சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

அமரந்த்தா, வெளி ரங்கராஜன், லதா ராமகிருஷ்ணன்


ஒரு வேண்டுகோள்

மதிப்பிற்குரியீர்,

வணக்கம். சமீபத்தில் மறைந்த சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி செய்யும்பொருட்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களுடைய உதவியாதரவைக் கோருகிறோம். வாழும் காலத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளப் பிடிக்காதவர்களாய் ஆற்றொ ழுக்காய் இலக்கியவெளியில் இயங்கி மறைந்தவர்களை நம்மால் மறந்துவிட இயலாது; அப்படி மறந்துவிடவும் கூடாதில்லையா? அப்படித்தான் எழுத்தாளர் கோபிகிருஷ் ணனுடைய குடும்பத்திற்கு உதவிசெய்வது நம் கடமை என்று நாங்கள் நிதியுதவி கோரியபோது எங்களுடைய முயற்சிக்கு உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்த பேராதரவை இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறோம். தோழர்.சிங்கராயர் குடும்பத்திற்கு நிதிதிரட்டும் எங்கள் முயற்சிக்கும் அத்தகைய நல்லாதரவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். கிடைக்குமென்று மனப்பூர்வமாக நம்புகிறோம். தோழர் சிங்கராயர் குறித்து அமரந்த்தா எழுதியுள்ள சிறு கட்டுரையும், அடுத்த மாதம் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தோழர் சிங்கராயர் நினைவுக்கூட்ட அழைப்பிதழும் இங்கே தரப்பட்டுள்ளன.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்

சிங்கராயர் எனும் மொழிபெயர்ப்பாளர்.
_ அமரந்த்தா

”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்கமுடியாது என்பதும் இன்றைய அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பது தான் சிக்கல்” – சிங்கராயர்

வெற்றி பெற்றவர், தோல்வி கண்டவர் என்று மனிதர்களை எந்த அடிப்படையில் அடையாளம் காண்கிறது இந்த சமூகம்? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினம். பெரும் செல்வந்தர்களும் அதிகாரத்தில் இருந்து ஆண்டோரும் வெற்ற்யடைந்தவர் எனலாமா? செல்வத்தைக் கொண்டும், அதிகாரத்தைக் கொண்டும் காய்நகர்த்தி பேரும் புகழும் பெறலாம் – ஆனால், அதுதான் மனிதனின் வெற்றியா? அடுத்தடுத்த தலைமுறையினர் பயனுற வேண்டி இருந்தவிடம் தெரியாமல் கடுமையான சமூகப்பணி செய்து காலவெள்ளத்தில் மறைந்துபோன பலரும் வெற்றிபெற்றவர்கள் இல்லையா? அப்படியானால், சிங்கராயரும் அப்படித்தான். காலம் கடந்து நின்று மக்கள் சிந்தையில் வளமேற்றும் பொதுவுடைமைத் தத்துவத்தின் சாத்தியப்பாடுகளையும், அதன் தாக்கத்தில் உலகில் விளைந்த புரட்சிகர மாற்றங்களையும் விவரிக்கும் நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் பணியில் சிங்கராயரின் பங்களிப்பு ஏராளம்.

கொள்கைப்பிடிப்பும், மனிதகுலத்தின்பால் இருந்த நம்பிக்கையும் மட்டுமே அவரைச் செயல்பட வைத்தன. வெற்றிகரமாக வாழ நினைத்திருந்தால் அவர் மொழிபெயர்க்க வேறுவிதமான நூல்களைத் தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால், ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும் பின்னர் கியூபப் புரட்சியும் அளித்த நம்பிக்கையின் தெம்பில் அவர் ஏராளமான மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்தார். இந்தியத்திற்கு எதிரான தேசிய இனப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்த சி.ஆர்.சி கட்சியில் அவர் நீண்டகாலம் செயல்பட்டார். அவர் மொழிபெயர்த்த நூல்கள் சில மொழிபெயர்ப்பாளரின் பெயர்கூடக் குறிப்பிடப்படாமல் வெளிவந்தன. அக்காலகட்டத்தில் அவர் மொழிபெயர்த்தவை யாவும் முக்கியமான அரசியல் நூல்கள்.

தொண்ணூறுகளில் கட்சி அமைப்பிலிருந்து விலகிய பின்னர் மொழிபெயர்ப்பு அவருடைய பிழைப்பிற்கான வேலையாகிப் போனது. பல்வேறுவகையான நூல்களை அவர் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அப்போது அவர் ஓஷோவின் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தார்.

இந்திய இடதுசாரி சிந்தனையாளர்களான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி, ஜோதிபாய் புலே, ஆனந்த் தெல்லும் டே, இர்ஃபான் ஹபீப் ஆகியோரது எழுத்துக்களையும் சிங்கராயர் மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்புகளான உலகாயதம், புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்குவது எவ்வாறு, புரட்சிக்குள் புரட்சி, இஸ்லாத்தின் பிரச்னைகள், சிலுவையில் தொங்கும் சாத்தான், ஆகிய நூல்களை வாசகர்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.

மொழிபெயர்ப்புக் கலை இன்று என்ற தலைப்பில் 2005 ஆகஸ்டில் வெளியான (பாவை பதிப்பகம், தொகுப்பாசிரியர்கள் – அரணமுறுவல் & அமரந்த்தா) நூலில் சிங்கராயர் எழுதியிருக்கும் கட்டுரை மொழிபெயர்ப்புத்துறையில் கவனம் உள்ளோர் அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை.

