வெறிபாடிய காமக்கண்ணியார்
தெய்வங்கள் இருக்கும் உயர்ந்த மலைகளின் உச்சிகளிலிருந்து பாய்ந்து விழும்
திரண்ட அருவிகள் நிறைந்த காடுகள் இருக்கும் நாட்டைச் சேர்ந்தவன் என்னவன்
அவனது மணக்கும் பரந்த மார்பைத் தழுவாததால் என் உடல் சோர்ந்தது
இது புரியாமல், என் திருட்டுத்தனத்தைத் தெரியாமல்
‘வணங்காத அரக்கரை அழித்த தடக்கை உடையவன்;
அரசர்கள் தொழுபவன்; அந்த முருகனைக் கும்பிட இந்த நோய் போகும் ‘ என்று
பழமொழி பேசியே காலம் ஓட்டும் கிழவிகள் சொல்ல
வீட்டைப் பெருக்கிக் கழுவி, மாலைகள் போட்டு
ஊரே கேட்கும்படிக்கு சத்தம் போட்டுப் பாடி, பலியும் கொடுத்து
அழகான செந்தினை மாவை பலி கொடுத்த ரத்தத்தோடு கலந்து தெளித்து
முருகனை வழிபடும் நடுநிசியில்,
சந்தனம் மணக்க, பக்கத்துக் காடுகளின்
சாரல்களில் விளையும் அழகான மலர்களைச் சூடி வண்டுகள் மொய்க்கும்படிக்கு,
யானையின் கண்களில் படாமல்,
தன் இரையை பதுங்கிப் பதுங்கி தேடும் வலிமையான புலிபோல
எங்கள் வீட்டுக் காவலாளியின் கண்களிலோ எங்கள் நகரக் காவலாளியின் கண்களிலோ படாமல்
எனது காதல் நோயைத் தீர்க்க என் காதலனும் வந்தான்
அவனைப் பார்த்தமட்டில் இன்னுயிர் குழைய மெய்யுடல் தழைய முயங்கும் போது
எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது
என் நோய் தீர்ந்ததற்கு காரணம் காதலன் வந்ததுதான்
இதில் வேலனுக்கல்லவா பெருமை போனது, பார்த்தீர்களா ?
**
நோய் தணி காதலர்
*
பாடியவர் : வெறிபாடிய காமக்கண்ணியார்
திணை: குறிஞ்சி
**
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம்கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறு வரற் பொழுதில்,
‘படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவள் ‘ என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டு படச் சூடி,
களிற்று-இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல,
நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இனுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே -எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே ?
***
சொற்பொருள்
அணங்கு – தெய்வம்
நெடு – உயர்ந்த
வரை – மலை
கணம்கொள் – திரளான
கான் கெழு நாடன் – காடுகள் நிரம்பிய நாட்டைச் சேர்ந்தவன் (நாட்டுக்கு உரியவன் எனவும் பொருள்)
வியன் மார்பு – அகன்ற மார்பு
அணங்கிய – தழுவிய
மறுவரல் – சூழ்ச்சி
படியோர் – வணங்காதவர் (வணங்காதோராகிய அசுரர் எனவும் பொருள்)
தேய்த்த – அழித்த
பல்புகழ் – பலவாகிய புகழ் (நிறைந்த புகழ்)
தடக்கை – பெரிய கை
நெடுவேள் – முருகன்
முதுவாய்ப் பெண்டிர் – பழமொழி சொல்லும் கிழவிகள்
களம் – வெறியாடும் இடம்
கண்ணி – மாலை
வளநகர் – வளமையான நகரம்
சிலம்ப – ஆரவாரம் உண்டாகும்படி
உருவ – அழகிய
செந்தினை – சிவப்பான தினையை
தூஉய் – தூவி
முருகு ஆற்றுப் படுத்த – முருகனை வழிபடும்
உருகெழு நடுநாள் – அச்சம் எழும் நடுநிசியில்
ஆரம் – சந்தனம்
நாற – மணக்க
அருவிடர் – அருகாமையில் உள்ள மலைகளில்
சாரல் – சாரலில் உள்ள
பல்பூ – பலவகைப் பூக்கள்
வண்டுபட – வண்டுகள் மொய்க்க
களிற்று – யானை
இரை – இரை
தெரீஇய – தேர்ந்தெடுக்க
பார்வல் ஒதுக்கின் – பார்வை மறைத்து
ஒளித்து – ஒளிந்து
எய்த்த – எய்திய, அடைந்த
**
இக்காலத்தமிழ் மொழிபெயர்ப்பு – துக்காராம் கோபால்ராவ்