பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.
இந்தப் புலம் பெயர்ந்த இருபத்தைந்து வருட காலமாகவே தூக்கம் கலைந்த இரவுகளில்; தூக்கமும் விழிப்பும் கலந்த பாவனைகளில் ; தேசம் பற்றிய, படித்த பாடசாலைகள், விளையாடிய ஆலமரநிழல், நீந்திக்களித்த குளம், பழைய நண்பர்கள், உறவுகள் பற்றிய நினைவுகள் தவிப்புகளால் பொழுதுகள் கவிவதுண்டு. கடந்த காலங்களின் நிகழ்வுகள், இழந்த காதல் , நட்பு , உறவு , தேசம் இவற்றின் நினைவுகளை மீட்டெடுத்துப்பார்த்து மீண்டும் துய்ப்பதை தவிப்பதை Nostalgy என்பார்கள். அவ்வார்த்தையின் வேர் இலத்தீன் ஆதலால் ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் அதன் பிரயோகம் உண்டு.
காதல் என்பதைப் பகிர்தல் என்பார்கள் ஜெர்மனியில், நட்புக்கும் அதுதான் வரைவிலக்கணம். ஒரு ஆசாமி கஞ்சல்பேர்வழியென்றால் அவருடன் கதைக்கவே கூசுவேன், சும்மா வெற்று வேட்டு அலுப்புக்களையும் கொண்டாடுவதில்லை. போதைக்கு அடிமையாகி அரையான் அவிழ்ந்துவிழும் பிரக்ஞையற்று நிற்பவர்கள்மீதும் மதிப்பு வைப்பதில்லை. தற்காரியக்கட்டி களை அணுக்கத்தில் சேர்க்கமாட்டேன். புதுப்புலத்தில் நண்பர்களென நம்பிய பலரையும் சுயநல சந்தர்ப்பவாதப் பிரகிருதிகளாக உணர்ந்தகணமே விலகியிருக்கிறேன்.
ஸ்நேகிதர்களைத் தேடுவதும் தேர்வதும் ஒருவகைக் கலையென்றால் எனது தேர்வு முறையின் கறார்ப்போக்கால் போலும் பரபரப்பான புலம் பெயர்வாழ்பரப்பில் குறைந்தபட்ச இரசனைகள், ஈடுபாடுகள் , ஆர்வங்களுடன்கூடிய ஸ்நேகிதர்களைத் தேடுங்கலை எனக்குக் ¨கூடாதே போயிற்று.
என் தொழில் ரீதியான நண்பர்கள் தொழில் முடிந்தவுடன் சென்றுவிடுகிறார்கள். என்னிடம் இலக்கியம் பேசும் நண்பர்கள் இலக்கியத்துடன் நின்றுவிடுகிறார்கள். இணையத்தில் கடலை போடுபவர்கள் அவர்கள் நேரம் தீர்ந்ததும் மாறிவிடுகிறர்கள்.
மனத்தைத் தளர்த்தி வாழ்வியல்பற்றி; மானுஷ அறங்கள் பற்றி; உலகியல் பற்றி; கலைகள் பற்றிப்பேச
சிலாகிக்க ஒரு மனிதரில்லை என்றாகிவிட்டது வாழ்வு. நவில்தொறும் நூல்நயம் போலுமாமே……. பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு? நான் வேண்டுவதெல்லாம் ஸ்நேகிதர்கள் என்கிற அர்த்தத்தில் ஸ்நேகிதர்கள். ஸ்நேகிதர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வது மெத்தவும் அலுப்பான காரியம். தனியே போட்டு வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப்போல.
ஒட்டக்கூத்தனுக்கும் – பிசிராந்தைக்கும் , கார்ல் மார்க்ஸ¤க்கும் – எங்கெல்ஸ¤க்கும், கெய்சர் ·பிறிடெரிக்குக்கும் – வொல்டேயருக்கும், சார்த்தருக்கும் – சிமோனுக்கும் இருந்ததாகச் சொல்லப்படும் நட்பை நான் என்றுமே விதப்பதுண்டு. நட்புக் கலையின் சுகமறிந்த மஹானுபாவர்கள் அவர்கள். அதுவும் மார்க்ஸ் இல்லாத உலகத்தில் எங்கெல்ஸால் வாழவேமுடியவில்லை, சீக்கிரமே இறந்து போகின்றார் அவரும்.
நீள்விசும்பின் மாந்தர்களைப் பிணிக்கவல்ல அல்லவைகளில் எத்தனை சதவீதம் என்னிடத்திலும் பிணித்திருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் நல்லவையுள் நான் முதன்மையாக உணர்ந்து வைத்திருப்பது என்னால் இவ்வுலகத்தில் எவரிடத்தும், எதனிடத்தும் பொறாமையற்று இருக்கமுடிவதைத்தான்.
பில் கேட் , ஸ்டீபன் ஹோவ்கிங், ஐஸ்வர்யா ராய், சுலேகா றிவேரா மீது கூடத் துண்டறப் பொறாமை கிடையாதென்றால் பாருங்களேன். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானதாக இருக்கும்போது ஒருவரைப்பார்த்து மற்றொருவர் பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை என்பது என் ஆழ்மனத்தர்க்கம். ப்ராண ஸ்நேகரைச் சேர்தல் எனும் விஷயத்தில் பொறாமைநீங்கியென் இயலாமை பற்றிச்சிந்திப்பேன்.
இலக்கிய ஆர்வங்கள், கலைகள் மீதான காதல்கள் எதுவும் பிடித்தாட்டத் தொடங்காத காலத்தில் தனியார் வகுப்பொன்றில் அறிமுகமாகி என் சிறந்த நண்பனாகிவிட்டிருந்தான் நாகர்கோவிலைச் சேர்ந்த பாலேந்திரன். தமிழாசிரியையாகவிருந்த தாயார் அவனின் சிறு வயதிலேயே காலமாகிவிட்டாராம். பருத்தித்துறை கூட்டுறவு சமாஜத்தில் முகாமையாளர் பணியிலிருந்த தகப்பனார் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பாலேந்திரனையும் அவனுடைய மற்றைய இரண்டு தம்பிமாரையும் வேலாயுதம் ஸ்கூல், ஹார்ட்லிக் கல்லூரிகளுக்கு அனுப்பிப் படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
நாங்களெல்லாம் தியாகி சிவகுமாரனின் அணியினராயினும் அவனளவுக்கு அரசியலின் உக்கிரங்களுக்கு முகங்கொடுக்கத் திராணியற்றவர்களாக இருந்ததனால், 80களின் ஆரம்பத்தில் குழுக்கள் குழுக்களாக ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களோடு சேர்ந்து நானும் பெயர்ந்துவிட பாலேந்திரன் மட்டும் 1985வரை கொழும்பில் கணக்காய்வு நிறுவனமொன்றில் உதவிக்கணக்காய்வாளனாகப் பணிசெய்துகொண்டிருந்தான். என் புலப்பெயர்வுக்குப் பின்னாலும் எமக்குள் சுமுகமான கடிதப்போக்குவரத்து இருந்தது. 1985ல் அவனது திருமணம். அதற்கான எனது வாழ்த்துக்கவிதைதான் எம்மிடையேயான கடைசிக்கடிதம். அதற்குப் பின்னால் நான் எழுதிய எந்தக்கடிதமும் அவனைச் சேர்ந்ததுக்கான தடயமெதுவுமில்லை. அவன் ஈழத்தில்தான் இன்னும் இருக்கிறானா அல்ல; ஒரு கரும்புலியாய்ப் புகைந்தானா அல்லது பேரலைகளால் அள்ளுப்பட்டுவிட்டானா; அவனது சகோதரர்கள் என்ன ஆனார்கள் என்பது எவருக்கும் தெரியவில்லை. தந்தையார் சிவபாதசுந்தரம் பணியில் ஓய்வுபெற்ற பின்னர்கூட இவன் தன்பணியில் சேரமுன்பதாக பருத்தித்துறையில் குமரன் மெடிகல்ஸ் நிறுவனத்தாரின் வீட்டில் கொடுதலை விருந்தாளியாக (பேயிங் கெஸ்ட்) இரண்டு வருஷங்களுக்கு மேல் தங்கியிருந்தான், ஆதலால் குமரன் மெடிகல்ஸ் எனது நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரியவே அங்கும் போய் விசாரித்துப்பார்த்தேன். அவர்களும் ‘தமக்கும் அவனொடு இப்போது ஒருவித தொடர்புமில்லை, எங்கிருக்கிறானென்று தமக்குந் தெரியவில்லை’ என்று கையை விரித்தனர்.
அவனுடனான விவாதங்களில் எனக்கு எப்போதாவது கோபம் வந்தால் “டேய் குழைக்காட்டான் உனக்கெல்லாம் அது தெரியவராதடா……..அதற்கு மூக்குக்கு அப்பாலும் பார்க்கத் தெரிந்திருக்கவேண்டும்” என்று எரிச்சலூட்டுவேன். அதற்கும் இயல்பாகச் சிரிப்பான், பிறன் மனதுநோக ஒரு வார்த்தை பேச வராத இயற்கை அவனது. பாலேந்திரனை நினைத்தால் கண்கள் நிறையக்கூடிய சந்தர்ப்பங்கள் பலவுண்டு. இதிலே மாதிரிக்கு ஒன்று.
1974சித்திரை மாதம் எமக்கு க.பொ.த. உயர்தரப்பரீட்சை நெருங்கிகொண்டிருக்கிறது. விலங்கியல் பாடத்துக்கு Animal Biology என்றொரு புத்தகம் எமக்கு உசாத்துணை நூலாக இருந்தது. யாழ் நூலகத்திலிருந்த பிரதிகள் அனைத்தையும் யாழ்ப்பாணத்து மாணவர்கள் எடுத்துச்சென்றுவிட்டிருப்பார்கள். பிரதிகள் இருந்தாலுந்தான் கிராமவாசிகளாகிய எங்களுக்கெல்லாம் இலகில் கிடைத்துவிடமாட்டாது. அதில் அங்கத்தவராகவே குறைந்தபட்ஷம் ஒரு மாநகரசபை உறுப்பினரின் சிபாரிசு வேண்டும். பாராளுமன்ற ஊறுப்பினரைத் தரிசித்தாலும் தரிசிக்கலாம், மாநகரசபை உறுப்பினரைக் கண்ணால் காண்பதே வல்லையாகவிருக்கும். யாழின் இரண்டு பிரசித்த புத்தகக்கடைகளிலும் அந்நூல் இருக்கவில்லை, இருந்தாலும் விலையோ 200 ரூபாய்களுக்கும் அதிகம். (அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் ஒளிநகல் வசதிகள் கிடையாதென அறிவீர்.) பாலேந்திரனின் அப்பா கொழும்பிலிருந்து அவர்கள் கூட்டுறவுச்சமாஜத்தின் பாரவுந்துச்சாரதி ஒருவர் மூலம் அவனுக்கு ஒரு பிரதி வாங்கிக்கொடுத்திருந்தார். பரீட்சைக்கு சில நாட்களே இருக்க சூழலியலில் சில பகுதிகளைமீட்க எனக்கும் அந்நூல் அவசியம் தேவைப்படவே ” நான் சூழலியல் பார்த்தாயிற்று…..” என்றவன் புதுமணம் மாறாத அப்
புத்தகத்தைச் சடாரெனெ நடுவில் இரண்டாக வகுந்து சூழலியல் இருந்த பாதியை என்னிடம் தந்த புரவலன்.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கக்கூடிய அனைத்து நாடுகளிலும் அவர்களுக்குப் பொறுப்பான பீடங்களுடன் தொடர்புகொண்டு விசாரித்தாயிற்று. எல்லா நாடுகளிலும் வெளிவரக்கூடிய தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலுமே விளம்பரங்கள் தந்து தேடியாயிற்று. இலங்கை வரும் ஒவ்வொரு தடவையும் ‘எங்கே இருந்தாலும் என்னுடன் தொடர்புகொள்ளடா பாலேந்திரா’ என்று பத்திரிகைகளில் விளம்பரம் தருவேன். நாகர்கோவில், தாளையடி குடத்தனை, அம்பன் ஆட்கள், ஹார்ட்லிக்கல்லூரி மாணவர்கள் எவரைப்பார்த்தாலும் விசாரிப்பேன். பலனோ இதுவரை சுழியந்தான். நிஜத்தில் இவ்வாக்கத்தைப் படிக்கநேரும் எவருக்காவது என் பாலேந்திரனின் இருப்புப்பற்றித் தெரிந்திருந்தால் என்னுடன் தொடர்பு கொள்வீர்.
பிரிய நண்பர்களின் குழாமைப்பெரிதும் விரும்பிய என் தாத்தாவும் இப்படித்தான் வெள்ளைப்போத்தல் சாராயம் வாங்கி அடிஅறையில் வைத்துவிட்டு மாதக்கணக்கில் தன் நண்பர்களுக்காகக் காத்திருப்பார். தனக்கு இசைவான நண்பர்கள் எவராவது விருந்தாட வரும்போதுதான் ஆட்டிறைச்சியும் வாங்கிவந்து பாட்டியை ஆக்கச் சொல்லிப் போத்தல்களையும் திறந்து அமர்க்களப் படுத்துவார். நல்ல நண்பர்களுக்கான ஏக்கம் எனக்கும் அவர் மரபுவழி வந்திருக்கவேண்டும்.
அம்மா, அப்பா, சகோதரங்கள், மனைவி, பிள்ளைகள் உறவுகளுடனான அன்பின் பகிர்தல் ஒருவகை;
நண்பர்களுடனான கலத்தல் – பகிர்தல் – சுவைத்தல் – இன்னொருவகை. துய்த்தே அறியவேண்டிய இன்பம் அது.
2006 தை மாதம்.
சென்னைப் தமிழ்ப்புத்தகக்கண்காட்சியில் எனது இரண்டு நூல்கள் வெளிவரவிருந்தன. அதைப்பார்க்க வந்தகையோடு Nostalgyயால் உந்தப்பட்டு ஈழத்துக்கும் வந்திருந்தால்……. வாழ்ந்த வீட்டையோ; சூழவிருந்த மா, வேம்பு, பனை உட்பட மரங்களையோ, வேலிகளையோ காணவில்லை. எல்லைகள் தெரியாமல் வளவு எருக்கலையும் மருதாணியும் மண்டியிருக்க வீட்டின் அத்திவாரத்தைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வளவின் பின்கோடியில் யாரோ தம்பாட்டுக்கு கல்லுடைக்கும் இயந்திரத்தைப் பொருத்திவைத்துக் கல்லுடைத்துக்கொண்டிருக்கிறார்கள். பழைய நண்பர்கள் எங்கெங்குபோனார்களெ ன்றுந் தெரியவில்லை. என்கூடப்படித்த ஒரு மாணவனையோ மாணவியைக்கூட நான் கல்லூரியை விட்டான பின்னால் எந்நாட்டிலுந்தான் இதுவரை சந்திக்க நேர்ந்ததில்லை. இப்படி எத்தனை பேருக்கு நேர்ந்திருக்குமோ தெரியாது.
நான் 1980ல் புலம்பெயர்கையில் ஊரில் ஐம்பது அறுபதுகளில் இருந்தவர்களில் பலர் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்கள். முப்பது நாற்பதுகளில் இருந்த இனங்காணமுடிந்த ஒவ்வொருவருடனும் அறிமுகம் செய்த பின்னாலேயே பேசமுடிகிறது. எனது அண்ணரென நினைத்து என்னுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த ஒருத்தர் திடீரெனக் கண்டிபிடித்தவர்போல ” எனக்கே இன்னும் தலை நரைக்கேல்லை……… உமக்கேன்காணும் அதுக்குள்ள இப்பிடி நரைச்சுப்போச்சு?” என்றார். ‘ உங்கண்படாத இடத்தில ஒரு நரையும் இல்லைக்காணும்’ என்றுதான் சொல்லத்தான் வாயேவுது…… அவர் வயது காரணமாக இயலவில்லை.
சுளகு பின்னுவதில் எக்ஸ்பேட்டான என் அம்மாவின் வயதொத்த பெண்மணி ஒருவர் மட்டும் நான் விளக்கம் ஏதும் கொடுக்காமலே என்னை அடையாளம் தெரிந்தும் ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் தன் வீட்டுப்படலை ஓரமாக கமுக்கமாக நின்றுகொண்டிருந்தார். அவரை நானாக அணுகிப்போய் ” என்ன ஆச்சி ஆள் யாரென்று தெரியுதா?” என்றேன்.
” ஒம் அதெல்லாம் எனக்கு நல்ல சோக்காய்த்தெரியுதுமோனை……… உனக்குத்தான் எங்களைத் தெரியுதோவென்டுபார்க்கிறன் ” என்றார். அறளை என்பதும் இதைத்தானோ?
இருபத்தைந்துக்குட்பட்ட இளசுகள் எவருக்கும் என்னை யாரென்றே தெரியவில்லை, எப்படித்தான் தெரியவரும் நான் என்ன யாழ் – சமஸ்த்தானத்தின் தனிவாரிசா? முன்பெல்லாம் நாலு ஊர்கள் தள்ளிப்போய் ஒரு சிகரெட் ஊதுவதானால்கூட யாராவது தெரிந்தவர்கள் பார்த்துத் தொலைத்துவிடுவர்களோவென்று உடம்பெல்லாம் உதறுவேன். இப்போது நடுச்சந்தியில் நின்று சோமபானந்தான் அருந்தினாலும் ஏனென்று கேட்கவொரு நாதியில்லை. பிறந்த நாட்டிலேயே என்னை ஒரு பரதேசியாய் முதன் முறையாக உணர்ந்தேன்.
சமாதானம் – போர்நிறுத்தம் – உடன்பாடு என்றார்கள், ஆனால் ஒவ்வொரு ஊரைத்தாண்டிச்செல்கையிலும் வாகனத்தால் இறங்கி சாமன்களைச் சுமந்துசென்று இராணுவத்தினனுக்கு அவிழ்த்துக்காட்டி , அறிமுகஅட்டை காட்டியே கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. கைப்பையைக்கூட வாங்கிக்கைவிட்டுப் பார்க்கிறான். ஏன்தான் இங்கு வந்தோமென்று இருக்கிறது.
அப்போதெல்லாம் புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தக் கல்லூரியில் அச்சுவேலி , கதிரிப்பாய், இடைக்காடு , வளலாய் சுற்றுவட்டங்கலிருந்து நிறையப்பேர் வந்து படித்தார்கள். என்ன எல்லாப் பறவைகளுமா புலம்பெயரும்? அவ் ஊர்களுக்குள்போய் எவராவது தப்பியொட்டி இருக்கிறார்களாவென்று விசாரித்துப்பார்க்கலாமென என் மைத்துனர் ஒருவரையும் சேர்த்துக்கொண்டு அவரது விசையுருளியில் வளலாய் நோக்கிப் புறப்பட்டோம். கதிரிப்பாயைக் கடந்து செல்கையில்தான் பாலச்சந்திரனின் வீடு (கவனிக்க…..இது பாலச்சந்திரன்) அங்கேயொரு குறுக்கு வீதியில் இருந்தது நினைவுக்கு வந்தது. அவன்தான் எம் உயர்தரக் கல்வி ஆண்டுகள் முழுவதிலுமென் பக்கத்து மேசைக்காரன். ஒரு குறிப்பில் அவர்கள் வீட்டிற்கு அண்மையாகப்போய் விசையுருளியை நிறுத்திக்கொண்டு உள்ளே நோட்டம் விட்டோம், வீட்டின் குசினியின் புகைக்கூண்டு எங்கேயோ இருக்க, வேறொரு அறையிலிருந்து புகைவருவது தெரிந்தது. மற்றும் முன் விறாந்தையும் , பிற்கட்டின் தாழ்வாரக்கூரையும் குண்டடிபட்டுச் சிதிலமாகி இருந்தன. வாசலில் ஆள் நடமாட்டங்கண்டதும் மெலிந்ததேகத்துடன் பெனியனும் சாரமும் அணிந்திருந்த பென்ஷன் வயதை அடைந்திருக்கக்கூடிய ஒரு பெரியவர் வெளியில் “யார்?” என்றுகொண்டு வெளியே வந்தார்.
நான் ‘செல்லையா குடும்பத்தின் வீடுதானே இது…….. அவர்களெல்லாம் இப்போ எங்கேயிருக்கிறார்கள்?’ என்று விசாரித்தேன். அவரோ வெகு நேர்மையாக ‘இது யாருடைய வீடென்று தங்களுக்குத்தெரியாதென்றும் தாங்கள் வசாவிழானிலிருந்து (தற்போது இராணுவ உயர்பாதுகாப்புவலயம்) இடம்பெயர்ந்து வந்து இங்கே சிலகாலமாகக் குடியிருப்பதாகவும், நீங்கள் பிரதானவீதியில் செல்வச்சந்நிதி நோக்கித் திரும்பிப்போனால் வரும் அரிவுபட்டறையை அடுத்துள்ள சிவப்புக் கேட்போட்ட வீட்டில் செல்லையாவென்று ஒருத்தர் இருக்கிறார் அங்கே போய்விசாரிப்பது உபயோகமாயிருக்கும்’ என்றார்.
நேரே அங்கே போனோம். அங்கிருந்தவர் என் விபரணைகள் முழுவதையும் கேட்டபின் ‘தான் செல்லையாவல்ல செல்வத்துரை’ என்றும் திருத்தி ‘ நீர் சொல்லும் செல்லையா இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும்; அவர் மகன் பாலச்சந்திரன் இப்போது யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். நாச்சிமார்கோவிலடி உப தபால் நிலையம் அமைந்திருக்கும் வீட்டின் ஒரு பகுதியில்தான் அவர் குடியிருப்பு, கல்லூரிமுடிந்தபின் மாலையில் அங்கு போனால் அவரைச் சந்திக்கலாமென்றும் தெளிவான தகவல் தந்தார். இடைக்காட்டில் மேலும் இருவரை அவரிடம் விசாரித்தேன். அவர்கள் இருவருமே மாவீரரான கதையைச்சொன்னார். வேறு எவரையும் அவரிடம் விசாரிக்க மனம் ஏவுதில்லை.
பழைய நண்பர்களில் ஒருத்தனையாவது சந்திக்கப்போகும் ஆனந்தம் தாங்கமுடியவில்லை.
அன்று மாலையே நாச்சிமார்கோவிலடிக்குப் புறப்பட்டோம். தபால்நிலையம் இருந்த வீட்டின் வாசலில் அவன் மனைவிதான் ஒரு ஆண் குழந்தையைத் தூக்கிவைத்துகொண்டு நின்றார். அவரிடம் ‘பாலச்சந்திரன் மாஸ்டர் வீடு இதுதானோ என்றோம்?’ ‘ இதுதான் இருக்கிறார் உள்ளே வாங்கோ’ என்று பாதிதிறந்திருந்த கேட்டை இன்னும் அகலமாகத் திறந்துவிட்டார். அவன் முன்விறாந்தையில் கப்பிறி-களிசானோடு நின்று தன் உந்துருளியைத் துடைத்துக் கொண்டிருப்பது தெரியவும் மிகையுரிமை எடுத்துக் கொண்டு எமது விசையுருளியையும் உள்ளே விரட்டிப்போய் முற்றத்தில் நிறுத்தினோம். ஒருவரையொருவர் கண்டதுந்தான் எமக்குச் சிரிப்பு பொங்கிப் பொங்கிவருகிறது. விழுந்து விழுந்து சிரித்தோம். ”அத்தான் டோய்” என்று அவனைத்தழுவிக் கொண்டேன். கல்லூரியில் சக மாணவர்களை ‘மச்சான்’ என அழைக்கும் நாமெல்லோருமே பாலச்சந்திரனை மட்டும் ‘அத்தான்’ என்றழைத்துத் தமாஷ் பண்ணுவோம். (அவனுக்கு நிறையச் சகோதரிகள்) இந்த “அத்தான் டோய்” ஆல் குழம்பிய அவன் மனைவி நாலு அடிகள் தள்ளி நின்று நம்மிருவரையும் மாறிமாறி விசித்திரமாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். அவனுக்கு லேசாகத் தலைமட்டும் நரைத்துப்போயிருக்கிறதே தவிர வேறு பாரிய மாற்றங்கள் எதுவுந்தெரியவில்லை. பூமியுடன் பாடுபட்டதேகம் ஆரோக்கியமாக இருப்பதாவே பட்டது. வீட்டின் முன்விறாந்தையில் கொஞ்சம் மேசைகளும் கதிரைகளும் சிறிய வகுப்பறையைப்போல் ஒழுங்கான நிரையில் வைக்கப்பட்டிருந்தன. டியூஷனேதும் எடுப்பான் போல. எங்கிருந்தோ ஒரு ஷர்ட்டை ‘லபக்’கென எடுத்துப்போட்டுகொண்டு எம்மை உள்ளே அழைத்துப்போனான்.
உள்ளே பிரம்பு நாற்காலிகளில் அமர்கையில் மாலையாகிவிட்டிருந்துங்கூட எனக்கு வியர்த்து வழிவது கண்டு இருந்த எல்லா மின்விசிறிகளையும் ஓடவிட்டான். அவன் மனைவி குசினியில் பானகம் ஏதோ தயாரித்துக்கொண்டு துருதுருவென்று சிரிக்கிற கண்களுடன் சுண்டெலிபோல் ஓடித்திரிந்த ஒரு சின்னப் பெண்ணை அழைத்து அவளிடம் கொஞ்சம் மிக்ஸர், கேக்குகள், வாழைப்பழங்கள் கொடுத்துவிட அவளும் ஜதியுடன் நடந்து வந்து நமக்கு “வணக்கம்” சொல்லிக்கொண்டு அழகாகப் பரிமாறினாள்.
“வணக்கம்……….. இது யார் உன் மகளா?” என்றேன்.
” ஓம்….. பத்தாவது படிக்கிறாள், பூங்கொடி என்று பெயர்” என்றான்.
” நடனமும் படிக்கிறாபோல……….?”
” எப்பிடித்தெரியும்? ”
” தெரிஞ்சுக்கலாம்.”
” குழந்தைகள் இருவருந்தானா ?” .
“ஓம்” என்றவன் மற்றறொரு குழந்தையின் பெயரும் சொன்னான். இப்போது ஞாபகம் செய்வது கஷ்டம்.
நானும் எனது நாடு, தொழில், குடும்பம், பிள்ளைகள், அவர்கள் படிப்புகள், சென்னை புத்தகக்கண்காட்சிக்காக வந்தது, எனது எழுத்து முயற்சிகள், என் நூல்களின் விபரமெல்லாம் சொல்லி கையுடன் எடுத்துப்போன என் ‘பெர்லின் இரவுகளையும்’, ‘கூடுகலைதல்’ சிறுகதை தொகுப்பையும் கையெழுத்திட்டு அவனுக்குக் கொடுத்தேன். பாலச்சந்திரன் தனது தம்பியாரும் சுவிஸில் இருப்பதாகச் சொன்னான்.
‘புத்தகம்’ என்றதும் சின்னப்பெண் மீண்டும் வந்து பெர்லின் இரவுகளை உள்ளே எடுத்துப்போனாள். கோப்பி எடுத்து வந்த அவன் மனைவியும் எமக்குப்பரிமாறியதும் எம்முடன் அமர்ந்து மிகப்பரிச்சயமானவரைப்போல கலகலவென்று பேசத்தொடங்கிவிட்டார்.
பாலசந்திரன் பேசிக்கொண்டே இடைக்கிடை நான் கொடுத்த ‘கூடுகலைதலின்’ பின் அட்டையைப் புரட்டிக்கொண்டிருந்தான். அதில் என் போட்டோவும், கனடியத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அந்நூலுக்களித்த அழகான சிறுகுறிப்புரையும் பதிவாகியிருந்தன. அதைத்தான் அவனும் இரசிக்கிறான் என்று நானும் எண்ணிக்கொண்டேன்.
” உங்கள் திருமணம் என்ன உறவுக்குள் அமைந்ததா? ” என்றேன்.
” உறவுதான்………… கொஞ்சம் தூரத்து உறவு” என்று வெட்கப்பட்டார் அவன் மனைவி.
பொதுவாக எம்பேச்சு முழுவதும் சர்வதேச விவகாரங்கள், சமாதானம் , உள்ளூர் நடப்புக்கள் எனப்பல விஷயங்களை இங்குமங்குமாகத் தொட்டுத்தொட்டு வந்துகொண்டிருந்த்தாலும் பாலச்சந்திரன் யாழ்மக்களின் இடப்பெயர்வுகளுக்கும் அதன் அவலங்களுக்குந்தான் அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தான்.
முதலாவது ஈழப்போர்த்தாக்குதல்களின்போது தாம் வடமராட்சிக்கு ஓடிப்போனது, அங்கு வேலை வருமானம் இல்லாமல் தவித்தது, மீண்டும் புத்தூரில் சிவானந்தமூர்த்தி என்றொரு கஞ்சல்த்திலகம் தன்வீட்டுத்தாழ்வாரத்தில் ஒத்தாப்பொன்றை இறக்கி அதில் குடியிருக்க அனுமதித்தது, பின் மெல்ல அவன் அதற்கும் வாடகை கேட்டு அலுப்புக்கொடுத்தது, அங்கிருந்து கழற்றிக்கொண்டு வேறிடம் பார்க்க முயல்கையில் சூரியக்கதிர்த்தாக்குதல்கள் வந்தது, கதிரிப்பாயில் செய்துகொண்டிருந்த தோட்டப்பயிர்கள், சேகரித்துவைத்திருந்த உடுபுடவை , பண்டமெல்லாம் இழந்து ஒரு சைக்கிளில் எடுத்துச்செல்லக்கூடிய பொருட்களுடன் வன்னிக்கு கால்நடையாய் இடம் பெயர்ந்தது, அங்கு UNHCR கொடுத்த பிளாஸ்டிக்கூடாரத்தில் மழை, வெள்ளம், நுளம்புகளுடன் அல்லாடிப்பட்ட கஷ்டங்கள் என்று விபரித்துக்கொண்டேயிருந்தான்.
எம்மக்கள் பட்ட கஷ்டங்களைப் பாராமல் பங்கெடுக்காமல் பிரிந்து போய்விட்டதாக எனக்குள் கொஞ்சம் குற்ற உணர்வு குறுகுறுத்தாலும் நடைமுறை அறிவு அவ்விடப்பெயர்வுகளின்போது நாங்களும் கூடவே இருந்திருந்தால் இவர்கள் பட்ட கஷ்டங்களில் பாதியையேனும் குறைத்திருக்கமுடியுமாவென்றும் கேட்கிறது.
கல்லூரியில் , கதிரிப்பாயில் , அச்சுவேலியில், புத்தூரில் மாவீரரான பலரின் நீண்டபட்டியலைச் சொன்னான். பலரை நிஜத்தில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘கொடூரங்கள் நிறைந்த போரும் , அதுதரும் அதிர்ச்சிகளும், பயங்களும் , மனஅவசங்களும், இது ஓய்ந்துவிடாதா என்கிகிற அவர் நிராசைகளும் மனிதனின் ஞாபகசக்தியைப் பலமாகப்பாதிக்கும்’ என்றான்
இது ஒன்றும் ஆச்சரியமல்லை பாலா……. நான் என் மகள் காருண்யாவையே சமயங்களில் அண்ணனின் மகள் கீதாவின் பெயரைச்சொல்லி அழைப்பதையும், அதனால் மனைவி ‘இன்னுமுங்களுக்கு உங்கள் வீட்டு ஞாபகந்தான்’ என்று அடிக்கடி சத்தம்போட நேர்வதையும் சொல்லி இது நடுவயதை அடைந்துவிட்டவர்களின் பொதுப்பிரச்சனை யென்றும் அதையிட்டுப் பெரிதாக ஒன்றும் அலட்டிகொள்ளத் தேவையில்லை என்றும் ஆறுதல் படுத்தினேன்.
” வாழ்க்கையின் எந்தச்சந்தர்ப்பத்திலும்…… ” என்றவன் நிறுத்திவிட்டு ” எனக்கு யாரோ….”என்றான். பின் அதையும் விட்டுவிட்டு
“உம்முடை கண்ணும், பல்வரிசையும், சிரிப்பும் அப்பிடியே மனத்திலே பதிவாகியிருக்கு………. ஆனால்…………… இந்த வன்னி இடப்பெயர்வுகளும், டெண்ட் வாழ்க்கையும் , செய்த அழிச்சாட்டியங்கள்……கொஞ்ச நஞ்சமில்லை. ஷெல்லடி , ஹெலி·பயரிங் , பங்கர் வாழ்க்கையென்று மனுஷன் மனம் அளவுக்கு மிஞ்சிப்பயந்து அதிர்ந்தால் அவன் ஞாபகசக்தியும் கழுவுப்பட்டுவிடுமென்ன?” என்றான்.
அவன் தன் அனுபவத்திலிருந்து சொல்கிறான் என்பதால் நான் இப்போது மௌனம் காத்தேன். பேசிக்கொண்டே “What a bad memory…..bad memory” என்றுகொண்டு முன் மண்டையில் உள்ளங்கையால் பலதடவைகள் தட்டிக் கொண்டான். அவன் இடப்பெயர்வையே திரும்பத்திரும்பச் சொல்வதிலிருந்து இடப்பெயர்வுகள் மனதில் ஏற்படுத்திய ரணங்கள் அவனுள்ளூர இன்னும் வலிசெய்வதை உணரமுடிந்தது.
நான் விஷயத்தை மாற்ற ‘ சுளகுபின்னும் அறளை பிடித்த மனுஷியின் ஞாபகசக்தியையும் அவர் கிடுக்கி போட்ட கதையையும் ‘ சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தான்.
இன்னும் என்னிடம் மரியாதையாக ‘நீங்கள்’ ‘நீங்கள்’ என்றும் பேசிக்கொண்டிருந்தவன் தவறுதலாகச் சிலவேளைகளில் ‘நீ’ என்றுவிட்டு மீண்டும் உடனடியாக ‘நீங்களுக்கு’ மாறினான்.
” நீ ஸ்பெஷல் மரியாதை ஒன்றுந்தரத்தேவையில்லை எனக்கு… முன்புபோலவே ‘நீ’யென்றே கதை” என்றேன். சிரமப்பட்டான்.
” கல்லூரிக்காலத்தில் எம்.ஜி.ஆரைப்பற்றி எவராவது குறைத்துக்கூறினால்போதும் பின் ஒருவாரத்துக்கு அவருடன் முகம்கொடுத்துப் பேசமாட்டான்…………இன்னும் அப்படித்தானோ அல்லது அக்கருத்து நிலைகளில் மாற்றங்களேதும் உண்டோ?” என்றேன்.
” இல்லை நான் அவரை நடிப்புச்சக்கரவர்த்தியென்று வாதாடேல்லை… அவரது வள்ளாண்மை, வாடியதுகண்டு வாடுதல் போன்ற இயல்புகள் எனக்குச் சிறுவயது முதலே பிடித்திருந்ததால தவிர்க்க முடியாதபடிக்கு அவர் எனக்கின்னும் பெரிய ஆதர்சமாகவே தெரிகிறார்.” என்றான்.
தான் காங்கேசன்துறை மின் உற்பத்தி யூனிட்டில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்துகொண்டே தனியார் மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்து அறிவியலில் இளமானிநிலை முடித்தது, பின் ஆசிரியராக முடிந்தது, சுவிஸில் இருக்கும் தம்பியின் உதவியுடன் சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்துவைத்தது, அவர்கள் தற்போது எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னான்.
“அறிவியலில் என்னவென்ன பாடங்களெல்லாம் கற்பிக்கிறாய்?”
” இந்துக்கல்லூரியில் 90சதவீதம் ஆசிரியர்கள் அறிவியல் பட்டதாரிகள்தான், அதனாலே அதிபர் இந்து சமயம் கற்பிக்கச் சம்மதமானால் மாத்திரம் இங்கே இடமுண்டு என்றார் முன் நிபந்தனையாக………. என்ன செய்ய சமயந்தான் படிப்பீக்க வேண்டியிருக்கிறது.” என்றான்.
” சமய அறிவும்…….. சாதிய முறையும் சமாந்தரப் பாதைகளோ?”
” இரண்டும் அப்பப்ப சமூகத்துக்கு சோறுபோட்டிருக்கு……. இப்போ எனக்குச் சமயந்தானே போடுது” என்றுவிட்டுச்சிரித்தான்.
” உன் ஆசிரிய அனுபவத்தைகொண்டு எங்ககாலத்து மாணவர்களுக்கும் , தற்போதைய மாணவர்களுக்கும் என்ன வித்தியாசம் காண்கிறாய்? ”
” ஈழத்துக்கானபோர் தொடங்கிய பின் இருந்தவசதிகள் பலவும் அருகியபிறகு மாணவர்களுக்குப் படிப்பின்மேல் பேரார்வமே பிறந்திருக்கு……. ஒழுங்கான கல்லூரிகளின் வகுப்பறைகளிலிருந்து படித்த மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைவிட வன்னிக்கு இடம்பெயர்ந்த மாணவர்கள் அத்தனை வசதியீனங்களுடனும் பெற்றுக்கொண்ட மதிப்பெண்கள் அதிகம்.
கிடைக்கும் வசதிகள் சொற்பமேயானாலும் அத்தனையையும் முழுக்கப் பயன்படுத்திக்கொள்ளவேண்டு மென்கிற ஆர்வம் தற்போதைய மாணவர்களிடம் அதிகரித்திருப்பது ஒரு சிறப்பான விஷயம். இப்போது மாணவர்களைப் படி படியென்றெல்லாம் விரட்டவேண்டியதில்லை, புதியன எதையும் தெரிந்துகொள்ளப் போர்க்காலத்தயார் நிலையில்தான் இருக்கிறார்கள் அவர்கள் ” என்றான்.
அது மட்டிலும் கேட்பதற்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது.
கல்லூரியில் மதிய இடைவேளையில் உயர்வகுப்பு மாணவர்கள் எமது உணவை ‘டக் ஷொப்பு’க்கு எடுத்துச்சென்றுதான் சாப்பிடுவோம். இவன் மட்டும் கால் செருப்புகளைக் கழற்றித் தள்ளி வைத்துவிட்டு தண்ணீர் தெளித்து அனுட்டானம் பார்த்துக்கொண்டுதான் சாப்பிடத்தொடங்குவான். ”அப்படியான பேய்க்குணங்கள் இன்னும் தொடர்கிறதா?” என்று கேட்டேன். ” சமயம் படிப்பீக்கத்தொடங்கியபின்னால் இன்னும் நிறைய உண்டே” என்றார் அவன் மனைவி.
அப்போது குறுக்கிட்ட பாலச்சந்திரன். ” அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம் என்று திருவாசகத்தில்……….. செல்லப்பட்டிருக்கு. அதை வழங்கியவனுக்கு நாம் தெரிவிக்கும் ஒரு குறைந்த பட்ச நன்றி. அதொரு பழக்கம், அதிலே என்ன அப்பிடிப்பெரிய தப்பிருக்கு?” என்றான். இன்னும் பல விஷயங்களில் அவன் மாறவில்லைத்தான், ஆனாலும் அவனுடன் கழிக்கவிருக்கும் சொற்பநேரத்தையும் அவன் நம்பிக்கைகளில் புகுந்துகொண்டு விவாதித்து விரயமாக்க நான் விரும்பவில்லை.
கல்லூரிக்காலத்தில் நடைபெற்ற சில தமாஷான சம்பவங்களை நினைவுகூர்ந்தோம் , இன்னும் சீர்திருத்தத் தமிழின் வரிவடிவங்கள், நவீனத் தமிழ் வார்த்தைகளெனப்பேசினோம்.
கூட வந்திருந்த மைத்துனர் ‘ ரொம்பத் தாமதித்தோமானால் வழியில் இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகமாகவிருக்கும்…….. மெல்லக் கிளம்புவதுதான் உசிதம்’ என்றும் நச்சரிக்கத்தொடங்கினார்.
” உன் கண்ணும், பல்வரிசையும், சிரிப்பும் அப்பிடியே மனதிலே நிக்குத்தான் அப்பனே…” நிறுத்திவிட்டு மீண்டும் சிரித்தான்.
” என் கேசத்தை மட்டும் அதுகளோட சேர்த்துக்காதே மேன்………..அப்போதெல்லாம் முடியை தோழில் வழியவிட்டுக்கொண்டிருப்பேன்… என் பின் பெஞ்சுகளில் இருப்பவர்கள் கரும்பலகை தெரியுதில்லை யென்று கூவுவார்கள். அவசரமாகப் பள்ளிக் கூடத்துக்குப் புறப்படுகையில் அக்கா ‘வாடா …..கொண்டையைப்பின்னி றிப்பன் கட்டிவிடுகிறேனென்று’ கிண்டல் செய்வார். ” எனவும் சின்னப் பெண்ணும் , அவன் மனைவியும் என் சூரியகாந்தித்தலையைப் புதிதாக நோக்கிவிட்டுச் சிரித்தனர்.
பூங்கொடியிடம் அவளின் நடன ஆசிரியை யாரென்று விசாரித்தேன். ஒருவர் பெயர் சொன்னாள், தெரியவில்லை. இப்போதுதான் அடவுகள் முடித்திருக்கிறாளாம்.
நாங்கள் மனதின்றிப் புறப்படத் தயாராகவும் பூங்கொடிவந்து மீண்டும் ‘வணக்கம்’ சொன்னாள்.
ஜெர்மனி திரும்புமுன் நிச்சயம் இன்னொரு தடவை தங்களிடம் வந்து விருந்தாடிப்போகவேணுமன்று தம்பதி இருவரும் உபசரித்தனர். எம்மை வாசல்வரை வழியனுப்ப வந்த பாலச்சந்திரன் குரலில் கொஞ்சம் பச்சாதாபத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னான்: ” தமாஷ¤க்கென்றாலும் பொய்சொல்வது எனக்கு உடன்பாடில்லை. அந்தப்பெடிச்சி எங்கட பிள்ளையில்லை அது என் மனைவியின் ஒன்றுவிட்ட தங்கை, இங்கிருந்து டியூஷன் போவதற்கு வசதியென்று வந்துநிற்கிறாள்.”
” அப்போ உன்மனைவி எடுக்கி வைத்திருந்த ஒரு குழந்தை? ”
” அதுவும் அந்தப் போஸ்ட்மாஸ்டர் வீட்டுக்குழந்தைதான், அப்போதையே தங்கட வீட்டுக்குப்போயிட்டுது பார்க்கேல்லையே, நாங்களும் பாராத டொக்ரேர்ஸ் இல்லை, எதுவும் நடக்கேல்லை.”
” சொறிடா……….. எல்லாருக்கும் வாழ்க்கை ஒரு மாதிரி இருப்பதில்லைத்தானே.” என்று ஆறுதல் படுத்தினேன்.
வீசிய காற்றுக்கு பின் வளவிலிருந்தாயிருக்க வேணும் லேசாக முல்லையின் வாசம் முன்னுக்கு வந்தது.
” இன்னும் ஒரு விஷயம்……….. என் மோசமான ஞாபகசக்திக்காக என்னை நீ மன்னிக்கவேணும்….. எல்லாம் இந்த இடப்பெயர்வு , உலைச்சலுகளின்ர விளைச்சல்தான்……. ரெறிபிளி சொறி.”
“சொல்லு மேன்?”
” அ.முத்துலிங்கமென்று எங்ககூட யாரும் படிக்கேல்லையே……. நீ யார் மச்சான்….. உனக்கு என்ன பெயர் ?”
xxxxxx
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.
பிரசுரம்: காலம் 31வது வெளியீடு டிசெம்பர்-2008.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- ஒரு நேசத்தின் மிச்சம்
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- உள் பயணம்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- ஏதேதோ…
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
- காந்தியின் மரணம்
- எல்லைகள் இல்லா உலகம்
- நாகேஷ்
- மோந்தோ -3-2
- பேச்சுத்துணை…
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- சாத்தான்களின் உலகம்
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- இரயில் பயணங்களில்
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- மோந்தோ -3 – 1
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- தட்சணை
- பரிமள விலாஸ்
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- திருப்புமுனை – 2
- திருப்புமுனை -1