சங்கச் சுரங்கம் – 19: ஆடுகள மகள்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

சு.பசுபதி, கனடா



பனி கொட்டினாலும், புயல் வீசினாலும், ‘டாணெ’ன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை பத்து மணிக்கு நீச்சல் குளத்திற்குச் செல்வது என் நண்பர் ஒருவரின் வழக்கம். ஆழமான பகுதியில் நீந்தும் துணிச்சலோ, ஆற்றலோ அவருக்குக் கிடையாது; ஆழமற்ற பகுதியில் மணிக்கணக்காக மிதந்து கொண்டே காலத்தைக் கழிப்பதுதான் அவருடைய பொழுதுபோக்கு. இந்த ஒரு மணி நேரத்தில் நண்பர் பிறவிப் பயனையே பெறுகிறார் என்று சொன்னாலும் மிகையாகாது. அவருடைய கை, கால்களுக்குக் கிடைக்கும் தேகப் பயிற்சியை விட, அவர் கண்களுக்குத் தான் அதிக வேலை என்று அவர் மனைவி புகார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்! நிற்க.

கடந்த ஞாயிறு காலை நீச்சல் குளத்திலிருந்து நேராக என் வீட்டிற்குப் பதற்றத்துடன் ஓடி வந்தார் நண்பர். தலை கலைந்து, கண்கள் சிவந்து, அலங்கோலமாக நின்ற என் நண்பரைப் பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. காபி கொடுத்து விசாரித்ததில் நடந்தது தெரிந்தது. தாவிக் குதிக்கும் பலகையில் நின்றிருந்த ஒரு கட்டழகியின் சாமுத்திரிகா லக்ஷணங்களைப் பருகியபடியே பின் நடந்த நண்பர் கால் தடுமாறி (மனம் தான் ஏற்கனவே தடுமாறி விட்டதே!) குளத்தின் ஆழமான பகுதியில் விழ, மூச்சு முட்டி முழுகுந் தறுவாயில் சில நண்பர்கள் அவரைக் காப்பாற்ற, முதலுதவி போன்றவைகளைப் பெற்று, உயிர் திரும்பிவந்தவராய் ஓடி வந்திருக்கிறார் நண்பர். இதற்கு நடுவில், பயந்துபோன ஒரு பார்வையாளர், நண்பரின் மனைவிக்குத் தொலைபேசியில் ‘விஷயத்தை’ சொல்லிவிட்டாராம். எப்படி மனைவியின் முகத்தில் விழிப்பது என்று கவலையில் தொய்ந்திருந்த நண்பருக்குச் சொன்ன ஆதிமந்தி என்ற சங்க காலப் பெண்புலவர் இயற்றிய ஒரு பாடலையும், அந்தப் புலவரின் கதையையும் உங்களுக்கும் சொல்கிறேன் !

முதலில், உள்ளத்தைத் தொடும் அவருடைய பாடல்:

மள்ளர் குழீஇய விழவி னானும்,
மகளிர் தழீஇய துணங்கை யானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. ( குறுந்தொகை, 31 )

[மள்ளர்-வீரர்; பீடு-பெருமை; குரிசில்-தலைவன்]

தலைவன் திரும்பி வராதலால் ஊரார் தனக்கு வேறொரு ஆடவனுடன் மணம் முடித்துவிடுவார்களோ என்று பயந்த ஒரு தலைவி தன் தோழிக்குச் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

” மாட்சிமை பொருந்திய என் இதய நாயகனை, வீரர் கூடும் விழாக்களிலும், பெண்கள் துணங்கைக் கூத்து ஆடுமிடங்கள் அனைத்திலும் தேடிவிட்டேன்; காணவில்லை. நானும் ஒர் ஆடலரங்கத்திற்குரியவளே. என் சங்கு வளையல்களை நெகிழச் செய்த பெருமை பொருந்திய தலைவனும் ஆட்டத்தில் வல்லவனே.” இத்தகைய சிறந்த ஒரு தலைவனின் காதல் தனக்குக் கிட்டி இருப்பதால், தனக்கு ஊரார் இன்னொருவனுடன் மணம் செய்விக்க முயல்வது அறனன்று; அதனால் தோழி அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பாடலின் உட்குறிப்பு.

திருவிழாக் காலங்களில் வீரர்கள் தத்தம் சேரிகளில் விளையாட்டுப் போர் நிகழ்த்துவார்கள்.
துணங்கை என்பது கைகோத்தாடும் ஒரு கூத்து; சிங்கிக் கூத்து என்றும் சொல்வர். “பழுப்புடை இருகை முடக்கி அடிக்கத், துடக்கிய நடையது துணங்கை ஆகும்” என்பது இதன் இலக்கணம். விழாக்களில் பெண்கள் துணங்கை ஆடுதலும், ஆண்கள் அவர்களுக்கு முதற்கை கொடுத்தலும் பழங்கால வழக்கங்கள்.

இப்போது பாடலாசிரியர் ஆதிமந்தியைப் பற்றிச் சொல்கிறேன்.

திருமாவளவன் என்று புகழ்பெற்ற கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தி; ஆடற்கலையிலும், பாட்டிசைப்பதிலும் வல்லவள். சேரநாட்டரசனான ஆட்டனத்தியை (ஆட்டன்+ அத்தி) மணந்தவர். இருவரும் காவிரியின் புதுப்புனல் விழாவிற்குச் சென்றபோது, காவிரி ஆட்டனத்தியை இழுத்துச் சென்றுவிடுகிறது. அழுது சிவந்த கண்களோடு கணவனைத் தேடிச் சோர்கிறாள் ஆதிமந்தி. அவளுடைய நிலையைக் கண்டோ, அவள் கற்பின் மகிமையை நினைத்தோ, காவிரியே ஆட்டனத்தியைக் கடற்கரையில் கொணர்ந்து சேர்க்கிறது. காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் மருதி என்பவளால் காப்பாற்றப்பட்ட கணவனைக் காண்கிறாள் ஆதிமந்தி. மகிழ்ச்சியுடன் கணவனும், மனைவியும் வீடு செல்கின்றனர் .

ஆதிமந்தி, ஆட்டனத்தியைப் பற்றிப் பரணர், வெண்வீதியார் போன்ற புலவர்கள் போற்றியுள்ளார்கள். சிலப்பதிகாரமும் இந்நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது.

” — உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்”

என்று இளங்கோ ஆதிமந்தியின் காதல் வலிமையை எடுத்துச் சொல்கிறார்.
[ புகழ்மிக்க அரசன் கரிகால் வளவன் மகள் ஆதிமந்தி வஞ்சிக் கோமானான ஆட்டனத்தியை மணந்தாள். ஒரு சமயம், அவனைக் காவிரியின் வெள்ளம் அடித்துச் செல்ல, அவள் நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின்சென்று, “ மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். கடல் அவனைக் கொணர்ந்து அவள் முன் சேர்க்க, அவனைத் தழுவிக் கொண்டு, பொலிவு பெற்ற
பூங்கொடிபோல், ஆதிமந்தி ஊர் திரும்பினாள். ] கண்ணகியின் முன்னோடியாக, பூம்புகாரில் வாழ்ந்த ஒரு கற்புக்கரசியாக மதிக்கப் படுகிறாள் ஆதிமந்தி. அவளுடைய கற்பின் வலிமையே அவள் கணவன் அவளுக்குத் திரும்பக் கிடைத்ததின் காரணமாகச் சொல்லப் படுகிறது.

இந்த வரலாற்றை மனத்தில் வைத்துப் பாரதிதாசன் ‘சேர தாண்டவம்’ என்ற நாடகத்தைப் புனைந்தார்; கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ என்ற காவியத்தைப் படைத்தார்.
” நமது தமிழகத்தின் வரலாற்றில் சுடர்விட்டு அணைந்த ஆட்டனத்தி ஆதிமந்தியின் மெய்க் காதல், காவியம் புனைவோருக்குச் சாகாத இலக்கியத்தைத் தீட்டக் கூடிய கருப் பொருளைத் தந்திருக்கிறது” என்கிறார் கண்ணதாசன். இக்கதை ‘மன்னாதி மன்னன்’ என்ற பெயரில் திரைப்படமாகவும் மின்னியிருக்கிறது.

கதையைக் கேட்டுவிட்டு உற்சாகத்துடன் வீடு திரும்பிய என் நண்பர் தன் மனைவியிடம், ” கண்ணே! என் கண்ணின் மணியே! என்னே உன் மகிமை! ஆதிமந்தியைப் போன்ற உன் கற்பின் வலிமையன்றோ இன்று என் உயிரைக் காத்தது ” என்று சொல்ல, அவர் மனைவியோ ஊழிக்கூத்தாடும் காளியைப் போல் ஓர் ஆட்டம் சுழன்று நின்று, ” எப்படி நீர் நீரில் விழுந்தீர் என்பது எனக்குத் தெரியாது என்று நினைத்தீரா? ஒரு வெள்ளைக் குரங்கைப் பார்த்து இளித்துக் கொண்டே நீரில் விழுந்ததும் அல்லாமல், வீட்டிற்கு வந்து என்னையே ஒரு ‘பழைய குரங்கு’ .. ஆதி மந்தி .. என்று வேறு சொல்ல என்ன துணிச்சல் உங்களுக்கு” என்று ‘மொலு மொலு’ என்று சண்டையிட்டு , ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல் குளத்துக்குச் செல்வதற்குத் தடை உத்தரவு போட்டு விட்டாளாம் !
பழங்கால நாடகங்களில் ஒரு பாட்டு வரும் :
“இந்திரன் கெட்டதும் பெண்ணாலே – அந்தச்
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே ”
நண்பரை அடுத்தமுறை பார்க்கும்போது இந்த பாட்டைப் பாடி விளக்கவேண்டும் !

~*~o0O0o~*~
s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா