கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


காரிருள் சூழ்ந்தது இரவு
நேரத்தில்,
காரியம் யாவும் முடிந்தன!
கடைசி விருந்தினர் நுழைந்த பின்
வீட்டுக் கதவுகள் மூடப் பட்டன!
வேந்தன் வரக் கூடும் என்று
நினைவு படுத்தினர் சிலர்!
வெடித்துச் சிரித்தோம்,
நொடியில் வர மாட்டான் என்று!
ஆயினும்
கதவைத் தட்டும் அரவம் கேட்டு,
‘தூதன் வந்துள்ளான், ‘ என்று
காதினில் உரைத்தனர்.
காற்றா யிருக்கு மென்று
வாளா விருந்தோம்!
விளக்கை அணைத்து விட்டு
படுக்கையில் விழுந்தோம்!

நள்ளிராப் பொழுதில் கேட்டது
திடுக்கிடும் சத்தம்!
தூரத்தில் முழக்கும் இடியெனக் கருதி
தூக்க மயக்கத்தில்
வெளியே
நோக்கா திருந்தோம்!
புவித்தளம் அதிர்ந்தது!
சுவர்கள் ஆடின!
தூக்கம் கலைந்து
போனது!
தேர்ச் சக்கரத்தின்
ஆரவார மென்று கூறினர் சிலர்!
இல்லை யென மறுத்தோம்!
முழக்குவது இடிதான் என்று
முணுமுணுத்தோம்
உறக்கத்தை விடாமல்!

காரிருளில் மூழ்கிக் கிடக்கு மிரவு,
போர்முரசும் அடிக்கும் போது!
குரல் கிளம்பியது அக்கணம்:
‘அதோ! பார் வேந்தரின் கொடியை!
எழுந்திரு! தாமதம் வேண்டாம்! ‘ என்று.
நெஞ்சம் துடித்தது! கை பதறி
அஞ்சி நின்றோம்!
தாமதி யோமினி! காத்திருப் போமினி!
மாமன்னர் வருகிறார்! அந்தோ!
விளக் கெங்கே வீட்டில் ?
பூமாலை எங்கே சூடுவதற்கு ?
ஆசனம் எங்கே அமர்வதற்கு ?
தோரணத்தில் அலங்கரித்த
மாளிகை எங்கே ? வெகுண்டனர் சிலர்:
வெட்கக் கேடாய்ப் போச்சு!
வேளை தவறி விட்டது!
வெறுங் கையுடன் வரவேற்போம்!
வீட்டு அறைக்குள் வேந்தரைக்
கூட்டி வாரீர்!

கதவைத் திறந்து வைப்பீர்!
ஆலய மணியின் ஓசை எழட்டும்!
நம் காரிருள் மன்னன்
நள்ளிராப் பொழுதில்
நமது பாழான வீட்டின்
வாசலில் நுழைகிறார்!
வானில் அப்போது இடி முழக்கும்!
பட்டென இருட்டில்
மின்னல் வெட்டும்!
முனையில் கிழிந்து தொங்கும்
உனது துண்டுப் பாயை
உதறி
முற்றத்தில் விரித்து வை!
புயலைப் போர்த்தி,
திடுமென நமது வேந்தன்
இச்சையுடன் வருகிறான்,
அச்சமுள்ள இரவில்!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 6, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா