சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

சு.பசுபதி, கனடா



“சார், என் இதயத்துடிப்பு, அவளுடைய பெற்றோர் . . எவரும் என்னைக் ‘கண்டுக்க’ மாட்டேன் என்கிறார்களே? என் நிலையில், ஒரு சங்க காலத்துக் காதலன் என்ன செய்திருப்பான்? ” என்று கேட்டான் என் இள நண்பன், ரஜனி.

“தெரு வீதி ஒன்றில் மடலூர்ந்திருப்பான்” என்றேன்.

“??? என்ன, சார், கேட்டாலே பூரான் ஊறுவது போல் உடல் கூசுதே? அது என்ன கூத்து? கேட்கவே பயமாயிருக்குதே. இருந்தாலும் சொல்லி விடுங்கள் ” என்றான் ரஜனி.

ரஜனியின் தந்தை பனிச் சறுக்கு விடுதி (Skiing Lodge) ஒன்றை நடத்துபவர். அவரைப் பார்க்க ஒருநாள் நான் சென்றிருந்தபோது, பனியில் சறுக்கும் அழகான இளம் பெண்களைப் பார்த்துக் கொண்டே என்னிடம் பேசிக் கொண்டிருந்த ரஜனிக்குத் தன் காதலியின் நினைவு வந்திருக்கவேண்டும். மடலூர்தல் அல்லது மடலேறுதல் பற்றிச் சொல்லும் பேரெயின் முறுவலாரின் குறுந்தொகைப் பாடலை அவனுக்குச் சொன்னேன். நீங்களும் கேட்கிறீர்களா?

எயில் என்றால் முப்புரங்கள் என்று பொருள். திரிபுரத்தைச் சிரித்தே அழித்த சிவனின் பெயரைக் கொண்டவர் இப்புலவர். சோழ நாட்டில் காவிரியின் கரையில் ‘பேரெயில்’ என்று தேவாரம் பெற்ற ஒரு ஸ்தலம் உண்டு. இவர் அவ்வூர்க்காரராக இருக்கலாம் என்கிறார் உ.வே.சாமிநாதய்யர். புறநானூறிலும் இவர் பாட்டு ஒன்று உள்ளது.

காதலனைத் தன் தலைவியுடன் சேர்த்து வைக்க மறுக்கும் தோழியிடம் தலைவைன் சொல்கிறான்:

” ஆண்களுக்குக் காதல் முற்றினால், என்ன செய்வார்கள் தெரியுமா? பனை மடலையே குதிரையாகக் கொண்டு அதில் ஊர்ந்து வருவர்; எருக்கம்பூ மாலையை உண்மைக் காதலின் அடையாளமாகத் தலையில் அணிந்து கொள்வர். தெருக்களில் கூடும் பலரும் தம்மைப் பார்த்து ஆரவாரிக்கும் நிலைக்கு உட்படுவர். தன் காதல் கைகூடாவிடின் சாதலுக்கு உரிய செயலான ‘வரை பாய்தல்’ (மலையிலிருந்து குதித்து உயிர் விடுதல்) போன்ற பிற செயல்களையும் செய்யத் தயங்கார்”

மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப — காமம் காழ்க்கொளினே. (குறுந்தொகை 17)

[ மா-குதிரை; கண்ணி-மாலை; மடல்-பனைமடல்; காழ்க்கொளின் –முதிர்ந்தால்;
மறுகு-வீதி; பிறிது-வேறொன்று, அதாவது ‘மலையிலிருந்து குதித்தல்’ போன்ற பிற செயல் ]

” சார், சார், என்ன விளையாடறீங்க? எழுதியவர் உண்மையில் ஒரு பெண் புலவரோ? ஆண்கள் மேலே ஒரே ‘காட்ட’மா இருக்கார் போல இருக்கே? அதான், சும்மா இப்படி எழுதியுள்ளார், இல்லையா? ” என்றான் ரஜனி.

“இல்லை, ரஜனி, இது ஒரு பழங்காலப் பழக்கம். மடலேறும் பழக்கத்தைப் பற்றி திருமங்கையாழ்வார் அருளிய சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற பிரபந்தங்களினாலும், அதன் உரைகளிலிருந்தும் அறியலாம். தலைவியை அடைய முடியாத தலைவன் உடல் முழுவதும் சாம்பல் பூசி, எருக்கம், ஆவிரம் பூமாலைகள் அணிந்து, தன் உருவையும், தலைவி உருவையும் ஒரு படத்தில் எழுதி அதைக் கையில் பிடித்துக் கொண்டு பனைமடற் குதிரையில் அமர்ந்து, சிறுவர்களைக் கொண்டு இழுக்கச் செய்வான். ஊரார் அவன் கோலத்தைக் கண்டு நகைப்பர். இவனுக்கும் தன் பெண்ணிற்கும் உள்ள தொடர்பை ஊரார் அறிந்துகொண்டனரே என்று நாணப்பட்டுத் தலைவியின் பெற்றோர் காதலர் இருவருக்கும் மணம் முடிப்பர்.

இதைப் பற்றிச் சொல்லும் ஓர் அழகிய வெண்பா ; அதையும் கேள் .

