உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி! தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்திக் கொண்ட பெயர். இவரது இலக் கிய சாதனைகளை விலாவாரியாக சொல்லனும் என்றால்… பெரிய ஆய்வு கட்டுரையே எழுதனும். சுருக்கமாகச் சொன்னால் நவீன தமிழ் இலக்கியத்தில் இன்னொரு அம்பை! என்றாலும் அம்பைக்கும் கைவராதா கவிதை வரிகள் இவருக்கு சாதாரணம்! இவர் கவிதையால் அறிமுகமானவர் என்பதும், இவரது கவிதைகள் புதுக் கவிதைப் பரப்பில் பிரசித்தியம் கொண்டவை என்ப தும் அறிந்த ஒன்று! இவரது சிறு கதைகளும், நாவலும் அப்படிதான்! உன்னதம் சார்ந்தது! சிறுகதைகளிலும், நாவலிலும் கவிதை நடையொத்த நடையிலான இவரது அளுமை தமிழுக்குப் புதிது! கவிதையாலேயே புள்ளி வைத்து கோலம் போடும் இவரது நேர்த்தி வாசிப்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது.
சமீபத்தில் அவரது ‘காற்றுக்காலம்’ என்கிற சிறு கதையை ‘அம்ருதா’ என்கிற இலக்கிய இதழில் வாசித்தேன். படித்ததில் பிடித்த தான இந்த சிறு கதையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
– தாஜ்
———-
ஊரைப் பற்றிய கவனங்கள் ஒரு புள்ளியில் தெறித்துச் சிதறிவிட தன் கனவுகளோடு நடந்தாள் அவள். ஒரு திருவிழாவிற்கான வையாக இருந்தன அவளுடைய ஆடையலங்காரங்கள். ஊதா நிறப்புடவை, காதில் ஆடும் அதே நிறக்கல் பதித்த ஜிமிக்கிகள். கழுத்து வளைவின் மத்தியில் ஒரேயொரு ஊதாக் கல் ஜொலித்தது. ஏதோ ஒரு பண்டிகைக்குப் போவது போல் இல்லை. காதல னைச் சந்திக்கும் உவகையுடனா? காற்றில் குளிர் அடர்ந்திருந்தது. நேரக் கணக்குகளை எப்போதோ தப்பவிட்டிருந்தது மனம். வீட்டின் சுவர்களைத் தவிர வேறெதையும் அறியாதவளுக்கு வெளி, அச்சமும் உற்சாகமும் தருவதாயிருந்தது ஒரே சமயத்தில்.
அருகிலேயே இணைந்து இழைந்தபடி அசைந்து வந்தது காற்று, வீட்டில் எந்த ஜன்னல்களிலும் அதற்கான அனுமதி மறுக்கப் பட்டே இருந்தது. அதன் தீண்டலில் தன் எச்சரிக்கையுணர்வுகளை எளிதாக நழுவவிட்டாள். இப்போது அது மிக மிகச் சுலப மாக அவளை மோதித் தழுவியது. சுதந்திரமான கலைப்புக்களும், தீண்டல்களும், விளையாட்டுக்களும், கால்களைப் பின்ன வைத்தது. திடீரென்று தலை மேல் மலர் கொட்டியது. உடைகளை உப்பச் செய்து, அவளுள் ஆடியது. கூந்தல் இழைகள் கலைந்து சிதற, முந்தானை அவளுடைய தற்றதாகிக் காற்றின் பாய்மரமாக, அவள் ஆர்வத்துடன் அதன் விரல்களைப் பற்றிக் கொண்டாள்.
“என் வழியும், பயணமும் தனியானது. மிகமிகத் தனி, பசிய நிசப்தத்தில் என்னைத் தொடந்து துணை தருவது யார்? மறுபக்கம் நகர்கிறேன் அவன் இருப்பைத் தவிர்க்க. சங்கடம் மிகுந்து, ஆனால் என்னால் அவனிடமிருந்து தப்பிக்கவோ, அவன் ஓயாத பேச்சை ரசிக்காமலிருக்கவோ முடியவில்லை. வாளால் நிலம் கீறி, புழுதி புழுதி கிளப்புகிறான். நான் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் அவனுடைய உரத்த குரல் எழுகிறது. என் சுயத்தின் மறுபாதியா அவனென்று வியக்கிறேன்”
மனம் ஏதேதோ நினைக்க மதியம் கனியும் பொழுதில் ஒரு தோப்பின் ஊடே உலவியபடி, அவளோடு சலசலத்து உரையாடிக் கொண்டிருந்த காற்று பசும் கிளைகளை அதட்டியபடி, சட்டென்று திரும்பி அவளை உற்றுக் கவனித்து, சரளமாகப் பழகிய குழந்தை போல் அது இரு கைகளையும் விரித்தபடி அவளை நோக்கி ஓடி வந்தது. சிற்றிளம் தென்றல், இரவில் பெய்திருந்த மழையின் குளிர்மையை ஏந்திக் கொண்டு வருகிறது அது. நதியின் இளம் சிவப்பு நிற நீர் நுரைத்துப் பாய்ந்தோடியதும் கரை யோரப் புற்களில் பாதம் படும்போது குறுகுறு வென்றிருந்தது. வரப்பில் கால் வழுக்கும் படியாகத் தள்ளின, காற்றின் வலுத்த கரங்கள். மரங்களில் வழக்கமாகப் பாடும் பறவைகள் இன்று காற்றையே தம் குரலாக வரித்துக் கொண்டன. தடுமாறி விழுந்த அவளைத் தாங்கிப் பிடித்ததும் சிறுகாற்றின் கைகள்தான்.
காற்று, இது அவளுடைய காற்று. காலங்காலமாய் தேடித் தவித்து, வெறுமையுற்று புழுங்கி, ஏங்கிப் பின் கண்டடைந்த காற்று. அது இப்பொழுது அவளுடனேயே நடைபயில்கிறது. இமைகளை முத்தமிடுகிறது. நினைப்புகளில் இனிமையேற்றுகிறது. அரு மையான சுழல்நடனம் வானின் விரிவில் ஆரம்பிக்கிறது. மீட்டப்பட்ட அவளுடன் அதிர்கிறது. தந்திவாத்தியம் போல் இல்லை, துளைகள் நிறைந்து குழலாக. வானம் படாரென்று திறக்க வெறிச் சிரிப்போடு நிலம் கடக்கின்றது காற்றின் ஆகிருதி. நீந்தித் திளைக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள். முல்லைகளும், மல்லிகைகளும் அரும்பாக அசைகின்றன, இதழ்களின் உதிர்வில் வருந் தாமல். இலைகளிலும், தளிர்களிலும் சருகுகளிலும் அளவற்ற பேரானந்தம் பரவுகிறது.
நதியின் கரையோரமாகவே சென்று குன்றுகளின் தொடரை நோக்கி நடந்தாள். புல் படர்ந்து, தாழும் புதர்கள் அடர்ந்த சந்தன மணல் பரவிய கரை. நீண்ட கோரைகளில் அவள் புடவை நுனி சிக்கி இழுபடச் சலிப்போடு, அதைக் குனிந்து விலக்கினாள். ஆற்றோரப் பாறைகளில் பச்சை வெல்வட் போல் படிந்திருந்த பாசி பின் மதியத்தில் மஞ்சளொளியில் மிணு மிணுத்தது.நெருக்க மாக மரங்கள் நிற்பதால், பச்சை இருள் கவிந்த பாதை. அவ்வப்போது தட்டுப்படும் பாறை முகடுகள். இடதுபக்கம் காணக் கூடிய இசை போன்று பொன்னாக நெளிந்தோடும் நதி. ஒரு கணம் நின்று அதையே கவனித்தாள். பாறைகளில் மோதி, காற் றோடு இசைந்து ஆற்றின் ஓசை பெருக, அதுவோ தான் அதிநிசப்தமாக இருப்பது போல் பாவனை செய்தது. சாயங்காலத்தின் மங்கலொளியில் குமிழிடும் நீர்ப்பரப்பு மிக வசிகரமாய் இருந்தது. கட்புலனாகாத தோழமை போல் காற்று நதியலைகள் மீதும், அவள் உடலின் சரிவுகளிலும் குழைந்தாடியது.
பாறை மேட்டைக் கண்டதும் நின்றாள். அதில் ஏற முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற அதில் கல் மடிப்புக்கள், படிகளாக அவளை வரவேற்றன. தங்களின் தீங்கின்மையைச் சொல்லின. அவள் அவற்றில் ஏறினாள். சிறிய முகட்டைத் தொட்டு மறுபுறமாகச் சரிந்து இறங்கியதும் வியப்பில் அவள் விழிகள் விரிந்தன. பசுமை படர்ந்த பள்ளம் அங்கே பரவியிருந்தது. அபாயமற்ற ஆழமின்மையோடு. பசுமை, பசுமை. பசுமையே எங்கெங்கும். பல வர்ணப் பூக் கள் அங்கே மலர்ந்து கிடந்தன. அதைச் சூழவும் சிறு புதர்களும், குற்று மரங்களும் வரிசைகட்டி வளைந்து நின்றன. ஒரு அந்தரங்கமான அறைபோல அல்ல, மிருதுவான மடி போல. இல்லை, சுகம் கிளர்த்தும் மஞ்சம் போன்று. பனி துளிர்த்த புல் நுனிகளில், பாதம் கூட நடந்தபோது அவள் எதிர்பாராத கணமொன்றில் காற்று அவளை நிற்கவொட்டாமல் தள்ளியது. தவறி விழுந்திருந்தால் சிறு பாறைகளில் மோதித் தலை சிதறியிருக்கும். அல்லது, மரங்கள் சூழ சிறு தொட்டில் போலிருக்கும் அந்த வளை குழியின் பாதுகாப்பிலிருந்து ஆபத்தான ஆழ் பள்ளத்தாக்கின் மர்மம் அவளை இழுத்துக் கொண்டிருக்கும். தலை சுழல புல்தரையில் சரிந்தாள். அவள் அச்சங்களைக் கேலி செய்த காற்று, மறு நிமிடமே அவளைத் தேற்றித் திடப்படுத்தியது.
காட்டின் மென் பச்சைத் தளிர்கள் நீலவான் விளிம்பில் வரைந்த சித்திரம் மிக நேர்த்தியாக இருந்தது. அவளுடைய கரிய விழிகள் மேகத்தன்மை கொண்டன. பறவைகள் கூட்டமாகக் கூவின. மிருதுவான தென்றலின் வருடல் மலரிதழ் மேலேபடுவது போல. காற்றின் அலைகள் தன் உடலையும், மனதையும் சுழற்றி உறக்கமோ, மயக்கமோ போன்ற ஒன்றில் கிறங்க வைப்பதை உணர்ந்தாள். மலர்களின் அசைவு. தாழ்வாகப் பறந்தலையும் சிட்டுகள். சீராக ஓடும் தன் மூச்சு. “இத்தனையும் நிகழ்வது இந்த இனிய காற்று; உயிர் ஆதாரமான வாயு” என்றெண்ணினாள். எது உடல், உள்ளம், புலன், புத்தி, உணர்வுகள் இவற்றிக்கு அணுகூலமானதோ, அவற்றைப் பேணுகிறதோ, உதவுகிறதோ, அமைதியளிக்கிறதோ அது “ப்ரியமானது” என்று கூறப்படுகிறது. எது ப்ரதிகூலமோ அழிகிறதோ, எதிரானதோ அது “அப்ரிய”மானது – என்று முணுமுணுத்தது காற்று. அதைக் காண, தீண்ட, தழுவ விரும்பினாள். அதுவோ உலகம் முழுவதையுமே இயக்கிக்கொண்டிருந்தது, உருவமேயற்று. மாபெரும் சக்தியாக. அவள் மனம் தவிக்கையிலேயே.
“காற்று, நெருப்பு, நீர், நிலம் இவற்றில் எங்கும் ஆகாயம் சமமாக நிறைந்திருந்தாலும், அது அவற்றில் ஒட்டாதிருக்கிறது” என்று அது சொல்லி முடித்து அவள் கூந்தலைச் செல்லமாகக் கலைத்தது. இல்லை, அது வனம் முழுவதையுமே ஊடுருவியது, மரக்கிளைகளை, புதர்களை, மலர்களை, புல்நுனிகளை, நதியை அனைத்தையும் தீண்டி விளையாடியது. அவளோ காற்று தனதேயாக வேண்டும் என்று விரும்பினாள்.
அது உணரத்தக்க ஒன்றாக நிறைத்திருந்தது. நுழையவியலாத இடமேயற்று அனைத்தையும் தனது ஆதிக்கத்துக்குள்ளாக்கி, ஆனால் பார்வைக்குள் வராமல்.
“எனக்கு உன்னைப் பார்க்க வேண்டுமே” அவள் மனம் ஏங்கிக் கேட்டது.
“பார்ப்பது, கேட்பது, முகர்வது, சுவைப்பது, எடுப்பது, விடுவது, பேசுவது, போவது, வருவது இவையும், சுவாசிப்பது, மூச்சிழ ப்பது என்ற உயிரின் சகல செயல்களும் நான்தான் நீ என்னை அவற்றில் காணலாம்” காற்றின் தத்துவம் அவளைப் பரிதவிக்க வைத்தது. அதன் நுண்ணிய அசைவுகள் மீது அவள் காதலுற்றாள். அவள் ப்ரியத்தை வெளிப்படுத்து முன்னே அறிந்தாற்போல் “நானும் உன்னுடன்” என்றபடியே அவள் பாத மத்தியைத் தொட்டு, காது மடல்களை முத்தமிட்டு, இதழ்களைப் பருகியது காற்று. தன் உடல் மீது ஒரு இசை போல் அது நடனமிடுவதைக் கவனித்தாள்.
“புலன்கள், மனம், புத்தி இவையெல்லாம் காமத்தின் இருப்பிடம். இதே காமம் தான் ஞானத்தையும், நிம்மதியையும் பறித்து உயிரை, மோகத்துக்கு உட்படுகிறது.” அவளுக்குள் எழுந்த எச்சரிக்கும் குரலைப் பற்றித் தொடர இயலாதவளானாள். அவள் மனம் அதிர அந்தக் காற்று இப்போது புயலாக ஆவேசத்துடன் அவளைச் சுற்றிக் கொண்டது. அவளைச் சுழற்றிச் சிதறடிக்கை யிலேயே.
“நீதான், நீ மட்டும்தான், நீயேதான். இப்போது இந்தக்கணம் உன்னில் மட்டும்தான் நான் நிரம்பியிருக்கிறேன்” என்று அவனை அணைத்து ஆக்ரமித்தது. “இனி எப்போதுமேதான்” என்று அவள் தேகத்தின் மீது அனலும், புயலும் மூட்டி வார்த்தது. அவள் உடல் தக்கையாக மிதக்க, நரம்புகள் முறுக்கிப் படீரென்று விடுபட்டன. ஒரு கணம். ஒரேயொரு கணம் தான். அவளுடல் தன் எடையையும், பலத்தையும், நினைவுகளையும் இழந்துபின் மீண்டபோது, சூரியன் ஒரு அணைந்த தீ உருளை போல் மேற்கில் சரியக் கண்டாள். சட்டென்று ஒரு புழுக்கம் அவளை அழுத்தியது. ஒளியின் தயக்கம், உறைந்த நதி, அச்சுறுத்தும் மரங்களின் அசைவின்மை. புல் நுனிகள்கூட நீர்சலனமாய் இருந்தன. அவன் சுவாசக் குழலிலிருந்து அந்த மெல்லிழை அறுபட்டு விட்டது. ஒருவராலும் நகர்த்தமுடியாத பாறைகள் அவளைப்பாராமாக அழுத்தின. காடும் நதிக்கரையும் மலையடிவாராமும், பிரபஞ்சமும், தன் உடலும் காற்றற்றதாகி விட்டதாக உணர்ந்தாள். அதே சமயம் தன் அடிவயிற்றில் மட்டும் ஒரு சிறிய வாயுப் புள்ளி சுழல் வதில் அஞ்சினாள். பசுமை மெல்ல மங்கிக் காடு கருமை கொள்ளத்துவங்கியது. ஒரு சாம்பல் படலத்தைப் போர்த்தியது போல. மரங்களின் மௌனம். பறவைகளின் நிசப்தம். ” எப்படி வீடு சேரப் போகிறேன்” எனும் திகிலை ஏற்படுத்தின எல்லாவற்றின் மோனமும்.
“நான் போக வேண்டும், ஆனால் எப்படியென்று தெரியவில்லை” அவள் பரிதவித்த போது, கருணை மிக்க காற்றின் பேரலை ஒன்று அவளை ஒரு நலிந்த தளிர் போல் தூக்கியெடுத்து, மிதக்க வைத்து வீட்டு மொட்டை மாடியின் செந்தளத்தில் விசிறி எறிந்து விட்டுப்போனது.
சிறு புழுக்கம் கூடிய இரவில் பால்கனி மூலையில் உட்கார்ந்திருந்தாள். கைகளைக் கன்னத்தில் ஊன்றி, வெந்து புழுங்கும் காற் றின் செய்தியை அறிய முயன்றாள். அவளுள் நிலை கொண்ட சிறிய அணு வாயுப் புள்ளியாகி, திரவத்தன்னையுற்று, திடமாகி உயிர் மூச்சுக்கான வழிகளை அடைத்தது.
எல்லாச் சன்னல்களும் திறந்த வீட்டில் வெம்மையன்றி வேறெதுவும் இல்லை, குமட்டலும், ஒவ்வாமையும் ஏற்பட்டது எதன் மீதும், “உன்னைக் கருக் கொண்டிருக்கிறேன்” என உறைந்த காற்றிடம் சொன்னாள். அதுவோ அவளுக்கு எட்டாத வெளியில் உலவிக் கொண்டிருந்தது. மரங்களின் ஊடே, மணல்பரப்புகளில், ஆற்றின் நெளிவில், மேகங்களுக்கு மத்தியில்… அவள் அழை ப்பு அதற்கு எட்டவே இல்லை. வியர்த்தமாக உடைந்தன அவளுடைய புலம்பல்கள். “கரு, கரு, காற்றே, உனது கரு” என்ற அவள் கதறல்களுக்கு அலட்சியச் சிரிப்புகளே பதிலாகக் கிடைத்தன, “இதென்ன மிரட்டலா? பேதை நீ. உன் உடல் அநித்ய மான உருவத்தோடிருக்கிறது. நான் நித்யமானவன். உருவோ, அழிவோ அற்றவன். என்னைக் கருவுறவோ, பெறவோ, இழுக்க வோ உன்னால் எப்படி முடியும்?” என்று அதன் குரல் தொலைதூர மலைகளில் எதிரொலித்தது. அவள் பதிலற்று நின்றாள். தன் கருப்பைக்குள், மார்பில், கையில் கனக்கும் கருவை அல்லது, சிசுவைத் தனித்துச் சுமந்து பீதியோடு மூச்சிளைத்தாள்.
“உலகெலாம் நிறைந்த நீ ஒரு இழை, ஒரேயோரு இழை எனக்குள் நுழைந்து, என் சுமைகள் இளைத்து என்னை உயிர்ப்பிக்க மாட்டாயா?” அவள் புலம்பல்கள் பித்தேறியவையாய் இருந்தன. திண்றும்சுவாசம் முகத்தில் விஷ நீலத்தைப் பாய்ச்சி இருந்தது.
“நீ எங்கிருக்கிறய்” மெலித்த குரலிலான அவள் கெஞ்சல் வெளியில் கரைந்தது. “எப்போது வருவாய்?”
“நான் எங்கும் இருக்கிறேன். உன்னுள்ளேயே உலவுகிறேன். உன்னுள், இதனுள், அதனுள், எதனுள்ளும், எல்லாவற்றிலும் தேடி ப்பார்” வாயு பகவானின் மதம் விரையக் கண்டாள். அந்தப் பதில் தன் பிரமையோயெனக் கலங்கினாள்.
படுக்கையில் சரிந்தபோது, அறையின் உத்திரம் பெயர்ந்து, நொறுங்கி அவள் மீது விழுந்து, துளிக் காற்றாவது நுழையும் என்ற நம்பிக்கையைச் சிதைத்தது. அவள் உயிர் நசுங்கும் அபாயத்திற்கான அறிகுறிகள் பெருகின. கனத்த கற்கள் அவளை அடையா ளமற்று உடைத்தாலும் அவள் மூச்சுப் பாதையை மறித்த அந்தக் கருக்குமிழ் மட்டும் கவலைபடவேயில்லை. அறைவாயிலிலிரு ந்து புறப்பட்ட குருதித் தடயங்கள் வெளியெங்கும் பரவின, அவற்றை உலர்த்தி அழிக்கும் திறமும், அவளுக்கு உயிர் தரும் திடமும் கொண்ட காற்று எங்கிருந்தும் கசியவில்லை. கட்டிலிலிருந்து பல்லாயிரம் அடிகள் தொலை தூரத்திலிருந்து ஜன்னலைத் திறக்க வேண்டுமானால் தன் மீது குவிந்த இடிப்பாடுகளை விலக்க வேண்டும். காற்றோ தன் உதடு குவித்து ஊதினாலே அவை பறந்து போகும். மிக உறுதியானவை என்று கற்பிதம் செய்யப்பட்ட ஜன்னல் கதவுகள் அதன் வலிமையான கரங்களில் ஒன்று மற்று நொறுங்கும். ஜன்னலின் மர விளிம்புகளை காற்று பெயர்க்கப் போகும் கணத்திற்காக, அறையில் நிறையப் போகும் தென் றலின் ஆசுவாசத்திற்காக காத்திருக்கிறாள் மூச்சிரைத்தபடி. எத்தனையோ நாட்கள், மாதங்கள், யுகங்கள், நரம்புகளில் ஊசலாடி உதிர விழையும் உயிரின் துளியை நடுங்கும் பார்வையால் பற்றிக்கொண்டு… சுடர்ந்து, கொழுந்து விட்டு, ஆகுதியாய்ப் பெருகு கிறது அவள் காத்திருப்பு. ஜன்னல் மூடியிருக்கிறது இறுக்கமாய்! இழுக்க முடியாத கடினத் தன்மையோடு.
*********
நன்றி: அம்ருதா / மே 2008
தட்டச்சு: தாஜ்
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- அப்பனாத்தா நீதான்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- கவிதைகள்
- இரண்டு கவிதைகள்
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- நூல் விமர்சன அரங்கு
- மகாகவி பாரதி நினைவரங்கம்
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- அவஸ்த்தை
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- வீட்டுக்குப் போகணும்
- “தோற்றுப்போய்…..”
- பயணம்
- பங்குருப்பூவின் தேன்.
- சாமி கண்ண குத்திடுச்சு
- காற்றுக்காலம்.
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- வேப்பமரம்