கீதாரிகள் உலகம்

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

வெங்கட் சாமிநாதன்


சந்தோஷம் தரும் பல விஷயங்கள் இன்றைய தமிழ் எழுத்தில் நடந்து வருகின்றன என்று தெரிகிறது. பல பந்தாக்கள், படாடோபங்களுக்கும் இடையில். லத்தீன் அமெரிக்காவையும், கூகிளையும், தஞ்சம் அடைய வேண்டியதில்லை. தமிழ் நாடே நிறைய எழுத விஷயங்களைத் தந்து கொண்டிருக்கிறது. தமிழ் எழுத்து இது காறும் பார்த்திராத உலகங்களும் மனிதர்களும் வாழ்க்கையும் நிறைய பரந்து கிடக்கின்றன.

கீதாரி என்றால் என்ன தெரியுமா? எனக்குத் தெரியாது, சு.தமிழ்ச் செல்வியின் கீதாரி நாவலை தில்லியின் என் நண்பர் வீட்டில் பார்த்தேன். புதிய பெயர். இரண்டுமே. ஆனால் எனக்குத் தான் இவை புதியவை என்று தோன்றுகிறது. தமிழ்ச் செல்வி இதற்கு முன் ‘மாணிக்கம்”, ‘அளம்’ என்று இரண்டு நாவல்கள் எழுதி ஒரு நீண்ட பட்டியல் அளவுக்கு நீளும் பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளதாக புத்தகத்தின் அறிமுகக் குறிப்பு சொல்கிறது. இதுவும் சந்தோஷம் தரும் விஷயம் தான். ஒரு நல்ல விஷயத்தை உடனே பாராட்டுகிறவர்கள் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள்.

கீதாரி நாவல் ஆட்டிடையர்கள் வாழ்க்கை விரிக்கும், நாம் இது காறும் கேட்டறியாத உலகத்தை முன் வைக்கிறது. அந்த உலகம் மட்டுமல்ல. இந்த நாவலின் பாத்திரங்களும், சில சம்பவங்களும் கூட ‘இப்படியும் சாத்தியமா?’ என்று வியக்க வைக்கிறது. ஆனால் தமிழ்ச் செல்வி சொல்கிறார், “யதார்த்தமே குரூரமாகவும் வக்கிரமாகவும் இருப்பதால், அதை மிகைப்படுத்தவும் சிதைக்கவும் நான் விரும்பவில்லை, எனக்குக் கிட்டிய அனுபவங்களை அதன் கச்சாத்தன்மையோடு அருகருகே அடுக்கிக்கொண்டே'” சென்றிருப்பதாகச் சொல்கிறார்.

ஒரு கீதாரி குடும்பம். ராமு, பின் அவர் மனைவி இருளாயி. கீதாரிகளுக்கு என்று ஒரு இருப்பிடம் நிலையான ஒரு வாழ்க்கை கிடையாது போலும். அறுவடை முடிந்ததும் ஊர் ஊராகச் சென்று பச்சை காயாத வயல்களில் கிடை கட்டி, இரவில் அவற்றைக் காவல் காத்து, (திருட்டுப் போகும், நாய் நரி குதறிவிட்டுப் போகும், அல்லது ஆடுகளே கிடையிலிருந்து தப்பி இரவோடு இரவாக, மற்ற வயல்கள் தோட்டங்களை மேய்ந்து நாசமாக்கும்} ஆடுகள் கிடை கட்டிய வயல்களில் போடும் புழுக்கை வயல்களுக்கு உரமாவதால் அதற்கான கூலியை வயலுக்குச் சொந்தக்காரர்களிடமிருந்து காசாகவோ தானியமாகவோ வாங்குவார்கள். இம்மாதிரியான நாடோடி வாழ்க்கை தான் கீதாரிகள் வாழ்க்கை.

கதை ராமு கீதாரியின் வாழ்க்கையைச் சுற்றித் தான். ராமுவுக்கு ஆடு மேய்ப்பதைத் தவிர உலகில் வேறு காரியம் தெரியாது. எல்லா கீதாரிகளும் அப்படித்தான். புதிதாக வாழ்க்கையைத் தொடங்க அவர்களுக்கு வேண்டியது பத்து ஆடு. போதும். அதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய செழிப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது கனவல்ல, நடைமுறை யதார்த்தம். வேறு ஏதும் தெரியாது. தலைமுறை தலைமுறையாக,. ராமுவுக்கும் சரி, மற்ற கீதாரிகளுக்கும் இது தான் தெரிந்த உலகம். படிப்பற்ற ஏழ்மை வாழ்க்கை. ஆனால் சந்தோஷமாக மனம் நிறைவு கொள்ளும் வாழ்க்கை. அதிலும் ராமுவின் கூண்டில், -கிடை காவல் காக்க வயலில் எழுப்பப்படும் தென்னம் ஓலையால் ஆன ஓரிருவர் கால் நீட்டிப் படுத்துக்கொள்ள ஒரு தற்காலிக பரண் – ராமூவோடு இருப்பது ஒரு சிறுவன் வெள்ளைச் சாமி. அவனுக்கு நான்கு வயதிருக்கும் போது அவனையும் அவனது அண்ணன் 7 வயது பெரியசாமியையும் ஒரு பண்ணையின் அடிமைப் பந்தத்திலிருந்து திருட்டுத் தனமாக மீட்டு எடுத்துக்கொண்டு வரப்பட்டவன். ராமு இப்போது வெள்ளைச்சாமிக்கு அவன் ‘யண்ணே” என்று அழைக்கும் அப்பா. ராமுக்கு ஒரு பெண் உண்டு. முத்தம்மாள் அவள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டாள்.

ஒரு நாள் நல்ல மழையில் ஒரு கர்ப்பிணியும் பைத்தியமுமான ஒரு பெண் ராமுவின் வளசைக்கு வந்து வலியில் படுத்துக் கொண்டு விடுகிறாள். அவளுக்கு பிரசவ வலி எடுத்துவிட்டது என்று தெரிந்ததும் இருளாயி, தனக்குத் தெரிந்த ஆட்டுப் பிரசவ வைத்தியத்தில் முதல் குழந்தையையும் தாயையும் பிரித்து விடுகிறாள். இன்னும் வலி அடங்காது அரற்றவே இன்னும் ஒரு குழந்தை வயிற்றுக்குள் இசைகேடாகச் சிக்கி இருப்பது கண்டு, ஆபத்திற்குப் பாவம் இல்லையென்று ராமு கையை உள்ளே நுழைத்து அந்தக் குழந்தையையும் காப்பாற்றி விடுகிறார். இரண்டு குழந்தைகள் ஒன்று கருச்சா, இன்னொன்று சிவப்பி. அந்தப் பைத்தியம் பிடித்த பெண் அங்கேயே இறந்து விடுகிறாள். இருளாயி அக்குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் காய்சி வெல்லம் சேர்த்து, ஊட்டுகிறாள். யாரோ என்ன சாதியோ யார் பெற்றதோ, என்று சொல்லி மற்றவர்கள் ஒதுங்க அவ்விரண்டு குழந்தைகளையும் ராமூவே வளர்க்க வேண்டியதாகிறது. எல்லோரும் ராமுவைப் பாராட்டினாலும் யாரும் குழந்தைகளுக்கு பொறுப்பேற்கவில்லை. ஒருவர் மாத்திரம் ஒரு குழந்தையை தான் வளர்ப்பதாகச் சொல்லிச் சென்று விடுகிறார்.

குழந்தைகள் வளர்கின்றன. வெள்ளைச் சாமிக்கௌ இரண்டு ஆயிகளிடமும் (தங்கச்சி பாப்பாக்களிடம்) கொள்ளைப் பிரியம் ஒரு நாள் மன்னாரத்திலிருந்து வந்த சாமப சிவ சேர்வை நான் சொன்ன வார்த்தையைக் காப்பாத்துகிறேன் என்று சொல்லி கருப்பி தூங்கும் போது சிவப்பியை எடுத்துச் சென்று விடுகிறார். அவர் வீட்டில் இரண்டு பெண்டாட்டிகளின் அதிகாரத்துக்கு வேலை செய்ய ஆள் தேவை. அந்த சேர்வைக்காரர் வீட்டில் அவள் தீண்டத்தகாதவள். வேலை செய்ய குற்றமில்லை. எவளுக்கு, எந்த கள்ளப் புருஷனுக்கு, எந்த சாதிக்குப் பிறந்தவளோ?. கரிச்சாவும் வெள்ளைச் சாமியும் ஒரிரு தடவை போய்ப் பார்த்து வருகிறார்கள். ஆனால் என்ன செய்து சிவப்பியை மீட்பது என்பது தான் தெரியவில்லை. சிவப்பிக்கு வயது வந்ததும் ஒரு நாள் சேர்வைக்காரர் அவளைப் பலவந்தப்படுத்திக் கெடுத்து விடுகிறார். சிவப்பி அவமானம் பொறுக்காது தூக்குப் போட்டுக்கொண்டு சாகிறாள். தற்செயலாக சிவப்பியைப் பார்க்க வந்த கரிச்சாவுக்கு விஷயம் தெரிய, ஓடி வந்த ராமூவால் ஒன்றும் சொல்ல முடிவதில்லை. தலை முறை தலை முறையாக எந்த அநியாயத்தையும் மௌனமாக சகித்துக்கொண்டு வரும் பிழைப்பில் வாழ்கிறவர்கள் அவர்கள். கரிச்சாவை கல்யாணத்திற்குப் பெண் பார்க்க வந்தவர்கள், அவள் கெடாமல் இருக்கிறாளா என்று சோதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களை விரட்டி அடித்த ராமு, வெள்ளைச் சாமிக்கே கட்டிக் கொடுக்கிறார். குடும்பம் பூராவும் கோவிலுக்குச் சென்று தாலி கட்ட முடியாது. ஒரு நாளைக்கு கிடையைப் பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்காது. ஒரு நாளைக்கு விட்டுப் போனாலோ யாரும் அவர்கள் நம்பிக்கை போகும். பின் பிழைக்க முடியாது. வெள்ளைச் சாமி கிடையைப் பார்த்துக் கொள்ள, அவனுக்குப் பதிலாக அவனது ஆடு மேய்க்கும் கழியை வைத்துத் தான் கரிச்சாவுக்கு தாலி கட்டியாகிறது. ராமு தன் கிடையிலிருந்து வெள்ளைச் சாமிக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுக்கிறார். ” நான் இருக்கிறவரைக்கும் சரி. பின்னால் என்ன செய்வாய். இப்போதிருந்தே நீ உன் காலில் நிற்கக் கத்துக்க ” என்று சொல்லி. ஆடுகள் பெருகுகின்றன. அங்கு 200 ஆடுகளுக்கு மேல் உள்ளவன் வெள்ளைச் சாமிதான்.

ஏழ்மை மாத்திரமில்லை, எப்போதும் பெருந்தனக்காரரகளியும் பண்ணைகளையும் அண்டியே இறைஞ்சிக் கெஞ்சி வாழும் அவர்களிடம் அசாத்திய பணிவும் எந்த சோகத்தையும் அநியாயத்தையும் ஏற்று மனம் சமாதானம் கொள்ளும் குணம், எங்கும் எதையும் அதிகம் எதிர்பார்க்காது வாழக்கற்றுக்கொண்டுவிட்ட குணம் அவர்களது. பழகிய இடத்திலில் இல்லாமல் வேறு இடம் தேடி நீண்ட தொலைவில் உள்ள இடங்களுக்குச் சென்று கிடை கட்டலாம் என்று ராமு யோசனை சொல்லி, அம்மி குழவி என்று சுமை சேர்ப்பதைப் பார்த்துச் சத்தம் போட ஆரம்பிகிறார்:

“ஆட்டுக்கெடயோட அம்மியத் தூக்கிட்டுப் போற எடயன் என்னிக்கும் ஈடேற மாட்டான்ல்லே. ருசி பாத்துத் திங்க நெனெக்கிறவனும் கூர பாத்துக் குந்த நெனக்கிறவனும் எடயனா இருக்க மாட்டான்ல்லே.அம்மிய வச்சிக்கிட்டு ஆளனுமெண்டா இஞ்சயே இருந்திரவேண்டியதாங். யாங்கொட வரனுமெண்டு நெனச்சியன்னா போனாலும் பேவதுண்டு கெட்டத்துக்குப் பாதியா வித்துப் புட்டு வாங்க”.

இத்தகைய வாழ்க்கையிலும், விடாமல் பெய்யும் மழையில் எப்படியோ கிடையை “தண்ணீலே அடயப் போட்டுட்டு வேலீல படந்து கிடந்த பெரண்ட கொடியள அறிச்சு மெத்தமேரி போட்டுக்கிட்டு, தென்னமட்டேலே செஞ்ச கொடல மட்டய மேல கவுத்துப் போட்டுக்கிட்டா சொவமா தூக்கம் வந்திச்சாம். ஆகா என்ன சொவமாருக்கு. இந்த சொகம் என்னப் படச்ச ஆண்டவனுக்குக் கெடைக்காது”ன்னு சுகம் காண அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஒரு சீராக எப்போதும் இருப்பதில்லை. மனிதர்களே திடீரென்று குண மாற்றம் பெறுகிறார்கள். வெள்ளைச் சாமியின் அண்ணன் எங்கோ வளர்ந்தவன், இப்போது எதிர்ப்படுகிறான். அவனது கூட்டாளிகள் வெள்ளைச்சாமியை ராமுவிடமிருந்து பிரித்து விடுகிறார்கள். தனக்குக் குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்று வெள்ளைச் சாமியும் கரிச்சாவை விரட்டி அடித்து விடுகிறான். ராமுவிடம் போய்ச் செரும் கரிச்சா மனம் நொந்து போய் வெள்ளைச் சாமியைப் பற்றிய நினைவையே துறந்து விடுகிறாள். அவளுக்கு குழந்தை பிறக்கிறது அதிசயமாக. ஆனால் கரிச்சா பாம்பு கடித்து செத்துவிடுகிறாள். ராமு தன் வயோதிகத்திலும் இன்னும் வாழவேண்டும். அந்தக் குழந்தையை காப்பாற்ற.

இப்படிச் சொல்லிக்கொண்டு போவது சில சமயங்களில் இது எப்படி நிகழ்கிறது என்று நினைக்கத் தோன்றும். எங்கேயோ போய்க்கொண்டிருந்த ஒரு பைத்தியம் பிடித்த பெண் இருளாயி வளசைக்கு வந்து மயங்கி விழுந்து இரண்டு பெண் குழந்தைகளை கொடுத்து விட்டுச் சாவானேன்? ஆனால் வாழ்க்கையில் எத்தனையோ நம்புவதற்கு கஷ்டம் தரும் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன, மனிதர்கள் எதிர்ப்பட்டு விடுகின்றனர். அதை அதிசயமாக அல்லாது, நிகழ்வாக எழுதத் தெரிந்திருக்கவேண்டும். படிப்பவர்களுக்கு நம்பிக்கை எழ வேண்டும். வாழ்க்கையில் சாதாரண விஷயங்களே நிகழ் மறுக்கின்றன. அரசியல் தலைவர்கள் அளிக்கும் சாதாரண வாக்குறுதிகளே கூட கேலிச் சிரிப்பைத் தான் பெறுகின்றன.

அது போக தமிழ்ச் செல்வி, நாம் பார்த்தறியாத சமூகத்தின், தான் பார்த்த வாழ்க்கையின் கோரங்களை பூச்சின்றி தரும்போது, அந்த ஒவ்வொரு சாதாரணமும் நம்மை நெகிழ்விக்கிறது. எனக்குமிகவும் பிடித்துப் போன காட்சி ஒன்று:

“இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தான் இலுப்பைப் பூ கொட்ட ஆரம்பிக்கும். மூன்று மணிக்கெல்லாம் பார்த்தால், அத்தனை மரத்தின் கீழும் உட்கார்ந்து கொண்டு பூப் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். அந்த அமைதியான நேரத்தில் யாரும் யாருடனும் பேசாமல் பூப் பொறுக்குவதிலேயே கவனமாக இருப்பார்கள். பூக்கள் ஒவ்வொன்றாய் பொட்டுப் பொட்டென்று விழும் சத்தம் மட்டும் சன்னமாகக் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு மரத்தின் கீழும் உட்கார்ந்திருக்கும் உருவங்கள் அசைவது மட்டும் தான் தெரியும். நிலவுள்ள நாட்களில், நிலா வெளிச்சத்தில் இலுப்பைப் பூ பொறுக்குவது நன்றாக இருக்கும். நிலா இல்லாத அமாவாசை நாட்களிலும் கூட இலுப்பைப்பூ பொறுக்குவதில் அதிக சிரமம் இருக்காது. எவ்வளவு இருட்டிலும் கூட இலுப்பைப்பூ பளிச்சென்று வெள்ளையாய்த் தெரியும். உட்கார்ந்ததும் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் கூட இருட்டில் பார்க்கப் பழகிய பின் கண்களுக்கு எல்லாமே நன்றாகத் தெரியும்.

மூன்று மணி வாக்கில் உட்கார்ந்து பொறுக்குபவர்களுக்கு பூ நிறைய சேரும். வெளியூர்க்காரர்களெல்லாம், விடிய விடிய தூங்காமல், விழித்திருந்து இந்த நேரத்தில் பொறுக்கிக் கொண்டு போய்விடுவார்கள். அயர்ந்து தூங்கிவிட்டு அடித்துப் பிடித்து விடிந்த பிறகு எழுந்து வந்து பார்க்கும் கரையங்காட்டு சனங்களுக்கு இரண்டாவது கொட்டுப் பூக்கள் தான் அள்ளித் தெளித்தது போல கொட்டிக் கிடக்கும். முதல் கொட்டுப் பூவை பொறுக்கிச் சென்றவர்களை வாய்க்கு வந்தபடி பேசியவாறே புதுப் பூக்களைப் பொறுக்குவார்கள்.”

சாதாரண வார்த்தைகளில் ஒரு கவித்வமான காட்சியை, கவித்வமான நெகிழ்வைத்தரும் அனுபவத்தை எழுதிவிடுகிறார் தமிழ்ச் செல்வி.

ராமு கிடையில் பைத்தியகாரிக்குப் பிரசவம் பார்த்துக் காப்பாற்றியதைப் பற்றி ஊர்ப்பெரியவர்கள் சொல்வதைப் படிக்கும் போது அந்த சமூகத்தின் வெற்று பந்தாக்கள், மனித நேயமின்மை, ஜாதித் திமிர் போன்ற பல பரிமாணங்களையும் ஒரு நாலைந்து வரிகளில் கொட்டிவிடும் திறமையும் தமிழ்ச் செல்விக்கு வாய்த்துள்ளது.

“பொண்ணு யாரு எவருன்னு ஒண்ணுந்தெரியலே, என்ன சாதியோ சனமோ” என்றார் வடிவேலுத் தேவர்.

“சாதிக்கு மின்னாடி எவனுக்கிட்டப் படுத்து வயத்த ரொப்பிக்கிட்டு வந்துச்சோ தெரியலே. தப்பாப் பொறந்த புள்ளவொள யாருதான் ஏத்துக்கிட முடியும்” என்றார் சோவசுந்தரச் சேர்வை.

“நாங்க ஏத்துக்கிட்டாலும் எங்க குடும்பத்திலே உள்ளவ்வோ ஒத்துக்கிடணுமில்லே” என்றார் ரெங்கனாதக் கோனார். வந்ததிலிருந்து அவர் எதுவுமே பேசாமலிருந்தார். ஏதாவது பேசி தன் தலையில் விடிந்து விட்டால் என்ன செய்வதென்ற பயத்தோடிருந்தார் அவர்.

“ஆத்துரத்திலே அவுசாரி போனாலே கோத்துரத்துக்கு ஈனமில்லேன்னு சொல்லுவாவோ. பாவம் இது பைத்தியம். திமுரெடுத்துப் போயா புள்ளைய வாங்கிட்டு வந்திருக்கும். எவனோ ஏமாத்தி கெடுத்துப் புட்டு போயிருக்குறான். இப்பப் போயி அது எப்படிக் கெட்டுது யாரிட்ட கெட்டுதுன்னு விசாரிச்சிட்டிருக்கக் கொடாது.” என்றார் கரையங்காட்டு சாம்ப சிவம். அவ்வளவு தான் எல்லாரும் அவர் சொன்னதையே சாக்காய் வைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

வெற்றுப் பந்தாக்களும், பட்டுக் கொடைகளும் ஊர்வலம் வரும் நாட்களில், அதைப் பார்த்து வாய் பிளக்கும் அறிவு ஜீவிக் கூட்டங்கள் இருக்கும் நாட்களில், சித்தாந்தப் பூச்சு இல்லாது, முரசு கொட்டாது, ஒர் தமிழ்ச் செல்வி தான் கண்டதை, அதன் உயிர்த்துடிப்போடு எழுதியிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. தமிழ் எழுத்தில் பதிவாகாத வாழ்க்கைகள், உலகங்கள் நிறைய.

தமிழ்ச் செல்வி எழுத்துக்கள் இனி எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்

கீதாரி: (நாவல்): சு.தமிழ்ச் செல்வி, மருதா பதிப்பகம், 226 (188). பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை- 14

வெங்கட் சாமிநாதன்/10.10.06

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்