ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
அவர் பேராசை கொண்டவர் இல்லை என்பதை வலியுறுத்தி, போதும் என்கிற பொன்செய்யும் மனத்திலே அவர் திருப்தியடைவதாகவும், மனித வாழ்விற்கே பொதுவான வழக்கமான துயரங்களில் அவர் துன்புற்றபோதும், வாழ்க்கை அவருக்கு நல்முகமே காட்டி வந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். அவர் ஒரு சாந்தமான, பிறர் விஷயத்தில் தலையிடாத, அவருடைய சுலபமான வழிகளிலிருந்து தொந்தரவு செய்யப்பட விரும்பாத மனிதர். தனக்குப் பேரவா நிறைந்த இலட்சியங்கள் இல்லை என்று சொன்ன அவர், ஆனால், தன்னிடம் இருப்பனவற்றிற்காகவும், தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன் வாழ்வின் சுமூகமான ஓட்டத்திற்காகவும் கடவுளைப் பிரார்த்திப்பதாகவும் சொன்னார். அவருடைய உறவினர்களைப் போலவும், நண்பர்களைப் போலவும் பிரச்னைகளிலும் முரண்பாடுகளிலும் மூழ்கித் தவிக்காததற்காக, அவர் நன்றியுடையவராக இருந்தார். வெகுவேகமாக சமூகத்தில் கெளரவமிக்கவராகவும், வாழ்வின் மிக உயர்ந்த மனிதர்களுள் ஒருவராகவும் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்கிற மகிழ்வில் திளைப்பவராக அவர் இருந்தார். பிற பெண்களின்பால் அவர் மனம் ஈர்க்கப்படவில்லை என்றும், கணவன்-மனைவிக்கிடையேயான வழக்கமான பிணக்குகள் நேர்ந்தாலும், அவர் குடும்ப வாழ்க்கை நிறைவானது என்றும் அவர் தொடர்ந்தார். அவரிடம் தீய பழக்கங்கள் ஏதும் இல்லை என்றும், அடிக்கடி பிரார்த்திப்பதாகவும், கடவுளை வழிபடுவதாகவும் அவர் சொன்னார். ‘என்னுடைய விஷயம்தான் என்ன ? ‘ என்று கேட்ட அவர், ‘என்னிடம் பிரச்னைகளே இல்லையா ? ‘ என்றும் வினவினார். அவர் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. மாறாக, நிறைவான புன்னகையுடனும் ஆனால் ஒருவிதமான விசனத்துடனும் அவர் இறந்த காலம் பற்றியும், அவர் என்ன செய்தார் என்பது குறித்தும், குழந்தைகளுக்கு அவர் கொடுக்கிற கல்வி குறித்தும் எல்லாம் தொடர்ந்து விவரித்தார். தான் ஒரு வள்ளல் அல்ல என்றும் ஆனால் அங்கும் இங்கும் ஏதோ தர்மம் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். உலகத்தில் தனக்குரிய அந்தஸ்தை அடைய ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
கெளரவம் ஒரு சாபம் ஆகும்; அது மனத்தையும் இதயத்தையும் துருப்பிடிக்கச் செய்கிற தீங்காகும். அது சப்தமின்றி ஒருவர் மீது படர்கிறது; அதனால், அன்பினை அழித்து விடுகிறது. கெளரவத்திற்குரியவராக இருக்க, வெற்றிக்குரியவராக உணர வேண்டும்; உலகில் தனக்கான அந்தஸ்தைச் செதுக்க வேண்டும்; தன்னைச் சுற்றிலும் நிச்சயத்தன்மை நிறைந்த உறுதியானச் சுவர்களைக் கட்ட வேண்டும். இத்தகைய கெளரவம் என்கிற உத்திரவாதம் பணம், அதிகாரம், வெற்றி, சக்தி அல்லது நற்பண்பு ஆகியவற்றால் வருகிறது. இந்த உத்திரவாதத்தின் தனித்தன்மை – வெறுப்பையும், விரோதத்தையும் வளர்க்கிறது; அதுவே சமூகம் என்றழைக்கப்படுகிறது. கெளரவமிக்கவரே சமூகத்தின் புடம்போட்ட புத்திரர்கள். அதனாலேயே, அவர்கள் சச்சரவிற்கும், துயரத்திற்கும் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். கெளரவம் மிக்கவர்கள் – நிந்திக்கப்பட்டவர்களைப் போலவே – எப்போதும் சூழ்நிலைகளின் கருணையில் வாழ்கிறார்கள். சுற்றுப்புறத்தின் தாக்கமும், மரபுகளின் ஆற்றலும் அவர்களுக்குப் பெரிதும் முக்கியமானவையாகும்; ஏனெனில், அவையே அவர்களின் அகவயமான ஏழ்மையை மறைக்கின்றன. கெளரவமிக்கவர்கள், தற்காப்பிலும், பயத்திலும், சந்தேகத்திலும் வாழ்கிறார்கள். பயம் அவர்கள் இதயத்தில் குடிகொண்டுள்ளது. அதனால், கோபம் அவர்கள் நேர்மையாக இருக்கிறது. அவர்களின் நற்பண்புகளும், தெய்வ பக்தியுமே அவர்களின் தற்காப்பு. அவர்கள் – உள்ளே வெறுமையாகி, அடிக்கப்படும்போது வெளியே ஒலி எழுப்புகின்ற – மத்தளத்தைப் போன்றவர்கள். கெளரவம் மிக்கவர்கள் எப்போதும் உண்மைநிலைக்கு தங்களை அனுமதிக்க இயலாது. ஏனெனில், நிந்திக்கப்பட்டவர்களைப் போல, அவர்களும் தங்களின் சுய முன்னேற்றம் என்னும் கவலையுறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பேரானந்தம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தவிர்க்கிறார்கள்.
பேராசை கொள்ளாமல் இருப்பதும், தரும சிந்தனை (generous) அற்று இருத்தலும் நெருங்கிய தொடர்புடையது. இரண்டுமே தனக்குள்ளே சுருங்கிப் போகிற சுய உறையிலிடப்பட்ட இயக்கங்கள் – தன்வயமான தன்மையின் (self-centeredness) எதிர்மறை வடிவங்கள். பேராசை கொண்டவராக இருக்க நீங்கள் செயல்திறம் மிக்கவராக, மற்றவருடன் வெளிப்படையாக – சுலபமாகப் – பழகுபவராக (outgoing) இருக்க வேண்டும்; நீங்கள் பாடுபட்டு உழைப்பவராக, போட்டியிடுபவராக, ஆக்ரமிப்பவராக இருக்க வேண்டும். உங்களுக்கு இத்தகைய ஆற்றல் இல்லாவிட்டால், நீங்கள் பேராசையிலிருந்து விடுபட்டவர் இல்லை; மாறாக, வெறும் சுய உறையிலிடப்பட்டவர். மற்றவருடன் வெளிப்படையாக -சுலபமாகப் – பழகுதல் என்பது ஒரு தொந்தரவு; வலிமிக்கப் போராட்டம். எனவே, தன்வயமான தன்மையானது (self-centeredness), பேராசையின்மை என்கிற வார்த்தையால் மறைக்கப்படுகிறது. கைகள் ஈகிற தரும சிந்தனை கொண்டவராக இருப்பது ஒரு விஷயம்; ஆனால், இதயத்தில் தயாளத்துடன் இருப்பது மற்றொரு விஷயம். கலாச்சார அமைப்பினைப் பொறுத்தும் மற்றும் அது சார்ந்த விஷயங்களைப் பொறுத்தும் பார்க்கும்போது, கைகளின் ஈகைத்திறன் ஓர் எளிய விஷயமே. ஆனால், இதயத்தின் தயாளகுணமானது பெரிதும் முக்கியத்துவம் நிறைந்தது. அதற்கு நீடிக்கப்பட்ட விழிப்புணர்வும் புரிந்து கொள்ளுதலும் தேவைப்படுகிறது.
தயாள குணமற்று இருத்தல், ஓர் இனிமையான ஆனால் குருட்டுத்தனமான, சுய-உட்கிரகித்தல் (self-absorption); அதிலே வெளிப்படையாக, சுலபமாக மற்றவருடன் பழகுதல் இல்லை. இந்தத் தன்னுள்ளே மூழ்கிப் போகிற நிலைக்கு, அதற்கேற்ற செயல்கள் இருக்கின்றன – ஒரு கனவு காண்கிற மனிதரின் செய்கைகளைப் போல. ஆனால் அவை என்றும் உங்களைத் துயிலெழுப்பா. விழித்தெழுதல் ஒரு வலிமிக்க இயக்கம். ஆதலால், இளமையோ அல்லது முதுமையோ, நீங்கள் கெளரவமிக்கவராக மாற, மரித்துப் போக – நீங்கள் தனியாக விடப்படலாம் .
இதயத்தின் தயாளகுணத்தைப் போல, கைகளின் தரும சிந்தனையும், உலகத்துடன் சுலபமாகப் பழகுகிற இயக்கமே. ஆனால், நிறைய நேரங்களில் அது வலிமிக்க, ஏமாற்றுத்தன்மை கொண்ட, சுயம் எனப்படும் நான் என்கிற நிலையைச் சொல்கிற – இயக்கமாகும். கைகளின் தயாள குணம் வரவைப்பதற்கு சுலபமானதாகும். ஆனால், இதயத்தின் தயாள குணத்தை உரமிட்டு வளர்க்க இயலாது. அது, எல்லாச் சேமிப்பிலிருந்தும் விடுதலையாகும். மன்னிப்பதற்கு, கண்டிப்பாக காயம் பட்டிருக்க வேண்டும். காயப்படுவதற்கு, கண்டிப்பாக பெருமையின் சேகரிப்புகள் இருக்க வேண்டும். ‘நான் ‘ மற்றும் ‘என்னுடைய ‘ என்று தொடர்புப்படுத்துகிற, சுட்டிக் காட்டுகிற நிலை தொடர்கிற வரை, அங்கே இதயத்தின் தயாள குணம் இருப்பதில்லை.
(வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])
- வானோர் உலகம்
- நகர(ரக) வாழ்க்கை
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை
- பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)
- மகாராஜாவின் இசை
- பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு
- பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
- கோதுமை தேன் குழல்
- சோயா முட்டை பஜ்ஜி
- அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்
- வசந்த மாளிகை
- நிலப்பரப்பு
- இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்
- கலர் கனவுகள்
- மதிப்பு
- ஊடுருவல்.
- இருத்தல் குறித்த சில கவிதைகள்..
- தெளிந்த நீரோடை
- அமானுஷ்யக் கனவு
- அடையாளம் கடக்கும் வெளி
- கெளரவம் (Respectability)
- பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)
- மகாராஜாவின் இசை
- மனுசங்கடா, நாங்க மனுசங்கடா
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை