சிறுகதை எழுதப் போய் ..

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

அப்துல் கையூம்


நாகூர் ரூமியின் கட்டுரையை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. “ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு.

எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை. ஆனால் எப்படி தொடங்குவது?, எப்படி தொடர்வது? எப்படி முடிப்பது? ஒன்றுமே புலப்படவில்லை.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி’ என்பார்களே அதுபோல இந்தக் கட்டுரை தற்செயலாக என் கண்ணில் பட்டது. அதிலிருந்த கருத்துக்கள் வேறு என் ஆர்வத்தை அல்வாவை கிண்டுவதுபோல் கிண்டி விட்டிருந்தது.

முதலில் எதையாவது எழுதிப் பழக வேண்டுமாம். அன்றாடம் ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று முடிவெடுத்து பெர்னார்ட்ஷா எழுதினானாம். எழுதி எழுதிப் பழகினால் பெரிய எழுத்தாளன் ஆகலாம் என்பதை நாகூர் ரூமியின் எழுத்திலிருந்து தோராயமாக புரிந்துக் கொண்டேன்.

என் நண்பர் பாண்டி நாராயணன், தினமும் ஐந்து பக்கங்கள் ராம ஜெயம் எழுதுவார். “இப்போது ராமர் பாலம் தொடர்பாக எங்கு பார்த்தாலும் ஒரே பிரச்சினையாக இருக்கிறது, நீங்களும் உங்களுடைய கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதுங்களேன்” என்று சொன்னதற்கு கிடந்து பேய் முழி முழிக்கிறார்.

நான் பள்ளியில் படிக்கும்போது சில சமயம் வீட்டுப்பாடம் எழுதாமலிருந்து ஐந்து பக்கங்கள்வரை ‘இம்போஸிஷன்’ தண்டனை பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் இப்போது கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது

எழுதுவதற்கு நேரம் இரவுதான் உகந்ததாம். அமைதி, தொந்தரவின்மை, நிசப்தம் இவையெல்லாம் தங்குதடையின்றி எழுத அவருக்கு உதவியதாம். இரவு எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருந்து விட்டு வீட்டில் கணினியின் முன் கம்பீரமாக அமர்ந்தேன்.

ஏதோ ஒரு வீரச்செயலை செய்யத் துணிந்து விட்ட தைரியம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் “உனக்கு இது வேண்டாத வேளை” என்று எதிரணியில் அமர்ந்து மனசாட்சி கூச்சல் குழப்பம் செய்துக் கொண்டிருந்தது. ‘வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டோமோ’ என்ற சந்தேகம் பிறந்து விட்டது.

உட்காரும்போதே தூக்கம் கண்ணை சொக்கியது. “தூங்காதே தம்பி தூங்காதே” என்று மனதுக்குள் பாடிக்கொண்டே என்னை நானே தூண்டி விட்டுக் கொண்டேன். இந்த விஷயத்தில் தூண்டுதல் மிகவும் முக்கியமாம். அதுவும் அதில் எழுதியிருந்தது.

நம்மை யாரும் எழுதுவதற்கு தூண்டப் போவதில்லை. அது மட்டும் நிச்சயமாக எனக்கு தெரிந்திருந்தது. காரணம், அந்த அளவுக்கு எனக்கு வேண்டப்பட்டவர்களை பேசியே சாகடித்திருக்கிறேன். உண்மை இப்படியிருக்க யாராவது துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா?

“எதைப்பற்றி எழுதுவது? எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அதில் ஒரு வரி வரும். அது என்னை என்னவோ செய்யும். உடனே ஒரு கதை. ரோட்டில் ஒரு நாய் போகும். அல்லது எதிர்வீட்டில் உள்ளவன் தன் வீட்டுக்குள் கேட்காமல் புகுந்த ஆட்டை கட்டிப்போட்டு கதறக்கதற அடிப்பான். அதைப் பார்க்கவோ அதற்காக பரிந்து பேசவோ நேரிடும். அது என்னவோ செய்யும்.” என்றெல்லாம் பயங்கரமான டிப்ஸை நாகூர் ரூமி வாரி வாரி வழங்கியிருந்தார்.

அடேங்கப்பா… கதைக் கருவை வரவழைப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு வழி இருப்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன்.

வீட்டுக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றேன். மணி பன்னிரண்டு ஆகியிருந்தது. கும்மிருட்டு. நம்முடைய நேரத்துக்கு ஒரு நாயையும் தெருவில் காணவில்லை. “நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கு.

அட.. அது போகட்டும். அடுத்த வீட்டில் யாராவது ஒருத்தன் ஒரு ஆட்டையாவது கட்டிப்போட்டு கதற கதற அடிப்பான் என்று பார்த்தால் அதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.

தெருவெங்கும் ஒரே நிசப்தம். யாருடைய வீட்டிலும் விளக்கு எரியவில்லை. நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். உம்…கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு என்னைப் போல் சிறுகதை எழுதுகின்ற தலையாய பிரச்சினை எதுவும் இல்லை போலும்.

எனக்கு நாகூர் ரூமியின் மீதுதான் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்” என்பார்களே, மனுஷன் அதுபோல ‘அக்கடா’ன்னு கிடந்த என்னை உலுக்கி உசுப்பி விட்டு விட்டார்.

தெருவே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. நடுநிசியில் எதிர்வீட்டு ஜன்னலையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். என் கதைக் கருவுக்கு தீனி கிடைப்பதற்கான வழியையே காணோம்.

அக்கம் பக்கத்து வீட்டில் யாராவது அவர்களுடைய மனைவியை போட்டு இரண்டு சாத்து சாத்துனாலாவது “அவன்.. அவள்..அது..” என்ற தலைப்பில் சுவராஸ்யமான கதை ஒன்றை இந்நேரம் தொடங்கி இருப்பேன்.

போதாத குறைக்கு எதிரே இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வாட்ச்மேன் கண்ணில் வேறு பட்டுவிட்டேன். என்னை ஒரு மாதிரியான சந்தேகப் பார்வை பார்த்தான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது.

எதிர் வீட்டில் ஒரு அழகான மாமி வேறு குடியிருந்தார். என்ன நினைத்தானோ பாவி தெரியவில்லை. நம்மை ஒரு ஜொள்ளுப் பார்ட்டியாக முடிவு பண்ணியிருப்பானோ? பயந்துப்போய் என் வீட்டில் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டேன்.

நாளையிலிருந்து என்னைக் கண்டால் சலாம் போடுவனோ என்னவோ அதுவும் தெரியாது.

ஆசை தீர நாகூர் ரூமியை ஒருமுறை மனதார திட்டித் தீர்த்துக் கொண்டேன். எல்லாம் இந்த மனுஷனால் வந்த வினை. இப்படி எதையாவது எழுதி விட்டு என்னைப் போன்ற அப்பாவிகளை மாட்டி விடுவதுதான் இவர்கள் வேளை.

மணி ஒன்றாகி விட்டது. தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தையின் அலறல் வேறு பயமுறுத்திக்கொண்டிருந்தது. கணினியில் வெற்றுப் பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டு, வெறித்து பார்த்தவாறு புரோட்டா மாவை பிசைவதுபோல் மூளையைப் போட்டு நன்றாக பிசைந்துக் கொண்டேன். கருக்கலைப்புதான் நடந்ததேயொழிய புதிய கரு எதுவுமே உதிக்கவில்லை.

அரும்பு மீசை முளைத்த பருவத்தில் தட்டச்சு கற்றுக் கொண்டது உதவியாக இருந்தது. அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை ‘நர்ஸரி’ என்று சூசகமாகச் சொல்லுவோம். காரணம் அதை நடத்திக் கொண்டிருந்தவர்களுடைய பெயர்கள் முறையே பேபி. குழந்தை, பாப்பா என்பதாவது. அங்கு பயில வந்த இளவட்டங்கள் பெரும்பாலும் ‘சைட்’ அடிப்பதற்காகவே வந்தனர் என்பது வேறு விஷயம்.

asdfg.. asdfg.. என்று அடித்துப் பழகி ஓரளவு வேகமாக அடிக்குமளவுக்கு தட்டச்சு பயிற்சி வளர்ந்திருந்தது. என்ன பிரயோஜனம்? என்ன எழுதுவது என்று தெரியவில்லையே? சட்டியில் இருந்த்தால்தானே அகப்பையில் வரும்?

சாட்டை, சேணம் எல்லாம் வாங்கியாகி விட்டது. கடிவாளமும் தயார். குதிரைதான் இன்னும் வாங்கவில்லை. யோசித்து யோசித்துப் பார்த்து மணி இரண்டாகி விட்டது. தூக்கம் வராமலிருப்பதற்காக ஒரு வெற்றிடக் குடுவையில் (Flask) தேனீரை நிரப்பி வைத்து வயிற்றில் அடிக்கடி எரிப்பொருள் நிரப்பிக் கொண்டேன்.

எனக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருவர் மல்லிகா பத்ரிநாத்துடைய சமையல் குறிப்பு அடங்கிய புத்தகத்தை அடுப்பங்கறையில் ஒளித்து வைத்துக் கொண்டு பரிட்சைக்கு ‘பிட்’ அடிப்பதைப் போல் பார்த்துப் பார்த்து சமையல் செய்வார். (பாவம் அவர் கணவர்!)

என் நிலைமையும் அப்படி ஆகி விட்டது. நாகூர் ரூமியுடைய புத்திமதிகளை நகல் எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த குறிப்புகளை அடிக்கடி ஓரக்கண்ணால் ஒத்துப் பார்த்த வண்ணம் எழுத உட்கார்ந்தேன். கற்பனைக் குதிரை கிளம்ப அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

ஆழம் பார்க்காமல் காலை விட்டது என் தவறுதான். இதற்காக வேலைமெனக் கெட்டு “ஈ-கலப்பையை” வேறு பளுக்குறை (Download) செய்து வைத்திருந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் யாராவதுதான் இதனை கண்டுபிடித்திருக்கவேண்டும்.

இங்கிருந்தபடி கலப்பையை இவர்கள் பிடித்திருந்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கலாமோ? வெளிநாட்டில் இருந்துக் கொண்டு இப்போது ஈ-கலப்பையால் இணையதளத்தை உழுதுக் கொண்டிருக்கிறார்களே? அதனாலென்ன? இவர்கள் சர்வதேச அளவில் புரட்சியை செய்துக் கொண்டிருக்கிறார்களே என்று பெருமை அடைந்துக் கொள்ளலாம்.

கணினியில் திறந்து வைத்த வெற்றுப் பக்கம் தன் கன்னித்தன்மையை இழக்கா வண்ணம் இன்னும் கைப்படாத ரோஜாவாகவே இருந்தது. தூக்கத்தை விரட்டியடிக்க மீண்டும் ஒருமுறை தேனீர் அருந்திக் கொண்டேன். மணியைப் பார்த்தேன். நான்கு ஆகி இருந்தது. சிறுகதை என்னிடமிருந்து பிறப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.

நாகூர் ரூமி அடியில் எழுதியிருந்த ஒரு கருத்து எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. என் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழியையும் காண்பித்தது.

“ஒரு சிறுகதைக்கு முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமாம். இன்னும் முடியவில்லை என்று தோன்றுகிற மாதிரிகூட ஒரு முடிவு அமையலாமாம்.”

ஆஹா,, அற்புதமான ஒரு ஐடியா என் மண்டையிலிருந்து பிரகாசமாக உதித்தது. சிறுகதைதானே பிறக்கவில்லை. அதனாலென்ன? இந்த இரவு நேரத்தில் இவ்வளவு நேரம் நான் பட்ட அவஸ்தையை அப்படியே வடித்தேன். இதுவும் பிரசுரிக்கத்தக்க ஒரு படைப்பாக அல்லவா மாறி விட்டது? இன்னும் முடியவில்லை என்ற மாதிரியே இருந்தது. அதுதானே தேவை.

கடைசியாக நாகூர் ரூமி சொல்லியிருந்தது இதுதான் :- “சொல்லவரும் விஷயத்தை முடிக்கும் இடத்தில் எழுத்தாளன் இருக்க வேண்டுமாம்”. நன்றாக அதனை புரிந்துக் கொண்டேன். முடிக்கும் தறுவாயில் மறக்காமல் என் பெயரையும், மின்னஞ்சல் முகவரியையும் முறையே எழுதி விட்டேன்.

அப்துல் கையூம்


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்