கையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

அ.நாகராஜன்


பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர, கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம் பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும், ஊடலையும் கவிதை வடிவில் தந்த உன்னதமான படைப்பு. ஒரிசா மாநிலத்தில் ‘பிர்ஹம்’ (Birbhum) பகுதி அதன்பின் வைணவத்தைப் பரப்பிய நீரூற்றாக விளங்கியது. ஜெயதேவருக்கு சில நூற்றாண்டுகளுக்குப்பின் அதே பகுதியில் ‘நன்னுர்’ கிராமத்தில் தோன்றிய “சண்டி தாஸ்” (1420) மனம் நெகிழும் கவிதைகளை உலகுக்குத் தந்தார். அதுபோலவே, மிதிலா பகுதி கவி ‘வித்யாபதி’ (1400-1470) ராதா-கிருஷ்ண காதல் காவியம் படைத்து பெரும் புகழ் பெற்றார். மிதிலை மன்னர் சிவ் சிங் அவருக்கு “அபிநவ ஜெயதேவர்” (புதிய ஜெயதேவர்) என்னும் பட்டம் கொடுத்து அவரைச் சிறப்பித்தார். அவ்விதமே சைதன்ய மஹாபிரபு (1486-1534) ‘கீத கோவிந்த’ கவிதைகளில் மயங்கி, நாளும் அவற்றைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரிசா-வங்காள நிலப் பகுதிகளில் இசைவழியில் நாம ஸங்கீர்த்தனம் மக்களை மயக்கி இறைவழி இட்டுச் சென்றது.

அதன் தொடர்ச்சியாக ‘கீத கோவிந்தம்’ குஜராத், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மலைப்பகுதிகளில் ஒவ்வியங்களாக காட்சிப் படுத்தப்பட்டது. முதல் முதலாக அது 1450 களில் குஜராத்தில் ஓவிய வடிவம் பெற்றது. பின்னர், 1590களில் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஜன்பூரில் அது ஓவியங்களாகியது. அவை இப்போது முபையில் வேல்ஸ் இளவரசர் அருங் காட்சியகத்தில் உள்ளன. முகலாய மாமன்னர் அக்பர் அதன் கவிதை எழிலில் மயங்கி 1615 இல் புதிதாக எழுதச் செய்தார். அத்துடன் அவற்றில் ஓவியங்களும் இடம் பெற்றன. அந்த ஓவியங்களில் முகலாய பாணியின் மேன்மையை காணலாம். மத வேறுபாடு இன்றி ‘கீத கோவிந்தம்’ அனைவராலும் போற்றப் பட்டது

16/17 ஆம் நூற்றாண்டுகளில் வைணவம் ராஜஸ்தான் நிலப்பகுதியில் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணபக்தி காலம் என்று அழைக்கப்பட்ட அப்போது, ‘கீத கோவிந்தம்’ பரவலாக பாடப்பட்டது. அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக அது விளங்கியது கி.பி.1610 களில் மேற்கு ராஜஸ்தான் பகுதியில் அது ஜைன ஓவிய பாணியை ஒட்டிய வழியில் ஓவியங்களாயிற்று. கி.பி.1723 இல் மேவார் மன்னர் இரண்டாம் சங்ராம் சிங்கின் மேற் பார்வையில் அவை ஓவியங்களாயின. இன்று அவை உதய்பூர் ‘சரஸ்வதி பண்டார்’ இன் பாதுகாப்பில் உள்ளன. கி.பி.1820 இல் கிஷன்கார் மன்னர் கல்யாண் சிங் அரசவையில் படைக்கப்பட்ட ‘கீத கோவிந்தம்’ ஓவியங்கள் இன்றும் அவ்வமிச அரச குடும்பத்தின் கருவூலத்தில் உள்ளன. கி.பி.1730 இல் பசோலியில் மன்னர் மேதினி பால் அரசவையில் அவை ஓவியங்களாயின. அவை தற்போது இலாகூர், சண்டிகார், டில்லி நகரங்களில் அருங்காட்சியகங் களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. சில, தனியார் வசமும் உள்ளன. அதன் தொடர்ச்சியாக காலப்போக்கில் நாட்டியங்களிலும் அவை இடம்பெறத் தொடங்கின. பரதநாட்டியம், ஒடிசி, குச்சுப்புடி போன்ற நாட்டியங்களிலும் அக்கவிதைகளை அபிநயிப்பது என்பது இப்போது நடைமுறையில் உள்ளது.

இந்த ஓவியங்கள் எந்த நிலப்பகுதியில் தீட்டப்பட்டன என்பது பல சமயங்களில் குழப்பமாக இருப்பதுண்டு. ஒரு நிலப் பகுதியின் ஓவியம் வேறொரு நிலப்பகுதியில் இருப்பது என்பது இயல்பானதாகவே உள்ளது. பெரும்பாலும் மன்னர் குடும்பத்துத் திருமணங்களின்போது அவை மணமகளுக்கு சீதனமாக கொடுக்கப்பட்டன. இதனால் அவை வேறு நிலத்தின் சொத்தாகி நிலைத்தன. ஒரு ஓவியத்தை அதன் பாணி, பின்புல அமைப்பு, அதில் காணப்படும் எழுத்துக் குறிப்புகள் போன்றவற்றின் உதவியின் மூலம்தான் அது படைக்கப்பட்ட நிலத்தை இனம் காணமுடிகிறது.

எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம்.

அது ஒரு வட்டப்பரப்பில் ராதையும் கிருஷ்ணரும் பூங்கா மாளிகை உப்பரிக்கையில் அமர்ந்துள்ள காட்சி. ஓவியத்தின் மேற்புறத்தில் (on the top side) நீல நிற பரப்பில் வடமொழியில் தங்கநிற எழுத்துக்கள் காணப்படுகின்றன. “விக்ரம ஸம்வஸ்ரத்தில் அதற்கு ஏற்ற நிலா, மலை, உயர் கற்கள் கூடிய நன்நாளில் (அதாவது, கி.பி.1787 இல்) அஜாவின் பக்தனுடைய விருப்பத்தின் பேரில் ‘கீதகோவிந்தம்’ கவிதையிலிருந்து ஒரு காட்சியை மனாகு என்னும் ஓவியன் தனது லலிதமான தூரிகையினால் உருவாக்கினான்” என்று அது பொருள் படுகிறது.

மனாகு அல்லது மனாக் என்னும் ஓவியன் யார் என்பதில் குழப்பம் உள்ளது. பசோலியில் ஒரு மனாகுவும் காங்ராவில் ஒரு மனாகுவும் அரசவை களில் இருந்துள்ளனர். இருவருமே தத்தமது மன்னர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி ‘கீதகோவிந்தம்’ கவிதைகளை தொடர் ஓவியங்களாகினர். கி.பி.1730 களில் பசோலி அரசவை ஓவியன் மனாக் அவற்றை படைத்துள்ளான். மற்றொரு மனாக் கி.பி. 1790-1805 களில் அவற்றை காங்ரா அரசவையில் ஓவியங் களாக்கியுள்ளான். வல்லுனரின் நுணுக்கமான ஆராய்ச்சிகளுக்குப் பின்பு முன்பு விவரிக்கப்பட்ட அந்த ஓவியம் காங்ரா அரசவையில் இருந்த சேவு என்னும் ஓவியனின் மகனால் படைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இவனது இளய சகோதரன் நயன் சுக் என்னும் ஓவியன். காங்ரா மன்னர் சன்சார் சந் ஆழ்ந்த கிருஷ்ண பக்தர். அந்தக் காட்சி அவருடைய விருப்பத்தின் பேரில் ஓவியமாக்கப் பட்டது.

சன்சார் சந் கி.பி. 1776 இல் அரியணையில் அமர்ந்தபோது அவருக்கு வயது பத்துதான். அப்போது பஞ்சாப் சமவெளியில் பெரும் குழப்பம் நிலவியது. சீக்கிய அரசர் ரஞ்சித் சிங் தனது ஆதிக்கத்தில் அதைக் கொணரும் முயற்சியில் இருந்தார். முகலாய பேரரசின் வீழ்ச்சி என்பது தொடங்கிவிட்ட நேரம். மன்னர் சன்சார் சந், ராஜபுத்திரர், ஆப்கானியர், ரோஹிலா ஆகியோரைக் கொண்ட கூலிப்படை ஒன்றை அமைத்துக்கொண்டு தமது நாட்டைச் சுற்றியிருந்த ராஜபுத்திர அரசுகளின்மீது படையெடுத்தார். சில ஆண்டுகளில் காங்ரா கோட்டை அவர் வசம் வந்தது. முகலாய அரசின் கட்டுக்கோப்பு உடைந்து வட இந்திய சமவெளிகளில் சச்சரவுகள் மிகுந்து ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்த அந்த நேரத்தில் தான் ஆட்சியில் நிலைபெற்று, அங்கு அமைதியை அவரால் கொணர முடிந்தது. காங்ரா பள்ளத்தாக்கு பாதுகாப்பான பகுதியாக அமைந்தது. மன்னர் கவிஞர்களையும் ஓவியர்களையும் தமது அரசவைக்கு அழைத்து இருத்திக் கொண்டார். கலைகள் அங்கு செழித்து வளர்ந்தன. “தாரிக்-இ-பஞ்சாப்” என்னும் நூலில் அதன் ஆசிரியர் மன்னர் சன்சார் சந் பற்றி “பெருந்தன்மையும் பிரஜைகளிடம் பாசமும் கொண்டவருமான அவர் இரண்டாவது அக்பர் என்றும், ‘ஹதீம்’ என்றும், ‘ருஸ்தும்’ என்றும் பலவாறு புகழப்பட்டார்.” என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், இந்த நிலை மன்னரின் மரணத்துக்குப்பின் தொடரவில்லை. மகன் அனிருத்திற்கு சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கிடம் நாட்டைப் பறிகொடுத்து ஓடும் நிலை உண்டாயிற்று. அப்போது அவர் தமது இரு சகோதரிகளுடன் தந்தையின் கருவூலத்தில் இருந்த ‘கீத கோவிந்தம்’, பிஹாரி ‘ஸத் சயி’ ஓவியங்களைத் தம்முடன் எடுத்துச் சென்றார். கார்வால் மன்னர் சுதர்சன் சிங்கிற்குத் தமது இரு சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அந்த ஓவியங்கள் சீதனமாக கொடுக்கப்பட்டன.

சன்சார் சந் ஆழ்ந்த கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்தார். அப்போது வைணவ இலக்கியங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. மன்னரின் அரவணைப்பில் ஓவியர்கள் ‘பாகவத புராணம்’, பிஹாரிலாலின் ‘ஸத் சயி’, ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ போன்ற வடமொழி, ஹிந்தி கவிதைகளிலிருந்து காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஓவியங்களாக தீட்டினார்கள். அவர்கள் மொழியிலும் முதிர்ந்த வல்லமை பெற்றிருந்ததால் கவிதைகளின் மிக நுண்ணிய உணர்வுகளைக் கூடத் தமது ஓவியங்களில் கொணர முடிந்தது. ஓவியங்களில் அவை தொடர்பான கவிதை வரிகளை வடமொழியிலும், அப்போது காங்ராவில் நடைமுறையிலிருந்த பஞ்சாபி மொழியிலும் (‘தேவநாகிரி’ எழுத்து வடிவில்) எழுதி வைத்தனர்.

கவிதையும் ஓவியமும் உடன் பிறப்புக்கள். கவிதை ஒரு ஓவியம் போலத் தோற்றம் கொடுப்பதும், ஓவியம் ஒரு கவிதையைப் படிக்கும் அனுபவம் கொடுப்பதும் அவற்றின் வெற்றியாகக் கருதப்படுகின்றது. இந்த இரண்டின் இணைந்ததன்மை உலகெங்கிலும் காணப்படுவதுதான். “ஓவியம் ஒரு ஒலியில்லாத கவிதை, ஒரு கவிதை வாய்வழி வரும் ஒலியின் ஓவியம்” என்ற ஒரு சீனப் பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது.

காங்ரா ஓவியன் மனாக் ‘கீத கோவிந்தம்’ கவிதைகளை ஓவியங்களாகத் தொடங்கிய நேரம் அதற்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது. ஒரியா மண்ணின் கவி ஜெயதேவரின் அற்புதக் கற்பனைவடிவை, யமுனை சமவெளியின் எழிலை, காங்ரா பள்ளத்தாக்குகளின் இயற்கைப் பின்புலத்தில் அவன் தனது ஓவியங்களில் வடிவமைத்தான். அவற்றில் தெள்ளிய ஓடையும், அதன் கரைகளில் உலவிய கொக்குகளும் சாரசப் பறவை போன்ற நீர்சார்ந்த இனங்களும், மாமரத் தோப்புகளும் இடம்பெற்றன. ஓவியன்,பியாஸ் நதி நிலவளத்தை அவற்றில் அற்புதமாகப் பதிவு செய்தான். அந்த ஓவியங்கள் வண்ணங்களை இசையாக்கிக் கொடுத்தன. அவற்றில் கலப்படமற்ற நீலமும், பச்சையும், பெரும் விகிதத்தில் இடம் பெற்றன. காங்ரா ஓவியர்கள் பியாஸ் நதித் தீரத்தில் அமைந்திருந்த ஆலம்பூர், சுஜான்பூர், நாதான்போன்ற கிராமங்களில் அமைதியான சூழலில் எந்தவிதத் தடங்கலுமின்றி மூங்கில் காடுகளும் மாமரத் தோப்புகளும், வாழைத் தோட்டங்களும் சூழ்ந்திருந்த தமது குடில்களில் அந்த ஓவியங்களைப் படைத்தனர். எனவேதான் அந்த ஓவியங்களிலிருந்து எழும் இயற்கை எழிலின் மணம் உயிற் காற்றாய் நம்மைக் கிரங்க அடிக்கின்றது.

சைத்தன்ய மஹாபிரபு இயற்கையின் அனைத்து வடிவங்களிலும் கண்ணனைக் கண்டு மோனநிலை அடைந்தார் என்று சொல்வதுண்டு. காங்ரா ஓவியனும் அவ்வித அனுபவத்தைத்தான் தனது ‘கீத கோவிந்த’ ஓவியங்களில் வண்ணங்களில் கொணர்ந்தான். இரவின் வனப்பை அவன் ஓவியமாக்கியது எவரையும் பரவசப்படச் செய்யும் ஒன்றாகும். இருள் பரவிய மழைகாலக் குளிர் அவற்றில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவ்விதமே, நிலவில்லாத வானத்தில் மின்னும் தாரகைகளின் ஒளி மரங்களின் ஊடே நுழைந்து நிலத்தில் வரைந்த கோலங்களைக்கூட அவனால் ஓவியமாக்க முடிந்தது. ராதையின் காதலும் ஊடலுமான உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அவன் வெகு திறமையுடன் அவற்றில் கொணர்ந்து விடுகிறான். காண்போரையும் அங்கு அழைத்துச் சென்று விட அவனால் முடிந்துவிடுகிறது.

ஆங்கிலக் கலை ஆய்வாளர் ஆர்ச்சர் கூறுவதைப் போல,“’கீத கோவிந்தம்” என்னும் நூலின் சாரத்தை, அதன் காவிய வடிவை ஓவியமாக்கும் கடினமான பணியில் காங்ரா ஓவியர்கள் பெரும் வெற்றி கண்டனர்.” என்பதில் சிறிதும் ஐயமில்லை.


nagarajan63@gmail.com

Series Navigation

அ.நாகராஜன்

அ.நாகராஜன்