லதா ராமகிருஷ்ணன்
”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்கமுடியாது என்பதும் இன்றைய அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பது தான் சிக்கல்” – சிங்கராயர்
சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!
முப்பதாண்டுகள் தமிழில் எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக மிகுந்த அர்ப்பணிப்பு ணர்வோடு இயங்கிவந்த, ஏறத்தாழ 30 நூல்களைத் தந்திருக்கும் சிங்கராயர் என்ற ஆளுமையை தமிழ் வாசகர்கள் மற்றும் தமிழினக் காவலர்கள் பெரும் பாலோருக்குத் தெரியாது என்பதே இன்றைய அவலமான நடப்புண்மை. இது குறித்த நியாயமான ஆதங்கத்தை இந்த மாதம் 10ஆம் தேதியன்று சென்னை, மேற்கு கே.கே.நகர் ’டிஸ்கவரி புக் பாலஸில் நடந்தேறிய சிங்கராயர் நினைவுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், அவரைப் பற்றிய நினைவுகளை, தகவல்களைப் பகிர்ந்துகொண்ட பலரும் வெளிப்படுத்தினார்கள்.
கூட்டத்தைத் துவங்கிவைத்த வெளி.ரங்கராஜன் தனது வரவேற்புரையில், “ இன்று பல்துறைக் கருத்தாக்கங்களும் மொழிபெயர்ப்பின்வழி பரவுகின்றன. ச்தந்திரம் பற்றிய பார்வையையும், மனிதவிடுதலைப் போரட்டங்களையும் மொழிபெயர்ப்பு பரவச்செய்ததை நாமறிவோம். லத்தீன் அமெரிக்க எழுத்துகள் மொழிபெயர்ப்பின்வழி தெரியவந்து புதிய சிந்தனைகளை எழுச்சிபெறச் செய்தன. அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்ட சமூகசிந்தனையாளர் – மொழிபெயர்ப்பாளர் சிங்கராயர் எத்தகைய வாழ்க்கையை வாழவேண்டியிருந்தது என்பதை நாமறிவோம். இதனை மறுபரிசீலனைக்குட்படுத்தவும், இதுகுறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கவும் திரும்பத்திரும்ப இதுபோன்ற கூட்டங்கள் தேவைப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
உடல்நிலை காரணமாக கோவை ஞானியால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. எனில், அவர் சிங்கராயர் குறித்து எழுதியிருந்த விரிவான கட்டுரை அரங்கில் வாசிக்க்ப்பட்டது. சிங்கராயர் என்ற ஆளுமையை உருவாக்கியதில் கோவை ஞானிக்குப் பெரும் பங்கு உண்டு என்று குறிப்பிட்டார் சிங்கராயரின் தோழர் துரை மடங்கன். சிங்கராயரை அறிந்தவர்கள் குறைவு; உணர்ந்தவர்கள் அதைவிடக் குறைவு என்று குறிப்பிட்டார் அவர். அந்த வாய்ப்பு கிடைத்த வெகுசிலரில் சிங்கராயரின் பள்ளித்தோழரான பேராசிரியர் தங்கவேலு ஒருவர். தனது கட்டுரையில் கோவை ஞானி சிங்கராயரின் ஆழ்ந்த சமூகநோக்கையும், சமரசம் செய்துகொள்ளாத தன்மையையும், பி.என்.ஆர் என்று அறியப்படுபவர் கையில் அவர் பட்ட சிரமங்களையும் எடுத்துரைத்தார். சிங்கராயர் எழுதிய, எனில் சூழல் காரணமாக பி.என்.ஆர் பெயரில் வெளியாகிய முக்கிய நூல் ஒன்று மறுபதிப்பு செய்யப்படும்போது சிங்கராயர் பெயரிலேயே வெளியாகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். துரை மடங்கனின், உரை, தங்கவேலுவின் குறிப்புகள் முதலியவற்றிலிருந்து கோவையின் இலக்கியம், சமூகம் சார்ந்த விழிப்பான சூழல், அருகிலிருந்த கேரளாவில் நிலவிய விழிப்பான சூழல், கோவை ஞானி. எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன் முதலிய பலரின் பரிச்சயம், நட்பு, உள்ளுக்குள்ளிருந்த அறிவுப்பசி, தேடல் என பல காரணிகள் சிங்கராயரை வடிவமைத்தன என்று புரிந்துகொள்ள முடிந்தது. 1000 பக்கங்களைக் கொண்ட நூலை சாரம் குறையாமல் 10 பக்கங்களில் தொகுத்துத் தரும் திறமைபெற்றவர் சிங்கராயர் என்றும், வயிற்றுப்பிழைப்புக்காக ஓஷோ முதலியோரை மொழிபெயர்த்தாலும்கூட தன் மொழிபெயர்ப்பில் சமரசம் செய்துகொள்ளாதவர் சிங்கராயர் என்றும், எதிரில் பேசுபவர் யாராக இருந்தாலும் சொல்லப்படும் கருத்திற்கு நேர்மையாகவும், தைரியமாகவும் எதிர்வினையாற்றுபவர் அவர் என்றும், எட்டாம்,ஒன்பதாம் வகுப்பு சமயத்திலேயே இடதுசாரி சித்தாந்ததை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டுவிட்டதாகவும், உலகம் போற்றும் டேல் கார்னகியையெல்லாம் அகல்விரிவாக விமர்சிப்பார் சிங்கராயர் என்றும் பேராசிரியர் தங்கவேலுவின் குறிப்புகளிலிருந்தும், தனது நினைவோட்டத்திலிருந்தும் சிங்கராயர் குறித்த பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார் துரை மடங்கன். சிஆர்சி எனப்படும் மைய சீரமைப்புக்குழுவில் சில காலம் சிங்கராயர் இடம்பெற்றிருந்தார் எனவும், தனது பெயர் இடம்பெறாமலே, மேலாண்மை தொடர்பான, கல்வி தொடர்பான பல படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் பரிமாணம், புறப்பாடு, மார்க்சியம் இன்று, இனி போன்ற மாற்றிதழ்களிலும் சிங்கராயரின் பங்களிப்பு கணிசமானது என்றும் கூறினார் அவர். தாராபுரத்தில் இளைஞர் மன்றம் உருவாக்கிச் செயல்பட்டதையும், குக்கிராமங்களில் மக்கள் நலனுக்காகச் செயல்பட்டதையும் குறிப்பிட்டு, எந்த நூலை எடுத்தாலும் அநாயாசமாக மொழிபெயர்த்துவிடும் திறமை வாய்ந்தவர் சிங்கராயர் என்றவர் மந்த்லி ரெவ்யூ என்ற இதழில் வெளிவரும் கடினமான கட்டுரைகளை அநாயாசமாக மொழிபெயர்த்துவிடுவார் ராயர் என்று வியந்துகூறினார். அறிவியல்துறை, தத்துவம், வாழ்க்கைவரலாறு, பெண்ணுரிமை, உளவியல் என நிறைய எழுதியுள்ளார், மொழிபெயர்த்துள்ளார் சிங்கராயர் என்று தெரிவித்தார். நூலுக்கும் இலக்கு வாசகர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்துவது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி. அது சிங்கராயரிடம் இருந்தது என்று குறிப்பிட்டார். நிறைய ஆங்கில சமூக இதழ்களை ஆர்வமாகப் படிப்பார். பிரச்னைகளைச் சொல்வதோடு மாற்றுகளை அறிமுகப்படுத்துவதிலும் அவருக்கு நிறைய ஆர்வமிருந்தது. 83க்குப்பின் ஈழம் தொடர்பான அக்கறை, இனப்பிரச்னையை எப்படி அணுக வேண்டும் என்ற அக்கறை அவரிடம் அதிகமாக இருந்தது. இறுதிக்காலத்தில் தலித்திய நூல்களை அதிகமாகப் படித்துவந்தார், தலித்திய சிந்தனைத் தாக்கம் அவரிடம் இருந்தது என்று குறிப்பிட்ட துரை மடங்கன் தானும், பேராசிரியர் தங்கவேலுவும் சிங்கராயரின் ஆளுமையை அருகிலிருந்து உணர்ந்தவர்கள் என்றும், தமிழுலகம் அவரைக் கவனிக்காதது அவலம் என்றும் வேதனையோடு கூறினார். உடல்நலம் சரியில்லாதபோது போய்ப் பார்த்தபோதும்கூட தனக்கென்று உதவியெதுவும் கேட்காமல் சமூக அக்கறையோடு சிங்கராயர் பொதுவிஷயங்களை மட்டுமே பேசிகொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.
நிழல் ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான திருநாவுக்கரசுவின் கட்டுரையை பேராசிரியர் இளங்கோ வாசித்தார். ’புரட்சிகரமக்களை ஆயுதபாணியாக்குவது எப்படி’ என்ற நூலை சிங்கராயர் மிக சரளமாக மொழிபெயர்த்திருந்ததை நினைவுகூர்ந்த திருநாவுக்கரசு சிங்கராயருடைய படைப்புகளைப் பற்றிய நூல் விரிவாக எழுதப்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அரங்க குணசேகரன் தனது உரையில் _
“மிகச் சிறந்த இயக்கவாதியாகத் தான் நான் சிங்கராயரைப் பார்த்தேன். தோழர் புகழேந்தியிடம் மருத்துவப் பயிற்சி பெறும் சூழலில் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்பாக அளவளாவுவார். என் சொற்பொழிவென்றால் தவறாமல் வருவார். அவருடைய அத்தனை மொழிபெயர்ப்புகளையும் ஒரு தொகுப்பாகக் கொண்டுவரவேண்டும். அவருடைய சிந்தனைகள் செயல்வடிவம் பெற்று புதிய மேம்பட்ட சமூகம் உருவாகவேண்டும் என்றார்.
அமரந்த்தா தனது உரையில் பத்து வருடங்களுக்கு மேலாய் சிங்கராயருடன் தான் கொண்டிருந்த தோழமையை நினைவுகூர்ந்தார்.
“ இருபத்தியைந்து வருடங்களுக்கு மேலாக மொழிபெயர்ப்பு செய்துவருகிறேன். லத்தீன் அமெரிக்க நூல்கள், அதிலும்,அரசியல் நூல்களே நான் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு முயற்சிகள். சிலர் இதுகுறித்து கேலிபேசுவதும் உண்டு. ஆனால், நான் பொருட்படுத்துவதில்லை. எழுத்து என்பது வெறுமே வெள்ளைத்தாளை மசியால் கருப்பாக்கும் விஷயமல்ல என்று நான் நம்புகிறேன். 1998இல் பொலிவியன் டைரி, நிழல்களின் உரையாடல் ஆகிய என்னுடைய மொழிபெயர்ப்புகள் வெளிவந்த நேரம்.. டெவில் ஆன் தி க்ராஸ் நூலை திருநாவுக்கரசு கொண்டுவந்து தந்தபோது நூலின் பின்னணித் தகவல்கள் கேட்டேன். இப்பொழுது மாதிரி இணையதளம் வழி தகவல்களைப் பெறும் வசதி அப்பொழுது கிடையாது. எஸ்.எஸ்.கண்ணன் அவர்கள் 1000 பக்க நூல் ஒன்று தந்தார். உலகமயம் பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை திருநாவுக்கரசு மொழிபெயர்க்கக் கொடுத்தார். அதை மொழிபெயர்த்த அனுபவம் எனக்கு மேற்குறிப்பிட்ட நூலை மொழிபெயர்க்கலாம் என்று நம்பிக்கையளித்தது. அந்தக் கட்டுரையோடுகூட சிங்கராயர் மொழிபெயர்த்த ‘புரட்சிகரமக்களை ஆயுதபாணியாக்குவது எவ்வாறு என்ற நூலையும் வாசிக்கக் கொடுத்தார். .தமிழிலேயே எழுதப்பட்டிருந்ததுபோலிருந்த அந்த நூலை மொழிபெயர்த்த சிங்கராயரை நான் அறிமுகம் செய்துகொண்டேன்.அந்த நூலின் பின்னிணைப்பாக கலைச்சொற்கள் பட்டியலையும் அவர் தந்திருந்தார். சிலுவையில் தொங்கும் சாத்தானில் ( டெவில் ஆன் தி க்ராஸ்) கென்யாவில் கிக்குயூ மொழியில் புழங்கும் பழமொழிகள் பல வரும். மூல ஆசிரியரே தான் ஆங்கிலத்தில் அந்த நூலை மொழிமாற்றம் செய்திருக்கிறார் என்றாலும் கிக்குயூ வார்த்தைகள் பலவற்றை அப்படியே தந்திருப்பார். சில ஆப்பிரிக்கர்களை அணுகி விளக்கம் கேட்டிருக்கிறேன். கடவுளைத் திட்டும் நூலை ஏன் மொழிபெயர்க்கிறாய் நீ என்று அவர்களில் சிலர் என்னைத் திட்டியபோது, “ இல்லையே, நூலின் ஆசிரியர் கெட்டவர்களைத்தானே திட்டுகிறார் என்றேன். சிங்கராயருக்குக் கிறித்துவப் பின்னணியிருந்ததால் அவரிடம் உதவி கேட்டேன். 15 நாட்கள் மனைவியோடு என் வீட்டில் தங்கியிருந்தார். அதுதான் உண்மையான மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்! மொழிபெயர்ப்பில் கறார் ஆசாமி அவர். ஆனால், எத்தனை கஷ்டத்திலும் எல்லாவற்றையும் சிரிக்கச்சிரிக்கச் சொல்லிப் புரியவைப்பார். உயர்வர்க்க மக்களின் மொழியைப் பகடி செய்வதும், அடித்தட்டு மக்களுக்காக எழுதுவதும்தான் நூலாசிரியரின் நோக்கம் என்பதைப் புரியவைத்து எளிமையான எனில் அழுத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தச் செய்தார். ”
கூட்டத்தில் மூன்று அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டன. 2008இல் நடந்தேறிய தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கக்கூட்டத்திற்குப் பிறகு மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் இறந்துபோயிருக்கின்றனர். மாஜினி, எல்.கோவிந்தசாமி மற்றும் சிங்கராயர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அவரவருடைய அன்றாட வாழ்க்கைப்பரபரப்பு காரணமாக சங்கக்கூட்டங் களுக்கு வருவதிலும், சந்தாவைப் புதுப்பித்துக்கொள்வதிலும் ஆர்வம்காட்டாத நிலை நீடிப்பதால் இனி சந்தா வாங்கி, மாதாந்திரக்கூட்டம் நடத்தி, கணக்குவழக்குகளை அரசிடம் அறிவித்து என சம்பிரதாயமான சங்கமாகச் செயல்படாமல் ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து தேவைப்படும்போது இத்தகைய நிகழ்வுகளை முன்னின்று நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வருடாவருடம் சிங்கராயர் நினைவாக சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.
இன்னும் ஒருமாத காலத்தில் நிதிதிரட்டி சிங்கராயர் மனைவியிடம் கொடுக்கவேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திலேயே சிலர் தங்களாலான நன்கொடையளித்தனர். அரங்கில் வைக்கப்பட்டிருந்த சிங்கராயரின் நூல்களை சிலர் ஆர்வமாக வாங்கிக்கொண்டார்கள். இளையதலைமுறையினர் சிலரும் இந்தக் கூட்டத்திற்குப் புதிதாக வந்திருந்தனர். பெங்களூரிலிருந்து இளம் வாசகர் ஒருவர் சிங்கராயர் மொழிபெயர்த்த ’தலைமைத்துவமும் வாழ்க்கைத்திறனும்’ என்ற நூலைப் பற்றி மிகவும் பாராட்டி “ஒவ்வொரு மாணாக்கரும் படிக்கவேண்டிய நூல் என்று எழுதியனுப்பியிருந்தார். கூடவே, 2000 ரூபாய் நன்கொடையும் அளித்திருந்தார். அவருடைய ஆர்வமும், அக்கறையும் பாராட்டத்தக்கது. அதேபோல் கூட்டத்திற்கு இடமளித்துதவிய டிஸ்கவரி புக் பாலஸ் உரிமையாளர்களும் கூட்டம் சிறப்பாக நடக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆர்வமாகச் செய்துதந்ததும் குறிப்பிடத்தக்கது. (சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த புத்தக விற்பனை நிலையம் மேற்கு கே.கே.நகரில் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் நிறுத்தத்திற்கு அருகேயுள்ளது).
கோபிகிருஷ்ணனின் மனைவிக்கு உரிய காலத்தில் நாம் செய்த சிறு உதவியால் அவர் இன்று தானே சொந்தமாக ஒரு சிறுதொழில் நடத்திவரமுடிகிறது. ஓரிருவருக்கு வேலைதரவும்முடிகிறது. அதுபோலவே, சிங்கராயரின் மனைவிக்கும் (அவர் படிக்காதவர்) உதவ வேண்டும். அதை நம் சமூகக் கடமையாகக் கொண்டு அவரவருக்கு முடிந்ததை வழங்கத் தவறாதீர்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். வாழுங்காலத்தில் மற்றவர்களிடம் உதவிகேட்பதைத் தவிர்த்தவர்களுக்கு அவர்கள் இறந்தபிறகு அவர்கள் குடும்பங்களுக்காக மற்றவர்களிடம் உதவிகேட்பதில் ஒரு உறுத்தலை, நெருடலை உணரவேண்டிய தேவையில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் வாழும் காலத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளப் பிடிக்காதவர்களாய் ஆற்றொழுக்காய் இலக்கிய வெளியில் இயங்கி மறைந்தவர்களை நம்மால் மறந்துவிட இயலாது, அப்படி மறந்துவிடவும் கூடாதில்லையா? சிறுதுளி பெருவெள்ளம். காலத்தினாற்செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது. சரிதானே? செய்வோம்.
சிங்கராயர் மனைவி ராஜத்தின் எதிர்காலத்திற்கு நிதியளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
த.வே.நடராசன்,
மனை.எண். 27, 3வது தெரு,
ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை,
கேளம்பாக்கம் – 603 103
கைபேசி எண்: 9445125379
காசோலை / வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். பணம் அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். வங்கி விவரம் கீழே தரப்பட்டுள்ளது”
A/C NO. 20000390136
D.V.NATARAJAN
(04308) – PBB, BESANT NAGAR
IFSC CODE : SBIN 0004308
E – 159, Annai Velankanni church road,
7th Avenue, Besant Nagar,
Chennai – 600 090
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4
- சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1
- சூரிய சக்தியில் முதலில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த வானவூர்தி (ஜூலை 8, 2010)
- மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்
- காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)
- மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)
- இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்
- பழமலையும், ப க பொன்னுசாமியும்….
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23
- மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT
- சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்
- புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.
- யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!
- தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி
- கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது
- கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து
- தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து
- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா
- வேத வனம் விருட்சம் -95
- துப்புரவு
- மறுபடியும் ரகு
- தொட்டுப் பாக்கணும்
- குடைராட்டினம்
- எழுதப்படாத கவிதை
- முள்பாதை 38
- பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி
- இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்
- சங்கதி என்னவாயிருக்கும்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்
- முகத்தினைத் தேடி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2
- நடுமுள்
- மெளனவெளி
- நஞ்சு பாசனம்
- களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்