– ஷாராஜ்
அவன்தானா ?
சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல் கேட்ட மாதிரி இருந்ததே ?…..யோசனையாய் திரும்பி நாற்காலியில் பதிகிறார். சமையலறையிலிருந்து சாரதாம்பாவின் முகம் எட்டிப் பார்த்து விலகுகிறது.
அவருக்கு ஒரு புதுசட்டை வேண்டியிருக்கிறது. இது பழையதாகிவிட்டதில் நைந்து போய்விட்டது. கனத்தில் அதன் வியர்ப்பு வாசம் சகிக்க முடியவில்லை. சுருக்கம் விழுந்து, பித்தான்கள் அறுந்து, சில இடங்களில் கிழிசலை ஒட்டுப் போட்ட தையல்களுடன் எத்தனை நாள் தாங்குமோ ? வெகு நாட்களாகவே புதுச் சட்டை வாங்கும் ஆவலிலிருக்கிறார்.
இப்போது அவர் விரும்புவது மெல்லிய சட்டை. இதிலிருந்து மாறுகிற வரை இறுக்கத்திலிருந்து மீள வழியில்லை. அதைப் போட்டுக் கொண்டு ‘கிராமத்தில் இருக்கிற அம்மாவையும் பார்க்கப் போகணும் என்று ஆசை. போனால் பாட்டியையும் தாத்தாவையும் கூடப் பார்க்கலாம். அப்பாதுரைக்கு மூத்தவர்கூட அங்கேதான்.
ஆனால் போக புது சட்டையில்லாமல் முடியாது. இதன் அழுக்கு தனக்கே சகிக்கவில்லை.
‘கிராமத்தை ‘ப் பற்றி அம்மா இங்கே இருந்தபோது இவர் சிறுவனாக இருந்தபோது சொல்லியிருக்கிறாள். குப்பையும் கழிவும் சகதியும் இழைத்துச் செய்த இந்நகரம் போலல்ல அது. இதன் உரத்திரைதலும் சீற்றமும் அங்கே கிடையாது. அங்கே பசுமையின் எழில் மிகுந்த பள்ளத்தாக்கு, அதில் மணமண பரப்பி விரிகிற மலர்களைச் சுமக்கும் செடி கொடிகள், புல்வெளிகள், கிளிகளின் சந்தம், முயல்களின் துள்ளியோடல். அங்கிருப்பவர்கள் நிலைத்த இன்பத்தில் திளைப்பவர்கள். அங்கே குளிர்ந்தகாற்று வீசி இதமாக வருடிக் கொண்டே இருக்கும்……
அப்பாதுரையின் பெருமூச்சு ஏக்கத்தில் கனல்கிறது. மூச்சு முட்டுகிற அறையின் புழுக்கம். ஒற்றை ஜன்னலில் வருகிற காற்றைப் பக்கத்து வீட்டுச் சுவர் தடுத்து விடுகிறது. இந்த நகரமே இப்படித்தான் ‘ புழுக்கத்தில் வெந்து கொண்டிருக்கிறது. ஒருவர் வெளியிட்ட மூச்சை உள்ளிழுத்தே அடுத்தவரின் சுவாசம், ஒருத்தரின் வியர்வையை அடுத்தவர் உறிஞ்சியும், மற்றவர் இரத்தத்தை பிறத்தியார் சிந்த வைத்தும் நாற்றத்தையே விழுங்கி செரிக்க வேண்டியிருக்கறது.
புழுங்கி வியர்க்கும் சட்டை. பாவப் பெரு நகரம்.
சாய்ந்தமர்ந்து காலத்தின் நேற்றுகளைத் தன் மீது அப்பாதுரை விசிறிக் கொள்கிறார். நெஞ்சை அழுத்துகிற அம்மாவின் அணைப்பு. பால் வாசம் வீசுகிற அவரது வாயில் அவளின் முத்தம் உறைந்திருக்கிறது. தொப்புள் கொடியை அறுத்து இந்தத் துயர் நிறைந்த நகரத்தோடு அவரைப் பிணைத்து வைத்தவள் அவள்.
