கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

அப்துல் கையூம்


விலைமாதரைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்?

எதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை,

“பொன்னடங்கிய பெட்டகம் கனி
போல்அடங்கிய மார்பகம்
மின்னடங்கிய மெல்லிடை அதன்
மேலடங்கிய ஆலயம்”

என்று வருணனை செய்வதோடு நிற்காமல், ஒரு படி மேலே சென்று

“நெய்திரண்டன மேனியில் சில
நேரம்நின்றன என்விழி
கொய்துகொண்டது கைவழி கலை
கூடிநின்றது ‘தாய்க்’ கிளி”

என்று சொற்சிலம்பம் ஆடுகிறார்.

‘மறைக்க வேண்டியவற்றை எல்லாம் மறைக்காமல் எழுதுகிறோமே அதனால் நம் மதிப்பு பாழாகுமே’ என்றெல்லாம் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

ஆசைப்பட்டவளை அடைவதற்கு அருந்தமிழையே ஆயுதமாக்கிய இலக்கிய கர்த்தாக்களை என்னவென்றுத் திட்டித் தீர்ப்பது?
காளமேகப்புலவர் இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூரில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டாராம். இவரது ஆசைக்கு அவள் இணங்க மறுத்ததால், அவள் உதாசீனப் படுத்தி அறம் ஒன்றையும் பாடி விட்டார்.

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே – தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.” என்று.

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடித் தொலைக்க, பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு சம்மதம் தெரிவிக்க, உடனே காளமேகம்

“நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னினும்வந்து எய்வானோ – விஞ்சு
முலைச்சிகரத் தால்அழுத்தி முத்தமிட்டுச் சற்றே
கலைச்சிகரத் தால்அணைத்தக் கால்”.

என்று ‘பெரிய மனது’ பண்ணி, ‘அந்தர் பல்டி’யடித்து அவளைப் புகழ்ந்து பாடினாராம் கவிஞர் காளமேகம்.

புதுக்கவிதை புறப்பெடுத்த யுகத்தில்

‘நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக’

என்ற நா.காமராசனின் வரிகள் இலக்கிய வட்டத்தில் பெரும் பரபரப்பையும் வாசகர்கள் மனதில் ஆழ்ந்த பாதிப்பையும் ஏற்படுத்தியது.

ராட்சஸ ராட்டினத்தில் அமர்ந்து சவாரி செய்கையில், மேலிருந்து கீழ் இறங்கும்போது, உள்ளுக்குள் ‘கிலுக்’ என்ற அதிர்ச்சியோடு தூக்கி வாரிப் போடும். சில கவிதை வரிகளும் இப்படித்தான். நம் மனதில் சொல்ல முடியாத ஒரு விளைவை நிகழ்த்தும்.

புதிய மாதவியின் வரிகளைப் படிக்கையில் காமப்பித்து பிடித்த ஆண்களை சம்மட்டியால் அடிப்பதைப் போலிருக்கிறது.

‘பசியை
அவள் சாப்பிட்டாள்
பசியின் உடலை
அவன்
பசி சாப்பிட்டது’

என்கிறார் இந்தப் பெண் கவிஞர்.

“விலங்குகளை விடக் கேவலமாகி இறைவனின் உயர்ந்த படைப்பான பெண்ணினத்தை காம இச்சையோடு பார்ப்பாரேயானல் அந்த ஆணினம் அடியோடு அழிந்து விடுவதே மேல் என்று நான் நினைப்பேன்” என்று எழுதுகிறார் மகாத்மா காந்தியடிகள்.

கவிக்கோ அப்துல் ரகுமான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் தன்னிடம் பயின்ற மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்தாராம். அதாவது ஒரு விலைமாதுவின் சமாதியில் ஒரு வாசகம் எழுதவேண்டும். என்ன வாசகம் எழுதலாம் என்பதே அந்த போட்டி.
முதலாம் மாணவன் “பால்வினை நோய் விருட்சம்” என்ற சொற்றொடரை வழங்க, இரண்டாமவன் “சுக கிடங்கின் நித்திரை” என்று கூற
மூன்றாம் மாணவன் “வாடகை மனைவியின் உறக்கம்” என்று கூறியிருக்கிறான்.

இறுதியான ஒரு மாணவன் சொன்ன வாசகம் : “இன்றுதான் இவள் தனியாக தூங்குகிறாள்”. பரிசு பெற்ற வாசகம் இதுதான்.

போகத்திற்காக தேகம் விலை பேசப்படுவது மாபெரும் சோகம். இச்சைக்காக பெண்ணினத்தையே கொச்சைப் படுத்தும் அவலம் இது. உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப் பட்டது. காசுக்காக மாசுபடுகிறது இங்கே கற்பு. ..“கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம், கடைதெருவில் விற்குதடா அய்யோ பாவம்” என்ற திரைப்படப் பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

இரவுக்குப்பின்தான் விடியல் வரும். இவர்களுக்கோ இரவில்தான் விடியல். படுக்கை அறையை மாத்திரமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே இவர்கள் இருட்டாக்கிக் கொள்கிறார்கள்.
“வாழ்க்கையின் விடியலுக்காக
இரவை எதிர்நோக்கி
காத்திருக்கும்
அல்லி மலர்கள்”

என்று இவர்களை வருணிக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். அல்லி மலர்வது ஆகாயம் கருக்கையில்தானே?

கவிஞர் மு.மேத்தாவின் சிந்தனை இன்னும் சற்று ஊடுருவி அவர்களின் கருப்பை வரை சென்று விடுகிறது.

“இரைப்பை நிரப்ப
கருப்பையை
பட்டினியிடும் மாதர்” என்று பாடுகிறார்.

பிள்ளைப்பேறு என்பது பெரும் பேறு. தன் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வயிற்றுப் பிழைப்புக்காக தன் வயிற்றுச் சுமையை ஏற்க மறுக்கிறார்கள் இந்தச் சுமைதாங்கிகள்.

Great men think alike என்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் சிந்தனையும் கவிஞர் மு.மேத்தாவின் கருத்தோடு ஒத்துப் போகிறது.

“இரைப்பை நிரப்பவா
கருப்பையை பட்டினியிட்டாய்?”

என்று கவிஞர் வினா தொடுக்க அதற்கு பால்வினையாளி பதில் சொல்கிறாள்.

சில உறுப்புகள் அனாவசியம்
குடல்வால்,
இரண்டாம் கிட்னி,
ஆறாம் விரல்,
எனக்குக் கருப்பை

ஆஹா.. என்ன ஓர் அற்புதமான சிந்தனை! வெறுப்பு மிகுதியால் கருப்பையையே உபயோகமில்லா உறுப்பு என்கிறாள் அவள்.

தனக்குள்ள இலக்கியப் பரிச்சயத்தை வெளிக்காட்ட குறள் ஒன்றையும் அவள் திரித்துக் கூறுகிறாளாம்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
உச்சத்தாற் காணப்படும்”.

“எச்ச”த்தை “உச்ச”மாக்கி கூறும் போதும் சரி , கவிஞர் அவளை “எடை பார்க்கும் எந்திரம்” என்று வருணிக்கும்போதும் சரி, நமக்கு விரசம் தோன்றுவதில்லை. மாறாக அவள் மீது பரிவும், பச்சாதாபமுமே ஏற்படுகிறது.

விலைமாதர் உருவாவதற்கு காரணம்

செல்வத்தின் எச்சமும்
வறுமையின் உச்சமும்

என்று அதனைத் தொடர்ந்து வரும் வைரமுத்துவின் வரிகள் அதற்கு சான்று பகர்கிறது.

பால்வினையாளியின் தொழில் எதுநாள் வரைக்கும் நீடிக்கிறது என்றால்

திருமணம் – எய்ட்ஸ்
இரண்டிலொன்று முந்தும்வரை.. .. என்கிறார்.

மணம் அல்லது மரணம் இதில்தான் முடிகிறதாம். வாழ்க்கை ஒன்று ஆனந்தமாகிறது அல்லது அஸ்தமனமாகிறது. ஒரு படத்தில் எழுத்தாளராக வரும் பார்த்திபன் விபச்சாரம் பண்ணும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்வார். நிஜ வாழ்க்கையில் எத்தனை இளைஞர்கள் இதுபோல் முன்வருவார்கள் என்பதைச் சொல்லத் தெரியவில்லை.

முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமக்கும் மாதருக்கு இயற்கை ஏற்றமுடன் அளிக்கும் பதவி உயர்வு “தாய்” என்ற ஒப்பற்ற ஸ்தானம். இதை அழகாகச் சொல்கிறார் பெண்கவிஞர் புதிய மாதவி.

‘அவள்
உங்களுக்காகச் சுமப்பது
வெறும் நீர்க்குடமல்ல
வாழ்க்கையின் உயிர்க்குடம்’ என்று.

விலைமாதர்கள் தொடர்பினால் சீரழிந்துப்போகும் சமுதாயத்தை எண்ணி “சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்” என்ற நூலில் கண்ணீர் வடிக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவருடைய கவலையெல்லாம் நாளைய நட்சத்திரங்களாக உருவாகப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியதாகவே இருக்கிறது

“இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என் குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம் இளைஞர்களே?

ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?

வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள் எட்டுகின்றன!

அடிப் பாவிப் பெண்ணே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை நிரப்ப வந்தாயா?

வைரமுத்துவின் நியாயமான ஆதங்கம் எழுதுகோலை ஆயுதமாக ஏந்தி இலக்கிய உலகில் உலா வரும் ஒட்டுமொத்த கவிராஜர்களின் ஏகோபித்தக் குரலாக இங்கே எதிரொலிக்கிறது.

vapuchi@gmail.com
(நீக்கங்கள் உண்டு)

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்