மங்கையர்தங் கண்ணான் மயங்கினார் வெள்ளெலும்பும்
துங்க எருக்கும் தொடுத்தணிந்(து) –அங்கமெலாம்
வெந்தாறு சாம்பல் மிகஅணிந்து வீதிதொறும்
வந்தேறி ஊர்வர் மடல் . ( கிளவித் தெளிவு ) ”

” என்னா, சார், எலும்பெல்லாம் அணிவார்களா? ஆமாம், இவர்களுக்கு வெட்கமாய் இருக்காதோ?”

” நிச்சயமாய். ஆனால், இந்த சமயம் வெட்கத்தை விட்டுவிட வேண்டும் என்கின்றனர் பல புலவர்கள். ஒரு காதலன் தன் வெட்கத்தை விட்டு இப்படிச் செய்தால், பார்ப்போர் நகைக்க, காதலியின் பெற்றோருக்கு வெட்கம் வந்து, பேசாமல் இருவருக்கும் உடனே மணம் முடிப்பர் என்பது தான் ‘ஐடியா’. புரிகிறதா? மடலூர்தலைப் பாடியதால் ‘மடல் பாடிய மாதங்கீரன்’ என்ற பெயர் பெற்ற புலவர் பாடிய ஒரு பாடலைக் கேள்!

ஒரு தலைவன் சொல்கிறான்:
” நெஞ்சே! அழகுடன் விளங்கும் அசைநடை உடைய தலைவி என்னிடம் நெஞ்சம் நெகிழவில்லை. நான் அவளிடம் ஒரு தூது விடுவேன். முதிர்ந்த பனைமர மடல்களால் செய்த குதிரைக்கு மணிகள் பூட்டி, நான் வெள்ளை எலும்புகள் அணிந்து, எல்லோரும் எள்ளி நகையாடும்படி , ஒரு நாள் என் நாணத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தெருவில் செல்வேன்”

விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி
தெருவின் இயலவும் தருவது கொல்லோ?
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே!
( குறுந்தொகை , 182)

[ விழு – சிறந்த , தலை – உச்சி, பெண்ணை – பனை, விளையல் – முதிர்ந்த, நாண் – வெட்கம் , இயல்வு – இயங்குதல் ]

” ஏன், சார், பெண்ணும் இப்படிச் செய்வாள் , தானே? ”

” இல்லை, ரஜனி, ஆடவர்தாம் மடலூர்வர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் இலக்கணம்!

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல். (திருக்குறள்-1137)

‘கடல் போன்று படர்ந்த காமநோயால் துன்புற்றாலும் கூட மடலேற நினைக்காமல் பொறுமையுடன் இருக்கும் பெண் பிறவி போன்ற பெருமையுடைய பிறவி இல்லை’ என்கிறார் திருவள்ளுவர்! ”

“என்ன, சார், ஒரே தன்மானத்தைக் கப்பலேற்றும் விஷயமாக இருக்கிறதே” என்றான் ரஜனி.

“இதோ பார், ரஜனி, முருகனே வள்ளியின் காதலை அடைய மடலேறத் தயாராக இருப்பதைக் ‘கொந்துவார்’ என்ற திருப்புகழ் கூறுகிறது முருகன் இதை வள்ளியின் தோழியிடம் பகரும் கந்தபுராணப் பாடல் ஒன்று சொல்கிறேன், கேள் :

தோட்டின் மீதுசெல் விழியினாய் தோகையோ டென்னைக்
கூட்டிடா யெனில் கிழிதனில் ஆங்கவள் கோலம்
தீட்டி மாமடல் ஏறிநும் ஊர்தெரு அதனில்
ஓட்டுவேன் இது நாளையான் செய்வதென் றுரைத்தான்.

“சரி, சார், இந்தக் குறுந்தொகைப் பாடல்களை என் காதலியிடம் சொல்கிறேன். அவளுக்குத் தமிழ்ப் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மடலேற நான் தயார் என்று கேட்டவுடனேயே மனசு உருகி என்னைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்வாள்; பெற்றோரிடமும் சொல்வாள் என்று நினைக்கிறேன்” என்று சொல்லிச் சென்றான் ரஜனி.

பின் குறிப்பு:

போன வாரம் தொலை பேசியின் மூலமாக ரஜனி தெரிவித்தது :

மடலேறுதல் பற்றிக் கேட்டவுடன் ஒரே குஷியாம் ரஜனியின் காதலிக்கு. பனைமடல் தோற்றமுடைய ஒரு ‘டொபாக’னில் (Toboggan) அமர்ந்து, சிறுவர்களை இழுக்கச் செய்து ஒரு பனிக் குன்றத்துச் சாய்வில் ரஜனியை வரச் சொன்னாளாம். கூடவே அவள் படத்தையும் கையில் வைத்துக் கொண்டு ‘ மடல் ஊரவா, வரை பாயவா’ என்ற கவியரசு சங்கதாசனின் பாடலையும் பாடிக்கொண்டே வரவேண்டும் என்ற நிபந்தனையாம். பல்லைக் கடித்துக் கொண்டே அதைச் செய்தானாம் ரஜனி. ஆனால், . . . பனிக் குன்றின் அடிவாரத்தில் அவள் தன் தோழிகளுடன் நின்று ,

” மடலில் ஏறும் ரஜனி
வரான் பாரு பவனி ! ”

என்று பாடி, அவனைக் கேலி செய்துவிட்டுப் போய்விட்டாளாம். திருமணம்..உம்ம், பேச்சு, மூச்சு இல்லையாம்!

இன்னும் சிலநாட்கள் நான் ரஜனியைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். என்ன, நான் சொல்றது?

~*~o0O0o~*~

pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா