குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

நெருப்புநிலவன்


7-3-2005 தேதியிட்ட குமுதல் இதழின் அரசு கேள்வி-பதில்களில் ஒரு கேள்வி. திருமுல்லைவாயிலில் இருந்து வரதன் கேட்டிருக்கிறார்.

ஜெயமோகன் எழுத்தில் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது ?

அரசு பதில் சொல்கிறார்: ‘உள்ளார்ந்த அனுபவமும், ஆழத்தைத் தொடும் மன முதிர்ச்சியும் பிடிக்கிறது. பிடிக்காதது ? அந்தப் பேனா மையில் கலந்திருக்கும் காவி நிறம். ‘

ஜெயமோகன் குமுதத்தில் தொடர் எழுதப் போகிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே, குமுதத்தின் இந்த வர்த்தக அரசியல் மனோபாவம் புரியாமல் இல்லை. மு.கருணாநிதி அவர்கள் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அவரை விமர்சிப்பதற்கு அந்தத் தொடரின் தலைப்பை வைத்துக் கார்ட்டூன் போட்டுச் சீண்டியது குமுதம். அரசியலில் முதிர்ச்சியும், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதில் பக்குவமும் பெற்ற கருணாநிதி அவர்கள் குமுதத்தில் எழுதி வந்தத் தொடரையே நிறுத்தி விட்டார். ஜெயலலிதா அவர்கள் குமுதத்தில் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றியும் குமுதம் ஏதோ விமர்சிக்க, அவரும் அவர் தொண்டர்கள் வர்ணிக்கிற தாய்மையின் முதிர்ச்சியுடன் தொடரை நிறுத்திவிட்டு வேறு வார இதழில் எழுதினார். எனவே, பிரபலமானவர்களை எழுத வைக்கும்போதெல்லாம், ‘நான் யாருக்கும் பயந்த ஆள் கிடையாது தெரியுமா ‘ என்று உதார் விடுகிற முகமாகக் குமுதம் இத்தகையக் காரியங்களைச் செய்வதுண்டு. இப்படிச் செய்ய வேண்டிய ஈகோவின் உந்துதலோ வர்த்தக உத்திகளோ குமுதத்துக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இதைப் பத்திரிகைக்கேயுரிய தைரியம், சுதந்திரம் என்றெல்லாம் அவசரப்பட்டுப் பாராட்டி விடமுடியாது. குமுதத்தின் சமூக பிரக்ஞை கோடம்பாக்கத்துச் சுந்தரிகளின் முன்னழகுடனும், இடையழகுடனும், பின்னழகுடனும் நிறைவுற்று விடுவது ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட ரகசியம்தானே.

ஒருவிதமாகப் பார்க்கும்போது, ஜெயமோகன் இந்தப் பதிலுக்காக சந்தோஷப்படலாம். கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் அவரையும் வைத்து, அவர் தொடர் எழுதப் போகிற நேரத்தில் அவரைச் சீண்டிப் பார்க்கிறது குமுதம். ஜெயமோகனுக்குக் கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் ஜெயமோகனைப் பிடிக்காதவர்களுக்கு நிச்சயம் எரிச்சலூட்டும். ஜெயமோகனாவது சீண்டலைப் பொருட்படுத்தாமல், தொடரைக் குமுதத்தில் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்பார்ப்போம். என்ன ஜெயமோகன் சம்பாதித்து வைத்திருக்கிற எதிரிகள் அவர் தொடரை எழுதமால் போனால், அவருக்கு முதிர்ச்சியில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். எழுதினாலோ, ‘அரசு அப்படிச் சொல்லியும் குமுதத்தில் வெட்கம் கெட்டு எழுதியதன் மூலம் தன் பேனாவில் கலந்திருப்பது காவி நிறம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார் ‘ என்று முற்போக்குக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவார்கள். எப்படியும் ஜெயமோகனுக்குத் திட்டுதான். எனவே, அவர் எழுதிவிட்டுத் திட்டுவாங்குவதன் மூலம் அவர் வாசகர்களையாவது திருப்திபடுத்தலாம். அப்படியே கொஞ்சம் காசும் பார்க்கலாம். தமிழ் எழுத்தாளன் வருமானத்தைப் பற்றியும் கவலைப்பட்டுத்தான் தீர வேண்டும். அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.

இதைவிட முக்கியமான விஷயம் – அரசு சொல்லியிருக்கிறார். பிடிக்காதது – ‘அந்தப் பேனா மையில் கலந்திருக்கும் காவி நிறம் ‘ என்று. இந்த வரியைச் சற்று உரசி ஆராய்ந்து பார்ப்போம்.

புகழ்பெற்ற போலந்து கலைப்பட இயக்குனர் Krzysztof Kieslowski. அவர் படங்களில் நடித்தப் புகழ்பெற்ற நடிகை Grazyna Szapolowska. இயக்குனரைப் பற்றிய ஒரு நேர்முகத்தில் அவர் சொன்னார்: ‘Kieslowski ஜீன்ஸ் போட்டிருக்கிறாரா, மாரிஜியுவானா குடிப்பாரா, எப்படி நடந்து கொள்வார் இன்னபிற என்பதெல்லாம் முக்கியமல்ல. அவர் ஓர் கலைஞர். அதுதான் கவனிக்கத்தக்கது. அதன் அடிப்படையிலேயே அவரை அணுக வேண்டும். ‘ கோடம்பாக்கத்து நடிகைகளின் திருவாய்மலர்தலை வேதமாகப் பிரசுரிக்கும் குமுதத்துக்கு இந்த நடிகையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்.

ஒரு படைப்பாளி என்ன கொள்கை வைத்திருக்கிறார், எந்தக் கட்சி சார்பு கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் படைப்பைப் படிக்கும்போது கவனத்தில் யாரும் கொள்வாரென்றால், அது படிப்பவரின் குறையே. ஓர் படைப்பாளியை அவர் சொல்கிற கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவா இல்லையா என்பதைவிட, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமை, வீச்சு, கலைத்திறன் என்று பிறவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடுவது சரியான காரியமாக இருக்கும். அந்தக் காரணத்தினாலேயே, ஜெயகாந்தன் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடையவராகவும், பின்னாளில் காங்கிரஸ் கட்சி சார்புடையவராகவும் ஆகியிருந்தபோதிலும், இலக்கிய விமர்சகர்கள் யாரும் அவர் பேனாவில் சிவப்பு மையோ, காவி-வெள்ளை-பச்சை கலந்த மையோ வழிவது பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. அரசியல் ஆர்வமுடைய – எல்லாவற்றிலும் தங்கள் கொள்கைகள் இல்லாவிட்டால் நிராகரித்துவிடுகிற – கத்துக்குட்டிகள் அப்படி ஏதும் கத்தியிருக்கலாம். மு.கருணாநிதி கூட ஜெயகாந்தனைப் பற்றி, ‘அவர் எழுத்துகளின் வேகத்தையும், அதிலே இருக்கும் விவேகத்தையும் ரசித்திருக்கிறேன் ‘ என்று சொன்னது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜெயகாந்தன் எழுத்துகளை ரசித்த வாசக மனோபாவத்தில்தான். இந்த விளக்கம், ஓர் எழுத்தாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கொள்கைகள் அடிப்படையில் அவரைப் பிடிக்கும் என்று சொல்வதோ, பிடிக்காது என்று சொல்வதோ சரியில்லை என்று சொல்ல.

எந்தச் சித்தாந்தத்தையும் முழுவதுமாக நிராகரித்துவிட முடியாது, முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. கம்யூனிசத்திலிருந்து காவியிசம் வரை. அந்தவிதத்தில் காவியிசத்தில் நல்ல விஷயங்களும் உண்டு. பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கையிலும், வெளிநாட்டுக் கொள்கையிலும் பிற கட்சியினரும் ஒத்துப் போகிற பல விஷயங்கள் இருக்கின்றன. விவேகானந்தரும், பாரதியாரும் சொன்னப் பல கருத்துகளைத் தங்கள் கருத்துகளாக முன்வைத்து அரசியல் கண்ணாமூச்சி ஆடுகின்றன சங் பரிவாரங்கள். விவேகானந்தரையும் பாரதியையும் ஏற்றுக் கொள்கிற ஒருவரும் அப்போது காவியாகி விடுகிறாரா என்ன ? அதேமாதிரி, திராவிட இயக்கங்களின் மொழிக் கொள்கையிலும், பிரிவினைவாதத்திலும் அந்நாளைய கம்யூனிஸ்ட்டுகள் கூட ஒத்துப் போனதில்லை. இப்போது கம்யூனிஸ்டுகள் திராவிட இயக்கங்களின் தயவில் வாழ்பவர்களாக மாறிப் போனதை விட்டுவிடுவோம். எனவே, ஜெயமோகன் காவியை ஆதரிக்கிறார் என்றால், காவியின் மோசமான கொள்கைகளை ஆதரிக்கிறாரா இல்லை காவியின் நல்ல கொள்கைகளை ஆதரிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். காங்கிரஸ்காரரான சுப்பராயனுக்குப் பிறந்த மோகன் குமாரமங்கலம் கம்யூனிஸ்ட்டாகவும் பின்னர் காங்கிரஸ்காரராகவும் ஆவது, மோகன் குமாரமங்கலத்துக்குப் பிறந்த ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க.வில் சேருவது, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பிசைந்து கொடுத்தப் பகுத்தறிவுப் பகலுணவு உண்டு, அறிவாலயத்து அண்ணல் கலைஞர் கருணாநிதியின் தோள்களில் தூங்கி வளர்ந்த முரசொலி மாறன் பா.ஜ.க. அமைச்சரவையில் ஒரு பதவிக்காலம் முழுமையும் பதவி வகிப்பது ஆகியன தவறில்லையாம். இப்படிப்பட்ட அரசியல், செல்வாக்கு, மற்றும் பொருளாதார ரீதியான ஆதாயங்கள் ஏதும் பெறாமல், தத்துவரீதியாக இந்துமதம் ஒத்த கொள்கைகளின் சில இழைகளில் பா.ஜ.க.வுடன் ஒத்துப் போகிற மாதிரியான கருத்தாக்கங்களை ஜெயமோகன் கொண்டிருப்பது தவறாம். தன் கடைசிக் காலத்தில் பகவத் கீதை புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியான எஸ்.ஏ. டாங்கேவையும் (தகவலுக்கு நன்றி: இரா.முருகன்), பகவத் கீதைக்கு உரை எழுதிய பாரதியாரையும் கூட இத்தகைய வாதங்களின் அடிப்படையில் சுலபமாகக் காவிக்கு மாற்றி மகிழ்ந்து கொள்ளலாம்.

அடுத்த கேள்வி – ஜெயமோகனின் பேனாவில் காவி நிறம் உண்மையிலேயே வழிகிறதா ? நேர்மையுடன், தான் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்ததைப் பற்றி அவர் பதிவு செய்திருக்கிறார். பின்னர் வெளிவந்துவிட்டது குறித்தும் எழுதியிருக்கிறார். இப்போது அந்தக் கொள்கையில் நாட்டமில்லை என்றும் சொல்கிறார். கடைசி தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு ஓட்டுப் போட்டேன் என்றும் சொல்கிறார். தொழில் நிமித்தமாக இடதுசாரி தொழிற்சங்கத்தில் இருப்பதாகவும் சொல்கிறார். ஆனால், இன்னமும் அவர் காவி கட்டிக் கொண்டிருக்கிறாராம். மு.கருணாநிதி அவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘நானே ஒரு கம்யூனிஸ்ட்தான் ‘ என்று பறை சாற்றிக் கொள்வதற்கும் ஜெயமோகன் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு கொள்கையுடன் தனக்கு இப்போது உடன்பாடில்லை என்று சொன்ன பிறகும் அவர் அந்தக் கொள்கையை ஆதரிக்கிறார் என்று எடுத்துக் கொண்டால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட மு.கருணாநிதியின் பேனாவில் வழிவதும் காவி நிறமா ? இப்போது கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிற அம்மாவின் நாவில் தவழ்வது காவி நிறமா ? வி.பி. சிங் அரசாங்கத்தை பா.ஜ.க. ஆதரித்தாலும் பரவாயில்லை, நாங்களும் வெளியிலிருந்து ஆதரிப்போம் என்று கைகோர்த்துக் கொண்ட கம்யூனிஸ்ட் தோழர்களின் வியர்வையில் தெரிவதும் காவி நிறமா ? திராவிட கட்சிகள் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவிக்கிற அடுத்த நொடி, இடதுசாரிகளின் பார்வையில் புனிதமடைந்து விடுகின்றன. அவற்றுடனான தேனிலவு இடதுசாரிகளுக்கு மீண்டும் ஆரம்பித்து விடுகிறது. ஆனால், ஜெயமோகன் மட்டும் தான் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இப்போது இல்லை என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்ய முன்வந்தாலும் இவர்கள் நம்பாமல் அவருக்குக் காவி வண்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள்.

ஜெயமோகன் செய்யாதது என்ன ? இடதுசாரி என்று சொல்லிக் கொண்டு வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவது. விடுதலை, புரட்சி என்று சொல்லிக் கொண்டு, பயங்கரவாத இயக்கங்களின்மீது பரிவு காட்டுவது. கம்யூனிசம் என்றபடி ஸ்டாலினை நியாயப்படுத்துவது. தமிழ் தேசியம் என்றபடி பிரிவினைவாதத்தையும் வன்முறையையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. இடதுசாரிகள் மாதிரி திராவிட இயக்கங்களுக்கு ஊதுகுழலாக இருப்பது. இவற்றையெல்லாம் ஜெயமோகன் செய்யாததால் அவரை இடதுசாரி என்று ஞானஸ்நானம் செய்ய யாரும் முன்வருவதில்லை. கருணாநிதிகூட தன்னைக் கம்யூனிஸ்ட் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடிகிறது தமிழ்நாட்டில். தான் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இல்லை என்ற உண்மையைச் சொன்னாலும் ஜெயமோகனுக்குக் கிடைப்பது அவதூறும் திட்டும் மட்டுமே.

ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தது குற்றம் என்றே வைத்துக் கொள்வோம். மேலைநாடுகளில் குற்றம் செய்தவர்கள் கூட திருந்தி வாழ வாய்ப்பும் வசதியும் செய்து தரப்படுகிறது. யாரும் அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எழுதும்போதெல்லாம் ‘நீ குற்றவாளி ‘ என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அப்படி யாரும் செய்தால் அது வக்கிர மனோபாவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஜெயமோகனை மட்டும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இடதுசாரிகளான ரவி ஸ்ரீனிவாஸ், அவருடைய வணக்கத்துக்குரிய தோழி ராதா ராமசாமி, யமுனா ராஜேந்திரன், மற்றும் விற்பனையில் சாதனை படைக்கிற உத்திகளை ரத்தத்தில் கலந்திருக்கும் அரசு போன்றோர் பா.ஜ.க.காரர், ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று திட்டுவார்களாம். நல்ல மனிதாபிமானம் இது. இவர்களில் ரவி ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் வீரப்பன்பால் கூட அனுதாபம் காட்டுபவர்கள். சந்தேகத்தின் பலனை வீரப்பனுக்குத் தர வேண்டுமென்றும், வீரப்பன் தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டுமென்றும், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தீர விசாரிக்கப்பட்ட பின்னரே வீரப்பன் விஷயத்தில் முடிவு செய்ய வேண்டுமென்றும் வாய்கிழியக் கத்துபவர்கள். ஆனால், ஜெயமோகனை விஷயத்தில் மட்டும், எதுவும் கேட்காமல், எந்தச் சந்தேகத்தின் பலனையும் அவருக்குத் தராமல், உடனடியாக அவரைக் காவி என்று முடிவு கட்டி விடுகிறார்கள். தமிழ்ச் சூழலில் இவர்களுக்கு ஜெயமோகன் வீரப்பனைவிடவும் மோசமானவர். ‘சுதந்திரம் பிளவுபடாதது ‘ என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை இவ்வளவு சரியாகச் செயல்படுத்துகிற மார்க்ஸியவாதிகளைப் பார்க்க மார்க்ஸ் இல்லாமல் போனாரே என்று வருத்தமாக இருக்கிறது.

எனக்கு என்ன பயமாக இருக்கிறதென்றால் – ‘நீ அப்படி நீ அப்படி ‘ என்று ஒருவரைத் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டும்போது, கோபத்திலும் விரக்தியிலும் அவர் ஒருநாள், ‘இதுநாள் வரை அப்படியில்லை. இனிமேல் அப்படி ஆகிவிடுகிறேன் ‘ என்று சொல்லிவிடுவாரோ என்பதுதான். எனவே, எதிர்காலத்தில் ஜெயமோகன் பா.ஜ.க.ஆதரவாளராக மாறினால், அதில் ரவி ஸ்ரீனிவாஸ், ராதா ராமசாமி, யமுனா ராஜேந்திரன், குமுதம் அரசு போன்றவர்களுக்குப் பெரும்பங்கிருக்கிறது என்று சொல்லி வைக்கலாம்.

ஜெயமோகன் எழுத்துகளுக்கு ஒட்டுமொத்தமாக வக்காலத்து வாங்குவது என் நோக்கமில்லை. அவர் எழுத்துகளில் தன்னை முன்னிலைப்படுத்துவதும், நுட்பமான அரசியலும், நான் ஒத்துக் கொள்ளாத விஷயங்களும் கலந்திருக்கக் கூடும். ஆனால், ஓர் வெஞ்சினம் போலவும், தனிப்பட்டத் தாக்குதல் போலவும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெகுண்டெழுந்து அவரைத் தாக்குகிற, விவாதங்களின்றி நிராகரிக்கிற போக்கே தமிழில் பெரும்பாலும் நடக்கிறது. எந்த ஓர் ஆக்கபூர்வமான விவாதத்தையும் அவருடன் நிகழ்த்த யாரும் முன்வராததற்கு அவரை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழ்ச்சூழலுக்கு அதில் இணையான பங்கிருக்கிறது. நட்புச் சூழலில் கருத்து வேறுபாடுகளை விவாதிக்கிற, நீ அப்படி, நான் இப்படி என்று பெயர்கள் சொல்லி அழைக்காத ஓர் மனப்பாங்கு தமிழ்ப் பத்திரிகைகளிடமும் எழுத்தாளர்களிடமும் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும், நுட்பமான அரசியல் இல்லாமலும் இப்போது பத்தில் ஒன்பது தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதில்லை என்பதைப் பார்க்கும்போது, இது தமிழ்ச்சூழலின் எழுத்தாளர்களுக்கேயுரிய பொதுக்குணமாகத் தோன்றுகிறது. இத்தகைய குறைகளையும் பலவீனங்களையும் ஓர் எழுத்தாளரை மதிப்பிடுகிற ஒரே அளவுகோலாகக் கொள்ளாமல், எழுத்தாளரின் எழுத்தை – முக்கியமாகக் கதை, கவிதை, நாடகம் போன்ற புனைவுகளை – அணுகுதல் சரியான காரியமாக இருக்கும். இல்லையென்றால், தமிழன் எவனுக்கும் தலைவனாக இருக்க யோக்கியதை இல்லை. அதனால், கன்னடனான நான் தலைவனாக இருக்கிறேன் என்று சொன்னப் பெரியாரைத் தமிழர் என்று அழைத்து, ‘ஈரோடு தமிழர் உயிரோடு ‘ என்று அவருக்கு வாழ்க்கை வரலாறு எழுதிய பிரபஞ்சனின் பேனாவில் பிராமண எதிர்ப்பு மை வழிகிறதென்று சொல்லி, அவரையும் ஓரங்கட்டி விடலாம். இப்படியே போனால், தமிழில் ஒரு எழுத்தாளர் தேறமாட்டார். அரசியல் சார்பை வெளிக்காட்டிக் கொண்டால் வியாபாரம் படுத்துவிடுமோ என்ற பயத்தில், நடிகைகளின் இடைகளையும், அங்கங்களையும் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் ஒப்பிட்டுச் சுகம் கண்டு கொண்டிருக்கிற திருவாளர் அரசு தமிழின் சிறந்த எழுத்தாளர் ஆகிவிடுவார். தமிழர்கள் செய்த பாக்கியமாக அது அமையும்.

எல்லாவற்றையும் மீறி, திருவாளர் அரசுவிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறது. ஜெயமோகன் பேனா மையில் கலந்திருப்பது காவி நிறமென்று வைத்துக் கொள்வோம். ஜெயமோகனுக்கும் இத்தகைய குற்றச்சாட்டுகள் பழகி விட்டிருக்கும். வாசகர்களுக்கும் இவை அலுப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும். முக்காலே மூணு வீசம் நடிகைகளின் அங்கங்களைப் பற்றியும், சினிமாவைப் பற்றியும் பதில் சொல்வதில், மோட்சமடைகிற திருப்தி காணுகிற மைனர் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது சொப்னஸ்கலிதமா ?

—-

neruppunilavan@rediffmail.com

Series Navigation

நெருப்புநிலவன்

நெருப்புநிலவன்