மதுரைத்தமிழ் கூத்தன் கடுவன் மள்ளன்
வளைந்த படகில் மீனவர் மீன் வேட்டை ஆடினர்
புலால் மணக்கும் சிறுகுடிப்பாக்கத்தில்
வலையின் சின்னக்கண்களால் நிறைய மீன்கள் கிடைத்ததென பேசி மகிழ்வர்
அயிலை மீன்களை பகிர்ந்து தருவோரில் ஒருவன் என் காதலன்
அவனுடன் கூடி மகிழ்ந்த என் உறவு
அங்குள்ள பெண்கள் பேசியும் ஏசியும்
எல்லோருக்கும் தெரிந்து போனது
அந்தப் பேச்சு திருமணமானபின்னர்தான் முடிந்தது
(எதுபோலவென்றால்)
புலிநகக்கொன்றையின் பொன்னிறப்பூக்கள் உதிர்ந்து
தரையிலே ஓவியம் வரைந்த அழகாய் கடற்கரைச் சோலை
பாசி படர்ந்த நீர்த்துறையின் நெய்தல் மலர்களை
தங்கள் தழையுடை மீது அணிந்து அழகு படுத்துவர்
வெற்றிவேல் பாண்டியர்களது பழமையான ஊர் எங்கள் திருவணைக்கரையில் அமைதி சூழ்ந்தது
எப்படியென்றால்
இங்கு இராமன் போருக்கு முன் வேதங்களை ஆராயுமுன்பு
இங்கிருக்கும் ஏராள விழுதுகள் கொண்ட ஆலமரத்தின் பறவைகள் ஒலியை நிறுத்தி மெளனம் கொள்ளவைத்ததுபோல
பேரமைதி
***
குறிப்பு: இராமன் வேதம் படிக்க ஆலமரம் புள்ளொலி அடங்கியது போல என் திருமணம் ஆனபின்னர், மீன்காரிகள் பேச்சை நிறுத்தினார்கள் என்று பாடுகிறாள்.
***
அகநானூறு 70
இராமன் கவித்த ஆலம்
பாடியவர்: மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்
திணை : நெய்தல்
கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும் சிறுகுடிப்பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே இனியே
வதுவை கூடிய பின்றைப் புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம்பெருந்துறைக் கழனி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழை அணிக்கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும்பெளவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே.
**
கவுரியர்: பாண்டியர்
கோடி: திருவணைக்கரை
,
- கற்பக விருட்சம்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 16, 2000
- சங்ககாலத்திய அகநானூற்று இராமன் பாடல்
- கூத்தாடி அப்பா
- ஏதோ ஒரு பறவை
- கணினிக்கட்டுரைகள் 11.