சு. பசுபதி, கனடா
‘ட்ரிங்’ என்று தொலைபேசி அடித்தது. எங்கள் குடும்ப வைத்தியர் மங்கம்மா தான்.
“உங்கள் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. வாருங்கள், உங்கள் உடல், உணவு, ஔடதம் . . அந்த மூன்றையும் பற்றிச் சிறிது கதைப்போம் “, என்றார். என் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. ” வருவதற்கு முன், உங்களுக்கு ஒரு சின்ன வேலை; சங்க நூலாகிய ‘பெரும்பாணாற்றுப் படை’யைப் படித்து விட்டு வாருங்கள். அது விவரிக்கும் பல உணவுகளை ‘நோ நோ’ பட்டியலில் போட்டு , சிலவற்றை மட்டும் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போகிறேன் ” என்றார். ( சங்கப் பாடல்களில் மிக்க ஆர்வம் கொண்ட மங்கம்மா அவர்களை எங்கள் நண்பர் வட்டாரத்தில் ரகசியமாகச் ‘சங்கம்மா’ என்றே அழைப்பார்கள்! அவருடைய ஆர்வத்தாலேயே அவருக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பும் இருந்தது). எனக்கு இப்போது கொஞ்சம் உயிர் வந்தது ; பெரும் பாணாற்றுப் படை சொல்லும் ஐந்திணை உணவு வகைகளை மனத்தில் நினைவு படுத்திக் கொண்டேன். எதற்கும் வைத்தியருக்காக இன்னொரு முறை நூலைப் புரட்டினேன். சரி, அப்படியே கொஞ்சம் உங்களுக்கும் அந்த நூலைப் பற்றிச் சொல்கிறேனே?
பெரும்பாணாற்றுப் படை பத்துப் பாட்டில் நான்காவது பாட்டு. இந்த பாடலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். ( பட்டினப்பாலை என்ற இன்னொரு பத்துப் பாட்டு நூலும் இவர் கைவண்ணம் தான்). ஐந்நூறு அடிகள் கொண்ட இந்த ஆற்றுப்படை இலக்கியத்தில் புகழப் படுபவன் தொண்டைமான் இளந்திரையன். காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள தொண்டை நாட்டை ஆண்ட ஒரு குறுநில அரசனாக இவன் இருந்திருக்கலாம். பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவனை அந்த வள்ளலைத் தேடிச் சென்று, பரிசுகளைப் பெற்று, தன் வறுமையை நீக்கிக் கொள்ளத் தூண்டுகிறான் இன்னொரு பாணன். ஐந்திணை நிலங்களைத் தாண்டிப் போகவேண்டிய பாணனின் பயணத்தை ஆற்றுப்படை வடிவில் அமைத்த பாடல் இது. பல சுவையுள்ள உவமைகளும், காட்சிகளும் கொண்ட இந்நூலிலிருந்து ஐந்திணைகளைப் பற்றிய சில காட்சிகள் பார்க்கலாமா?
முதலில் பாலை நிலம்.
எருதுகள் இழுக்கும் உப்பு வண்டிகள் போய்க் கொண்டிருக்கும். மிளகுப் பொதிகளைச் சுமந்து வரும் கழுதைகளை மற்ற வாணிகர்கள் ஓட்டி வருவார்கள். யாவரும் கூடுகின்ற இடத்தில், சுங்கவரி வசூலிப்போர் விற்படையுடன் நிற்பர். (ஆமாய்யா, அப்போதே ‘கஸ்டம்’/கஷ்டம்’ இருந்ததய்யா! சுங்கத்திற்கு “உல்குப் பொருள்” என்ற பெயர். )
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்.
( வணிகர்கள் ‘அடிபுதை அரணம்’ ( செருப்பு ! ) அணிந்திருந்தனர் என்கிறார் புலவர்.) அருகில் உள்ள எயினர்களின் (வேடர்கள்) கோட்டைகளில் உடும்பின் பொரியலும், நெல்லரிசிச் சோறும் கிடைக்கும். (நல்ல வேளை! நானோ சைவம். இந்த உணவை என் வைத்தியர் விடச்சொன்னால் பிரச்சினை இல்லை என்று நினைத்து ஓர் அற்பத் திருப்தி அடைந்தேன் !)
அடுத்த நிலம் குறிஞ்சி.
ஏனோ குறிஞ்சி நில உணவைப் பற்றிப் புலவர் ஒன்றும் சொல்லவில்லை.
குறிஞ்சிக்குப் பிறகு முல்லை நிலம்.
இங்கே ஆயர் குடி மகளிரைப் பற்றிய ஓர் அழகிய வர்ணனை. பறவைகள் கூவும் இளங்காலை நேரத்தில் ஆய்மகள் தயிரில் மத்திட்டுக் கடையும் போது, புலி சப்தமிடுவது போன்ற ஒலி வெளிப்படும். ஆய்மகள் விற்பதில் ஒரு நாணயம் கடைபிடிப்பவள்; புளித்த மோரை விற்கமாட்டாள்! கடைந்தபோது பானை மேல் தெறித்த மோர்ப் புள்ளிகள் உலருவதற்கு முன்பே, புதுமோரை வீதிகள் தோறும் சென்று விற்று வருவாள். பிறகு வெண்ணெயைக் காய்ச்சி நெய்யும் விற்பாள். அதை விற்ற காசில் நல்ல, நல்ல பொன்நகைகள் வாங்கிக் கொள்வாள்… என்று இதைப் படிக்கும் பெண்டிர் கனவு கண்டால் …அதுதான் இல்லை என்கிறார் புலவர்! பொன்னை வாங்காமல் , பால் கொடுக்கக் கூடிய பசு, எருமை, இளங்கன்று ..இவற்றை வாங்குவாளாம், பொருளாதார தத்துவம் தெரிந்த அந்த ஆய்மகள்!
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்;
எருமை, நல்ஆன், கருநாகு பெறூஉம்.
இப்படிப்பட்ட ஆயர்குடி வீடுகளுக்குச் சென்றால் பால்கலந்த சோறு கிடைக்கும் என்கிறார் புலவர். (இதை வைத்தியர் எனக்குப் பரிந்துரைத்தால் கொஞ்சம் பிரச்சினைதான்! சிறுவயதில், என் உடல் நிலை சரியாக இல்லையென்றால், நாரத்தங்காய் ஊறுகாயுடன், பால்சோறு தான் எனக்குக் கிடைக்கும்! அதனால் அதைப் பார்த்தாலே , எனக்குச் நோய்/ஜுரம் நினைவு தான் வரும் ! )
பிறகு வருவது மருத நிலம்.
உழவர்கள் பலர் இருக்கும் இடம். உழவர்களின் குழந்தைகள் பழைய சோற்று உருண்டைகளை உண்பர். அந்தச் சோற்றில் வெறுப்பு ஏற்பட்டால், அவல் இடித்துச் சாப்பிடுவர். இந்த உழவர்கள் தம் வீட்டில் நெற்சோற்றுடன், கோழிப் பொரியல் உண்பர். சிறிது தாண்டிப் போனால், ஏரிகளில் மீன்பிடிக்கும் மீனவர் குடியிருப்புகள் வரும். இவர்கள் முதலில் அரிசிக் கூழ் தயாரித்து, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற்றி , நெல்முளைகளைக் கலப்பர். இரண்டு முழுநாள்கள் காத்திருப்பர். ( “ஓ! ‘இந்த’ விஷயமா?” என்கிறார் ‘குடி’யும் ‘குடி’த்தனமாகவும் இருக்கும் நண்பர் கோவிந்தன்.) பிறகு, வெந்நீரில் வேகவைத்து, வடிகட்டி, விரலால் கலக்கி, கள்ளாக மாற்றுவர். அவர்கள் வீட்டில் என்ன உணவு கிடைக்கும்? நல்ல காரக் கள்ளுடன் , மீனும் கிடைக்கும் ! ( ‘ மது நமக்கு, மதுநமக்கு, மதுர மிக்க மது நமக்கு!’ என்று நண்பர் கோவிந்தன் பாடும் பாடல் திடீரென்று மனத்தில் உதிக்கிறது! )
நீர் நிலைகளைக் கடந்து சென்றால் அந்தணர் இல்லங்கள் வரும். கோழிகள், நாய்கள் அவ்வீடுகளுக்குள் நுழையா. சாணியால் மெழுகின வீட்டுத் தரைகள். உள்ளே தெய்வங்களின் உருவங்கள் இருக்கும்; கிளிகள் வேதம் ஓதும். அவ்வீடுகளில் , கருடச் சம்பா (இராசான்னம்) அரிசிச் சோறு, மிளகுத் தூள் தூவப்பட்டு, கறிவேப்பிலை சேர்த்து, நெய்யில் பொறிக்கப்பட்ட மாதுளங்காய்ப் பொரியல், மாவடு ஊறுகாய் இவை கிடைக்கும். (அம்மணி! பரதேவதே! பாபவிமோசனி! மங்கம்மா தாயே! என்னைக் காப்பாற்று! இவற்றைத் தடை செய்யாதே! )
. . . . . . . பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புஉறு பகங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇப், பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவீர்.
[ பறவை பெயர்ப்படு வத்தம் – பறவையின் பெயரைக் கொண்ட நெற்சோறு , சேதா – சிவப்புப் பசு, நறுமோர் வெண்ணெயின் – நல்ல மோரிலிருந்து எடுத்த வெண்ணெயிலே, மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு – ( வெந்ததால்) வெப்பமுறு மாதுளங் காய்களுடனே, கறி- மிளகுப் பொடி, கஞ்சக நறுமுறி அளைஇ – கறிவேப்பிலையின் நல்ல இலையைச் சேர்த்து, பைந்துணர் – பசுமையான கொத்துகள் கொண்ட, கொக்கு – மா(மரம்), நறுவடி விதிர்த்து – நல்ல வடுவினைப் பலவிதமாகப் போட்ட, காடி – ஊறுகாய் , தகைமாண் காடியின் வகைபடப் பெறுவீர் ! – அழகு மேன்மையுடன் விளங்கும் ஊறுகாயுடன் , இத்தகைய பல வகைளுடன் உணவைப் பெறுவீர்! ]
( ஆகா! இந்தப் பகுதி எல்லாப் போஜனப் பிரியர்களும் நெட்டுருப் போட்டுத் திரும்பித் திரும்பிச் சொல்லி மகிழ்ச்சி அடையவேண்டிய தாரக மந்திரம் அல்லவா? ஐயகோ! என் உயிரே அல்லவா இப்போது மங்கம்மா கையில் இருக்கிறது? )
இதற்குப் பிறகு, நெய்தல்; கடற்கரை.
கடல்துறையைச் சிறிது கடந்து சென்றால், உழவர் வீடுகள், சோலைகளின் நடுவே இருக்கும். அங்கே வருவோர்க்கு பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், பனைநுங்கு முதலியவற்றை நிறைய கொடுப்பார்கள். அவற்றை உண்டு தெவிட்டிப் போனால் சேப்பங்கிழங்கு பொரியல் கிடைக்கும்! (சும்மாச் சொல்லக் கூடாது..இந்தச் சங்கத் தமிழருக்கு நல்ல சுவைதான் ஐயா! .. அதுவும் அந்தக் கடைசி விஷயம் மிக நல்ல ‘ஐடம்’ தான்! ஆஹா! )
இதையெல்லாம் திரும்பப் படித்துவிட்டு, டாக்டர் மங்கம்மாவின் முன் போய் , அசடு வழிய நின்றேன். கடுமையான பார்வையால், மூக்குக் கண்ணாடி மேல், என்னை எரித்தார் வைத்தியர். “என்னய்யா, நண்பரே ! ஆண்டேரியோ ஏரியில் பனிக்கட்டி மிதப்பது போல் ‘கொழுப்பு’ உம் ரத்தத்தில் மிதக்கிறதே! ரத்த அழுத்தம் வேறு எகிறுது! இனிமேலாவது….. வாயை, வயிற்றைக் கட்டும் ! அந்த மருத நிலத்தில் உழவர் குழந்தைகள் சோற்று உருண்டைகள் சாப்பிடுவார்களே, அவற்றிற்குப் பதிலாக நீங்கள் மருந்து உருண்டைகள் முழுங்குங்கள். அந்தச் சோற்று உருண்டைகள் வெறுத்துப் போனால், அவர்கள் சாப்பிட்டார்களே, அந்த அவல்..செரியல் .. அதுதான், உமக்குச் சரி. ஆமாம்னேன், பொரியல் மறந்துவிடும்.. இனிமேல் செரியல் ( cereal ) தான் உம் உணவு ” என்றார் கடுமையாக.
“தின்பண்டங்கள் , உருளை வறுவல்..” என்று பலஹீனமாக முனகினேன் . ” என்னய்யா, உம் உடம்பில் தான் உப்பை மண்டி மண்டியாய் உற்பத்தி செய்கிறீரே, லவண சமுத்திரம் மாதிரி ? பெரும் பாணாற்றுப் படையில் ஓர் இடத்தில் வருகிறதே, ‘சில்பத உணவு’ என்று …அதற்கு என்னய்யா பொருள், தெரியுமா? உப்பிற்கு இன்னொரு பேர், ஐயா, அது ! ஏன் அந்தப் பெயர், தெரியுமா? உணவைச் சுவையாக்க ..பதமாக்க.. சிறிதளவே உப்பைச் சேர்க்க வேண்டும்..அதனால் தான் உப்புக்குச் ‘சில்பத உணவு’ என்று பெயர்! புரிகிறதா? சீடை, முறுக்கு, நொறுக்குத் தீனி, வறுவல், ஊறுகாய் ! கப்சிப், கபர்தார் ! ‘யாகாவா ராயினும் நாகாக்க’ , என்ன, புரிகிறதா? “ என்று விரலை ஆட்டினார் வைத்தியர் மங்கம்மா .
அரணத்தில் அடியைப் புதைத்துக் கொண்டு, என் வாழ்வில் அன்று நடந்த அறுசுவையின் அகால மரணத்தைப் பற்றி நினைத்து நொந்து கொண்டே நடந்து வீட்டிற்கு வந்து விழுந்தேன்.
~*~o0O0o~*~
pas_jaya at yahoo dot ca
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !(கட்டுரை 56 பாகம் -3)
- படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு
- அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>
- தழும்பு வலிக்கிறது
- தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்
- நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்
- சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை
- அழகியநெருடல்
- ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….
- எதைச் சொல்வீர்கள்?…
- தொலைந்த செடிகளின் புன்னகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2
- நிழற்படங்கள்
- பாடுக மனமே
- நரகம்
- தேடும் என் தோழா
- நினைவுகளின் தடத்தில் – (29)
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- காதலைத் தேடும் பெண்
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1
- காட்சி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- எதிர்வீட்டு தேவதை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)