நகரும் பாதை
இந்தப் பாதையின் முடிவில்
அல்லது நடுவில்
எந்த அற்புதம்
நிறைவேறக்கூடும் என
நாம் நினைத்தோம் ?
மீட்சியின் சத்தியம்
ஆங்காங்கே
சிதைந்த மைல்கற்களில்
பொரித்திருப்பதாக கேள்வி
சிதறிக் கிடக்கும் கனவுகள் மீது
கவனத்துடன் கால்வைத்து நகருவோம்
நகருவதால்
முன்செல்கிறோம்
என்பதான பிரக்ஞையுடன்
நிற்பதான பிரமைகளில்
திக்கித்தப் பதுமைகளாவோம்
ஆனால் காலடிபாதை நகர்கிறது
குழந்தை கிறுக்கிய கோடாய்
முடிவும் ஆரம்பமும் இல்லாது
மேகங்கள்வழி புகைபோல வழிந்திறங்கும்
தேவதைகள் நீட்டும் கரங்களில்
மிளிரும் நம்பிக்கைதான் எத்தனை
அவற்றின் இறக்கைகளின் படபடப்பில்
நம் கால்கள் மேலெழும்பும்
சேரமுடியாத, திரும்ப இயலாத
உயரங்களை சந்திக்க
வண்ணத்துப்பூச்சிகளால் ஏந்தப்படுவதான உல்லாசத்தில்
நாம் காற்றைத் தழுவி மிதக்க
அறியா கணத்தில்
சீறும் நாக்குகளுடன் கருத்த பாம்பாய்
வெளியில் பாய்ந்து கவ்வும் நம்மை
மண்புழுவைப் போல நெளிந்து வந்த பாதை
வால் சுழற்றி புழுதி படர
நம்மை மண்மீது வீழ்த்தி
நகர்த்தும்
உலர்ந்து போன இதயத்துடன்
தெளிவற்ற சத்தியங்களை நோக்கி
நம்பிக்கையற்று நகரும் காலத்தில்
சொல்லவொண்ணா தருணத்தில்
நடக்க ஆரம்பிப்பார்கள் சிலர்
நம் மீது.
என் துளி
என் கான்க்ரீட் காட்டுக்குள்
நடந்தபோது
இடறியது பார்வையில்
பல்வேறு வண்ணந் தெறிக்க
துடிக்கும் இசைக்கேற்ப குதிக்கும்
செயற்கை நீர்வீழ்ச்சியொன்று
வளையும் போது
குட்டி வானவில் போல
குழாய்வாய் அகலும் போது
அர்ச்சுனனின் அம்பைப் போல
உயர்ந்து உயர்ந்து ஓங்குகிறது
தரைவிழுகையில் குதூகலித்து
ஆரவாரிக்கிறது ஆர்பாட்டமாய்
சின்னஞ்சிறு சிறார்களைப் போல
தொலைத்துவிட்ட
வான் கவிழும் மலைவழி சீறும் அருவிகளை
நினைப்பூட்டி நனைக்கிறது
மேல் சிதறும் நீர்த்துளிகள்
கரத்தில் வீழ்ந்த நான்கைந்து துளிகளில்
ஒன்றேனும்
தூரம் நகர்ந்து விட்ட
அருவியொன்றிலிருந்து
வந்திருக்கக்கூடுமல்லவா
பிரவாகம் பிரிந்த ஒற்றைத் துளி
என்னைத் தேடி சேர்ந்ததைப் போல்
என்னிலிருந்து
எந்நாள் எதை எப்படி
பிரித்து அருவிகளுக்கு
அனுப்பி வைப்பேன் ?
திண்ணை
|