கீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


மின்னொளியே!
என்னரும் ஒளியே! எனது
உள்ளத்துக் கினிய ஒளியே! என்
விழிகள் முத்தமிடும் ஒளியே! முழு
உலகை மூழ்க்கிடும் ஒளியே!
நர்த்தனம் ஆடுகிறது ஒளி,
வாழ்வின்
நடுப் பொழுதில், என் கண்மணி!
மோதி மீட்டுகிறது ஒளி,
காதல் வீணைக்
கம்பிகளின் நாணை!
மின்னலிடி திறக்கிறது வானை!
மீறிக் கொண்டு
ஏறி அடிக்கிறது காற்று,
என் கண்மணி!
வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு
ஞாலத்திற்கும் அப்பால்
தாவிச் செல்கிறது! தமது
பாய்மரத்தை விரித்து
பட்டுப் பூச்சிகள்
படகாய் மிதந்தேகும், ஒளிக்
கடல் மீது!

அல்லி மலர்களும்,
மல்லிகைப் பூக்களும்
ஒளியலைகளின் சிகரத்தில்
ஊர்திபோல் எழுகின்றன!
ஒவ்வொரு முகிலின் மேற்பட்டுச்,
சிதறி
ஒளிக் கதிர்கள்
பொன்னிறம் பூசுகின்றன,
என் கண்மணி! விலை மதிப்பில்லா
பளிங்குக் கற்களை
மென்மேலும்
பண்ணிற ஒளிச்சிதறல் செய்யும்
மேகம்!
பூவிதழ் விட்டுப் பூவிதழ் மேவி
தாவிப் பரவும் எனது
பூரிப்பு! உள்ளக்
களிப்பை
அளக்க வழி யில்லை!
வேகமாய் மழை பெய்து
கரைகளை மூழ்க்கி விட்டது,
ஆகாயக் கங்கை!
வெள்ளமாய் உடைத்து,
வெளிவேறி விட்டது, எந்தன்
பூரிப்பு பெருகி!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 13, 2005)]

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா