சாந்தனின் எழுத்துலகம்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஈழம் தந்த மகத்துவம் மிக்க படைப்பாளியாக சாந்தனை அனைவரும் அறிந்திருக்கின்றனர். சிறுகதையாகட்டும், குறுநாவல், நாவல் (ஒட்டுமா – அவரது ஒரே நாவல்!), பயணக்கட்டுரை, கவிதைகள் – எதுவாகட்டும் சாந்தனை முக்கியமாக படைப்பு-பாவனை மீறியவராக அடையாளம் காண முடிகிறது. கதை என்றால் இபபடி, அதன் புனைவுவிகிதம் இம்மட்டுக்குள், அல்லது இதற்கதிகம் இல்லை என்றெல்லாமான கட்டுக்களை அவர் பிடியுருவிக் கொண்டதாகவே கதைப்புலத்தில் சஞ்சாரம் செய்கிறார். தவிரவும் அவர் கதைகளில் கற்பனை என்கிற அம்சத்தைக் கண்டுகொள்ள முடிகிறதில்லை. பிரமைகளற்ற, பிரமைசாயங்களற்ற எழுத்து அது.

ஆனால் இந்த தன்னிலைதளர்ந்த பரவச படைப்பூக்கம், அது சில கதைகளுக்கு வீர்யம போதுமானதாக இல்லை. அதுபற்றி சாந்தன் கவலை கொண்டாருமில்லை. ஹைகூ கவிதைகள் போல, அவை தக்க காலத்தில் உணர்வெழுச்சி கொள்ளவல்லவை, என அவர் நம்புகிறார். பதிவுசெய்ய ஆகவே அவர் தயங்கவில்லை. வறுமைசாந்த ஓவியத்தை எழுத்தில் சுலபமாகவே நகாசு பண்ணிவிட முடியும். இவரும் செய்தேயிருக்கிறார், அதில் அடங்கிவிடாமல் மேலெழுந்து சாந்தன் வந்ததை, இடதுசாரி சிந்தனையாளரை, வரவேற்க வேண்டும்.

ஓர் உணர்ச்சித் திவலை. மழைப்பொட்டு என அது உள்ளே விழுந்த கணம் ரசாயன மாற்றம் போல அவர் கை பேனா பிடிக்க உந்துகிறது. பரபரக்கிறது. அதை வெளிப்படுத்துவதிலும் ஆக நேர்மையை அவர் கைக்கொள்ள விழைகிறார். சில சமயம் பாத்திர வார்ப்பே கற்பனையாகக் கூட இருக்கக்கூடும் என்றாலும் அந்த சம்பவத்தில் நிஜத்தின் ஒரு கிரணம் – எப்போதோ புறப்பட்டு அவரை வந்தடைந்த கிரணம் அதில் காணக்கிடைக்கிறதாய் இருக்கிறது.

அசோகமித்திரன், சாந்தனின் படைப்புகளில் அவரே கதாபாத்திரம். எனினும் தன்னை முன்னிறுத்தித்தான் அது கதையில் இயங்க வேண்டிய கட்டாயத்தை அவர் கைக்கொள்ளவில்லை, என்கிறார். ஆ, அது ஒருவகையில் சரிதானோ? – கதையில் அழுத்தம் பெறுவது நாயகர்களே. மருந்துக்குக்கூட நாயகி பாவம் கொண்டாடப் படவேயில்லையே!

நிஜவாழ்வின் பாதிப்புகளை, அறிந்த விஷயங்களில் இருந்து ஒரு படைப்புத்தளத்தை நிறுவி விவரணைப் படுத்துவது சாந்தனுக்கு உவப்பாய் இருக்கிறது. கதைப்புலமாக யாழ் மண்ணே, அதன் முற்ற முழுதான அடையாளங்களுடன் வருகிறது. அம்மன் கோவிலடி, வேம்படி, காளி கோவில், மிகப் பெரும் ஏரி ஒன்று, அதன் மதகுப்பாலம்…. இவைகள் திரும்பத் திரும்ப கதை நிகழ்விடங்களாகப் பங்கு பெறுகின்றன. சூழல் பெரும்பாலும் கதையில் மாறுகிறதில்லை. சூழல் என்றுகூட இல்லை, மனைவி வேணி, நண்பர்கள் – ஒரு கண்டக்டர் சிவா, மற்றும் அலுவலக சகாக்கள் எல்லாரும் அதே பெயரிலேயே வெவ்வேறு கதைகளில் கூட நடமாட்டுவிக்கப் படுகிறார்கள்.

ஆ, அந்த நேர்மை. வாழ்வில் ஊடாடிய ஒரு கணம். அலுவலக மேலதிகாரி ஒருவர் அவன் எழுத்தைப் பாராட்டுகிறார். வயிற்றுக்கு நான் குமாஸ்தா எனினும் இரத்தசூடு அடிப்படையில் நான் எழுத்தாளன், என உணர்வுமூர்க்கம் கொள்கிறார் சாந்தன், கதையில். இது வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அல்லது ஒரு சாமானிய குமாஸ்தா பாத்திரத்தைக் கதைக்குள் அடையாளப்படுத்த சாந்தன் முனைந்திருக்கலாம். கதைக்கு இரு முடிவுகள் தருகிறார். ஒன்று – வீறுகொண்டு, நான் அலுவலகத்தில் இயங்குகிற அளவிலேயே உனக்குச் சம்பந்தம் உள்ளவன். எனது எழுத்து பற்றி உள்ளே அமர்ந்து அதிகாரியாக நீ என்னை விமர்சித்தல் அவசியமில்லை, என ஆவேசமாய்ச் சொல்லி வெளியேறும் பாத்திரம், என ஒரு முடிவு. அப்படி வெளியேறாமல், மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, அலுவலகச் சூழலை அங்கீகரித்து மெளனமாய்ப் பின்வாங்கும் இன்னொரு முடிவும், கூடவே தருகிறார்.

கதைகளில் ஈழத்தமிழ்ச் சூழல் வருகிறது. ஈழ அரசியல் இல்லையோ? சாமானிய மனிதன் உணரும் நெருக்கடிகள் என்ற அளவிலேயே விஷயத்தை அணுகிவிட முடியுமா?

கிருஷ்ணன் து¡து – என்கிற குறுநாவல். சிறு பொறி தன்னைப்போல பரஸ்பர அவநம்பிக்கையினால் பெரிதாகி விடுகிறது. இன்னொரு கதையில், ஒரு தமிழ்ன் சிங்களப் பாடலை ரசிக்கிறான். இவையெல்லாம் பார்வைகளே அல்லவா? விஷயத் தீவிரம் சார்ந்த கணிப்புகளாக அவை விவாதத் தளத்தில் உருவவுச்சம் கொள்வதை சாந்தன் தவிர்க்கிறார்.

ஓர் இடதுசாரித் தொழிற்சங்கவாதியாக அறிவித்துக் கொள்ள முன்வருகிறார் சாந்தன். சங்க நடவடிக்கைகள் சார்ந்த கதைகள் இதில் உள்ளன.

அதிகாரி-பணியாளி கருத்துமோதல்கள் பற்றிய கதைகள் இதில் உள்ளன, என்றாலும் முதலாளி-தொழிலாளி என வர்க்கபேத உரசல்கள் சார்ந்து சாந்தனிடம் குரல் இதில் இல்லை… வாழ்வின் அன்றாடம் சார்ந்து அனபவிக்கும் நெருக்கடியில், இந்த வர்க்கபேதங்கள் கரைந்துபடுகின்றன போலும். யாழ்ப்பாண வாழ்க்கைச் சூழலின் தனி அம்சம் இது, அல்லவா?

ஆனால் மிகப் பரந்த அளவில் மானுடத்தின் பிரிய கணங்களை அவர் எத்தனை ஆசுவாசமான நிதானமான அமைதியுடன் காட்சிப் படுத்துகிறார். குழந்தைப் பருவத்திலும், குழந்தைகளிடத்தும் அவர் காட்டுகிற மனசொட்டுதல் வாசிக்க சுகம். யாசகம் கேட்டு வந்த பெண்ணின் தோள்க்குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறது, என மொழிக்குழைவுடன் அவரால் எழுத முடிகிறது. சோழகம் யாழ்ப்பாணத்தின் முக்கிய அடையாளமாகிறது. நிலா பற்றி, வெளி பற்றி தனி வர்ணனைகளே கிடைக்கின்றன. இவைகள் கதைக்கட்டுரைகள். இருக்கும் இடம், வாழும் சூழல் சார்ந்த நேசம் ஒட்டுப்புல் போல வரைவு கண்டிருக்கிறது. சைக்கிள் எங்கள் வாகனம், என்று தோளுக்குமேல் து¡க்கிக்காட்டாத குறையாய்க் கொண்டாடும் சாந்தன்.

சணல் பூக்களின் மணம், புகையிலைப் பயிரின் வாசம் எல்லாம் வாசிக்கையில் வாசகருக்கும் நுகர எட்டுகிறது. நிலா வெளிச்ச இரவுகள் மனசை வருடித் தருகின்றன. தனிமை, தனிமைசார்ந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம், சுதந்திரம் தரும் மன நிம்மதி, அமைதி. ஆனால் அதே அமைதி ஒரு யுத்த சூழலில் நிலவுகிற அமைதியால் அதே இடம் எப்படி கலவரப்படுத்தி விடுகிறது. (தலைமேலே பொம்மர்… குண்டு துளைக்கும்போது எப்படி இருக்கும்? கடவுளே.) பதுங்கிடம் தேடி அந்த அமைதியான வெளியில் ஓடுவது, விநாடிக்குள் நிகழ்ச்சிகள் எப்படி கோர உருக் கொண்டுவிடுகின்றன.

‘பாத்திரம்’ என ஒரு கதை. கணவனைப் பறிகொடுத்துவிட்டு, வாழிடமும் இன்றித் தவிக்கிற பெண் ஒருத்தி, உதவி கோரி வருவதும், அவள் சொன்ன அகதிமுகாம் விவரம் பொய், என கதாநாயகன் அறிவதும், அதையும் மீறி அவன் அன்னை அவளுக்கு உதவி செய்வதுமாய் ஒரு கதை. பொய் சொல்லிப் பழக்கமில்லாதவள், வீட்டினைவிட்டு உதவிகேட்டு வெளியிறங்காதவள், என அம்மா அவளைப் பற்றிச் சொல்கிறாள். யுத்தம் எத்தனை து¡ரம் வீடுகளில் புகுந்து ஜனங்களை வெளியே வீதிக்கு இழுத்துத் தள்ளி விடுகிறது, என்கிறார் சாந்தன் மிக வருத்தத்துடன்.

உறவென விவரப்படும் பாத்திரங்கள் அருமையானவர்களாக உணர்வொட்டுதலுடன் உலா வருகிறார்கள். சாந்தன் மற்றும் சாந்தனாதி மக்கள்!

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர், damp-proof என்பதை விளக்க நேர்கிறது. Proof என்பதற்கு உதாரணமாக, ஒருமாணவன் சட்டென்று bullet-proof என்கிறான். அந்தச் சிறு வயதிலும் சூழலின் அமைதியின்மை இளைஞர்களுக்கு அறிமுகமான ஒன்றாயிருக்கிறது, என்கிறார் சாந்தன். ஆங்கிலத்தில் அத்தனை பலவீனமான மாணாக்கர்களா. பாவம் அந்த ஆசிரியர் என்றிருக்கிறது.

காலரீதியான வரிசை படைப்புகளில் இங்கே கையாளப் பட்டிருக்கிறது. சாந்தனின் எழுத்தில், கதைத்தளத்தின் தேர்வில் உள்ள மாற்றங்களை வாசகர் கவனிக்க இயலும். பிற்காலத்தியவை அநேகமாய் யுத்த சூழலே மீண்டும் மீண்டுமாக அடையாளப் படுவதை அவதானிக்கலாம். இந்தத் தொகுதியை ஒரு யாழ்-தமிழனின் டைரிக் குறிப்பாகக் கூட நினைத்துக் கொள்ளலாம். கதைகளும் சம்பவ சாத்தியபூர்வமானவையே.

இந்தத் தொகுதியையே வழியாகக் கொண்டு சாந்தனின் வீட்டுக்குப் போய்விட என்னால் முடியும்!

தொகுப்பின் முதல் சிறுகதை ‘வடிகால்’, மற்றும் ‘நீக்கல்கள்’ – போன்ற துணிச்சலான கதைகள் வாசகனை ஆச்சர்யப் படுத்த வல்லவை. ‘யுகங்கள்’, ‘எட்டியது’, ‘கவலை’ கதைகள் அபார கலைநேர்த்தியும் கட்டுக்கோப்பும் கொண்டவை. கவித்துவ மென்மையும் அபார நெகிழ்ச்சியுமான ‘அலுமார்’ கதை… ‘குழந்தைமாதிரிக் கிடக்கு பார் அந்தத் திருப்புளியை எடு’ என்று கேட்கும் மெக்கானிக், போன்ற கட்டங்கள் சகாக்களுடன் பகிர்ந்து ரசிக்கத் தக்கவை.

சம்பவங்கள் வழியே உள்ஸளூடாக அவர் தரும் கருத்தழுத்தம் உய்த்துணர வேண்டியவை. வாசகனுக்கான தளங்களை அவர் விட்டுச் செல்வது, பிற முற்போக்கு எழுத்துகளுக்கு மீறிய, அபூர்வ அம்சம்தான். ‘தேடல்’ குறுநாவல், தலைப்பு முதல் பல பூடக விவரங்களை மெளனமாய் வாசகருக்கு முன்வைக்கிறது.

சில நம்பிக்கைகளுடன் வாழ்க்கை தொடர்ந்தவண்ணமே இருக்கிறது சாந்தனுக்கு. நானே திறந்த புத்தகம், என்னை வாசியுங்கள், என்றார் காந்தி. இதோ சாந்தனின் புத்தகம், நீங்கள் திறக்கக் காத்திருக்கிறது.

மிக்க அன்புடன்
எஸ். ஷங்கரநாராயணன்

அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வெளியீடு. ‘சாந்தனின் எழுத்துலகம்’ நு¡லுக்கு எஸ். ஷங்கரநாராயணனின் முன்னுரை.
336 பக்கங்கள் முதல் பதிப்பு ஜுன் 2006 விலை இந்திய ரூபாய் 130/-

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்