ஜோதிர்லதா கிரிஜா
நாக்குக்கு நிறைவளிக்கும் அறு சுவை நமக்குத் தெரியும். இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, உப்பு ஆகிய இவை தினமும் நம் உணவில் சேர்ந்தால் நோய் வராது என்பது ரோக்கிய விதி. மனத்துக்குச் சுவை
யளிக்கும் ஏழாம் சுவையான சிரிப்பும் அன்றாடம் நம் வாழ்வில் சேருமானால், இன்னும் அதிக ஆரோக்கியம் பெறலாம். நமது அன்றாட வாழ்க்கையிலேயே நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. நம்மில் கணிசமானவர்களுக்குச் சிரிக்கத் தெரிந்திருப்பதால்தான் அவர்கள் பைத்தியம் பிடித்துப் பாயைச் சுரண்டாமல் இருக்கிறார்கள் என்பதில் ஐயமே இல்லை.
பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கிடையாது என்று சொல்லுவோர் உண்டு! இது படு அபத்தமான ஒரு முடிவு என்று சொன்னால், “ தப்பு! தப்பு! அவர்களுக்கு இல்லாத ‘நகை’ச்சுவையா!’ என்று கிண்டலடிப்பீர்கள்தான். ஆனால், பெண்களில் பலருக்கு நகைச்சுவை இருப்பதால்தான் அவர்கள் சிரிப்பாய்ச் சிரிக்கிற நிலையிலும் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில், பத்திரிகைகளில், நான் படிக்கத் தவறாதவை நகைச்சுவைத் துணுக்குகள்தான். பலர் நல்ல ஜோக்குகள் எழுதுகிறார்கள். பலர் அசட்டுத்தனமும், பாசமும் நிறைந்த ஜோக்குகளை எழுதுகிறார்கள்.
நகைச்சுவை என்பது யாரையும் புண் படுத்தாமல் சொல்லப் படுவது என்பது நமக்குத் தெரியும். தெரிந்தும் உடல் ஊனமுற்றோரை வைத்து அவர்கள் மனம் புண்படும் வண்ணம் சின்ன திரை, பெரிய திரை, கியவற்றிலும் நகைச்சுவை
திணிக்கப்பட்டு வருகிறது. ஒருவருடைய உயரக் குறைவு, அதீத உயரம், பருமன் அல்லது சதைப்பற்றற்ற உடல்வாகு, பார்வைக்குறைவு, மாறுகண், திக்குவாய், சாய்ந்த நடை, முடம், பற்களின் அமைப்பு, முக அவலட்சணம், வழுக்கைத்தலை இவற்றையெல்லாம் கிண்டல் அடித்து எழுதுகிறவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.
எனது சிறு வயதில் கல்கியில் ஒரு ஜோக்கு வந்தது. ‘பேயும் பெண்மணியும்’ என்கிற படத்தில் தாம் நடிக்கப் போவதாக ஒரு பெண் சொல்லுவார். அதைக் கேட்பவர், ‘அப்படியானால், பெண்மணியாக நடிக்கப் போவது யார் ?’ என்று கேட்பார். இதனால் கோபமடைந்த ஒரு பெண் அமரர் கல்கி அவர்களுக்குக் காரசாரமாய் ஒரு கடிதம் எழுதினார். பெண்களின் மனங்களைக் கல்கி புண்படுத்திவிட்டது என்பது அவரது குற்றசாட்டு. அதில் புண்படுவதற்கு எதுவுமே இல்லை. எனினும், கல்கி அவர்கள் பெருந்தன்மையாக வருத்தம் தெரிவித்தார். இன்று அத்தகைய ஆசிரியர்கள் ஓரிருவர் இருப்பார்களோ என்னவோ! ஒரு சாதாரண ஜோக்குக்கே கோபமுற்ற அந்தப் பெண்மணி இன்று பத்திரிகைகளில் வரும் ஜோக்குகளைப் படித்தால் எப்படி ஆத்திரமடைவாரோ! பெண்களின்
தாய்மைச் சின்னங்களின் மீது அணியப்படும் உள்ளாடையை மையமாக வைத்துப் பத்திரிகைகளில் வரும் ஜோக்குகளுக்குக் கணக்கே இல்லை
கடி ஜோக்குகள் உயர்தரமானவை யல்ல வெனினும், தீங்கற்றவை என்பதாலும், அந்த நேரத்துக்குச் சிரிக்க வைப்பவை என்பதாலும் அவற்றை வரவேற்கலாம். சிலர் ‘சீரியஸான’ விஷயங்களை ஜோக்காக எழுதுவதுண்டு.
பதினைந்து ண்டுகளுக்கு முன் வந்த அத்தகைய ஜோக்கு இது: (இது என்னுடையது! ‘என்னுடையது’ என்று சொன்னதோடு பதினைந்து ண்டுகளுக்கு முந்தியது என்று பீற்றிக்கொண்டதற்குக் காரணம் சென்ற ஆண்டில் வேறு யாரோ இதே ஜோக்கை எழுதியுள்ளதைப் படிக்க நேர்ந்ததுதான் அவருக்கும் அதே ஜோக்குத் தோன்றியுள்ளது. ‘காப்பி’ என்று நான் குற்றம் சொல்ல மாட்டேன். முதலில் எழுதியவள் நான் என்று சொல்லுவது மட்டுமே நோக்கம்.)
“நம்ம ராமசாமி தன்னோட அப்பவையும் அம்மாவையும் முதியோர் இல்லத்துல விட்டு வெச்சிருக்கான்.”
“அடப்பாவி!”
“கேட்டா, ‘ அவங்க என்னை நான் குழந்தையா இருந்தப்போ காப்பகத்தில தானே விட்டு வெச்சிருந்தாங்க ?’ அப்படிங்கறான்.”
இதேபோல், ‘பெண்பார்க்க’ வந்த பையனின் தந்தை. ‘பொாண்ணுக்கு முப்பது பவுன் நகை போட்டுடுங்க. மூணு கோத்ரெஜ் அலமாரி, குடும்பத்துக்கு வேண்டிய பாத்திரம் பண்டங்கள், வெள்ளிக் குத்துவிளக்கு ரெண்டு, தங்க ரிஸ்ட் வாட்ச் செய்ன், மத்தப்படி தேக்குக் கட்டில், மெத்தை இதெல்லாமும்தான். . . ஆங்! இன்னொண்ணு சொல்ல விட்டுப் போயிடுத்து! உங்க பொண்ணும் என் பிள்ளையும் ஒண்ணா •ஆபீசுக்குப் போய் வர அப்படியே ஒரு புல்லட்டும்
வாங்கிக் குடுத்துடுங்க!’ என்பார்.
பெண்ணைப் பெற்றவர், ‘ புல்லட் கைவசம் ரெடியா இருக்கு. உம்ம நெத்தியில சுடவா, நெஞ்சில சுடவா ?’ என்பார் கடுப்புடன்.
ஒருமுறை ஒரு பிரபல திரைபட இயக்குநர், தன் கணவர் இறந்ததும் அவரது பிரிவைத் தாங்க முடியாமல் தீக்குளித்த அவருடைய மனைவியின் அன்பைப் பாராட்டி ஒரு வார இதழில் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதைச் சகிக்க முடியாத ஒரு பெண், கீழ்வரும் ஜோக்கை எழுத அது வெளிவந்தது:
‘நம்ம ராமசாமியோட மனைவி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்.”
“ஏன் ? என்ன ஆச்சு ?”
“கணவனோட மரணத்தைத் தாங்கிக்க முடியாம தீக்குளிச்ச ஒரு பொண்ணைப் பத்திப் பாராட்டி ஒரு சினிமா டைரக்டர் எழுதின கட்டுரையைப் படிச்சாங்களாம். அதே மாதிரி தானும் ஒரு பதிவிரதைன்னு காட்டிக்கிறதுக்காக – பின்னாளில் அவர் செத்துப் போகும்போது தன்னால தாங்க முடியாதுன்னு காட்டிக்கிறதுக்காக -அவர் சாகிறதுக்கு முந்தியே தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்!’
– இது அப்படி இருக்கு ?
அலுவலகங்களிலும் வீடுகளிலும் அன்றாடம் நாம் சிரிப்பதற்கு நிறையவே விஷயங்கள் கிடைக்கும். ஒரு முறை ஒரு பெண்மனி தன் மகளிடம் தனக்குப் பசி பிராணன் போகிறதென்றும் உடனே உப்புமாக் கிளறுமாறும் சொல்ல,
‘உம்’ என்று கூடத்திலிருந்து மகளின் பதில் வந்தது. சற்றுப் பொறுத்து, ‘ வண்டாடும் சோலை தனிலே’ என்று மகள் பாடியது கேட்க, கடுப்பான தாய், தம் அறையில் இருந்த படியே, ‘என்னடி இது! பசி பிராணன்
போறதுன்னு சொல்றேன் ? நீ பாட்டுக்கு ‘ வண்டாடும் சோலை தனிலே’ ன்னு பாடிண்டிருக்கே ?’ என்றார். எதற்கெடுத்தாலும் அந்த வேளைக்குப்
பொருத்தமாய் ஒரு சினிமாப் பாட்டோ கீர்த்தனையோ பாடும் வழக்கமுள்ள அவர் மகள், ‘ ரவையில ஒரே வண்டும்மா!’ என்றார். அந்த மூதாட்டி சளைக்காமல், ‘ஒரே வண்டையா இவ்வளவு நேரமாப் பொறுக்கிண்டிருக்கே ?’ என்றார்,
இதே பெண் சிறுமியாக இருந்த போது, இவளுடைய அண்ணன் பட்சணங்கள் நிறைந்த சம்புடத்துடன் பரண் மீது ஏறிக்கொள்ள, தன் பங்கையும் அவன் சேர்த்துத் தின்று விடப் போகிறானே என்கிற கவலையிலும், பரண் மீது
ஏற முடியாத ஏலாமையிலும், அவள், ‘நீ இரங்கா யெனில் புகல் ஏது ?’ என்று பாடினாள். ‘என் இரக்கத்துக்கு என்னடி ? அது நிறையவே இருக்கு,’ என்று அவன் பதில் சொல்ல, ‘அடேய்! நீ இரங்கினா மட்டும் போறாதுடா!
நீ இ ‘ற’ ங்காயெனில் புகல் ஏது ?’ என்று ‘ற’வை அழுத்தி உச்சரிக்க, சிறப்புத் தமிழ் மாணவனான அவன் சிரித்துக்கொண்டே பரணிலிருந்து குதித்து இறங்கினான்!
இருபத்தைந்து ண்டுகளுக்கு முன்னர், ஒரு முறை ஒரு மாமியார், ‘ என் பிள்ளையை எங்கிட்டேர்ந்து பிரிச்சுடாதடி! எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை!’ என்று அங்கலாய்க்க, மருமகள், ‘ என்னமோ புதுசாச் சொல்ல வந்துட்டேளே! எனக்கு இருக்கிறதும் ஒரே ம்படையான் தான்! “ என்றாள்.
ஒரு முறை எங்கள் அலுவலகத்தின் பெண்கள் அறையில் ஒரு புதிய ஜன்னல் திரைச்சீலை அது மாட்டப் பட்ட இரண்டே நாள்களில் திருட்டுப் போய்விட்டது. மதிய உணவுக்கு அங்கு வந்த ஒரு பெண், ‘அய்யய்யோ! புத்தம் புது
ஸ்கிரீன் திருட்டுப் போயிடிச்சே!’ என்று அலறினாள். ‘எவனோ திருடிட்டான்! அதுக்கு நீ ஏண்டி இந்தக் கத்துக் கத்தறே ?’ என்று இன்னொருத்தி பதில் சொல்ல, ‘அதில்லேடி. ஓசைப்பாடாம நான் எடுத்துட்டுப் போகணும்னு பிளான் பண்ணி யிருந்தேன். அதுக்குள்ள வேற எவனோ லவட்டிட்டானேன்ற எரிச்சல்ல அப்படிக் கூவினேன்!’ என்றாள், சிரிக்காமல்.
எங்கள் அலுவலகத்தில் பல நாள் முன்பு பணி புரிந்த ஓர் அதிகாரியிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். பொது மக்களிடமிருந்து தமது பெயருக்கு வரும் மனுக்கள், புகார்கள் ஆகியவை யாவற்றிலும் ‘Today please’ (இன்றே
செய்க) என்று ணையிட்டுக் குறுங்கொப்பம் இடுவாராம். இவரது இந்தப் பழக்கத்தால் இவருக்குக் கீழே பணி புரிந்து கொண்டிருந்த தலைமை எழுத்தர் ஏகப்பட்ட எரிச்சலில் இருந்துள்ளார். ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு
அனுப்பிய அலுவலர், ‘இன்னிக்குக் காலையில டுடே ப்ளீஸ்னு போட்டு ஒரு பேப்பர் அனுப்பி யிருந்தேனே ? என்ன பண்ணினீங்க ? எனக்கு இன்னும் •பைல் வரல்லியே! இன்னைக்கு ஈவ்னிங் நாலு மணிக்குள்ள அது என் மேஜைக்கு
வந்தாகணும்,’ என்றார்.
‘சர்! நீங்க முந்தா நாள் டுடே ப்ளீஸ்னு மார்க் பண்ணின பேப்பரை இன்னிக்குத்தான் போட முடிஞ்சுது. அது இன்னைக்கு நாலு மணிக்கு மேல உங்க மேஜைக்கு வரும். நேத்து டுடே ப்ளீஸ்னு நீங்க மார்க் பண்ணின பேப்பர்களை நாளைக்குத்தான் எடுக்க முடியும். இன்னைக்கு டுடே ப்ளீஸ்னு மார்க் பண்ணின பேப்பர்களை யெல்லாம் நாளை நீக்கி மறுநாள் தான் கையில எடுக்க முடியும். (To the day-before-yesterday’s today-please
papers, I am attending today. To the yesterday’s today-please papers I will attend tomorrow. To the today-please papers of today, I will attend the day
after tomorrow.) உங்களுக்கு இந்த •aaபீஸ்ல என்ன நிக்நேம் வச்சிருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு ? மிஸ்டர் டுடே ப்ளீஸ்னு பேரு வெச்சிருக்காங்க. எதுலதான் டுடே ப்ளீஸ் போட்றதுன்னு ஒரு இதுவே இல்லாம
எல்லாத்திலேயும் டுடே ப்ளீஸ்னு போட்டா அதோட மதிப்பே போயிடும், சார்!’ என்று கத்திவிட்டு வெளியேறினார் என்று சொல்லுவார்கள்.
இன்னொரு தமாஷ். ஒரு முறை ஓர் எழுத்தருக்கு அவசரமாய் விடுப்புத் தேவையாக இருந்தது. உடல்நலக் குறைவு என்று பொய் சொல்லியாக வேண்டிய கட்டாயம். ஏனெனில், அவர் வேலை செய்துகொண்டிருந்த பிரிவில் நிறைய
பேர் ஏற்கெனவே விடுப்பில் இருந்தார்கள். ‘என்னவென்று சொல்லி விடுப்புக் கேட்கலாம் ? உடம்பு முழுவது வலி (pain all over the body)என்று சொல்லலாமா, இல்லாவிட்டால் கடும் சளி (severe cold) என்று சொல்லலாமா’ என்று அவருக்குள் பலத்த யோசனை போலும். அந்தத் தடுமாற்றச் சிந்தனையின் விளைவாக, அவரது விடுப்பு விண்ணப்பம் கீழ்க்கண்டவாறு அமைந்தது:
‘எனக்கு உடம்பு முழுவதும் சளி பிடித்திருப்பதால், இரண்டு நாள்களுக்கு விடுப்புத் தருமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். ’ (As I am suffering from severe cold all over the body’ என்று தொடங்கியது அவ்விண்ணப்பம்.)
இரண்டு நாள்கள் கழித்து அலுவலகம் வந்த அவரிடம், ‘ஏன்யா! மூக்குல மட்டும் சளி பிடிச்சாலே தாங்க முடியல்லே. உடம்பு முழுக்கவும் பிடிச்சிருந்த சளியை எப்படிய்யா தாங்கினே ?’ என்று தலைமை எழுத்தர் நிச்சயம் அவரைக் கேட்டிருப்பார்.
இப்போதெல்லாம் இன்னொரு வகையான வக்கிரம் பிடித்த சிரிப்புத் துணுக்குகள் வார இதழ்களில் அடிக்கடி வருகின்றன. வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்களுடன் அவ்வீடுகளின் எசமானர்களுக்குப் பாலியல் தொடர்பு
உள்ளதாய்க் கூறும் ஜோக்குகள். ஆண்களில் சிலர் வழிகிறார்கள் என்பது வரையில் இவற்றை – பணிப் பெண்கள் அவதூற்றுக்குள்ளாக்காமல் எழுதப்படும் ஜோக்குகளில் வேண்டுமானால் -ரசிக்கலாம். ஆனால், எல்லாப் பணிப்
பெண்களையும் நடத்தை கெட்டவர்கள் என்பது போல் சித்திரிக்கும் இவை உண்மைக்குப் புறம்பானவை யல்லவா ?
பணிப்பெண்களுக்குப் போதுமான கல்வியறிவு இருந்து அவர்கள் இவற்றைப் படித்தால் இந்த அசிங்க ஜோக்கர்களின் கதி என்னவாகும் ? -இப்படி ஒரு நாள் சிந்தித்த போது கீழ்க்காணும் சிரிப்புத் துணுக்கு என் மனத்தில்
தோன்றியது:
“விளக்குமாறும் கையுமா நிறைய பொம்பளைங்க ஊர்வலம் போறாங்களே ? எதுக்கு ?”
“வீட்டுவேலை செய்யிற பொம்பளைங்களை யெல்லாம் அந்தந்த வீட்டு எசமானருங்க வெச்சுக்கிட்டு இருக்காங்கன்றாப்ல ஜோக்கு எழுதிக்கிட்டு இருக்குற எழுத்தாளருங்க வீடுகளுக்குப் போய் அவங்களை யெல்லாம் விளாசுறதுக்காகப் போய்க்கிட்டு இருக்காங்க!”
. . . சின்ன வயதிலேயே முயன்றிருந்தால், ஒருகால் நானும் ஒரு நகைச்சுவை எழுத்தாளராக ஆகியிருக்கக்கூடும்.
இது எனக்கு ஒரு பெரிய மனக்குறைதான். (கட்டுரையின் இந்தக் கடைசி வாக்கியத்தைப் படித்ததும், ‘அட, அசடே! நகைச்சுவை என்பது இயல்பாக ஒருவருக்கு இருந்தால்தானே நகைச்சுவை எழுத்தாளராக ஆக முடியும் ? ‘ என்று
எண்ணி நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. எப்படியோ! இந்தக் கட்டுரையின் முடிவிலாவது உங்களைச் சிரிக்க வைத்தேனா இல்லையா!)
****
jothigirija@hotmail.com
`
- ஒரு கவிதாமரத்தின் இறப்பு
- கடிதம்
- பாரதி இலக்கிய சங்கம்,சிவகாசி ,குறும்பட வெளியீட்டு விழா
- சொன்னார்கள்
- சிந்திப்போம், பிறகு சிரிப்போம்!
- ஓட்டை சைக்கிள் !
- பிபாஷா பாசு பிள்ளைத் தமிழ்
- கவிஞர் எஸ்.வைதீஸ்வரனின் 70வது பிறந்த நாள்- 22.9.05
- மாபெரும் சமூகக் கனவுகள் (வெட்டவெளி வார்த்தைகள் – கன்னட வசனங்கள் அறிமுகம்)
- மெல்பேனில் AR. ரகுமானின் இசைநிகழ்ச்சி – தென்இந்தியாவில் சங்கீதக் கல்லூரி உருவாக்க திட்டம்
- திரைப்படம்: அமெரிக்க பூதமும், கம்யூனிச பிணமும்
- இலங்கை சாகித்திய மண்டலப் பாிசு பெற்ற எழுத்தாளர்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க மனிதச் சிங்கம், ஆலயங்கள் -3 (The Great Sphinx & Abu Simbel Temples of Egypt)
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9)
- மாடல்ல! மனுஷிதான் நான்!
- பெரியபுராணம்- 57 – ( திருநாவுக்கரசர் நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (41) படகில் நீயும் நானும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கருப்பு M.G.R
- இளையபெருமாள்
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 04
- மலிவு ஆன வாசிப்பு
- இவர்கள் அறிவீனர்கள்
- பெண்களும், அறிவியலும்- அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை-2
- கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்
- நகங்கள்