சின்னக் கருப்பனுக்கு நன்றி!

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

இப்னு பஷீர்


சென்ற வார ‘திண்ணை’யில் திரு. சின்னக் கருப்பன் எழுதிய கட்டுரை, நடுநிலைக் கண்ணோட்டத்தில் நல்லதொரு அலசலாக அமைந்திருந்தது.

இந்திய முஸ்லிம்கள் லெபனான் மக்களுக்காக அனுதாபப்படுவது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமல்ல. மதங்களைத் தாண்டிய மனிதாபிமானம் அது. இன்னும் சொல்லப்போனால், இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சுன்னி முஸ்லிம்கள். லெபனான் (குறிப்பாக ஹிஸ்புல்லா இயக்கம்) பெருமளவில் ஷியா முஸ்லிம்களை கொண்டது. இந்த வேற்றுமைகளை மறக்கடித்து துயருறும் அம்மக்களுக்காக உதவி எதையும் செய்ய முடியாவிட்டாலும், மனதளவிலாவது அவர்களுக்காக அனுதாபப்பட வைப்பது மதமல்ல, மனிதாபிமானம்தான்.

லெபனான் மக்கள் மீதான இஸ்ரேலின் அராஜகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதாபிமானம் உள்ள அனைவரின் வேண்டுகோளாக இருந்தது. இதற்கும் சில விதிவிலக்குகள் உண்டு என்பதை The Independent நாளிதழ் அதன் முகப்புப் பக்கத்தில் ஒரே ஒரு படத்தைப் போட்டு விளக்கியிருந்தது. உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் நிற்க, எதிரணியில் இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்காவும் பிரிட்டனும் மட்டும்.

லெபனானியருக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதால், முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே சிலர் இஸ்ரேலை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று எண்ணுகிறார்கள் போலும். இவர்களின் கவனம் லெபனானில் நடக்கும் அராஜகத்தை விட, ‘முஸ்லிம்கள் நிற்கும் அதே அணியில் நாமும் நிற்பதா?’ என்ற வறட்டுக் கவுரத்தில் இருப்பதாகத்தான் படுகிறது.

இதன் தொடர்பில் எழுதப் பட்டிருந்த திரு. சின்னக்கருப்பனின் கட்டுரை நடுநிலைக் கண்ணோட்டத்தில் எழுதப் பட்டிருக்கிறது என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. ‘பாலஸ்தீனர்களுக்காகவும், தெற்கு லெபனானில் வாழும் ஷியா மக்களுக்காகவும் எனது ஆதரவு’ என்று சொல்லும் அதேவேளையில், டார்ஃபுரில் அராபிய முஸ்லிம்கள் கறுப்பின முஸ்லிம்களைத் தாக்கிக் கற்பழித்துச் சூரையாடும்போதும், சோமாலியாவில் கென்யா நோக்கித் துரத்தப்படும் மக்களுக்காகவும் இதே தீவிரத்துடன் இவர்கள் ஏன் போராடவில்லை என இடது சாரிகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இவர் சாடத் தவறவில்லை.

திரு. சின்னக் கருப்பனுக்கு நன்றி!

-இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com/2006/08/11/sinnakkaruppan/

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்