கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



மரணத் துயர் போல ஏனையப்
பிரிவுத் துன்பந்தான்
பரவி வருகிற திப்போது,
தரணி எங்கணும்!
வரம்பு வேலியற்ற வான்வெளியில்
உருவங்கள்
எண்ணற்ற முறையில் வேறுபட்டு
துன்பப் பிரிவுகள்
கண்திறந்து வெளிவரும்!
இம்மாதிரித்
துக்கப் பிரிவால்தான்,
இரவு முழுவதும்
விண்மீண்கள் தம்மை,
உற்று நோக்கு கின்றன,
ஊமைத் தனமாய்
ஒன்றை ஒன்று!
சலசலக்கும்
இலைகளின் வழியே,
இப்பிரிவுத் துயர்தான்
ஒப்பிலாச் சோகக் கீதமாய்,
வேனிற் காலக் கருவானில்
ஆடி மாதம்
மழைத்துளி களிடையே,
பாடி நுழைகிறது!
அடங்காமல் அத்துமீறிக் கொண்டு
தொடரு மிந்த
துயர்ப் பிரிவுகள்தான்,
காதலாகவும், வேட்கையாகவும்,
பாதாளத்தில் ஊற்றாகிறது,
வேதனை மிஞ்சி!
துக்கங்கள், பூரிப்புச் சம்ப வங்களாய்
மக்களின்
இல்லங்களில் நிகழும்!
அதுவே தான்
என் கவித்துவ நெஞ்சில்
பாகாய் உருகி ஓடும்
பாடல்களாய்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 30, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா