சற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன?

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

தேவமைந்தன்



மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, ஒரு தடத்தை மாட்டுக்குப் பழக்கிக் கொடுத்துவிட்டால், அது வட்டமாக இருந்தாலும் குறுக்கு மறுக்காக இருந்தாலும் கோணல்மாணலாக இருந்தாலும், எப்படிப் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டதோ அதே போலப் போகும் வரும். நெடுஞ்சாலைகளில்கூட, ஓர் ஊரைவிட்டு இன்னொரு ஊருக்குப் போய்வரும்பொழுது, அது தன் எசமானரால் பழக்கப்படுத்திவிடப்பெற்ற சாலைவழி என்றால், அவர் வண்டியில் படுத்தித் தூங்கிக் கொண்டு வந்தாலும், பையப்பைய – ஒரே சீராகத் தம் ஊருக்கும் வீட்டுக்குமே திரும்பிவிடும். இந்த ‘ஒரேபோக்கு’(monotony) விலங்குகளுக்கு உரியதாக மனிதனால் கண்டறியப்பட்டு, இதுநாள்வரை அவை, விடுதலை இழப்புக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் உட்படக் காரணமாகிவிட்டது.

வேதனைப்படுத்தக் கூடியதொரு வேடிக்கை என்னவென்றால், நம் மனமும், இயல்பாக விடப்படாமல் அடக்கிப் பயிற்சி கொடுக்கப்பட்டுவிட்டால், மாடுபோலவும் சர்க்கஸ் விலங்குகள் போலவும் குறியாளங்களைக்(signals) கண்டவுடன், கிடைத்த பயிற்சிக்கேற்ப எதிர்வினை(react) ஆற்றத் தயாராகிவிடும். பொதுவாக, மனநலம் இல்லாதபொழுதுதான், இந்த நிலை மனிதருக்குத் திரும்பி விடுவதாக உளவியலார்(Carl Gustav Jung வழியினர்) கருதினர். ஆனால் இந்த நிலை ஆகிய மன-மந்தநிலை, யோகப் பயிற்சிகளாலும் தியானப் பயிற்சிகளாலும் கூட உண்டாகி விடுவதாக ஜே.கிருஷ்ணமூர்த்தி(நூல்: Freedom From The Known – மற்றும் உள்ளவை) கருதினார். இதை நீக்குவதாகவும் முற்றிலும் புதிய பயிற்சிகளைத் தருவதாகவும் சொல்லிப் பலரை, குறிப்பாக உயர்வகுப்பாரையும் மேல்நடுத்தரவகுப்பாரையும் ஈர்க்கிற ‘நியோசந்நியாசி’களும் மறுபடியும் அமைப்பு அடிப்படையிலான(system-oriented) பயிற்சிகளையே அவர்களுக்குத் தந்து கண்ணனைச் சகதேவன் கட்டிப் போட்டதுபோலத் தம் நிறுவனங்களில் செறித்து விடுகின்றார்கள்.

எல். பிரதர்ஸ் (Brothers, L) கூறினார்: “எளிதில் எதையும் நம்பமாட்டேன் என்று சொல்கிறவர்களுக்கு, அவர்கள் எளிதில் உடனே நம்பும்படியான மனவியல் தடத்தில் எவரும் எதுவும் அதுவரை சொன்னதில்லை என்பதுதான் என் மறுமொழி. மனிதரை எல்லாவகைகளிலும் ஒத்திருக்கிற சிம்பன்சி,ஒர்ராங்-உட்டாங் போன்ற உயிரினங்களும் முதலில் எதையும் நம்புவதில்லை; பிறகு தமக்கேற்ற முறையில் நம்பவைக்கப்படும்பொழுது எளிதில் தம்மை வழிப்படுத்துவோரை(those who motivate) நம்பி உணர்ச்சிபூர்வமான தொடர்பை அவர்களுடன் வைத்துக் கொள்கின்றன.” பல அமைப்புகளில் குருமார்களும் அவர்களின் சீடர்களும் அவ்வாறு இருப்பதைச் சிறுவயதிலேயே உணர்ந்துகொண்டதால்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, தம்மேல் அன்னி பெசன்ட் அம்மையார் சுமத்திய ‘உலககுரு’ என்ற பெருநிலையைத் துறக்க நேரிட்டது.

தன்னை குருவாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவே, தன்னிடம் வருபவர்களிடமும் தன் நூல் வாசிப்பவர்களையும், தன்னை ஒரு கண்ணாடிபோலப் பயன்படுத்தித் தம்மைத் தாம் அதில் பார்த்துக்கொண்டுவிட்டு உடைத்தெறிந்துவிடுமாறு கேட்டுக் கொண்டார் அவர்.

எப்படி கடன் வாங்குபவனைவிட கடன்கொடுப்பவன் தன் நல்லியல்பையும் நல்லிணக்கத்தையும் படிப்படியாக இழந்து, கழுத்துக்குமேலே நாகமாகவும் கீழே மனிதனாகவும் உருவகிக்கப்படுகிற ‘கான்மேன்’ எனப்படும் நயவஞ்சகனாக உருமாறும் நிலை ஏற்பட்டுவிடுகிறதோ அப்படி பலருக்கு வழிகாட்ட முற்படும் சிலர் ஆகிவிடுகிறார்கள் என்று தலாய்லாமா எச்சரித்தார். இதற்கு நேர்மாறாக, ஜான் இர்விங் கழுத்துக்குமேலே பச்சைத்தவளையாகவும் கீழே மனிதனாகவும் விளங்குகிற ஒரு வேறுபட்ட சிந்தனையாளனை, ‘கார்ப்பின் கண்ணோட்டப்படி இந்த உலகம்’(The World According To Garp) என்ற தம் புதினத்தில் சித்திரித்தார். இதுகுறித்து ஆர்வமுறுகிற நண்பர்கள் அந்தப் புதினத்தையும் அவருடைய மற்றொரு புதினமாகிய ‘ஓவென் மீனிக்காகப் பிரார்த்தனை’(A Prayer For Owen Meanie) என்பதையும் வாசிக்க வேண்டும். குஜராத்தில் பணி செய்து, அமெரிக்க மாநிலம் ஒன்றினுக்கு இறைப்பணியாய்ச் சென்று உயிர் துறந்த அந்தனி-தெ-மெல்லோ அவர்களின் ‘ஒரு நிமிட அறியாமை’(One Minute Nonsense) ‘ஒருநிமிட ஞானம்’(One Minute Wisdom) ‘தவளையொன்றின் பிரார்த்தனை’(Prayer Of A Frog) ஆகியவையும் மாறுபட்ட தடத்தில் சிந்திக்கப் பெற்றவையே. காந்தி கண்ணதாசன் அவர்கள் அவற்றின் தமிழாக்கங்களை வெளியிட்டுள்ளார்.

சரி. இதுவரை கொஞ்சம் வறட்டுத்தனமாகவே எழுதிவிட்டேன். சுவையான சிலவற்றையும் எழுதுகிறேன். ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ‘அளவை இயலில் பாடங்கள்’(Lessons In Logic) என்ற தலைப்பிட்டு சற்றே அல்ல, அதிரடியாகவே மாறுபட்ட சிந்தனைகளைத் தந்திருந்தார்கள். சிலவற்றின் தமிழாக்கம்:

“நான் அறிவுள்ளவனாகப் பிறந்தேன். கல்வி என்னைப் பாழாக்கி விட்டது.”

“பிச்சைக்காரத் தந்தைக்குப் பிறப்பது விதி; பணக்கார மாமனாரை அடையவில்லையேல் அது அடிமுட்டாள்தனம்.”

“நாம் பிறருக்கு உதவவே இருக்கிறோம் என்பது உண்மையென்றால், பிறர் எதற்காகத்தான் இங்கு இருக்கிறார்கள்?”

“ஒளி ஒலியைவிடவும் வேகமாகப் பயணம் செய்கிறது. இதனால்தான் நீங்கள் சந்திப்பவர்கள் ‘பளிச்’சென்று தெரிகிறார்கள் – அவர்கள் வாயைத் திறந்து, அவர்கள் பேசுவதை நீங்கள் கேட்கும்வரை.”

“விலங்குகளை நாம் நேசிக்கவே வேண்டும் – அவை அவ்வளவு சுவையானவை.”

“ஒவ்வொருவரும் கட்டாயமாகத் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். ஆம். பார்க்கப்போனால் மகிழ்ச்சி என்ற ஒன்று மட்டும்தானா வாழ்க்கை?”

“உங்கள் எதிர்காலம் நீங்கள் காணும் கனவுகளைப் பொறுத்தே அமைகிறது.’ ஆகவே போய்…படுத்துத் தூங்குங்கள்.”

“கடவுள் உறவினர்களைத் தருகிறார். நல்லவேளையாக நண்பர்களை நாமே தெரிவுசெய்துகொள்ள விட்டிருக்கிறார். அவருக்கு நன்றி …”

karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்