”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்கமுடியாது என்பதும் இன்றைய அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பது தான் சிக்கல்”
என்ற கசப்பான உண்மையைக் கூறி ‘மொழி காப்போரை’க் கேள்விக்குட்படுத்துகிறார் சிங்கராயர். மேலும்

”வருமானத்துக்காக ஒரு வேலையில் இருந்துகொண்டு தாம் சார்ந்திருக்கும் கருத்தியல் அக்கறையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்போர் உண்டு. பதிப்பகங்களின் பணியாளர்களாக இருந்து மொழிபெயர்ப்போரும் உண்டு. இந்த இரண்டுவிதக் காப்பும் இல்லாமல் மொழிபெயர்க்க வந்து , ஒரு சீரான வரையறுத்த வருவாயும் தொடர்ச்சியான வேலைவாய்ப்பும் வருங்காலப் பாதுகாப்பும் இல்லாமல் உழலும் என்னைப் போன்றோரும் உண்டு”.

_ என்று தனது நிலையை வெளிப்படையாகக் கூறி, அதிகாரத்திலுள்ள தமிழ்மொழி உணர்வாளர்களை அவர் நியாயம் கேட்கிறார். தமிழ்மொழிக்காகக் கடுமையாக உழைத்த தோழர் சிங்கராயர் எந்தவித நியாயமுமின்றி வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் வாழ்ந்து அண்மையில் ஜனவரி 25 அன்று அதிகாலையில் தனது 53வது வயதில் காலமானார்.

எவ்விதக் காப்புமின்றி வாழ்ந்த சிங்கராயருக்கு அவரது நற்சார்பு(அவருடைய மொழியில்) காரணமாக பல நண்பர்கள் இருந்தார்கள். நண்பர் சௌந்தரன் நீண்டகாலமாக பொருளுதவி அளித்தும், விடியல் பதிப்பகம் சிவஞானம் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் பணியை அளித்தும் சிங்கராயரின் சிரமங்களைச் சற்றே குறைத்திருக்கிறார்கள். ஆயினும், அவர் தனது மனைவி ராஜத்தை எவ்விதக் காப்புமின்றி தனியாக விட்டுச்சென்றுவிட்டார்.

சிங்கராயரின் மனைவி கௌரவமாகத் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தமிழ் உணர்வாளர்களிடம் நிதி திரட்டி உருவாக்கும் வைப்புநிதியிலிருந்து மாத வட்டி வருமானம் பெற்ச் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிங்கராயர் மனைவி ராஜத்தின் எதிர்காலத்திற்கு நிதியளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

த.வே.நடராசன்,
மனை.எண். 27, 3வது தெரு,
ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை,
கேளம்பாக்கம் – 603 103
கைபேசி எண்: 9445125379

காசொலை / வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். பணம் அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். வங்கி விவரம் கீழே தரப்பட்டுள்ளது”

A/C NO. 20000390136
D.V.NATARAJAN
STATE BANK OF INDIA
(04308) – PBB, BESANT NAGAR
IFSC CODE : SBIN 0004308
E – 159, Annai Velankanni church road,
7th Avenue, Besant Nagar,
Chennai – 600 090

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்

தமிழின்
குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான
தோழர்.சிங்கராயர்
நினைவுக் கூட்டம்

நாள்: ஜூலை 10,2010 (சனிக்கிழமை)
நேரம்: சரியாக மாலை 5 மணி
இடம்: டிஸ்கவரி புக் ஹவுஸ்,
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
நெசப்பாக்கம் பகுதி, கே.கே.நகர்

”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்கமுடியாது என்பதும் இன்றைய அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பது தான் சிக்கல்”
என்று கூறி மொழிக்காவலர்களின் மனசாட்சியை அசைத்துப்பார்த்த தோழர் சிங்கராயர், சமூக-மேம்பாட்டிற்கான எழுத்தாக்கங்களை மட்டுமே மொழிபெயர்ப்பது என்ற தீர்மானத்தோடு இயங்கிவந்த அரிய மனிதர் இவ்வாண்டு ஜனவரி 25 அன்று மரணமடைந்தார். அவருடைய மொழிபெயர்ப்புப் பணியையும், பிற பல பங்களிப்புகளையும் நன்றியோடு நினைவுகூரும் விதமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்கராயருடன் பல்வேறு நிலைகளில் இலக்கிய அரசியல் பணிகளில் இணைந்து இயங்கியவர்கள் தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
• திரு. கோவை ஞானி _ மார்க்சிய அறிஞர்
• திரு. துரை மடங்கன் _ யாழ் நூலகம், கோவை
• பேரா.தங்கவேல் _ சிங்கராயரின் நண்பர்
• அமரந்த்தா _ மொழிபெயர்ப்பாளர்

அறிவிப்புகள்:
• சிங்கராயர் குடும்ப நிதி திரட்டுவது குறித்து
• தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான தோழர் சிங்கராயர் விருது

அனைவரும் வருக!
அமரந்த்தா வெளி ரங்கராஜன் லதா ராமகிருஷ்ணன்

Series Navigation

வெளி ரங்கராஜன்

வெளி ரங்கராஜன்