சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

கே. ராமப்ரசாத்.


இன்று சண்டக்கோழி படம் பார்த்தேன். மகிழ்ந்தேன். இப்படம் எழுப்பும் இரண்டு வினாக்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

ஒன்று ராஜ்கிரண், இந்த சண்டையும் இரத்தமும் என் விருப்பம் இல்லாமலே கைமாறி என்னிடம் வந்துவிட்ட ஒன்று. உனக்கு எதற்கு இது ? என்று விஷாலிடம் சொல்வார்.

இரண்டாவது, விஷால், தப்பு செய்தவனைத் தட்டிக்கேட்க யாருமில்லையா என்று புலம்பினீர்களே. நான் தட்டிக் கேட்டேன். அதற்காக என்னைப் புறக்கணிப்பது சரியா ? என்று மீரா ஜாஸ்மின் அப்பாவிடம் கேட்பார்.

ஒருவரின் வாழ்வு எனபது சமரசம் செய்தபடி வாழ்வதா அல்லது போராடியபடி வாழ்வதா என்னும் கேள்வியை செயல் தூண்டுதலை முன்னிறுத்தி வந்துள்ள சண்டக்கோழி படம் என்னைக் கவர்ந்துவிட்டது.

ஒருவர் பிறப்பால் சண்டக்கோழியா அல்லது வளர்ப்பினாலா என்பது விவாதத்திற்குரிய ஒன்று. அந்தந்த சூழ்நிலைகளே அவ்விதம் ஒருவரை உருவாக்கும் அல்லது உருவாக்காமலும் போகும். ஒவ்வொருவருக்கும் சண்டையிடும் ஆசை (!) உள்ளது போலவே, தாம் பிறரால் அன்பு செலுத்தப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற ஆசையும் உண்டு. இரண்டுமே எதிர் எதிரான ஒன்று.

இதில் ஒருவரின் செயல்தூண்டுதல் என்பது, அவரின் நோக்கம் மற்றும் இலட்சிய முன்மாதிரி, இவற்றின் பாதிப்பில் அடைந்த நிலை மேலும் அந்த நிலையில் அவர் சமூகக் குழுக்களின் வாழ்வியல் பற்றிய தர நிர்ணயங்களையும், தேவைகளையும் எந்த அளவிற்குச் சமரம் செய்துகொண்டோ, அல்லது செய்யாமலோ பூர்த்தி செய்கிறார் என்பதில் உள்ளது.

மாடியில் நண்பர்களுடன் குடிக்கச் செல்லும் விஷாலையும், நட்பு வட்டத்தையும் குச்சியால் தட்டியபடி திட்டும் தாத்தா ஒரு வகை என்றால், கொடூரமும், வெறுப்பும் சக மனிதரிடம் ஏற்படும்போது அவரைக் கொல்லவும் தூண்டும் ஒரு காரணிகளாக இவை அமைந்துவிடுகின்றன. மேலும், இந்த உணர்வு தலைமுறை தலைமுறையாகக் கைமாறி

வேறு வருகிறது. ஒரு மன வெறுப்பின் எதிர்வினை பல கை மாறி, ஒரு வாழ்வின் நோக்கமாக, செயல் தூண்டுதலாக (இலட்சியமாக ?! ) உருவெடுப்பது – தலைவாசல் விஜய் மூலம் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு நோக்கமில்லாத வாழ்க்கை வாழும் – காசியாக நடித்தவரின் பெயர் தெரியவில்லை – பாத்திரப்படைப்பு அருமை.அவரின் நோக்கமாக விஷாலின் மரணம் என அமைவது மேலும் அந்த நோக்கத்திற்கு அவர் போடும் செயல் திட்டங்கள் எல்லாமே அவரின் இலக்கில்லாத வாழ்வின் பின்னணி என்பது வசனமாக சொல்லப்பட்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட இனத்தவரைச் சொல்லி ‘இலட்சிய முன்மாதிரி ‘ யாக அரிவாள் வாழ்க்கையை மேற்கொள்ளும் ராஜ்கிரண், வாழும் வாழ்க்கைக்குச் செயல் தூண்டுதலாக அவரின் கட்டுப்பாட்டில் இல்லாமலே அவர் வாழ்க்கை அமைந்து விட்டதைச் சொல்லப்பட்ட விதம் சற்று எளிமையானது. தேசத்தின் மீதுள்ள காதலில் தம் உயிரையே கொடுக்கும் ஜவான்கள் போல, அந்த ‘இலட்சிய முன் மாதிரி ‘ வாழ்விற்கு விலையாகப் பலர் கை, கால் மற்றும் உயிரையே கொடுப்பது நிஜ வாழ்வில் சற்று அதிகமானது ஆனால் உண்மையானது. மேலும், தேவையில்லாத பொறுப்புக்களைத் தாம் கொண்ட நட்புக்காக, உறவின் முறைக்காக வலிந்து சுமப்பது போல பலர் ராஜ்கிரணை ஆதரிப்பதும் நிஜ வாழ்வில் சற்று அதிகமானது ஆனால் உண்மையானது.

ஒருவர் வாழும் சமுதாயத்தின் கலாச்சாரம் ‘ஒருவர் வாழும் வாழ்வின் நோக்கம் ‘ என்ன என்பதை போதிக்கும் சக்தி வாய்ந்தது. உதாரணமாக, பல ஜாதிப் பிரிவுகள் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்துடன் ஒருவரைச் செயல்பட வைக்கும் ஒரு நேர்மறையான சக்தியாகும். இதைபோலவே, கடின உழைப்பும், ‘சுத்தமான ‘ வாழ்வும் யாரை வேண்டுமானாலும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக உருவாக்கிவிடும் என்ற போதனை ஒவ்வொரு அமெரிக்க சிறுவனையும் ஊக்குவிக்க நம்பும்படியாக சொல்லப்படுவதுண்டு. ஆனால், இதுபோனற நோக்கமும், வழிகாட்டுதலும் எல்லாருக்கும் இதை அடைய முடியாது, முயற்சி செய்யும் பலபேரில் ஒருவருக்குத்தான் இது என்பது சொல்லப்படாத செய்தி. ஒரு சிலரே புகழ் பெற்றவராகவும், தலைமைப் பொறுப்பிலும் இருக்கின்றனர்.

இவ்விதம் முயல்வோரில் இந்த இலக்கை அடைய முடியாதவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது எப்படி தம் வாழ்வை மாற்றியமைக்க திட்டமிட்டு அதில் வெற்றி காண்கிறார்கள் என்பது வேறு ஒரு தனிப் பதிவாகப் போடும் அளவிற்கு செய்தியடங்கியது. தாழ்வு மனப்பான்மை என்பது இந்த மாற்றத்தில் ஒருவர் சந்திக்கும் மிக முக்கியமான புள்ளி. வம்புச் சண்டைக்காரர்களாக மாறுவதும் உண்டு.

இந்த வகையானவர்களுக்கு இப்படத்தில் அழகாக இரண்டு வித கதாப்பாத்திரங்கள்.

1. கதாநாயகி – மீரா ஜாஸ்மின்

2. விஷாலின் முறைப் பெண்களாக நடிக்கும் இரு நடிகைகள் – பெயர் தெரியவில்லை.

படிப்பில் சுட்டியாக இல்லாத மீரா ஜாஸ்மின், அந்த நிலமைக்கு யார் காரணம் என்ற விவாதத்திற்குப் போகாமல், கண்டிப்பான அப்பா என்ற பாத்திரப்படைப்பு எப்படி அது போன்ற ஒரு மகளைக் கையாளும் என்று அழகாகச் சொல்லப்பட்டிருக்கும். மீரா ஜாஸ்மின் தமது படிப்பில் சுட்டியாக இல்லாதத் தோல்வியை மற்ற செயல்பாடுகளில் குறிப்பாக வம்புச் சண்டைக்காரராக மாறிவிடுவது, இது போலத் தம் வாழ்வின் இலக்கான கல்வி என்ற இலக்கை அடைய முடியாதவர்களின் ஒரு நடவடிக்கை எனலாம்.

இந்த நடவடிக்கைக்கு உதாரணமாக மீரா ஜாஸ்மின், வீட்டில் உண்டியல் காசு திருடுவது, பொதுவாக ஒரு சமூகம் தவறு எனக் கண்டிக்கும் செயலை விருப்பத்துடன் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்குவது, சினிமா அரங்கில் நாற்காலி மேல் ஏறி நின்று, ‘வவ்வாலுக்கு பொறந்தவனே ‘, ‘சொட்டத் தலையா ‘ என்று கூவுவது எனப் பல காட்சியமைப்புகள்

சிறப்பானவை.

விஷாலின் முறைப்பெண்கள் விஷாலுக்கு மீரா ஜாஸ்மின்னைத்தான் பிடிக்கிறது என்று தெரிந்த பிறகு, இதுபோல பாதிப்படைந்தவர்கள் யதார்த்தமாகச் செய்யும் தற்கொலையும், என் சாவுக்கு விஷால் தான் காரணம் என்று பழிவாங்கும் நடவடிக்கையாகக் கைப்பட எழுதும் கடிதமுமாக காட்சியமைப்பு இல்லாமல், விஷால், பிடித்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று ராஜ் கிரணிடம் வசனம் பேசி அவரைச் சம்மதிக்க வைப்பது ஒரு வகையான நடவடிக்கை ஆனால் மிகச் சிறந்த நடவடிக்கை.

இதுபோல சமரசம் செய்துகொண்டு வாழ்வது ஒரு புத்திசாலித்தனமான இனிய வாழ்விற்கு அடிப்படை என்பேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பியின் கணவர் வேலைப் பளுவில் அவரைக் கவனிக்காமல் வேலை வேலை என்று அழுதபடியே அலைவார். பொதுவாக இதைத் தம் கணவர் தம்மை விரும்பவில்லை என்ற நோக்கில் புரிந்துகொண்ட பெண்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னவென்றால்,

1.விவாகரத்து

2. ஓவென்று அழுது புலம்புவது

3. சதா சண்டை போடுவது

4. பிறந்த வீட்டுக்கு ஓடுவது

5. தைரியம் இருந்தால் கள்ளக்காதலில் இறங்குவது

என் நண்பி செய்த செயல் மேற்சொன்ன எந்த வகையிலும் சேராதது. அவர் அவருக்குப் பிடிக்காத ஆனால் தம் கணவரின் வேலைக்கு இசைவான ஒரு படிப்பைப் படித்துத் தனியாக செயல்படத் துவங்கிவிட்டார். இதில் அவர் அடைந்த நற்பலன்கள்.

1. புதிய திறமை வெளிவந்தது

2. தனிமை என்ற கொடுமை இல்லை

3. கூடுதல் வருமானம்

மேலும், இவரின் செயல் கணவரையும் உற்சாகப்படுத்தி, அவரின் வேலைப்பளுவையும் தம் மனைவியின் உதவியால் குறைத்துக் கொண்டுவிட்டார். இப்போது இருவருமே ஒரு வேலையைப் பகிர்ந்து செய்கின்றனர்.

சண்டக்கோழி படத்துக்கு பிற விமர்சனங்கள்

1.சண்டக்கோழி-விமர்சனம்

http://vivasaayi.blogspot.com/2005/12/blog-post_113583663931734164.html

2.உங்க அழகே உங்களுக்குப் போதுமா ?

http://www.thozhi.com/issue10/vivatham.php

—-

kramaprasad@gmail.com

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்