நாகரத்தினம் கிருஷ்ணா
பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.
அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி. பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில் கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானமென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன். ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.
மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம். இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”
பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல். இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.
பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந்
திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும். காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.
போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால் கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:
– எங்கே வந்த?- என்றாள்.
– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?
– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.
– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?
– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.
– பிரண்டுன்னா
– நீங்க நினைக்கிறமாதிரிதான்.
வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.
– தெவடியா. தெவடியா..
குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.
இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் ·பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான். ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.
ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன. அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஸ்கேட்டுங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது. அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.
பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.
——————————————
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4
- சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1
- சூரிய சக்தியில் முதலில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த வானவூர்தி (ஜூலை 8, 2010)
- மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்
- காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)
- மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)
- இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்
- பழமலையும், ப க பொன்னுசாமியும்….
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23
- மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT
- சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்
- புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.
- யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!
- தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி
- கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது
- கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து
- தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து
- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா
- வேத வனம் விருட்சம் -95
- துப்புரவு
- மறுபடியும் ரகு
- தொட்டுப் பாக்கணும்
- குடைராட்டினம்
- எழுதப்படாத கவிதை
- முள்பாதை 38
- பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி
- இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்
- சங்கதி என்னவாயிருக்கும்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்
- முகத்தினைத் தேடி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2
- நடுமுள்
- மெளனவெளி
- நஞ்சு பாசனம்
- களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்