்தேர்ந்த ஹெம்பர் அரபி மற்றும் துருக்கி மொழியையும் கற்றார்.
ஆரம்பத்தில் துருக்கி வந்த அவர் அஹ்மத் எபண்டி என்பவரிடம் ஹதீஸ்கள் குறித்து விரிவாகக் கற்றுக் கொண்டார்.பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு அப்துல் வஹ்ஹாபை சந்திக்கிறார். அப்துல் வஹ்ஹாபுடனான சந்திப்பு ஹெம்பருக்கு ஒரு துவக்க புள்ளியாக மாறுகிறது. அப்துல் வஹ்ஹாபுடனான பல்வேறுபட்ட உரையாடல்கள் ஹெம்பருக்கு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவின. இதற்கிடையில் பிரிட்டன் அன்று ரியாத் பகுதியை ஆண்டுவந்த இப்னு சவூதிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிறகு ஹெம்பர் அப்துல் வஹ்ஹாபை இப்னு சவூதிடம் அறிமுகப்படுத்தினார். மூளை+அரசதிகாரம் இரண்டும் சேர்ந்து கொண்டதால் பிரிட்டன் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற தொடங்கியது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன் வைத்தல் என்ற கொள்கையின் படி இப்னு சவூத் பலரை கொன்று குவித்தார். பல்வேறு பட்ட வன்முறைகள் இதன் பேரில் நடந்தேறின. அப்துல் வஹ்ஹாபின் மூளை ஒரு பெரும் முடுக்கியாக இருந்தது.பிரிட்டன் தன் உளவாளியான ஹெம்பர் மூலம் சாதித்த இவ்விஷயங்கள் ஹெம்பரின் டைரிகுறிப்பில் காணகிடைக்கிறது.
இந்த ஆவணம் பிரிட்டனின் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.மேலும் இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.இதை மறுத்து தூய்மைவாதிகள் தரப்பில் பல்வேறு காலகட்டங்களில் மறுப்புகள் வெளியாயின. ஆனால் அவர்களால் அந்த மறுப்புக்கான தெளிவான ஆதாரத்தை தெரிவிக்கமுடியவில்லை.வஹ்ஹாபிசத்தின்
பின்புலம் இது தான்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க பகுதியில் அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதி சவூத் குடும்பத்திடம் இருந்தது. இது துருக்கிய உதுமானிய பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இதனால் அவர்கள் இப்னு ரஷீத் என்பவரை தூண்டி விட்டு சவூத் குடும்பத்தினரிடமிருந்த பகுதிகளை கைப்பற்றினர். இதனால் சவூத் குவைத்திற்கு சென்றார்.பின்னர் சவூதின் மகன் அப்துல் அசீஸ் குவைத்திலிருந்து திரும்பி வந்து 1901 ல் பிரிட்டன் துணையுடன் தன் மூதாதையர் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். பிரிட்டனின் முழு ஆதரவு இருந்ததால் அவரால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடிந்தது.1902ல் மக்கா மற்றும் மதீனாவை கைப்பற்றினார். வஹ்ஹாபிய கருத்தியல்படியான அனைத்துவித அரங்கேற்றங்களையும்அப்துல் அசீஸ் செய்தார். அறிவியல் வளர்ச்சியை அவர் வஹ்ஹாபியஅடிப்படையில் பார்த்தார். தொலைபேசி, ரேடியோ, ஷவர் போன்றவைஇஸ்லாமிய அடிப்படைக்கு விரோதமாக பார்க்கப்பட்டது. பின்னர் அவராலேயே அது ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.(தற்போதையதூய்மைவாதிகளின் லேப்டாப், சி.டி,டி.வி.டி, வீடியோ கான்பரன்ஸ் மாதிரி). அப்துல் அசீஸ் எல்லைகளை விரிவுபடுத்தி ரியாத்தை தன்தலைநகராக மாற்றினார். 1932 ல் அரேபிய தீபகற்பம் முழுவதுமான பகுதி மன்னராட்சி சவூதி அரேபியா என பெயரிடப்பட்டது. முப்பதுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலானது சவூதிய வளர்ச்சியின் பெரும் துவக்கப்புள்ளி. இது சவூதியின் வடிவத்தில் பெரும்மாற்றத்தை கொண்டு வந்தது. சவூதிகளின் வாழ்க்கைத்தரம் இதனால் மாறியது. பெட்ரோ-குழாய்கள் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொண்டன. இரண்டாம் உலகபோரின் மிக முக்கிய இயங்கு சக்தியாக பெட்ரோல் மாறியது.சவூதியின் வடிவமைப்பே பெட்ரோலாக மாறியது.இவருக்கு பிறகு அவருடைய மகனான பைசல் பதவிக்கு வந்தார். பைசலின் ஆட்சிகாலத்தில் சவூதி இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏராளமானோர் வர தொடங்கினர்.(வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் முதன் முதல் வேலைக்காக வரதொடங்கியது சவூதியில் தான்) இவர்களின் உழைப்பு அவர்களின் வாழ்வியக்கமாக இருந்தது. ஐரோப்பிய மூளையும், வளரும் நாடுகளை சேர்ந்தவர்களின் மலின உழைப்புமே இவர்களை இன்றும் ஒட்டகங்களிலிருந்து, பென்ஸ் காருக்கு நகர்த்தி வருகிறது. காரிலிருந்து வரும் புகை எல்லா இடைவெளிகளையும் இட்டு நிரப்பி வருகிறது.

பஹ்ரைனின் வரலாறு காலத்தில் முந்தியதாகும். சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குட்டிதீவுகளை கொண்டிருக்கும் பஹ்ரைன் துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது.சுமேரியர்கள் இதை தில்மன் என அழைத்தனர். இது இஸ்லாமுக்கு முந்தைய வரலாறு உடையது.ஆரம்பத்தில் சுமேரியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்கள் பவள வர்த்தகத்தை பிற நாடுகளுடன் நடத்தி வந்தனர். இஸ்லாமிய வரலாற்று துவக்கத்திற்கு முன்பு வரை இது கிரேக்கர்களால் டைலஸ் என்றழைக்கப்பட்டது. கிரேக்கர்களால் மண்பாண்டங்கள், பல்வேறு வித கைவினை பொருட்கள், இரும்பு கருவிகள் போன்றவை இங்கிருந்து தயார் செய்யப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இயல்பாகவே அமைந்த கடல்வெளி அதற்கு திறவுகோலாக இருந்தது. கி.பி முதலாம் நூற்றாண்டில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் பிரதிநிதியான நெர்சியஸ் இங்கு வருகை தந்தார்.அதன் பிறகு பஹ்ரைன் கிரேக்கர்களுடனான உறவை தொடங்கியது.இவர்கள் அராத், அல்டைர், சமாஹிஜ் போன்ற புதிய கிராமங்களை கண்டடைந்தார்கள்.(இந்த கிராமங்களை ஒட்டியே தற்போது விமான நிலையம் அமைந்துள்ளது).கி.பி நான்காம் நூற்றாண்டில் பஹ்ரைன் சசானிய பேரரசோடு இணைக்கப்பட்டது.சசானியர்கள் இதனை இந்தோ பள்ளத்தாக்கோடு தொடர்பு கொள்ள வைத்தனர்.

வளைகுடா நாடுகளில் சவூதிக்கு அடுத்ததாக இஸ்லாமிய பரவலாக்கம் முதன்முதலாக பஹ்ரைனில் தான் நடைபெற்றது. ஆறாம் நூற்றாண்டில் பஹ்ரைன் மூன்று பகுதிகளாக அறியப்பட்டது. அல் ஹஜ்ர்(சவூதியின் தற்போதைய அல்-அஹ்ஸா)அல்-காத்(சவூதியின் அல்-கதீப்) அவால்(பஹ்ரைன்).அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த இனக்குழு பனி-அப்துல்-கைஸ் என்றழைக்கப்பட்டது. இவர்கள் அவால் என்ற சிறு தெய்வத்தை வழிபட்டனர். இதன் பெயரே இன்று அவால் என அறியப்படுகிறது.இந்ததெய்வத்திற்கான கோயில் இன்றும் பார்பர் என்ற இடத்தில் காணப்படுகிறது.கி.பி ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய பரவலாக்கத்திற்கு பிறகு நபித்தோழரான அல்-ஆலா-அல் ஹத்ராமி என்பவர் பஹ்ரைனை ஆட்சி செய்தார். அவருடைய காலத்திற்கு பிறகு பஹ்ரைன் உமையத் கலிபாவான இரண்டாம் உமரின் கீழ் வந்தது. இவருடைய காலத்தில் தான் முதல் பள்ளிவாசலான அல்கமீஸ் நிர்மாணிக்கப்பட்டது.இன்றும் இதன் உடைந்த வடிவங்களை காணமுடிகிறது.மங்கோலியர்களின் தலைவரான செங்கிஸ்கானின் கட்டுப்பாட்டில் இது சிறிது காலம் இருந்தது.

