ரெ.கார்த்திகேசு
மாலையில் அம்மா வீட்டுக்கு வெளியே கிடந்த ஊஞ்சலில் உட்கார்ந்து அந்த வாரத்து இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஓய்வான வேளையில் அந்த விஷயத்தைத் தொடங்கினான். அம்மாவின் முன்தலையில் ஒரு பிடி நரை புஸ்ஸென்றிருந்தது. அதை மறைக்க அவர் ஒரு ஆயத்தமும் செய்யாமல் இயற்கையாக விட்டிருப்பது ஆனந்தனுக்கு எப்போதும் பிடிக்கும். அவரின் வெள்ளெழுத்துக் கண்ணாடியை கழுத்தில் தொங்கும் சங்கிலியோடு மாட்டி வைத்திருப்பார். அதை இப்போது கழற்றித் தொங்க விட்டுவிட்டு, “சொல்லுப்பா” என்றார். புன்னகையோடு அவன் சொல்வதைக் கேட்டார். உமா தன்னோடு வேலை செய்வதையும் அவளைத் தான் விரும்புவதையும் சொன்னான். அவர் முகம் பிரகாசமானது.
“அப்படியா ஆனந்த்? அப்பாடா! என் மனசில இருந்த இன்னொரு கவல முடிஞ்சது” என்றார் அம்மா.
உமாவின் பின்னணி பற்றி இன்னும் ஒன்றும் சொல்லவில்லை.
“ஒனக்குத் தான் தெரியுமேயப்பா! உன் அண்ணனும் சரி, நீயும் சரி புத்திசாலிப் பிள்ளைங்க. உங்க தேர்வு பிழையாப் போகாது. பொண்ண ஒரு முற கொண்டுவந்து எங் கண்ணுல காட்டிரு. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் விரும்பிற தேதியில கல்யாணத்த வச்சிக்குவோம்!”
“அம்மா! நீங்க இப்படித்தான் சொல்லுவிங்கண்ணு எனக்குத் தெரியும். உமாகிட்ட கூட அப்படித்தான் சொன்னேன். ஆனா… உமாவுடைய முக்கியமான பின்னணி பத்தி நீங்க கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். முதல்ல இதோ இந்த உறைக்குள்ள இருக்கிற பத்திரிகைச் செய்திகளைப் படிச்சிப் பாருங்க. வேற விவரங்களப் பிறகு சொல்றேன்!” உறையை அப்படியே அம்மா கையில் கொடுத்தான்.
“என்னப்பா புதிர் போட்ற?” என்று கேட்டவாறே அம்மா உறையை வாங்கிக் கொண்டு கழுத்தில் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த கண்ணாடியைக் காதுகளில் மாட்டிக் கொண்டு உறையைப் பிரித்தார். அவரை அமைதியாகப் படிக்கவிட்டு ஆனந்தன் உள்ளே போனான்.
அவன் சமயலறைக்குச் சென்று மின்கேத்தலில் தண்ணீர் கொதிக்க வைத்து இரண்டு கோப்பைகளில் தேநீர் கலக்கி எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே ஊஞ்சலுக்கு வந்தான். இன்னும் படித்தவாறுதான் இருந்தார். அம்மாவின் முகம் இறுக்கமாக இருந்தது.
அம்மாவிடம் ஒரு கோப்பையை நீட்டினான். தாளிலிருந்து கண்ணை எடுக்காமல் கையை நீட்டி வாங்கிக் கொண்டார். அவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறு தன் கோப்பையிலிருந்து உறிஞ்சினான்.
அம்மாவும் தேநீரை உறிஞ்சினார். ஆனால் தொடர்ந்து கண்கள் தாள்களின் மேலேயே இருந்தன. இவ்வளவு நேரத்தில் படித்து முடித்திருக்க வேண்டும். ஆனால்…
“என்னம்மா நினைக்கிறீங்க…?” என்றான்.
நிமிர்ந்து பார்த்தார். “நல்லா இல்லையே அப்பா!” என்றார். எது நல்லா இல்லை? செய்தியா? பெண்ணா?
“ஆமாம்மா! ஒரு பெண்ணுக்கு சில காலிப்பயல்கள் செய்த அனியாயம்!” என்றான்.
பேசாமல் இருந்தார். “என்ன சொல்றிங்க அம்மா?” என்று தூண்டினான்.
“என்ன அவசரம் ஆனந்தன்? என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணிக்கப் போற? இந்தச் செய்தியை ஜீரணிக்கக் கொஞ்ச கால அவகாசம் குடு!” என்றார்.
*** *** ***
அன்று காலை அலுவலகக் கூட்டம் இருந்தது. மற்றவற்றுடன் மாரியம்மாள் வழக்கு பற்றியும் பேசினார்கள். மாரியம்மாள் வழக்குக்குக் கிடைத்துள்ள பத்திரிகை விளம்பரங்களைத் தொடர்ந்து பல போதைப் பொருள் வழக்குகளில் தங்களைத் தற்காக்க பல பேர் கேட்பதாக வஹாப் சொன்னார். ஆனால் மாரியம்மாள் வழக்கு முடிந்த பின்பே அதுபற்றி யோசிக்க முடியும் என்றார். ஒரு அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.
அறையை விட்டு அனைவரும் வெளியேற வாசலில் உமாவை கைப்பிடித்து நிறுத்தினான் ஆனந்தன். நின்று ஏறிட்டுப் பார்த்தாள்.
“நேத்து அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன்” என்றான்.
“அப்புறம்?”
“யோசிச்சுச் சொல்றேன்னு சொன்னாங்க!”
“எப்ப சொல்வாங்களாம்?”
“தெரியில உமா. அவசரப் படுத்த வேண்டாமே. அவங்க வேணுங்கிற காலம் எடுத்துக்கிட்டுமே!” என்றான். அமைதியாக இருந்தாள்.
“என்ன யோசனை?.
“காலங்கடந்து வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதின்னு சொல்வாங்க! அதத்தான் யோசிச்சேன்!” என்றாள்.
“இல்ல உமா! அம்மா கண்டிப்பா நல்ல முடிவுதான் சொல்லுவாங்கன்னு நெனைக்கிறேன்!” என்றான்.
“சரி!” ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகத் தயாரானாள். மீண்டும் கைப்பிடித்து நிறுத்தினான்.
“இன்னக்கி மாலையில…”
“இன்னொரு டீயா? வேணாம் ஆனந்த். உங்கம்மா யோசிச்சு பதில் சொன்ன பிறகு சந்திப்போமே!” என்றாள். மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு நடந்தாள்.
ஏமாற்றத்துடன் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றுவிட்டுத் தன் அலுவலகத்துக்குத் திரும்பினான்.
*** *** ***
காதலில் உடலும் உள்ளமும் தகித்தன. ஒரு வாரமாய் உமா வழக்கு விஷயங்கள் தவிர வேறெதுவும் அவனிடம் பேசுவதில்லை. அவனுக்கும் அவளிடம் பேச புதிதாக ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் அவளிடம் தனிமையில் ஏதாவது பேச வேண்டும்; அணுக்கமாக உட்கார்ந்து அவள் வாசங்களைச் சுவாசிக்க வேண்டும்; கைபிடிக்க வேண்டும்; உடல் உரச வேண்டும் என்று மனம் தூண்டிக்கொண்டும் அலைக்கழித்துக் கொண்டும் இருந்தது.
அம்மா இந்த ஒரு வாரமாக அவனுக்குப் பதில் கூறவில்லை. ஒரு இறுக்கமான முகத்துடன் இருந்தார். அவனைச் சந்திப்பதைத் தவிர்ப்பவர் போலவும் இருந்தது. ஆகவே தன்னைச் சுற்றிச் சுற்றி நடக்கும் இந்தப் பனிப்போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான்.
அன்று இரவு அம்மாவைப் பிடித்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாதியில் போய் அவர் முன் உட்கார்ந்தான். நிமிர்ந்து பார்த்தார்.
“எப்ப அம்மா எனக்கு முடிவு சொல்லுவிங்க?”
வாய்க்குப் போன சோறு வழியில் நின்றது. “சாப்பிட்டு முடிச்சிட்டுப் பேசுவோமே!” என்றார்.
“சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்” என்றான்.
அந்தச் சோற்றைத் தட்டில் போட்டுவிட்டு தட்டையும் தூக்கிக்கொண்டு போய் வாஷ்பேசின் அருகில் வைத்துவிட்டு கைகழுவி வந்து உட்கார்ந்தார்.
“இந்த விஷயம் பத்தி நல்லா யோசிச்சியாப்பா?” என்று கேட்டார்.
“நான் நல்லா யோசிச்ச பிறகுதான் உங்ககிட்ட கொண்டு வந்தேன்!” என்றான். அவன் குரலில் இருந்த உறுதி அவரைக் கொஞ்சம் உலுக்கியிருக்க வேண்டும்.
“அப்படி யோசிச்ச பிறகும் இந்தப் பொண்ணுதான் வேணும்னு உறுதிபண்ணிட்டியா?’
“ஆமாம்”
யோசித்தார். “ம்.. நீ இவ்வளவு உறுதியாக இருக்கும்போது எங்கிட்ட வந்து கேக்க வேண்டிய அவசியமே இல்லியே! இது நவீன யுகம். இப்போதைய பிள்ளைங்க முதிர்ச்சியடைஞ்சவொண்ண தங்களுக்குப் பிடிச்ச பெண்ணக் கட்டிக்கிறதுக்கு அப்பா அம்மா சம்மதம் தேவையே இல்லியே!” என்றார்.
“அம்மா! உங்க சம்மதம் எனக்குத் தேவை. எல்லாம் சுமுகமாக நடக்கணுன்னுதான் நான் ஆசப்பட்றேன்” என்றான்.
அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தார். “ஆனந்தா! இந்தப் பொண்ண விட்டிருப்பா! அவள மறந்திட்டு உன்னச் சுத்திப் பார். நூத்துக் கணக்கில அழகான படிச்ச பொண்ணுங்க இருக்கிறாங்க. அப்படி முடியிலன்னா பிரச்சினையை எங்கிட்ட விட்டுரு. நானே ஒரு பெண் தேடி உனக்குக் கட்டி வைக்கிறேன்”.
பேசாமல் இருந்தான். ஏமாற்றம் மனதைக் கவ்வியது. அம்மாவா இப்படிப் பேசுகிறார்? படித்தவர், முன்னேற்றகரமான சிந்தனையுள்ளவர் என என் மனதில் ஏற்றி வைத்திருந்த அம்மாவா?
“அம்மா. உமா ஏன் உங்களுக்குப் பிடிக்கில அப்படிங்கிறதுக்கு காரணம் சொல்லுங்க!” என்றான்.
“பிடிக்கிலன்னா சொன்னேன்? இல்ல. அவ பாவம், காலத்தின் கொடுமைக்குப் பலியான அப்பாவி. நம் எல்லாருடைய அனுதாபத்துக்கும் உரியவ. ஆனா உனக்கு, நம் குடும்பத்துக்குப் பொருத்தமில்லன்னுதான் சொன்னேன்!”
“அப்படின்னா?”
“உடலால அவ மாசு பட்டவ. அதோட ஒரு குரோதத்தில கத்தியத் தூக்கி ரத்த ருசி கண்டவ! அந்த மாசு உள்ளத்திலும் இல்லாம இருக்காது. அது நீண்ட நாளைய பழக்கத்தில மனிதர்களோட இதமாகப் பழக விடாது. உள்ளத்தில அமைதியில்லாம அலைக்கழிக்கப் பட்ற பெண்ணாத்தான் இருப்பா! ஒரு வெறியில கத்தியத் தூக்கத் தயங்க மாட்டா!”
அம்மாவின் பேச்சு மனத்தசைகளைக் குத்திக் கிழித்தது. உமாவைப் பார்க்காமலேயே, அவளிடம் பழகாமலேயே அவர் மனதுக்குள் இப்படி ஒரு கொடூரத் தீர்ப்பு எழுதினாரா?
“அம்மா! உமாவோட ஒவ்வொரு நாளும் பழகிறவன் நான். அவ அந்த கொடூரமான நெருப்பிலிருந்து விடுபட்டு முற்றாகச் சாதாரண நெலைக்கு வந்திட்டா! நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல!”
அம்மா அவனைக் கூர்மையாகப் பார்த்தார். “சரி! பின்னால அவ இந்த மாதிரி மாறிட மாட்டான்னு நீ உத்திரவாதம் கொடுக்க முடியுமா?”
உத்திரவாதமா? யார் கொடுக்க முடியும்? எந்த மனிதன், எந்த மனுஷி எப்படி மாறமாட்டார் என யார் உத்திரவாதம் கொடுக்க முடியும்? தயங்கி நின்றான்.
“தயங்கிற பாத்தியா? காரண காரியத்துக்கு உட்பட்ட சந்தேகமா இருக்கிறதினாலதான் தயங்கிற? நீ படிச்சிருக்கிற சட்டம் கூட அந்தச் சந்தேகத்தை ஏற்கும்; reasonable doubt! அந்த சந்தேகம் இருக்கிற வரையில அவ இந்தக் குடும்பத்துக்கு பொருத்தமானவ இல்ல! அவ்வளவுதான் சொல்லுவேன்”.
அம்மா எழுந்து அறைக்குள் போனார். ஏமாற்றத்தாலும் அதிர்ச்சியாலும் அலைக்கழிக்கப்பட்ட மனதுடன் உட்கார்ந்திருந்தான்.
————-
karthi@streamyx.com
- நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்
- எடின்பரோ குறிப்புகள் – 17
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 5
- வாசகரும் எழுத்தாளரும்
- முன்னோட்டம்
- ‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’
- நவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- துரோபதி திருக்கலியாணம்
- விந்தையான யாத்திரிகர்கள்
- மெட்டாபிலிம் (Metafilm)
- கல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி
- கடித இலக்கியம் – 7
- பேந்தா !
- பகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்
- சிறுவரை பள்ளிக்கு அனுப்புவோம்
- கடிதம் ( ஆங்கிலம் )
- திருக்குரானின் எதிர் கொள்ளல்கள்
- கடிதம்
- மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …
- எது மோசடி?
- நாளை நாடக அரங்கப்பட்டறை
- காக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க
- கண்ணகிக்குச் சிலை தேவையா?
- இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?
- இ ன் னி சை வி ரு ந் து
- பெற்ற கடன்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)
- புலம்பெயர் வாழ்வு 13
- பழைய பாண்டம் – புதிய பண்டம்
- குவேரா வழங்கிய அருங்கொடை
- டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி !
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது? -6
- கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்
- கறிவேம்பில் நிலவு
- வெவ்வேறு
- புறப்படு
- விரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்
- பெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நிலா மட்டும்…
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)
- கீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்!