தேவமைந்தன்
பெண்மொழி, ஆண்மொழி, குழந்தை மொழி, கதைமொழி, பேச்சுமொழி, இலக்கியமொழி முதலான எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி, பாட்டுமொழியாக விளங்கிப் பின்னால் காலம் முதிர முதிர உருப்பெற்ற கவிதைமொழி ஆகும்.
கவிதைமொழி, தன்னை வளர்த்தெடுப்பவர்களால் வளர்கிறது. தன்னைப் புரிந்து கொள்ளாமல் சிதைப்பவர்களால் தேய்கிறது. நிலவின் பருவம் போல நாம் அறிந்து கொள்ள முடியாத ஒரு முறைக்கு உட்பட்டு வளர்பிறையையும் தேய்பிறையையும் அது சந்திக்கிறது. இதை நாம் ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், கார்ல் குஸ்தாவ் யுங் மொழிந்ததுபோல கூட்டு நனவிலியால்(collective unconscious) கவிதைமொழி உருவாவதனால்தான். கூட்டு நனவிலியின் படைப்பாக்கங்களை ஆராயப் போனோமானால் எல்லை இருக்காது. தொடரோட்டம் போல், ஒருவர் மாறி இன்னொருவருவர் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான். முதல் முதல் மனிதன் குகைச் சுவர்களில் அதாவது பாறைகளில் உருவங்களைக் கீறத் தொடங்கினானே அதிலிருந்து கூட்டு நனவிலியின் படைப்பாற்றல் தொடங்கியது என்பது உண்மை.
கூட்டு நனவிலியால் உருவாக்கப்பெறும் கவிதைமொழி இடையிடையே, பூ பிடிக்காத நோய்மரம் போன்ற ‘படைப்பாளிகளால்’ சாரமற்றுப் போவதும் தொய்வுற்றுப் போவதுவும் இயற்கைதான். அந்தத் தருணத்தில் அதை உரப்படுத்தும் சிந்தனையாளர்கள் தோன்றுவதும் இயல்புதான். இயல்பு என்பதே இயற்கையின் பண்புதானே! பிரான்சில் இத்தகைய அழுத்தம் கவிதைமொழியில் தோன்றிய பொழுது(1950கள்) திருமதி மார்கரெட் கில்மன் இவ்வாறு எழுதினார் –
“நிகழ்நாளில் நமக்கு வேறொன்று தேவை. நம்மைப் பொறுத்தவரை, பெருங்கவிஞர் என்பவரின் படைப்புகள் பின்வருவனவற்றை நமக்குத் தர வேண்டும்.
நிறைய கற்பனை செய்யக் கூடியவற்றை, நிறையவே கனவு கண்டு ஆழ்ந்து உணர வேண்டியவற்றைப் பெருங்கவிஞர் தர வேண்டும்.
எல்லாம் பாடி முடித்துவிட்டேன் என்று [இறுமாந்து] இருப்பவரை நாம் பெருங்கவிஞராகக் கருதுவதில்லை.
வெளிப்படையாக அல்லாமல் குறிப்பாக உன்னித்து உணர்வதற்கு[நமக்குள் வாழும் கவிதைமொழி நிறைய வேலைசெய்ய இடம் கொடுத்து]ப் படைப்பவரே பெருங்கவிஞர்.
ஒரே முறை வாசித்துப் பார்த்தவுடன் வெளிச்சமாகிவிடுவது அவருடைய கவிதை ஆகாது. பெருங்கவிஞரின் உள்ளத்தில் உள்ள கருத்து எது என்பதை தீர அலசி எடுக்கவும், அவ்வாறு எடுத்ததை விளக்கிச் சொல்லவும், முறையாக ஆராயவும் நிரம்பவும் இடம் தர வேண்டும்.
முழுமையற்ற – நிறைவை நோக்காத இந்தக் கவிஞர்கள் தம் குறிப்புப் பொருளாலேயே[‘த்வனி” என்றார் லா.ச.ரா] அவர்களுடனான நம் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் அழுத்தமாக உருவாக்குகிறார்கள்.
தோன்றி நன்றாகவே ‘நெகுநெகுவென்று’ வளர்ந்திருக்கும் திறனாய்வு, படைப்புகள் எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளது என்பதையும், தேவையானால் அவற்றில் பலவற்றைப் புறங் கண்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அத்தகைய திறனாய்வு, ‘வெட்ட வெளிப்படையான’ – துல்லியமாக விளக்கமாகின்ற கவிதைகளை அறவே பொருட்படுத்துவதில்லை.
‘பளிச்’சென்று புலப்பட்டுத் தோன்றாத, மிகமங்கலாகப் பொருள்தோற்றுவிக்க வல்ல கவிதைகளையும், எவ்வளவு முயன்றாலும் முழுதும் உணரப்படாத கடினமான கவிதைகளையும் – அவை படைப்பாற்றலின் பெருமையோடு கொஞ்சம் பொருந்தியிருக்குமானால் (அவற்றைத்) திறனாய்வு பொருட்படுத்தவே செய்யும்.
உறுதியாக எல்லாப் பெருங்கவிதைகளும், ஏன், எல்லா நல்ல கவிதைகளும் ஓரளவேனும் குறிப்புப் பொருள் கொண்டிருக்க வேண்டும். அவற்றுள் தேர்ந்து இடம் பெற்றிருக்கும் சொற்கள் தம் நேர்பொருள் அளவில் மட்டும் நின்று நலியாமல், அவற்றின் அறியவல்ல சொற்பொருளுக்கு மேலும் உட்பொருள் பொதிந்தே அமைந்திருக்கும்.”(1)
மார்கரெட் கில்மனின் கருத்தாடலில் அவர்கள் உணர்த்தும் கவிதைமொழிக்கான சான்றுகளைத் தமிழில் சங்க இலக்கியம் முதற்கொண்டு காணமுடியும். உள்ளுறை உவமை, இறைச்சி ஆகிய பொருண்மைகள் அமைந்த கவிதைகளில் மட்டுமல்லாமல் அந்தக் கவிதைமொழியை ‘கணைக்கோட்டு வாளை,’ ‘மாரிப் பித்திகத்து, மாரி ஆம்பல்’ என்று தொடங்கும்(குறுந்தொகை 164,168,117) பாடல்கள் முதலான பலவற்றில் காணலாம். என்ன.. இவற்றின் குறிப்புப் பொருளை அறிய வேண்டும் என்றால் ஒன்று – உரைகளை நாடக் கூடாது. முடியவில்லை என்றால் [உ.வே.சா., பெருமழைப் புலவர் போன்றோரின்] நம்பகமான உரைகளையே நாட வேண்டும்.
மாலைப்பொழுதில் சூரியன் மறைவதை ஒரே வரியில் கமாலியெல் பெய்லி(1807-1859) மொழிந்தார்:
“நாளதுவின் மரணப்படுக்கை..எவ்வளவு அழகாக!”
(“The death-bed of a day how beautiful!” – Gamaliel Bailey)
புகழ்மிக்க கவிஞர் டிரைடன்கூட,
“Behold him setting in his western skies,
The shadows lengthening as the vapours rise”
சொல்லியிருக்கிறார் என்பதை இங்கே நாம் சிந்திக்க வேண்டும். டிரைடனின் கவிதையில் படப்பிடிப்பு இருக்கிறது. குறிப்புப் பொருள் இல்லை.
பழந்தமிழ்க் கவிதைகளைப் பற்றி ஈடுபாட்டுடன் ஆராய்ந்தவரும் மொழிபெயர்த்துத் தம் ஆய்வு நூலில்(2) பொதிந்தவருமான ஜார்ஜ் எல். ஹார்ட், ‘மீனுண் கொக்கின்’ என்று தொடங்குகின்ற புறப்பொருள் அமைந்த பாடல் (புறநானூறு 277) போன்றவற்றிலும் குறிப்புப்பொருளுணர்த்தும் கவிதைமொழியைக் காணுகிறார்.
“மீனுண் கொக்கின் தூவியன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே”
என்று பூங்கணுத்திரையார் பாடிய பாடலில் நெஞ்சைப் பறிகொடுத்த ஜார்ஜ் ஹார்ட், அதில் படிமங்கள் பலவற்றைக் கல்லியெடுத்து ஒவ்வொன்றையும் குறிப்புப்பொருள் கருவுற்ற குறியீடுகளாகவே சுட்டுகிறார்.
“போர்க்களத்தில் களிற்றை வீழ்த்தி மாண்ட மகனைக் குறித்து அவனைப் பெற்றபொழுது அடைந்த உவகையை விடவும் பேருவகையை அடைகிறாள் அந்தத் தாய். அந்த ஆழ்மன மகிழ்வழுத்தத்தில் அவள் உகுத்த கண்ணீர்த்துளிகள் வெதிரமலையில் பெய்த மழையின் துளிகளைவிடப் பலவாகும்” என்பது பாடலின் பொருள் சுருக்கம். ஜார்ஜ் ஹார்ட்டின் நோக்கைப் பார்ப்போம்:
இப்பாடலில் வரும் தாயின் கூந்தல், மீன்களை உண்ணும் இயல்புடைய கொக்குப்போல் நரைத்திருக்கிறது. மீனுண் கொக்கின் தூவியை(சிறகை)ப்போன்ற அவள் நரை, அந்த முதியவளின் உறுதிப்பாட்டை(consistence)க் காட்டுகிறது. மீனுண்ணும் கொக்கு, தான் மீனைத் தேடுவதிலிருந்து ஒற்றைக்கால் தவமிருந்து தன் தேடலை அடைவது வரை எவ்வளவு உறுதிப்பாட்டுடன் உள்ளது!
அது மட்டுமல்ல கொக்கைக் கொண்டு, வயது முதிர்ந்தாலும் பாலுணர்வும் புணர்ச்சி விழைவும் இன்னும் அவளிடமுள்ளது. மீனைக்குத்தியுண்ணும் செயல்(3) காம இன்பம் நுகர்வதையே உணர்த்துகிறது…. வானத்திலிருந்து பெய்ய்ம் மழை நீர் மூங்கிலிலே துளிகளாகத் தங்கி, காற்றடிக்கும்பொழுது தரையில் உதிரும். அந்த நீரை எதிர்நோக்கியே நிலம் காத்திருக்கிறது. நிலத்துக்கு நீர் எவ்வளவு முதன்மையானதோ அது போலநாட்டு மக்கள் வாழ அவள் மகன் போர்க்களத்தில் வீழ்ந்து முதல்வனாகிறான். கீழ்நோக்கி விழும் மழைத்துளி நிலத்தை வளப்படுத்துதல் அந்தத் தாய் தன் கணவனோடு கூடி மகனைக் கருவில் ஏற்றதைச் சுட்டும்……..
இந்தப் பாட்டிலும் பிறவற்றிலும் ஏதோ சில வரையறைகளுக்குள் குறிப்புப் பொருள் கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை என்பதை வாசிப்போர் உணர வேண்டும். இதுதான் இந்தப் படிமத்திற்கு உரிய குறிப்புப் பொருள் என்று வரையறுக்க வேண்டுவதில்லை. ஒவ்வொரு படிமமும் பல்வேறு குறிப்புப் பொருள்களைச் சுட்டுகின்றன. நான் பகுத்து ஆராய்ந்து பார்த்ததைவிடவும் மிகுதியாகவே ஒவ்வொரு பாடலிலும் குறிப்புப் பொருள்கள் நிரம்பியுள்ளன.”(4)
கவிதைமொழி என்பது குறிப்புப் பொருளைக் கருவாகக் கொண்டு சுழல்கிறது. ஆனால் அதுவே முழுவதுமான கவிதைமொழி ஆகிவிடாது. இன்னும் அறியப்படாத உட்கூறுகள் பற்பல அதில் இருக்கலாம்.
கெபேக் இலக்கியத்தில்(La litterature quebecoise) ஆன் எபேர்(1916-2000) குறிப்பிடத்தக்க படைப்பாளர். இவர்தம் படைப்புகள் பல பிரான்சில் வெளியிடப்பட்டன. பெண் கவிஞரானாலும் பெண்ணியச் சிந்தனை எதையும் நேரடியாக இவர் வெளிப்படுத்தவில்லை. இவருடைய கவிதைமொழி விந்தைக் கற்பனை வளம் நிரம்பியது. வாசிப்போர் கற்பனையையும் தீவிரமாகத் தூண்டக் கூடியது. இத்தகையதொரு கவிதை:
தோட்டத்தில் எங்கள் கரங்கள்
(Nos mains au jardin)
எங்கள் கரங்களைத்
தோட்டத்தில் நட்டுவைக்கும்
எண்ணம் உதித்தது
எங்களுக்கு.
பத்துவிரல் கிளைகள்.
சின்னஞ்சிறு எலும்பு மரங்கள்.
சுற்றிலும் அழகிய புல்தரைகள்.
சுத்தமான நகங்களில்
புத்தம் புதிய இலைகள்.
பறவை ஏதேனும்
ஒன்று அமரும் என
நாள்முழுதும் எதிர்பார்த்தோம்.
வெட்டிய கைகள்
பொருத்திய பொறியில்
பறவையோ
வசந்தமோ
எதுவுமே சிக்கவில்லை.
ஒரே ஒரு மலருக்காக
ஒரே ஒரு வண்ண விண்மீனுக்காக
ஒரே ஒரு அமைதியான சிறகசைப்புக்காக
மும்முறை ஒலிக்கும்
தூய்மையான ஒற்றை இசைக்காக
அடுத்த பருவகாலம் வரையாவது
காத்திருக்க வேண்டும்
இதனிடையே கைகள்
நீராய்
உருகுகின்றனவே.
(மொழிபெயர்ப்பு: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்) (5)
மோன்ரெயால் பல்கலைக் கழகத்தாரால்(Montreal University) ‘படைப்புகள்'(Oeuvres) என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சேன் தெனிகர்னோ(Saint-Denys Garneau, 1912-1943)வின் கவிதைமொழி –
பாலையாம் உலகம்
கடக்க முடியாத பாதை
கலைந்துபோன வழித்தடங்கள்
உடைந்துபோன பாலங்கள்
வான்வெளியில் ஒருநூறு முகங்கள்
அவற்றைக் காணமுடியாமல்
வான்போல் நீண்ட
நிழலொன்று……(6)
இந்தக் கவிதை, பாரதியாரின் ‘திக்குத் தெரியாத காட்டில்'(7) பாட்டை நினைவுறுத்தவில்லையா? சேன் தெனிகர்னோ கவிதைகளில் “மனித வாழ்க்கையின் பல நேரங்களில் திக்குத் தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்படுவதைச் சித்தரிக்கும் கவிதைகள் .. அதிகம் காணப்படுகின்றன.”(8)
துளிப்பா என்று சொல்லப்படும் ‘ஹைக்கூ’வில் கவிதைமொழி மேம்பட்டுத் தெரிவதைப் பலரும் இப்பொழுது அவதானித்து வருகின்றனர்.
‘ஜப்பானிய ஹைக்கூ’வுக்குச் சான்றாக டாக்டர் தி.லீலாவதி முன்வைத்த சோரா’வின் கவிதைகளுள் இரண்டு:
புத்தாடைகள் அணிந்தாலென்ன?
நினைவிருக்கட்டும்..
காக்கை கறுப்புத்தான்
நாரை வெளுப்புத்தான்.
நீரில் படிந்த நிலவு
மீண்டும் மீண்டும் உடைந்தாலும்
திடமான முத்திரை தான்.(9)
நம் கவிஞர்களில், முல்லை வாசனின் கவிதைமொழி:
முத்து முத்தாய்ப்
பூக்களில் தேன்
வேர்களின் வியர்வை.
ருஷ்யநாட்டின் பழமொழிக் கவிதை ஒன்று:
ஊசி வாளைப் பார்த்தால்
அண்ணா என்று
அழைக்கும்.
திரைக்கவிஞர் நேதாஜி, மிகவும் எளிமையாக ஒரு பல்லவியில் கவிதை மொழியைக் கையாண்டார்:
ஞாயிறு ஒளிமழையில்
திங்கள் குளிக்க வந்தாள்.
சின்னச் சங்கரனின் கவிதைமொழி:
முகமூடிகள்
போனபின்னே
பொய்ம்முகங்கள்
புகுந்தனவோ?
இன்னும் எத்தனை எத்தனையோ கவிதைமொழி கூடிய கவிதைகள்… அவற்றை எடுத்துச் சொல்ல இக்கட்டுரை இடம் தராது.
****
குறிப்புகள்:
(1) Margaret Gilman, The Idea of Poetry in France. HUP, 1958. Pg. 200-201.
டாக்டர் ம.ரா.போ. குருசாமி, தமிழ் நூல்களில் குறிப்புப் பொருள், நரேந்திரசிவம் பதிப்பகம், ‘செந்தில்,’ தாமுநகர், கோவை – 641018. திசம்பர் 1980.
(2) George L.Hart, The Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts. University of California Press, Berkeley. 1975.
காலச்சுவடு(www.kalachuvadu.com) 2006 மார்ச் இதழில்(#75) The Poems of the Tamil Anthologies(1979) குறித்தும் The Four Hundred Songs of War and Wisddom(1999) குறித்தும் விவரங்கள் உள்ளன. தமிழ் செம்மொழியாக உறுதிப்படுத்தப் படுவதற்கும், அமெரிக்க பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டதற்கும் இவர் மூலகாரணம். தமிழின் செம்மொழித் தகுதியைக் குறித்து ஜார்ஜ் எல்.ஹார்ட் எழுதிய கட்டுரை காலச்சுவடு #55 இதழிலும் அ.முத்துலிங்கத்தின் விரிவான நேர்காணல் #70 இதழிலும் வெளியாயின.
(3) திருக்குறள்:490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
(4) George L. Hart, The Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts. 1975. Pg.162-163.
(5,6) Dr. R.Krichenamourty(Redacteur en chef), கெபேக் இலக்கியம்: ஓர் அறிமுகம்(La litterature quebecoise: une introduction en tamoul), Samhita Publications, Chennai, 2007.
E Mail: samhitha_publications@yahoo.com
aitf_india@yahoo.co.in
(7) பாரதியார், கண்ணன் பாட்டு, கண்ணன் – என் காதலன்[காட்டிலே தேடுதல்].
(8) ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கெபேக் இலக்கிய வரலாறு(கெபேக் இலக்கியம்: ஓர் அறிமுகம்). கனடா நாட்டின் ஒரு பகுதியாகிய கெபேக் மாகாணத்தில் வாழும் மக்கள், பிரான்சு நாட்டிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்தவர்கள். 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலர் ஆட்சியின்கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க, தங்கள் இலக்கியத்தை ஆற்றல் வாய்ந்த ஆயுதமாக மாற்றிக் கொண்டவர்கள்.
(9) சோரா, தமிழில்: டாக்டர் தி.லீலாவதி. அன்னம். திசம்பர் 1987 [ப.55]
****
karuppannan.pasupathy@gmail.com
- தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன்
- அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்
- சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை
- சூட்டு யுகப் பிரளயம் ! உலகலாவிய காலநிலை மாறுதல்கள் -4
- கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
- பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்
- நட்சத்திரத் திருவிழா – 2007
- கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு
- யூலை 83 இனப்படுகொலை -கலந்துரையாடல்
- மறைந்த கவிஞர் மாலதியின் மொழிபெயர்ப்பு நாடகம் “மாதவி” அரங்கேற்றம்
- வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை
- கடிதம்
- படிக்காசு
- அந்த நாள் ஞாபகம் புத்தம் புதிய புத்தகமே…
- கவிதை மொழி – ஒரு கருத்தாடல்
- கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14
- இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”
- சிவாஜியை வரவேற்போம்
- அன்புடன்…..
- ‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’
- காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !
- வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்
- ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)
- இணக்கம்
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- மாத்தா-ஹரி அத்தியாயம் 18