நினைவுகள் இருண்டும் குகைக்குள் அந்த வார்த்தைகள் செதுக்கப் பட்டிருக்கின்றன. ‘எங்க காலம் கஷ்டத்தோடு போயிருச்சு. நீங்கலெல்லாம் தலையெடுத்து எங்களை காப்பாத்தாட்டியும் தேவல… எங்கியாச்சும் நல்ல உத்தியோகத்துல வெய்யப் படாத இருக்கோணும் என் புள்ளைக. ‘
‘வெயில் படாத உத்தியோகம், புழுக்கமான நகரத்தில் ‘ உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார். இன்று அவர் விட்டுப் போகத் துடிக்க இந்நகரம் இந்தக் குறையை அல்லவா காரணமாகக் கொண்டிருக்கிறது ‘ அரைக்கோள மேற்பாதியில் கவிழ்ந்து எங்கோ வளையும் வானத்தின் கீழ் இந்நகரத்திற்கு விசாலமான அமைப்பிடம் கிட்டவில்லையோ… எல்லாக் கதவுகளையும் இறுக்கித் தாழிட்டு விட்டு அறைகள் வெம்பித் தவிப்பதேன் ?
துணிக்காரன் பார்வைக்குத் தப்பித்துக் கொண்டேயிருக்கிறான். முன்னொரு தடவை அவன் வந்திருந்தபோது அவர் மட்டுமே இருந்தார். புது சட்டையை வாங்கிக் கையில் பிடித்திருக்கும்போது நெஞ்சில் வலி மெல்லக் கிளம்பியது. அது பெரிதாகப் புறப்படும் முன், பக்கத்து வீட்டிலிருந்து அரட்டை முடிந்த மனைவி சாரதாம்பா வந்து விட்டாள்.
‘என்னங்க ஆச்சி ? என்ன பண்ணுது ? ‘
பரபரத்து அவரது கை நெஞ்சிலிருப்பதைக் கண்டு நீவிவிட்டாள். பார்த்திருந்து விட்டு சட்டையை எடுத்துக் கொண்டு துணிக்காரன் போய்விட்டான். ‘என்னங்க ஏதோ வெளியிலே வெரிச்சு பார்க்கிரீங்களே ? யாரையும் காணோமே ? ‘ என்கிறாள் சாரதாம்பா.
அன்று போனவன் திரும்ப வரவே இல்லை. அவனுக்காக தினமும் காத்திருத்தல் இன்னும் தொடர்கிறது.
அப்பாதுரை விசிறுவதை நிறுத்தியிருந்தார்.
மோட்டு வளையில் பார்வை லயிக்கிறது. நெற்றிச் சுருக்கெழுத்தாக கவலைக் கோடுகள். அதன் விரிவாக்கம் உள்ளுக்குள்.
நகரத்தை ஏதோ சாபம் பீடித்திருக்கிறது. விமோசனமானது இங்கிருந்து போவதுதான். வீதியில் மலர்ந்த ஒரு முகத்தையேனும் எந்தக் கழுத்திலும் காண முடிவதில்லை. மலர்ந்திருப்பது முகமாகவும் இருப்பதில்லை. தேமல் முதுகுகளை மறைத்து பாலியெஸ்டர் சட்டைகள், பட்டு ஜிப்பாக்கள், கதர் துண்டுகள் இன்னபிற. ஆனால், அப்பா துரைக்குத் தேவையான புது சட்டை எங்கேயும் கிடைத்த பாடில்லை. அதற்கு, அவன் தான் வந்தாக வேண்டும்.
அவன் வருகிறானில்லை. வியர்த்ததின் உப்புப் படிவுகள் முகத்தில் தேங்கி அரிப்பெடுக்கின்றன. பாளங்கள் வெடித்த உவர் நிலம்.
நாட்களும் மாதங்களும் காலண்டரில் கிழிகின்றன.
விழித்திருக்கிற இரவில் தூக்கத்தை யோசனைப் பூனை வந்து குடித்து விட்டுச் சாவகாசமாகப் போகிறது. ஆனாலும் அவன் வருவதாயில்லை. வருவதற்கான வழியுங் காணோம். வரவழைப்பது அவமானம், கெளரவ இழுக்கு.
‘ஏம்பா….. எங்ககூட வந்து கொஞ்ச நாள் இருங்களேன் ரெண்டு பேரும். ‘
ஒண்டு குடித்தன மகனின் அழைப்பைப் புன்னகையில் பூசி மெழுக வேண்டியிருக்கிறது. மருமகள் சொற்களை வெந்த கறியாகத்தான் சுவைத்துத் துப்புவாள் என்பது சாரதாம்பாவின் பயம். காது மடல்களைக் குதறும் வெறி கொண்ட ஏசல்கள். ஆனால் அவர் கவலைகளை எல்லாம் இந்த சிறு விஷயங்களில் விரயமாக்கமாட்டார்.
நகரம் ஏமாற்றம் சூழ்ந்தாயிருக்கிறது. நிஜத்தின் ஒடுங்கிய பித்தளையைப் பொய் முலாமாக்கிக் கொடுத்தால் தங்கமென்று வாங்கிப் போக வாடிக்கையாளர்கள் உண்டு. எல்லாமே வியாபாரமாகிவிட்டது. எதிர்பார்ப்புகளின்றி எதுவுமில்லை.
‘உன்னை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி விடுகிறேன். வயதான காலத்தில் எனக்கு சோறு போடுவாயா ? ‘
‘ஏன் நீங்கள் இங்கே கஷ்டப்படுகிறீர்கள், என் வீட்டுக்கு வாருங்கள். அவளும் வேலைக்குப் போவதால் குழந்தைகளை கவனிக்க ஆளில்லை. ‘
ஆனால் அப்பாதுரை அப்படிப்பட்டவர் அல்லர்; அவர் அம்மாவும்.
எத்தனையோ வருடங்களின் பூச்சியரித்த பழைய புகைப்படமாக அவருக்குள் அவளிருக்கிறாள், பழக்கமில்லாத கிடங்கு அறையில். சிலந்தி வலையும் ஓட்டடையும் விலக்கி எப்போதாவது போய்ப் பார்ப்பார். இப்போது முகங்கூட பூச்சியரிக்கப் பட்டுவிட்டது. ஞாபக மிச்சங்கள் மீதமிருக்கின்றன.
இன்றும் அவர் அம்மாவை யோசித்துக் கொண்டிருக்கிறார். அது ஒரு பூங்கா. அம்மா விரல் பிடித்து அவரைக் கூட்டிப் போனாள். விளையாட்டுக் காட்டினாள். நடக்க சுகமாகும் மெத்தென்ற புற்கள். அங்கே ஒரு பூ மரம், செடியுமல்லாமல் மரமுமில்லாமல். காம்பு சிவந்த பவழமல்லி. மணத்து நின்றதின் நினைவுகள் இமையிலிருந்து விழும் நீர்த்துளி இதழ்களாய் உதிர்கின்றன. கண்ணோரம் வழித்தெடுத்து விரலால் காற்றைச் சுண்டுகிறார்.
‘அப்பு…..தேவு….. ‘ அண்ணனையும் அவரையும் அருகில் அழைத்தாள் அம்மா. ‘நான் போறேன், ரெண்டு பேரும் சண்டைப் போடாம இருக்கோணும் என்ன ? ‘
‘நாங்களும் வர்றோம்மா. ‘
‘இப்பல்லாம் அங்க வரக்கூடாது அப்பாவை பதனமா பாத்துக்கங்க. ‘
‘சரீம்மா… ‘ தேவராசு அண்ணன்தான் தலையாட்டினான். அப்பாதுரைக்கு சந்தேகம் ‘எப்பம்மா வருவே ? ‘
‘வருவேன் ‘ புன்னகையுடன் போனாள். வருவது பொய்யென்று பிற்பாடுதான் தெரிந்தது. துணிக்காரன் வந்து கிராமத்துக்கு அம்மாவை அனுப்பி வைத்துவிட்டான் யாருக்கும் தெரியாமல் அப்பாவுக்கு கூட.
எங்கே அவன், இன்னும் வரவில்லை ?
துணிக்காரனுக்குக் காத்து அவர் கதவு திறந்திருக்கிறார். புழுக்கத்தினாலும்தான். இங்கே வர அவனுக்கு இப்போது சமயமில்லாமலிருக்கலாம். வேறெங்காவது போயிருப்பான். எப்போதுதான் வருவானோ ? தனிமையிடம் பேசிக்கொண்டு தானிருக்கிறார். கேட்டு என்றைக்கு மனசிரங்குமோ அவனுக்கு ?
உச்ச வெக்கை காலமாயிற்று. கொப்புளங்கள் எழுந்தன. அறைக்குள் மிதக்கிற அவலம் அவரைச் சூழ்ந்து அடுத்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை. எல்லோர் அறைக்குள்ளும் அனலடிக்கும்தான். அவருக்கு மட்டும் அதிகமோ ? பாவத்தில் உடைந்த கொப்புளங்க்களிலிருந்து ரணங்களையும் சீழையும் தின்று விட்டு வந்து காற்று அவரது முகத்திலும் நக்குகிறது. ஒட்டுவார் ஒட்டி.
கிழிந்த சட்டையில் சிந்திக்கிறார். சுற்றிலும் செம்மண்ணால் பூசி உள்ளே விறகு மூட்டி எரியும் செங்கல் சூளையில் அவரை வைத்தது யார் ?
‘அம்மா எரியுதும்மா. ‘ சின்ன வயது அப்பாதுரை.
‘சட்டையைக் களட்டிப் போடு. அது அளுக்கு சட்டை. அதப் போட்டுட்டு திரிஞ்சா இப்படி வேகாதா பின்ன ? ‘ அப்போதைய அம்மா.
சரிதான். ஆனால் துணிக்காரன் வந்தாலல்லவா வேறு புது சட்டை வாங்க முடியும் ? சீக்கிரமே இந்த நகரத்திலிருந்து வெகு தூரம் போக முடியும் ? ஏன் இப்படி புழுக்கம்…. உள்ள காற்றையும் அடைத்துக் கொண்டு இவர்கள் நிற்கிறார்கள். மனைவியும், மகனும், பேரக் குழந்தைகளும் அறைக்குள் அடைந்திருக்கிறதால் இப்படி.
படுக்கையிலிருந்தபடி பார்க்கிறார். மகனுக்கும் மனைவிக்கும் இடைவெளியில் ஜன்னலுக்கப்பால் யாரோ நிற்கிறார்கள். யார் ? அவன்தானா ? ஆமாம். அவனே தான். அவர் முகம் பூக்கிறார். கம்பிகளுக்கிடையில் அவன் புன்னகைத்து நிற்கிறான்.
‘அப்பாதொர…. புது சட்டை கொணாந்திருக்கேன். ரொம்ப நாளா கேட்டிட்டிருந்தியே, இந்தா….. ‘
அப்பாதுரை சட்டையைக் கழற்றிவிட்டு எழுந்து போகிறார். பழைய சட்டையை கழட்டினதுமே புழுக்கம் குறைந்ததாய்ப் படுகிறது. புது சட்டையை வாங்கி அணிந்து கொள்கிறார். துணிக்காரன் வெளியேறிக் கொண்டிருக்கிறான்.
அவருக்கு சட்டை பிடித்திருக்கிறது. புது சட்டை, அணிந்திருப்பதே தெரியாமல் மென்மையாக, தூய்மையாக இருக்கிறது. இனி இங்கு புழுங்கிக் கிடக்கும் அவசியமில்லை.
சாரதா…..சாரதா……
அழைக்கிறார் அவருக்குக் குரல் எழும்பாதிருக்கிறது. படுக்கையில் அவர் கழற்றிப் போட்ட பழைய சட்டைக்கருகில் நின்று மனைவியும் மகனும் ஓவென்று அழுது கொண்டிருக்கின்றனர்.
பழைய சட்டையை அணியும் போது, தான் மட்டும் அழுதோமென ஞாபகத்தில் வருகிறது அப்பாதுரைக்கு.