பின்னர் உமய்யத்களில் கீழ் வந்தது.பல்வேறுபட்ட அரசுகள் பஹ்ரைனை பலவிதத்தில் சுரண்டின. கடைசியாக 1861ல் இது பிரிட்டனின் காலனியாதிக்கத்திற்குள் வந்தது. பிரிட்டன் 1930 களில் இங்கு பெட்ரோலை கண்டெடுத்தது. மத்திய கிழக்கில் முதன்முதலாக பெட்ரோல் கண்டறியப்பட்ட இடமும் இது தான்.பிரிட்டன் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலை வைத்து பல்வேறு விதமான விரிவாக்க பணிகளை செய்தது. மருத்துவமனை ஒன்று அவர்களுக்காக அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாரசீக மரபாக ஈரானிலிருந்து பலர் இங்கு வந்து குடியேற தொடங்கினர். நாளடைவில் அவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 1950களில் பிரிட்டனுக்கு எதிராக பல்வேறு வித கலகங்கள் நடைபெற்றன. பஹ்ரைன் விடுதலைப்படை உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக 1971 ல் பிரிட்டன் வெளியேறியது. ஷேக் ஈசா என்பவர் தலைமையில் மன்னராட்சி ஏற்பட்டது. பஹ்ரைன் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் பிறகு பஹ்ரைன் உலக வரைபடத்தில் இடம் பிடித்தது. துண்டுகளாக சிதறிக்கிடந்த இடங்கள் இணைக்கப்பட்டன.இந்நிலையில் ஈரான் பஹ்ரைனை உரிமை கொண்டாடியது. பின்னர் ஐ.நா முன்னிலையில் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் மக்கள் சுதந்திர நாட்டை விரும்பினர். இதன் பிறகு ஈரான் விலகி கொண்டது.சவூதி அரேபியாவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு எண்பதுகளில் சவூதி-பஹ்ரைன் கடல்வழி பாலம் அமைக்கப்பட்டது. இது உலகில் நீளமான பாலங்களின் பட்டியலில் வரக்கூடியது. தொண்ணூறுகளில் பஹ்ரைன் – கத்தர் மோதல் ஏற்பட்டது. ஹவார் என்ற தீவை உரிமைகொண்டாடியதில் இருவருக்கும் இடையே உராய்வு உண்டானது.இறுதியில் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஹவார் தீவு பஹ்ரைனுக்கு சொந்தமானது. இருநாடுகளிலும் தன் கடற்படை முகாமை அமைத்திருக்கும் அமெரிக்கா இருநாட்டு மோதலில் தன்னை பார்வையாளனாக வடிவமைத்து கொண்டது. தற்போதும் தன் ராணுவ முகாமை இந்நாட்டில் அமைத்திருக்கும் அமெரிக்கா இதனை தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தூய இஸ்லாம் பேசும் சமூகத்தின் சுய-வெளிப்பாடு இதுதான். இதன் மூளையையும் இந்திய(கேரளீய) உழைப்பையும் உள்வாங்கி கொண்டு பஹ்ரைன் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கத்தர் பஹ்ரைன் மாதிரியே பவள வர்த்தகத்தை கொண்டதாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் கத்தர் அல்-தனி குடும்பத்திடம் இருந்தது. இவர்கள் சவூதியின் நஜ்த் பகுதியிலிருந்து கத்தரில் குடியேறியவர்கள்.அப்துல் வஹ்ஹாபை பின்தொடர்ந்தவர்கள். கத்தரில் பவளம், மீன்,மற்றும் மண்பாண்ட வர்த்தகத்தை செய்தனர்.அதே காலத்தில் கத்தரின் வடபகுதி பஹ்ரைன் கலீபாகுடும்பத்திடம் இருந்தது. இறுதியில் பிரிட்டிஷ் தலையீட்டில் பெயரில் கலீபா குடும்பம் வெளியேறியது.இந்நிலையில் 1872 ஆம் ஆண்டு கத்தரின் பெரும்பகுதியை துருக்கி கைப்பற்றியது.இதனால் அல்-தனி குடும்பம் கத்தரை விட்டு குவைத்துக்கு சென்றது. முதல் உலகப்போர் மத்திய கிழக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பல நாடுகள் அதன் சுயத்துவத்தை அடைந்தன. இதன் நீட்சியாக துருக்கி கத்தரை விட்டு வெளியேறியது. கத்தர் மீண்டும் அல்-தனி குடும்பத்தில் கையில் வந்தது. இதன் பிறகு பிரிட்டனுக்கும் கத்தருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் படி அல்-தனி குடும்பத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் ஜாசிம் கத்தர் பிரதமராக பொறுப்பேற்றார்.

பிரிட்டிஷ் அதிகாரத்திலான கத்தரில் ஷேக் அப்துல்லா பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டு வளர்ச்சிக்கான வரைவு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1939 ல் இங்கு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பிறகு கத்தர் பெட்ரோலிய கழகம் உருவாக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பிரிட்டன் கத்தரை லாவகமாக சுரண்டியது. இரண்டாம் உலகப்போர் வரை கத்தரில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இரண்டாம் உலக போர் முடிவடைந்த தருணத்தில் ஐம்பது, அறுபதுகளில் கத்தர் பெட்ரோலை ஏற்றுமதி செய்தது. இதன் விளைவாக கத்தர் துரித வளர்ச்சி நிலையை அடைந்தது. பள்ளிகூடம், மருத்துவமனை போன்றவை உருவாக்கப்பட்டன. இதன் போக்கில்
பிரிட்டன் 1968 ல் தன் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்பது அரபு பகுதிகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் தன்னுரிமை அடையவோ அல்லது ஒன்றாக இணைந்து புதிய அரசை உருவாக்கவோ செய்யலாம் என்றது. ஆனால் அவர்களுக்கிடையேயான மோதலானது பிரிந்து செல்வதையே தேர்ந்தெடுத்தது. இதன் விளைவாக கத்தர் 1971ல் தனி சுதந்திர நாடானது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பெட்ரோலை முன்வைத்து பல தொழில்கள் உருவாக்கப்பட்டன.1974 ல் கத்தர் பெட்ரோலிய கழகம் உருவாக்கப்பட்டது.1980-1990 களில் நடந்த ஈரான் – ஈராக் போரில் கத்தர் ஈராக்கை ஆதரித்தது.இதனால் ஈரானின் வெறுப்பை சம்பாதித்து கொண்டது. பின்னர் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த போது தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டது.பன்னாட்டு படைகளுக்கு முகாமை அமைக்க தன் நாட்டில் இடமளித்தது.தொண்ணூறுகளுக்கு பிறகு கத்தர் அபரிதமான வளர்ச்சி நிலையை அடைந்தது. பெட்ரோலிய விளைபொருட்கள் அதிக அளவில்உற்பத்தியாயின. இயற்கை எரிவாயு அதிக அளவில் தேக்கப்பட்டது. இயற்கை எரிவாயு சேமிப்பில் கத்தர் உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்குள்ளவர்களில் பெரும்பான்மையினர் சவூதியின் நஜ்த் பகுதியில் இருந்து வந்தவர்கள். சவூதிகளை போலவே கலாசார ஒருமை காணப்படுகிறது. பெரும்பான்மையினோர் வஹ்ஹாபிசத்தை பின்பற்றுகிறார்கள். 2003 -ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது அமெரிக்கா படைகளின் முகாமாக கத்தர் விளங்கியது. 2001 உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தியதன் மூலம் உலகமயமாக்கலோடு தன்னை ஒன்றிணைத்துக் கொண்டது. சவூதி, பஹ்ரைன் வரிசையில் கத்தர் அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இருக்கிறது.

ஐக்கிய அரபு குடியரசானது துபாய், ஷார்ஜா, அபுதாபி, ராசல் கய்மா, புஜைரா, உம்முல்-குவைன், அஜ்மன் ஆகிய ஏழு அமீரகங்களை கொண்டதாகும். ஒவ்வொன்றும் தன்னாட்சி அமைப்பை பெற்றுள்ளது. இவை அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் உடன்படிக்கை மாகாணங்கள் என்றழைக்கப்பட்டன.

இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் அறிமுகமாகிறது. அதற்கு முன்பு சுமேரிய, பாபிலோனிய கலாசாரத்துடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் எமிரேட்டின் கடற்கரைகள் கொள்ளைக்கும், கடத்தலுக்கும் பெயர்பெற்றிருந்தன. அதன் காரணமாக இவை கொள்ளை கடற்கரை என அழைக்கப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதன் கடற்கரை கட்டுப்பாடு முழுவதும் பிரிட்டன் வசம் வந்தது. பிரிட்டானிய ரோந்து கப்பல்கள் இங்கு வலம் வந்தன. இதன் எல்லா பகுதிகளையும் உயர்குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களோடு பிரிட்டன் 1835ல் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதன்படி இதன் கடற்பகுதி முழுவதும் பிரிட்டனுக்கு சொந்தம். மேலும் நிலப்பகுதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பிரிட்டன் மேற்கொள்ளும். இதன் பிறகு எமிரேட்டின் முழுப்பகுதியுமே பிரிட்டன் வசம் வந்தது. 1968 ல் பிரிட்டன் எமிரேட்டை ஒன்றிணைப்பது குறித்து ஷேக்குகளிடம் கலந்தாலோசித்தது. அவர்கள் தங்களுக்குள் கூடி ஒருங்கிணைவது குறித்து சிந்தித்தனர். பின்னர் ராசல் கய்மா தவிர மற்ற ஆறுமாகாணங்களும் ஐக்கிய அரபு குடியரசாக இணைந்தன.அதே ஆண்டில் பிரிட்டன் விலகி கொண்டது.முதலில் கத்தர், பஹ்ரைன் ஆகியவையும் ஐக்கிய அரபின் கீழ் தான் இருந்தன.பின்னர் 1971 ல் தனித்தனியாக விலகி கொண்டன. 1973ல் ராசல் கய்மா தன்னை எமிரேட்டோடு இணைத்து கொண்டது. அபுதாபியை தலைநகராக கொண்ட எமிரேட் உலகை நோக்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

மத்திய கிழக்கின் வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கியஅரபானது மேற்கு நாடுகளை ஒத்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நீல வானிற்கு மிக அருகில் சமீபித்திருக்கும் கட்டிடங்கள் நிலத்தை பிரதிபலிப்பு செய்கின்றன. பன்னாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கு தங்கள் ஸ்தாபனங்களை நிறுவியுள்ளன. ஜெபல் அலியை தலைமை இடமாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன.எமிரேட் மத்திய கிழக்கிலேயே அதிகஅளவில்வெளிநாட்டினரை கொண்டுள்ளது. இது உள்நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். அறுபதுகளில் ஈரானியர்கள் அதிக அளவில் வந்து குடியேற தொடங்கினர்.பாதுகாப்பற்ற எமிரேட்டின் எல்லைபகுதியே அதற்கு காரணம். பிறநாட்டு மக்கள் தொகையில் இந்தியர்கள் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். எமிரேட்டை மற்ற நாட்டினர் united kerala என்றழைக்கிறார்கள். 1957 ல் அங்கு நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியின் விளைவு இது. கட்டுமான துறையில் அதிகம் வெளிநாட்டினர் பணிபுரியும் நாடு இது தான். புஜைராவின் மலைமுகடுகளில் உடைக்கப்படும் பாறைத்துகள்களானது சிவப்பு வரிகளால் தன்னை எழுதிச்செல்கிறது.

எமிரேட்டியர்களின் கலாசார நடைமுறை வித்தியாசமானதாக தெரிகிறது. இவர்கள் பதூயீன் நாட்டார் இசையை பின் தொடர்கிறார்கள். கையில் குச்சியை வைத்துக்கொண்டு ஆடும் நடனமானது எமிரேட்டின் கடைத்திருவிழாக்களின் சிறப்பம்சம். வளைகுடாவின் முதல் பெண்பாப் பாடகரான அஹ்லம் எமிரேட்டியர் தான். மத்திய கிழக்கின் வர்த்தக தலைநகரமாக எமிரேட் வளர்ச்சியடைந்தபோதும் சவூதி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடனான எல்லை பிரச்சினை அதற்கு இடையூறாக உள்ளது. ஈரான் – ஈராக் போரின் போது எமிரேட் ஈராக்கிற்கு ஆதரவு அளித்தது. அதே நேரத்தில் ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கெதிராக எதிர் நிலைபாட்டை மேற்கொண்டது. சில நேரங்களில் மிகை பெட்ரோல் உற்பத்தியால் ஈராக்கின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. உலகில் அதிக அளவு தனி நபர் வருமான வீதத்தை கொண்டிருக்கும் எமிரேட் ஒரு மரத்தின் உதிர்ந்த இலையாக நகர்ந்து வருகிறது.

ஓமன் திறந்த, அலைவடிவ மலைப்பிரதேசங்களையும், குன்றுகளிலான பாலைவனத்தையும் கொண்டது. இது வரலாற்றின் போக்கில் நெடியது. இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் பரவல் பெற தொடங்கியது. தொல்லியல் ஆய்வுகள் ஓமன் 5000 ஆண்டுகள் முந்திய வரலாறு கொண்டதாக தெரிவிக்கின்றன. சுமேரியர்கள் இதனை தாமிர நாடு என்றழைத்தனர். தாமிர தொழில் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கிறது. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள் இதை உறுதிச் செய்கின்றன. நபித் தோழரான அம்ரு பின் ஆஸ் கி.பி 630ல் அன்றைய ஓமனின் மன்னர்களான அப்த் மற்றும் ஜாபர் ஆகியோரிடம் சென்று நபியின் செய்தியை தெரிவிக்கிறார். இதன் பிறகு அவர்கள் இஸ்லாமை தழுவுகிறார்கள்.

ஓமன் மேற்கே யமன் மற்றும் சவூதியையும் வடக்கே எமிரேட்டையும் எல்லையாக கொண்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை கிழக்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள் ஓமனின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் பிறகு அதனிடமிருந்து விடுவிக்கப்பட்டன.ஒமனானது 1508 முதல் 1659 வரை போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அஹ்மத் இப்னு செய்த் அல் யரூபி என்பவரால் உதுமானிய பேரரசு அகற்றப்பட்டது. இவரே ஓமனின் முதல் சுல்தான். யரூபிய வம்சம் ஓமன் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இவர்கள் ஓமன், சான்சிபார், மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளை வைத்திருந்தார்கள். ஓமானிய கடற்பகுதி பாரசீகத்திலிருந்து வடக்காகவும், இந்திய பகுதியிலிருந்து கிழக்காகவும், ஆப்பிக்காவிலிருந்து தெற்காகவும் சுற்றி அமைந்திருக்கிறது.இதன்வழி மற்ற வளைகுடா நாடுகளை விட ஒமன் கடல் வர்த்தகத்திற்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. ஓமானியர்களில் பெரும்பகுதியினர் குடியேற்றக்காரர்களே. ஒருபகுதியினர் யமனிலிருந்தும் மற்றவர்கள் வட அரேபியாவிலிருந்தும் இங்கு வந்து குடியேறிவர்கள். ஓமன் உலகில் அதிக அளவு இபாதி முஸ்லிம் பிரிவினரை கொண்ட நாடாகும். இங்குள்ள அரபு முஸ்லிம்களில் 70% இவர்கள் தான். இபாதி முஸ்லிம் பிரிவானது ஹாரிஜாக்களின் மித வடிவமாகும். கலீபாவான உதுமான் கி.பி 656 ல் அவருடைய எதிரிகளால் கொல்லப்படுகிறார். இது அவரின் ஆதரவாளர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பின் வந்த கலீபாவான அலியிடம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர். உதுமானின் உறவினரும் சிரியாவின் கவர்னருமான முஆவியா-இப்னு அபு சுப்யான் என்பவர் இதை வலியுறுத்தி வட ஈராக் பகுதியான் சிபின் என்ற இடத்தில் வைத்து அலியுடன் போர் புரிந்தார். இதன் விளைவில் அலிக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமரசம் ஆனது. இதன் படி உதுமான் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அலியின் இந்த முடிவு அவரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அலி ஒரு பாவிக்கு துணைபோய் விட்டார் என்றனர். பின்னர் அவரிடமிருந்து விலகி தனியாக செயல்பட்டனர். இவர்களே ஹாரிஜாக்கள். அலி நஹ்ரவான் என்ற இடத்தில் வைத்து இவர்களை தோற்கடித்தார். இவர்களுடன் பதூயீன்கள், மற்றும் மவாலிகள் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். இவர்கள் பரம்பரை ஆட்சிமுறையை எதிர்த்தனர். மாறாக இமாம்கள் மற்றும் கலீபாக்கள் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றனர். இவர்கள் குர் ஆன் வழி ஆட்சி முறையை முன்வைத்தனர். பாவச்செயல் என்பது எல்லோருக்கும் பொதுவானதாகும். இதில் கலீபா அல்லது சாதாரண மனிதர் என்ற வேறுபாடு இல்லை. கலீபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி சரியானது. ஆனால் அவர்களின் போக்கு தான் திசைமாறியது என்றனர். இதை ஏற்காத தங்களை தவிர்த்த பிற முஸ்லிம்கள் அனைவரும் காபிர்களே. அவர்களுக்கு எதிராக போரிடுவதை கடமையாக கருதினர். இவர்களின் விரிவாக்கம் ஈரான், ஈராக் , ஓமன், வட ஆப்ரிக்க பகுதிகள் போன்றவற்றிற்கும் நீண்டது. பின்னர் அப்பாஸிட், உமய்யத் கலிபாக்களால் படிப்படியாக ஒடுக்கப்பட்டனர். கி.பி 680ல் ஹாரிஜாக்களில் தீவிர கூட்டத்தினர் பஸ்ராவிலிருந்து வெளியேறினர்.இதில் சில பேர் மிதவாதிகளாக இருந்தனர். அவர்களில் ஒருவரான அப்துல்லா இப்னு இபாத் என்பவர் மிதவாத ஹாரிஜா பிரிவான இபாதி பிரிவை தொடங்கினார். இவரை பின்தொடர்ந்தவர்கள் தான் இபாதி முஸ்லிம்கள். ஓமனின் பெரும்பகுதி இருக்கும் இவர்கள் மற்ற முஸ்லிம் பிரிவோடு இணக்கமாக செல்லும் கருத்தியல் நடைமுறையை வைத்திருக்கின்றனர். இவர்களின் இமாம் என்பவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கென வழிகாட்டு குழு ஒன்று உள்ளது. இவர்கள் அடிமையாக இருந்தாலும் அவர்களால் இமாமாக முடியும் என்ற கொள்கையை கொண்டுள்ளனர். பாவச்செயல்கள் எல்லா மனிதர்களுக்கும் சமமானவை. யாரேனும் பாவச்செயல்கள் புரிந்தால் அவர்கள் நிராகரிப்பவர்களின் பட்டியலில் வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் முறைப்படி இஸ்லாத்திற்கு வர வேண்டும் என்றனர். இவர்களின் மற்ற பகுதியினர் வட ஆப்ரிக்காவின் சான்சிபரிலும், ஜெரூபா தீவிலும் வசிக்கின்றனர்.

ஓமனின் சுல்தான் உள்நாட்டு இபாதி முஸ்லிகளின் கலகத்தை எதிர்கொள்ள 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் துணையை தேடினார். இதனை தொடர்ந்து பிரிட்டன் அதைபடிப்படியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கிடையில் இடதுசாரி சார்புடைய ஓமன் மக்கள் விடுதலை முண்ணனி அமைக்கப்பட்டது. இவர்கள் ஓமனின் விடுதலைக்காக நாற்பதுகளில் கலகத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரிட்டன் துணையுடன் அந்த கலகம் முறியடிக்கப்பட்டது. இதன் பின்னர் அறுபதுகளில் ஐ.நா சபை தீர்மானத்தின் படி பிரிட்டன் முழுமையாக வெளியேறியது. 1964 ல் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலானது ஓமனின் வளர்ச்சிக்கான துவக்கபுள்ளி. மூன்றாண்டுகளில் ஓமன் பெட்ரோலை ஏற்றுமதி செய்ய தொடங்கியது. உள்கட்டமைப்பு வசதிக்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நூற்றாண்டின் இறுதியில் ஓமன் மில்லியன் பேரல்களை ஒரு நாளில் உற்பத்தி செய்வதற்கான இலக்கை எட்டியது.இயற்கை எரிவாயுவையும் குறிப்பிட்ட அளவில் சேமித்து வைத்திருக்கிறது. 1990 ல் ஓமன் குவைத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. பன்னாட்டு படைகளுக்கான தளத்தை தன் நாட்டில் அமைத்துக் கொடுத்தது. ஓமானியர்களின் கலாசாரம் மற்ற வளைகுடா நாடுகளை விட வித்தியாசமாக இருக்கிறது. இவர்கள் மற்றவர்களை போன்ற தலைவட்டுகளை அணியாமல் தொப்பியை அணிகின்றனர். 1970 ல் சுல்தான் செய்த் அவருடைய மகனால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அவருக்கு பின் வந்த அஹ்மத் ஹப்பாஸ் மற்ற இனக்குழுக்கள் மீது அரசு அடக்குமுறையை பயன்படுத்தினார். இவருடைய காலம் தான் உள்நாட்டு புரட்சியின் உச்சநிலை. இபாதி முஸ்லிம்பிரிவினரின் எதிர்செயல்பாடுகளோடு ஓமன் தன்னை முன்னகர்த்தி செல்கிறது.

குவைத் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் வரலாறை துவக்கி வைத்து விட்டு செல்கிறது. கிரேக்கர்கள் இங்குள்ள தீவுகளில் குடியேற தொடங்குகிறார்கள். இவர்கள் இகாரஸ் என்றழைக்கப்பட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நஜ்த் பகுதியிலிருந்து இனக்குழுக்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்குகின்றன. இவர்கள் பின்னாளில் தங்களுக்குள் ஒன்றிணைந்து கொண்டர். இவர்கள் பனூஉத்ப் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கென பாதுகாப்பு அரணை கட்டினர். இது குத் என்றழைக்கப்பட்டது. இதுவே குவைத் ஆனது. பவள வர்த்தகம் இவர்களிடையே முக்கிய தொழிலானது. இதனடிப்படையில் இனக்குழுவானது அல்-சபா, அல்-கலீபா, அல்- ஜலகியா என்ற மூன்று பிரிவாக பிரிந்தது. இவர்களில் அ-சபா கூட்டத்தினர் குவைத்தின் ஆளும் வர்க்கத்தினராயினர். 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சபா இனக்குழுவை சேர்ந்தஅப்துல்லா அல் சபா என்பவர் குவைத்தின் முதல் மன்னரானார். இதற்கிடையே மற்ற இரண்டு இனக்குழுக்களும் அதிகாரத்திற்கான போரில் இறங்கின. இதற்கிடையில் உதுமானிய பேரரசின் அச்சுறுத்தலும் இருந்தது. இதில் இருந்து தப்பிக்க மன்னர் பிரிட்டனின் துணையை நாடினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டன் அந்நாட்டில் தன் படைக்களத்தை அமைத்தது. பின்னர் உதுமானிய பேரரசுக்கும் பிரிட்டானிய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விளைவாக உதுமானிய பேரரசு தோற்கடிக்கப்பட்டது. குவைத் பிரிட்டனின் காலனி ஆனது. அல்-சபா வம்சம் பிரிட்டனின் பினாமியாக மாறியது. இதன் பின்னர் குவைத் உட்கட்டமைப்பு வசதிக்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

1938 இல் குவைத் கம்பெனி பிரிட்டன் துணையுடன் பெட்ரோலை கண்டெடுத்தது. மற்ற நாடுகளை போலவே இது ஒரு துவக்க புள்ளி. ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு தான் குவைத்தால் பெட்ரோலை ஏற்றுமதி செய்ய முடிந்தது. 1961 பிரிட்டன் படைகள் குவைத்தை விட்டு வெளியேறின. இந்நிலையில் ஈராக் அதே ஆண்டில் குவைத்தை உரிமை கோரியது. இதனால் குவைத் மீண்டும் பிரிட்டனின் உதவியை நாடியது. பின்னர் ஈராக் அதை கைவிட்டது. முடிவாக குவைத் சுதந்திர நாடானது. ஷேக்அப்துல்லா சலீம் அல்-சபா அதன் மன்னரானார்.1963 ல் குவைத் ஐக்கியநாடுகள் சபையின் உறுப்பினரானது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (Organisation of petroleum exporting countries) உருவாக மிக முக்கிய காரணியாக விளங்கியது. பெருகிய பெட்ரோல் வருவாயை வைத்து மற்ற அரபு நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்தது. எழுபதுகளில் நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது குவைத்திய படைகள் எகிப்தின் சூயஸ் கால்வாயில் முகாமிட்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 1965 ல் குவைத் சோவியத் ரஷ்யாவுடன் உறவை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் முதன் முதலாக சோவியத் ரஷ்யாவுடன் உறவை ஏற்படுத்தியது குவைத் தான். இது மற்ற நாடுகளுக்கு அதன் மீதான மனஸ்தாபத்தை உருவாக்கியது. ஈரான் -ஈராக் போரில் குவைத் ஈராக்கிற்கு ஆதரவளித்தது. இதனால் ஈரானிய படைகள் குவைத் எண்ணெய் கிணறுகளை தீப்பற்றி எரியச் செய்தன. ஆனால் அப்போர் முடிந்த பிறகு குவைத்தின் எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. இதனை சரிசெய்ய எண்ணெய் கிணறுகளை புணரமைக்கும் பணியில் குவைத் ஈடுபட்டது. இதன் விளைவாக எண்ணெய் உற்பத்தி அதன் இலக்கை எட்டியது. இதனால் குவைத்தின் எண்ணெய் சர்வதேச சந்தையில் போட்டிக்கான இடத்தை அடைந்தது. எண்ணெய் விலை பாதியாக குறைந்தது. இது ஈராக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
(இதன் பின்புலத்தில் அமெரிக்காவின் தகிடுத்தனத்தையும் நாம் காண வேண்டியதிருக்கிறது). ஏற்கனவே இருந்து வந்த எல்லை பிரச்சினை, எண்ணெய் பிரச்சினை ஆகியவற்றை காரணிகளாக எடுத்துக்கொண்டு ஈராக் 1990 ல் குவைத் மீது படையெடுத்து அதனை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா தலைமையில் 28 நாடுகள் அடங்கிய பன்னாட்டு படையானது ஈராக் மீது போர்தொடுத்து குவைத்தை மீட்டு கொடுத்தது.
இந்த போரில் ஈராக் குவைத்தின் பெரிய எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்தது. இது குவைத்திற்கு பெரும் பொருளாத சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குவைத் மறுகட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. எதிர்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன. இருந்தும் சபா பரம்பரையே ஆட்சியில் தொடர்ந்தது. இதற்கிடையில் குவைத் மன்னர் ஜாபர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் பொருட்டு 1999 ஆம் ஆண்டு “பெண்கள் வாக்குரிமை மசோதாவை கொண்டு வந்தார். வளைகுடா நாடுகளில் ஒருசில மட்டுமே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்திருக்கின்றன. இந்த மசோதா பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் பெண்ணியவாதிகளின் தொடர்போராட்டங்களுக்கு பிறகு 2005 மே மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு குவைத்தின் வளர்ச்சி நிலையில் சிறிது தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.தேங்கி நிற்கும் உள்முரண்பாடுகளோடு ஒரு பெட்ரோல் குழாயின் நேர்கோட்டில் குவைத் நகர்ந்து வருகிறது.

மேற்கின் பார்வையில் பாரசீக வளைகுடா தண்ணீருக்குள் இருக்கும் உள்ளங்கையாக பிரதிபலிக்கிறது. வளைகுடா நாடுகளின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை நாம் நோக்கும் போது அது முழுவதும் பிரிட்டானிய வளைகுடாவே. இஸ்லாமிய உலகின் பெரும் சவாலாகவும், எதிரோட்டமாகவும் இருந்து வரும் வஹ்ஹாபிசத்தின் பிறப்பிடமும் இது தான். பிரிட்டன் அப்துல் வஹ்ஹாப் மூலம் லாவகமாக சாதித்த இவ்விசயங்கள் வரலாற்றின் தேய்ந்த பக்கங்களாகவே இருக்கின்றன.இங்குள்ள அரபு இனத்தவர்களுக்கு தாங்கள் இறைவனுக்கு நாடி நரம்பை விட சமீபமாக இருப்பவர்கள் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த அரபுகளின் செயல்பாடும் இதை பிரதிபலிப்பதாகவே உள்ளது.வளைகுடாவின் பெட்ரோல் மூளையும் பிரிட்டனே. “எமக்கு ஒரு துளி பெட்ரோலானது ஒரு சொட்டு இரத்தத்திற்கு சமமாகும்” 1918 ல் முதல் உலகபோர் முடிவில் பிரஞ்சு பிரதமர் சொன்ன வார்த்தைகள் இவை. ” ஒரு தேசிய இன அங்கீகாரம் என்பது பெட்ரோலிய வளத்தை வைத்தே உலகில் செல்லுபடியாகும்” என்றார் அமெரிக்க ஜனாதிபதி வில்சன். வியட்நாம் போரில் அமெரிக்காவின் தோல்விக்கு எண்ணெயும் ஒரு காரணமாகும் என்பதை பிந்தைய நாட்களில் போரியல் நிபுணர்கள் வெளிப்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் பெட்ரோலானது மிக முக்கிய இயங்கு காரணியாக விளங்கியது. வளைகுடா மீதான மேற்கின் கண்காணிப்பிற்கான காரணம் இது தான். ‘வளைகுடா’ என்ற சொல்லே 1991- ஈராக் மீதான பன்னாட்டு படை போரின் போது தான் உலகில் முதன் முதலாக குவியமானது. மேற்கின் மூளையை அடிப்படையாக கொண்ட imitation ஆக இருந்து வரும் வளைகுடா நாடுகள் வளரும் நாடுகளின் மனித உழைப்பை உள்வாங்கி கொண்டு நதியின் சலனமாக நகர்ந்து வருகின்றன. எட்வர்ட் செய்த் பின்வருமாறு குறிப்பிட்டது வளைகுடாவிற்கு சரியாகவே பொருந்துகிறது ” மேற்கில் நீங்கள் ஒருவரை கிண்டலடிக்கவேண்டுமென்றால் அவரை கிழக்கத்தியவாதி (Orientalist) என்று அழையுங்கள்”

peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது