கிறுக்கல்கள்

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

ஸ்ரீனி.


ஜன்னலோரத்தில் அமர்ந்து
காபியை பருகியபடி
நாளிதழை புரட்டும் எனக்கு
உன் வரவை
தென்றல் சற்று பலமாய்ச்சொல்ல
சாளரங்களின் கம்பிக்கண்களும் உனை
காண எண்ணி
கதவிமைகளைத் திறக்க,
பூக்களை விட்டு
உன் புன்னகையில் கவரப்பட்டு
பட்டாம்பூச்சிகள் மூச்சிரைக்க படபடக்கின்றன.
பாவம்
உன்னால் அவற்றின் 8 நாள் ஆயுள்
மேலும் குறையக்கூடும்,
சிரிக்காதே.
பூங்கொத்தில் அத்தனை பூக்கள்
இருந்தாலும்
அந்த ஒற்றை ரோஜா மட்டும்
கண்களை கவர்வதுபோல்
உன் நண்பிகளுடன் நீ நடந்து வருகிறாய்.
என்றேனும் உன் கண்கள்
படபடக்கும் என் ஜன்னலை
பார்க்காதா என்று
பல காலை பொழுதுகளில்
இமைக்காமல் காத்திருந்ததுண்டு.
உறக்கத்தில் சில நேரங்களில்
மறக்காமல் வந்து போபவளே,
உன் பெயர் தான் என்ன ? ?
WTC சரிந்ததென படித்தேன்
ஒருவேளை, அந்த வழி நீ சென்றிருந்தால்
உனை காண எண்ணி
கட்டிடம்
மேலும் சில விநாடிகள் நின்றிருக்கும்,
சிலரின் இதயத்துடிப்பு நின்றிருக்காது.
பாவம்..!
நீ என் வீட்டைக்கடக்கும்
இந்த சில நிமிட நேரங்களில்
என்னுள் பிறக்கும் கவிதைகளை
பின்னால் எழுதிப்பார்க்கிறேன்
ஏதோ குறைபாடு எப்போழுதும்
தோன்றுகிறது.
நீ போய்விட்டதால் வார்த்தைகள்
வலு இழந்து போய்விட்டதோ ?
இருப்பினும்
சேர்த்து வைக்கிறேன்.
சேர்த்து சேர்த்து என் நோட்டுப்புத்தகங்களில்
எல்லாம் கிறுக்கல்கள்.
கவியரசாகவும் எனக்கு வாய்ப்பு இருக்கிறது
நீ மட்டும்
என் வீட்டின் எதிர் சாலையில்
எப்போழுதும் நடந்து சென்றால்….

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி