பாவண்ணன்
ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பெண்குழந்தை காரணத்தால் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுவதும் மணவிலக்கு வழங்கப்படுவதும் மறைமுக வழிகளால் தந்திரமாகக் கொல்லப்படுவதும் நடந்தபடியிருப்பதை அறிந்தவர்களாகவே இருப்பார்கள். உசிலம்பட்டியைச் சேர்ந்த தாய்மார்களின் சோகக் கதைகள் நம் நெஞ்சில் அழுத்தமான தடத்தைப் பதித்திருக்கின்றன. நெல்மணிகளையும் அரிசிமணிகளையும் பிஞ்சுக் குழந்தையின் தொண்டையில் சிக்கவைத்து மரணத்தைத் தழுவவைத்த சம்பவங்களையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஆணின் ஆண்குழந்தைக்கான வேட்கையும் வெறியும்தானே காரணம். சாதி, மதம் தாண்டி இந்த வேட்கையும் வெறியும் எல்லாச் சமூகத்து ஆண்களின் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கிறது. இத்தகு வேட்கைக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்திதான் ஹஸினா. அவளை வெறும் மத அடையாளத்துடன் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. அவள் இந்தியப் பெண்களின் அடையாளம். கன்னடத்தில் சிறப்பான சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துத் தம் திரைப்படங்களுக்கு ஆதாரமாகக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கிரீஷ் காசரவள்ளியின் சமீபத்திய படமான ஹஸினாவும் பானு முஷ்டாக் என்னும் கன்னடப் பெண் எழுத்தாளரின் கதையை அடிப்படையாகக்கொண்டதாகும்.
படம் முடிந்து அரங்கைவிட்டு வெளியேறும் தருணத்தில் நீதிக்காக மன்றாடித் தோற்ற ஓர் இந்தியப் பெண்ணின் படிமமாக மனத்தில் நிலைத்துத் தங்கிவிடுகிறது ஹஸினாவின் உருவம். நான்காவது பிரவசத்துக்காக காத்திருக்கிற பெண் ஹஸினா. வயிற்றில் கருவுற்றிருப்பதும் பெண் குழந்தைதான் என்று தெரிந்த காணம்முதல் புறக்கணிக்கத் தொடங்குகிற கணவனிடம்தான் அவள் முதன்முதலாக மன்றாடத் தொடங்குகிறாள். ‘பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக இருந்தால்தான் என்ன ? உங்கள் குடும்பத்தில் எல்லாரும் ஆணாகப் பிறந்து என்ன சாதித்துவிட்டார்கள் ? ஒருவன் செய்த குற்றத்துக்குத் தண்டனையாக சிறையில் இருக்கிறான். இன்னொருவன் வெளிநாட்டுக்கு ஓடிப்போய்விட்டான். நீ ஆட்டோ ஓட்டுகிறாய். இது என்ன மேலான வாழ்க்கையா ? ‘ என்று வாதித்து உதைபடுகிறாள். ‘பெண்ணாக ஒரு குழந்தை அமைவதற்கு நான்மட்டும் எப்படி பொறுப்பாக முடியும் ? உனக்கும் இதில் பங்குண்டு அல்லவா ? ‘ என்னும் வாதம்கூட அவள் கணவன்முன் எடுபடவில்லை. தன் இல்லற வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பேராவலில் கண்ணீர்விட்டு அழும் அவளது மன்றாடல்கள் எவ்விதப் பயனையும் தராமல் காற்றில் கரைந்துபோகின்றன. வீட்டுக்கு வருவது நின்று, சாப்பாட்டுச்செலவுக்கான பணமும் நிற்கும்போது இல்லற உறவு இல்லையென்றாலும் பொருளியல் உதவியாவது அவனிடமிருந்து கிடைக்கவேண்டுமென்று மன்றாடுகிறாள். அப்போதும் அவன் மனத்தில் இரக்கமெழுவதில்லை. எட்டி உதைத்து அறையில் அடைத்துப் பூட்டிவிட்டு வெளியேறிவிடுகிறான். பிறகுதான் நீதிகேட்டு மசூதியின் முக்கியஸ்தரிடம் கோரிக்கைமனுக்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்து மன்றாடுகிறாள். ஆனால் அவரும் மறைமுகமாக அவளைப் புறக்கணிக்கிறார்.
எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட நிலையில் சுயமாக ஒரு முடிவையெடுத்து, அதன்படி தனக்கான நீதியை வழங்கவேண்டுமென ஒருநாள் அதிகாலையில் தொழுகை தொடங்கும் சமயத்தில் மசூதி வாசலில் தன் மூன்று குழந்தைகளோடு வந்து உட்கார்ந்துவிடுகிறாள். ஐந்துவேளைகளில் கச்சிதமாக தொழுகை நடந்துமுடிகிறது. ஆனால் அவள் எதிர்பார்த்து வந்த நியாயம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அவளைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாகிக்கொண்டே போகின்றனவே தவிர யாருடைய மனத்திலும் இரக்கமில்லை. குற்ற உணர்ச்சியும் இல்லை. இறுதித் தொழுகைக்குப் பிறகும் அவள் எழுந்துசெல்லாத நிலையில் விசாரித்தே தீரவேண்டிய ஒரு புறக்கட்டாயத்துக்கு உள்ளாகிற முக்கியஸ்தர் அவளுடைய கணவனை வரவழைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் குடித்துவிட்டு விசாரணைக்கு வரும் அவனால் மசூதி வளாகத்திலேயே எல்லா ஆண்களின் முன்னிலையிலும் அடிபடுவதைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை. தற்செயலாக அடிகளையெல்லாம் தன் முதுகில் வாங்கிக்கொள்ளும் ஹிஸனாவின் பார்வையற்ற குழந்தை இறந்துபோகிறது. தீர்ப்பின்படி கிடைக்கிற பணம் பார்வையற்ற அக்குழந்தையின் கண்மருத்துவத்துக்கு உதவக்கூடும் என்னும் எண்ணமே ஹஸினாவை நீதிக்காக முக்கியஸ்தரிடம் நடையாய் நடக்கவைக்கவும் மசூதிவாசலில் பிடிவாதமாக உட்காரவைக்கவும் காரணமாகும். அக்குழந்தையே இறந்தபிறகு அவளுக்கு அந்த நீதி தேவையற்ற ஒன்றாக மாறிவிடுகிறது. பசியைத் தணிக்க ஏற்கனவே வழியைக் கண்டடைந்துவிட்டவளுக்கு அந்த நீதியோ, நீதியால் கிடைக்கக்கூடிய பணஉதவியோ தேவையாக இருக்கவில்லை. கூட்டப்பட இருக்கிற பஞ்சாயத்துக்கு வரப்போவதில்லை என்றும் பணஉதவியும் தேவையில்லை என்றும் சொல்லி அனுப்பிவிடுகிறாள். தக்க தருணத்தில் கிடைக்காத நீதி பசிவேளைக்குக் கிட்டாத சோற்றைப்போலவும் தவித்த வாய்க்குக் கிட்டாத தண்ணீரைப்போலவும் பயனற்றுப்போகிறது.
உருக்கமான காட்சியமைப்பினாலும் மனத்தைத் தொடும் கதையமைப்பினாலும் மட்டுமின்றி இப்படத்தைச் சிறந்ததாக்கும் பலவித அம்சங்கள் படத்தில் உண்டு. எடுத்துக்காட்டாக ஹஸினாவின் மெளனமும் உறுதியும் நிறைந்த போராட்டத்தில் பலவித ஒலி, ஒளிக் காட்சிகளோடு இணைத்துப் படமாக்கியிருக்கிறார் காசரவள்ளி. பனிகொட்டும் அதிகாலையுடன் தொடங்குகிறது படத்தின் முதல் காட்சி. தொழுகைக்கு அழைக்கும் குரல் நகரெங்கும் நிறைகிறது. அப்போதுதான் அவசரம் அவசரமாக தன் மூன்று குழந்தைகளுடன் கர்ப்பிணியான ஹஸினா மசூதியின் வாசலுக்கு வந்து உட்கார்கிறாள். தொழுகைக்கு அழைக்கும் குரல் உயர்ந்துகொண்டே செல்கிறது. மெளனத்தில் உறைந்து எல்லாருடைய பார்வைக்கும் குத்தல் பேச்சுக்கும் ஏளனங்களுக்கும் ஏச்சுகளுக்கும் செவி சாய்க்காமல் வாசலில் உட்கார்ந்திருக்கும் ஹஸினாவின் மனக்குரலாக அத்தொழுகைக்குரல் மாறிவிடுகிறது. ஹஸினாவின் துக்கத்தையும் நிராதரவான தன்மையையும் அது காற்றில் சுமந்துசென்று நகரெங்கும் சேர்ப்பிக்கிறது. ஹஸினாவின் மன்றாடல்கள் கணவன் முன்னிலையிலும் மசூதி முக்கியஸ்தர் முன்னிலையிலும் பலிக்காமல் தோற்றுப் போய்விட்ட அவலத்தை உலகத்துக்கே ஓங்கி அறிவிக்கிறது. அப்பாவிப் பெண்ணான ஹஸினாவை அவமானச் சொற்களால் மனம்துவளவைத்து துரோகமிழைக்கிற ஆண்களின் அகம்பாவத்தையும் அலட்சியத்தையும் அம்பலப்பத்துகிறது. தொழுகை¢குரலோடு மட்டுமல்ல, பொழுது விடியலை அறிவிக்கும் சேவலின் அழைப்போடும் ஹஸினாவின் குரல் இணைந்து ஒலிக்கிறது. ஆட்டின் கனைப்பொலியிலும் இணைந்து ஒலிக்கிறது அவளுடைய துக்கம். ஓங்கிக் குரலெழுப்ப முடியாவிட்டாலும் உயரமாக வளர்ந்த புற்கற்றைகளும் செடிகளும் கொடிகளும் புதர்களும் மரங்களும் இருப்புக்கொள்ள முடியாத பதற்றத்தோடு நடுங்கம் நெளியலிலும் உரசி எழுப்பும் ஒலியிலும் ஹஸினாவின் குரல் நிறைந்திருக்கிறது. தொழுகைக்குரல், சேவலின் குரல், ஆட்டின் கனைப்பு, செடிகொடிகளின் அசைவு என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளோடும் இணைந்து ஒலிக்கிறது ஹஸினாவின் கோரிக்கை. நீதியை எதிர்பார்த்து ஏமாந்துபோன ஓர் அபலைப்பெண்ணின் நெஞ்சத்துடிப்பு. கதையின் இறுதியில் ஹஸினாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தருணம் தவறிக் கிடைக்கும் நியாயம் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை. இனிமேல், அவள் தன் வசதிப்படி வத்தி சுத்தியோ வீட்டுவேலைகள் செய்தோ பிழைப்பை நடத்திக்கொள்வாள். ஆனால் நாளையும் தொழுகை அழைப்புக்குரல் எழும். சேவல் கூவும். செடிகொடிகள் அசையும். ஆடுகள் கனைக்கும். அப்போது அவற்றுடன் கலந்துவிட்ட ஹஸினாவின் கோரிக்கையும் ஒலிக்கும். ஒரு தனிப்பட்ட பெண்ணின் துக்கத்தை இயற்கையின் துக்கமாக மாற்றும் கலை இப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.
கணவன் வந்து சேராத முதல் மாலைக்காட்சியின் தவிப்பு படமாக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. கண்பார்வை இல்லாத மகளை வழக்கமாக ஆட்டோவில் அழைத்துவரவேண்டிய கணவன் வராத பதற்றத்தோடு அவளுடைய பரபரப்பு கூடுதலாகிக்கொண்டே போகிறது. மகள் மரணமடைந்திருக்கக்கூடும் என்கிற எண்ணமே அவள் மனத்தில் முதலில் எழுகிறது. புதர்கள், செடிமறைவுகள், பள்ளங்கள், ஏரிக்கரை என அவள் தேடித்தேடிச் செல்லும் இடங்கள் பார்வையாளர்கள் மனத்தில் ஒருவித தவிப்பைப் படரவைத்தபடி நீளும் காட்சி ஒரு கட்டையில் உட்கார்ந்திருக்கும் சிறுமி தன் அம்மாவின் வரவை அவள் வாசனையால் அறிந்து அம்மா என்று அழைப்பதோடு முற்றுப்பெறுகிறது. மரணமடைந்திருக்கக்கூடும் என்கிற பதற்றத்தை உருவாக்கி அவள் உயிர்த்திருப்பதைக் காட்டுகிறது கேமிரா. படத்தின் இறுதியில் இன்னொரு காட்சி. மசூதியின் இரவுத் தொழுகையை முடித்துக்கொண்டு ஒவ்வொருவராக வெளியேறிப் போகிறார்கள். உறுதியும் இறுக்கமும் மிகுந்த ஹஸினா உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் இருக்கிறாள். கடுங்குளிர். பனிக்காற்று. அப்போதும் அவள் எழுவதில்லை. அவள் அணைப்பில் கதகதப்பை உணர்ந்து ஒண்டிக்கிடந்த குழந்தைகள் அதையும் மீறி குளிர் தாக்கத் தொடங்கியதும் நடுங்குகிறார்கள். பார்வையற்ற சிறுமியால் குளிரைத் தாங்கவே முடியவில்லை. மற்றொரு சிறுமி மசூதி முழுக்கச் சுற்றியலைந்து வளாகத்திலேயே ஓரமாக வைக்கப்பட்டிருந்த பாடைக்குள் பிணத்தை மூடுவதற்காகப் பயன்படுத்தப்படும் விரிப்பைக் கொண்டுவந்து சகோதரிக்குப் போர்த்தித் தானும் போர்த்திக்கொள்கிறாள். அப்பாவின் போதைக்குரலையும் அம்மாவின் அழுகுரலையும் கேட்டு அக்குழந்தைகள் பதறி எழுகின்றன. விரிப்போடு நகர்ந்துசென்று அம்மாவைப் பாதுகாத்து அடிகளையெல்லாம் தன் முதுகில் வாங்கிக்கொள்கிறாள் பார்வையற்ற சிறுமி. பசிமயக்கமும் துாக்கமயக்கமும் அடிபட்ட மயக்கமும் கலைந்து அவள் ஹஸினாவின் மடியிலிருந்து எழக்கூடுமென்று நம்பும் தருணத்தில் அவள் மரணமடைந்துவிடுகிறாள். உயிர் பிழைப்பதும் மரணமடைவதும் மானுட வாழ்வில் புதிர்களைப்போல நிகழும் விசித்திரத்தை எப்படி விளக்கமுடியும் ?
ஆணின் அகங்காரத்தையும் பெண்ணின் உயிர்ப்பாற்றலையும் அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு வருவதையும் வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதையும் நிறுத்திக்கொண்ட கணவனை ஆட்டோ நிறுத்தத்துக்கே குழந்தைகளோடு சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு வருமாறு அழைக்கிறாள் ஹஸினா. வரமறுக்கும் கணவன் அவளை தெருவிலேயே அடிக்கிறான். உதைபட்ட நிலையிலும் அவன் வீட்டுக்கு வந்தே தீரவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறாள் ஹஸினா. சுற்றிநிற்கும் சக ஆட்டோக்காரர்கள் அவனை அமைதிப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அமைதிப் பூனையாக மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் கணவன் வஞ்சகமாக அவளை காலால் எற்றித்தள்ளி உள்ளே அடைத்துக் கணநேரத்தில் கதவைப் பூட்டிவிடுகிறான். அடைபட்ட மனைவியும் வாசலில் நிற்கும் குழந்தைகளும் கதறக்கதற இரக்கமேயின்றி வெளியேறிவிடுகிறான். சில கணங்களில் மீண்டும் தோன்றி வீட்டுச்சாவியை புதருக்குள் வீசிவிட்டுச் செல்கிறான். தன்வழியில் குறுக்கிட்டால் இதுதான் நேரும் என்று அகம்பாவத்தின் உச்சத்தில் எச்சரித்துவிட்டுச் செல்கிறான். ஒருபுறம் பார்வையிருந்தும் சாவியைத் தேடி எடுக்கும் வழியறியாமல் அடைபட்டுத் தவிக்கும் தாய். இன்னொரு புறத்தில் பார்வையில்லாமல் தரையெங்கும் தடவித்தடவி சாவிக்காக நகர்ந்துபோய் பள்ளத்தில் விழுந்து தலையில் அடிபட்டு மயங்கிவிடும் சிறுமி. ஆனாலும் வற்றாமல் மனத்தில் ஊற்றெடுத்தபடி இருக்கும் உயிர்ப்பாற்றலால் அப்பிரச்சனையிலிருந்து அவர்கள் மீண்டெழுகிறார்கள்.
முதன்முறையாக ஒரு பெண்ணின் புறக்கணிப்பைத் தாங்க முடியாத முக்கியஸ்தரின் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அவர் முகம் போகிற போக்கிலிருந்து நன்றாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. அடுத்த புறக்கணிப்பு அத்தெருப் பெண்களிடமிருந்து நிகழ்கிறது. வழக்கமாக அவர் வரும்போது ஒதுங்கியும் மறைவிடத்துக்குச் சென்றும் வழிவிட்டு மரியாதை காட்டும் பழக்கமுள்ள தெருப்பெண்கள் பாராமுகமாக நின்று காட்டும் முகச்சுளிப்புகளும் புறக்கணிப்புகளும் அவரால் தாங்கமுடியாதவையாகவே மாறுகின்றன. புறக்கணிப்புகளின் உச்சமாக அவருடைய மனைவி சுயமாகவே ஒரு முடிவையெடுத்து கருத்தடுப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக தாய்வீட்டுக்குப் புறப்பட்டு நிற்கிறாள். உரிய நேரத்தில் ஆற்றவேண்டிய ஒரு கடமையைச் செய்யத் தவறும் சூழலில் அச்சூழலின் எதிர்வினைகள் எவ்வித கடுமையான விளைவுகளுக்கு உள்ளாக்குகின்றன என்பதை அடுத்தடுத்த கணங்களில் முக்கியஸ்தரின் வாழ்வில் நிகழ்கிற சம்பவங்கள் காட்டிவிடுகின்றன. ஓர் ஆணின் புறக்கணிப்பு எந்த அளவுக்கு ஒரு பெண்ணைப் பாதிக்குமோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு ஒரு பெண்ணின் புறக்கணிப்பும் ஓர் ஆணைப் பாதிக்கக்கூடியதாகும். அது கணவனாக இருந்தாலும் சரி, முக்கியஸ்தராக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் புறக்கணித்து துன்பத்திலும் வருத்தங்களிலும் அமிழ்ந்து மறைவதற்கல்ல இந்த வாழ்க்கை. வாழும் விதமும் இதுவல்ல. ஒருவரை ஒருவர் நேசிப்பதும் அன்பைப் பரிமாறிக்கொள்வதுமே நிறைவான வாழ்வுக்கான வழிகள். மனிதர்களுக்கு இவ்வழிகள் புதுசோ அல்லது தெரியாதவையோ அல்ல. பழகியவையே. ஆனாலும் பெரும்பாலான தருணங்களில் எதிர்பார்ப்புகளைக் கைவிடமுடியாத துரதிருஷ்டசாலிகளாகவும் ஏமாற்றத்தை இயலாமையாகவும் இயலாமையை வெறுப்பாகவும் மாற்றிக் கசப்புகளையும் துன்பங்களையும் விதைத்துவிடுகிற ஆவேசக்காரர்களாகவும் மாறிவிடுகிறார்கள் என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
—-
- ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்
- 24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005
- கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005
- அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்
- காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்
- சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்
- ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)
- கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .
- கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)
- சின்ன வீடு
- குறும்பட வெளியீட்டு விழா
- திறந்த ஜன்னல் வழியே
- அலைகள் திமிங்கிலம்
- ஒற்றை நட்சத்திரம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10)
- மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்
- நலம்பெறவேண்டும்
- கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கவிதைகள்
- ‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- கற்பு என்னும் மாயை
- கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்
- Commander in Chief
- பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
- சேவை
- தெரிந்தவன்