ராஜா வாயிஸ்
ராஜா வாயிஸ், மும்பை
ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலில் இரண்டாவது பூசை முடிந்ததும் குடிமகன் பீரிஸ் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வந்துவிடுவார். என் அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எப்படி முடிவெட்டிக்கொள்ளுகிறார் என்று எனக்கு பெரிய சந்தேகம் உண்டு. இப்படி வாரம் ஒருமுறை முடிவெட்டிக்கொள்ளுவதால் அவர் போலீஸ் ஆபிஸர் மாதிரி இருந்தாலும் குடிமகன் பீரிஸ் இப்படி வாராவாரம் வீடு வந்து போவதில் வேறு ஒரு காரணமும் இருந்தது.
அது முடிவெட்டிக்கொண்டிருக்கும் போது காதில் ஊர்க்கதைகளை ஊதுவது தான். ஐயா உங்களுக்குத் தெரியுமாய்யா, போன வராம் ஊர்கூட்டத்தில் இன்னார் மகன் இன்னாரை சிலுவை பிடிக்கச்சொல்லி தண்டைன கொடுத்தாங்க ( எங்கள் ஊர்களில் பெரிய குற்றம் செய்பவர்களை சிலுவை கையில் பிடித்துக்கொண்டு ஊர் சுற்றி வரச்செய்வது ஒரு வழக்கம்) என்று தொடங்கி சாமியாருக்கு எதிராக நடுத்தெருவில் நடக்கும் சதி வரை ஊர் நடப்புகளை விலாவாரியாக சொல்லுவார்.
பீரிஸ்பிள்ளை இப்படி போட்டுக்கொடுப்பதில் எனக்கும் வினை வருவது உண்டு. நம்ம பையனை இன்னார் மகன் இன்னாருடன் விளையாடும் இடத்தில் வைத்து பார்த்தேனே. அந்த பையன் சரியில்லை. நம்ம பிள்ளை அவன்கூட எல்லாம் பழகக்கூடாது என்று சொல்லி அவ்வப்போது வேட்டும் வைப்பார்.
முதலில் எனக்கு பீரிஸ்பிள்ளையை அறவே பிடிக்காது. அப்பாவிற்கு வாரம் ஒருமுறை முடிவெட்டுபவர் எனக்கு மாதம் ஒருமுறையேனும் தலையை பதம் பார்த்து விட வேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பது தான் எனக்கு அவரை பிடிக்காததற்கு முதல் காரணம். கமல் மாதிரி கப் முடி வைக்க ஆசைப்பட்ட எனக்கு குடிமகன் பீரிஸ் ஒரு பெரிய வில்லன் தான்.
என்கூட படிக்கும் பையன்கள் எல்லாம் பக்கத்து டவுனில் போய் முடிவெட்டிக்கொண்டிருந்த போது நான் மட்டும் பீரிஸ்பிள்ளையிடம் முடிவெட்டுவது எனக்கு கடுப்பாகவே இருக்கும். ஆனால் பீரிஸ்பிள்ளை இருக்கும் வரை அவர் தான் எனக்கு முடிவெட்ட வேண்டும் என்பதில் என் அப்பா மிகவும் கண்டிப்பாக இருந்தார்.
எங்கள் வீடு மாதா கோவிலுக்கு பக்கத்தில் இருந்தது. யாரும் இறந்துபோனால் இறுதி சடங்கு அடக்க பூசைக்கு பாதிரியாருக்கு உதவி செய்ய ஆல்டர் பாய்ஸ்( கோவில் பீடத்தில் பாதிரியாருக்கு உதவியாக நிற்கும் சிறுவர்கள்) பணிக்கு எந்த பையனும் வரமாட்டான். சாவுக்கு அவ்வளவு பயம். அடக்க பூசை நடக்கும் பொழுதெல்லாம் கோவில் கணக்கப்பிள்ளை( கோவிலில் பாதிரியாருக்கு உதவும் வேலையில் இருப்பவர்) வீடு தேடி வந்து என்னை சாமியாருக்கு உதவ அழைத்துச் செல்வார்.
எனக்கு கோவில் கணக்கப்பிள்ளை மீது கடும் பிரியம். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே என்னை கோவிலில் பைபிள் வாசிக்க ஏற்பாடு செய்தவர் அவர். பைபிள் ஸ்டாண்டை விட உயரம் குறைவாக இருப்பேன் என்பதால் கீழே ஒரு எக்ஸ்ட்ரா பலகை அடித்து என்னை பைபிள் வாசிக்க வைத்தவர் அவர் . பசங்களுக்கு அவரைக்கண்டால் ஒரு பயம். கோவிலில் ஜெபம் நடக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் வெடிப்பசங்களை அவர் பின்னால் பூனை மாதிரி முதுகில் அடிக்கும்போது கோவிலே திரும்பி பார்க்கும். சிலவேளைகளில் பிரசங்கம் வைத்துக்கொண்டிருக்கும் பாதிரியாரே அடிச்சத்தத்தை கேட்டு பிரசங்கத்தை நிறுத்தி விடுவார்.
ஒருமுறை கீழத்தெருவில் ஒருவர் இறந்துவிடவே வழக்கம்போல அடக்க பூசைக்கு பாதிரியாருக்கு உதவி செய்ய பசங்க யாரும் கிடைக்கவில்லை. அதுவும் இளம்வயது பெண் மரணமடைந்திருந்தார். கோவில் கணக்கப்பிள்ளை இறுதி சடங்கு பூஜைக்கு உதவி செய்ய என்னை தேடி வருவார் என்று எனக்குத்தெரியும். எனவே நான் வீட்டில் சமையறையில் ஒளிந்து கொண்டிருந்தேன். அன்று என் துரதிர்ஷ்டம் அவர் பின்கொல்லை கதவை வந்து தட்டியது தான். நானும் வசமாக மாட்டிக்கொண்டேன்.
கோவில் பூஜைக்கு முன்னர் கீழத்தெருவில் உள்ள இறந்தவர் வீட்டிற்கு பிரேதத்தை எடுக்க பாதிரியாருடன் பூசை உதவி உடுப்புப்போட்டுக்கொண்டு சென்றேன். வீட்டின் முன்னர் ஒரு தட்டிப்பந்தலில் சடலத்தை வைத்திருந்தார்கள். நான் கையில் சிலுவையுடன் அடக்கப்பெட்டி முன்னர் நின்று கொண்டிருந்தேன். பாதிரியார் செபம் சொல்லி மந்திரித்து விட்டு கிளம்பினார்.
உரிமைப்பட்ட சொந்தக்காரர்கள் எல்லாம் சவப்பெட்டியை ஆளுக்கு ஒரு மூலையிலிருந்து தூக்க அழுதுகொண்டிருந்த பெண்கள் எல்லாம் இப்போது உரக்க சப்தமிட்டு பெட்டியை தூக்க விடாமல் தடுக்க ஏற்கெனவே வலுக்கட்டாயமாக பாதிரியாருக்கு உதவிக்கு கொண்டுவரப்பட்ட நான் அடக்க பெட்டி முன்னர் மாட்டிக்கொண்டேன். பெண்களின் ஒப்பாரியில் நானும் சத்தம் போட்டு அழுதுவிட அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடிமகன் பீரிஸ் என்னை அந்த அழும் கூட்டத்திலிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.
அன்று முதல் எனக்கு பீரிஸ்பிள்ளை மீது சிறிது பாசம் ஆரம்பித்தது. அதன் பின்னர் அவரை எங்கு கண்டாலும் நலம் விசாரிப்பேன். நான் பம்பாய் செல்லுவதாக அவரிடம் சொன்னபோது அங்கு ஒரு நல்ல கத்தரிகோல் வாங்கி கொடுத்து விடு என்றார். ஆனால் நான் அதை அவருக்கு வாங்கிக்கொடுப்பதற்கு முன்னர் அவர் திடீரென இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது.
குமடிமகன் பீரிஸ் நன்றாக குடிப்பார். ஆனால் காரியத்தில் சரியாக இருப்பார். பலர் பீரிஸ் பிள்ளையிடம் ஓசிக்குத்தான் முடி வெட்டுவார்கள். வருடத்திற்கு அவருக்கு ஏதேனும் கொடுப்பதை பெரிதாக காட்டுவார்கள். கடற்கரையில் அவர் முடிவெட்டும் குடும்பத்தினர்களின் கட்டுமரம் வரும் போது ஒரு பிடி மீன் எடுப்பார். அந்த மீனையும் ஏச்சிக்கும் பேச்சி்ற்கும் இடையில் தான் அவர் எடுக்க வேண்டும். தோட்டம் வைத்திருப்பவர்கள் அறுவடை வரும்போது ஏதேனும் கொடுப்பார்கள். அந்த வீடுகளிலிருந்து குடிமகன் மனைவி வாழைக்குலைகளையும், தேங்காய்களையும் உரிமையுடன் எடுத்துச் செல்லுவார்.
பீரீஸ்பிள்ளை தனது கடைசிகாலத்தில் தன் பிள்ளைகள் பற்றி அதிகம் கவலைப்பட்டார். தனது வேலையை தன் பிள்ளைகள் யாரும் செய்ய வருவதில்லை என்பது அவர் வருத்தம்.
பீரிஸ்பிள்ளை மகன்கள் எல்லோரும் கடலுக்கு மீன்பிடிக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தனர். அவர் இறந்த பிறகு அவர்களில் ஒரு பிள்ளையை வலுக்கட்டாயமாக குடிமகன் தொழிலுக்கு கொண்டு வந்ததாக கேள்விப்பட்டேன். எனினும் அந்த பையன் தன் பரம்பரை தொழிலை ஒழுங்காகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. மற்ற பிள்ளைகள் யாரும் அந்த தொழிலுக்கு வரவில்லை.
யாரும் இறந்து விட்டால் ஊர் ஊராக போய் துக்சச்செய்தியை உறவினர்களுக்கு சொல்லுவது, ஊர் கமிட்டி எடுக்கும் முடிவை பொதுமக்களுக்கு கொட்டு அடித்துச்சொல்லுவது எல்லாம் இந்த குடிமக்களின் வேலை தான். கொட்டு அடித்துக்கொண்டு வருபவர் நாளைக்கு ஊர்க்கூட்டம் என்பதை நாளைகழித்து கூட்டம் என்று சொல்லி முடிப்பார். ஊருக்குள் கொட்டு அடித்துக்கொண்டு குடிமகன் வரும்போது பெரிசு முதல் சிறியவர்கள் வரை என்ன செய்தி என்ன செய்தி என்று கேட்டு அவர் சொல்ல வந்த செய்தியை இவர்களே மாற்றி விடுவார்கள்.
இப்போது எங்கள் ஊர் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இந்த குடிமகன்களை தான் ஊர்க்காரர்கள் மாறவிடுவதே இல்லை. இதற்கு பயந்து பலர் தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சென்று விட்டனர். மற்றும் பலர் பக்கத்து ஊர்களுக்குப் போய் மீன்பிடி தொழிலை செய்கிறார்கள். அடுத்த ஊரிலாவது இவர்கள் நாவிதன் பட்டம் இல்லாமல் வாழுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
ஊரில் அடிமைகள் போய் வேலை செய்யும் இவர்களுக்கு குடிமகன்கள் என்று எங்கள் ஊரில் எப்படி அழைக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. காட்டுமிராண்டித்தனமாக அடித்தேன், பிடித்தேன் என்று செயல்படும் எங்கள் ஊர்களில் இவர்களால் எப்படி இவ்வளவு பயபக்தியாக செயல்பட முடிகிறது என்பது அதை விட எப்போதும் ஆச்சரியம் தரும் விசயம்.
புனித சவேரியார் காலத்தில் ( சுமார் 450 வருடங்களுக்கு முன்னர் )தங்களுக்கு ரொம்ப மரியாதை இருந்தது என்று பீரிஸ்பிள்ளை என் அப்பாவிடம் பெருமை பொங்க சொல்லுவதை கேட்டிருக்கிறேன். இப்போது குடிமக்களை யாரும் முடிவெட்ட தேடுவதில்லை. இழவு வீட்டில் மட்டும் இப்போது இவர்களுக்கு சிறிது கிராக்கி. அதுவும் அங்கு விரைவில் அண்டர்டேக்கர்கள் வந்து விடலாம்.
ஒரு சமூகத்தில் எல்லோரும் முன்னேற வேண்டும். ஆனால் அது நடக்கும் போது ஒரு நெரூடல் ஏற்படுவதும் இயற்க்கை தான். தமிழில் நாவிதன் என்றால் பக்கத்தில் இருப்பவன் என்று பொருள். மலையாளத்தில் கூட இவர்களை அடுத்தோன் என்று அழைக்கிறார்கள். எங்கள் ஊர்களில் இன்னும் ஒரு படி மேலே பேய் குடிமகன் என்று அழைப்பதும் ஒரு கலாச்சாரத்தின் எச்சமோ என்னவோ
rajavaiz@gmail.com
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்
- சிட்டுக்குருவி
- தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)
- கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்
- “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
- கடிதம்
- மந்திரியின் நலத்திட்டங்கள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா
- வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
- நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்
- எமிலி ஸோலா
- மனேக் ஷா – ஓர் பட அஞ்சலி
- மாய உலகம்
- கவிதைகள்
- தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்
- அசோகவனங்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
- பள்ளத்தில் நெளியும் மரணம்
- தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
- குடிமகன்
- தேடலின் தொடக்கம்