கவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

வே.சபாநாயகம்


மும்பையிலிருந்து புதியமாதவிதான் இதுவரை தமிழரின் படைப்புத் திறனை வெளிப்படுத்திக்கொண்டிருநார். இப்போது அன்பாதவனும் அவரது நண்பர் மதியழகன் சுப்பையாவும் அணி சேர்ந்து ‘அணி’ என்றொரு இரு மாத கவிதை இதழைத்
தொடங்கி மே ’06 முதல் கொண்டு வந்திருக்கிறார்கள். மாறுபட்ட வடிவமைப்பில் – நீளவாட்டில் (A4 தாளை நெடுக்க வாட்டில் மடித்து) 32 பக்கங்களில் முழுதும் ‘கவிதையும் கவிதை சார்ந்தும்’ என்ற பிரகடனத்துடன் ‘அணி’ வந்திருக்கிறது. 3வது இதழ் இப்போது செப்டம்பர் – அக்டோபர் இதழாக மலர்ந்துள்ளது. இதழின் பெயரில் காணப்படும் logo எழுத்தும் புதுமையானது. முதல் எழுத்து இந்தியின் ‘அ’ வாகவும் அடுத்த எழுத்து ‘ணி’ தமிழ் எழுத்தாகவும் அமைந்துள்ளது. ‘அணி என்பதை இந்தி எழுத்தின் அடிப்படையில் டிசைன் செய்திருப்பது புதுமையாக இருப்பினும் ஏற்பதற்கில்லை’ என்ற விமர்சனத்துக்கு, ‘ஹிந்தி பேச்சும் பகுதியிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ் என்பதந் குறியீடு மற்றுமின்றி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற creative ஆவலும் காரணம்’ என்று 2ஆம் இதழில் விளக்கம் தந்துள்ளார்கள்.

‘அணி’யின் லட்சியமாக முதல் இதழில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்:

“தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும்
முயற்சியில், மும்பையிலிருந்து தன் தமிழ்ப் பணியைத் தொடங்கும் ‘அணி’
தன்னையும் இணைத்துக் கொள்கிறது. கலை மக்களுக்காகவா அன்றி கலைக்காக
மட்டுமேவா என்ற விவாதங்களைத் தாண்டி தமிழின் மரபையும், நவீன சிந்தனைப்
போக்கையும் இணைக்கும் பாலமாக அணி செயல்பட விரும்புகிறது. ‘அணி’
அனைத்துப் படைப்பாளிகளுக்குமான சங்கப் பலகை. தமிழ் இலக்கியத்தில் எந்த
அணியையும் சாராத, கவிதை வளர்ச்சி ஒன்றையே குற்¢க்கோளாய்க் கொண்டது
நமது ‘அணி’ ”

முதல் இதழில் ‘அணி’க்கு இத்தனை பொருளா என்று புருவம் உயர்த்துமாறு
‘அழகு, வரிசை, படை, வகுப்பு ஒப்பனை, அருகில், அலங்காரம், ஆபரணம், ஒழுங்கு,
நன்மை, பெருமை, மாலை, எல்லை, கருவி, சம்பாரம், வேடம், கோலம், கூட்டம்,
நிரை, நுணா என்று ஒரு அகராதிப் பட்டிலையே தந்திருப்பதும் புதுமையாய் இருக்கி
றது.

முழுதும் கவிதைக்கே என்றாலும் ஓரிரண்டு உரைநடைப் படைப்புகளும் இதழ்
தோறும் சிறப்புச் சேர்க்கின்றன. அவற்றில் ஒன்று இணைய இதழ்களின் அறிமுகம்.
இதழ்தோறும் ஒரு இணைய இதழ் என்று இதுவரை ‘அந்திமழை’, ‘கீற்று’, ‘பதிவு
கள்’ என்று அறிமுகம் செய்துள்ளார்கள். இது ஒரு நல்ல முயற்சி. ‘உலகக்
கவிஞர்கள் வரிசை’ என்றொரு தலைப்பில் இதழ்தோறும் உலகக் கவைஞர்
களை அறிமுகப் படுத்தும் முயற்சியில் ‘மைக்கேல்கோப்’, ‘புகோவஸ்கி’, ‘ஜெரால்டு
மான்லே ஹாப்கின்ஸ்’ என்ற கவிஞர்கள் இதுவரை அறிமுகப்படுத்தப் பட்டிருக்
கிறார்கள். இரண்டாம் இதழிலிருந்து ‘இந்தியக் கவிஞர்கள் வரிசை’ என்ற அறி
முகத் தொடர் வருகிறது. உருதுக் கவிஞர் ‘தரன்னம் ரியாஜ்’, இந்திக் கவிஞர்
‘குல்ஜார்’ பற்றிய பதிவுகள் குறிப்பிடும்படி உள்ளன.

தமிழுக்குப் புதிய அறிமுகங்களான ஹைக்கூ, ஹைபுன், லிமரைக்கூ,
சென்ரியூ, இயைபு நகைத் துளிப்பா எனும் லிமெரி சென்ரியூ (லிமரைக்கூ +
சென்ரியூ = லிமரி சென்ரியூ விளக்கக் கட்டுரைகளும் அம்மரபிலான கவிதைகளும்
இதழ்தோறும் இடம் பெற்றிருப்பது ‘அணி’ யின் சிறப்பாகும்.

முதல் இதழில் கறாரான விமர்சகன் நக்கீரன் பாணியில் ‘கம்ப்யூடர் தராசும்
சமகால ஹைக்கூவும்’ என்ற தலைப்பில் வந்துள்ள ஒரு அரிய அலசல் கட்டுரை
அவசியம் படிக்கத் தக்கது.

நிறைய நூல் விமர்சனங்களும் இதழ் தோறும் வெளியாகின்றன. தனது
கூர்மையான விமர்சனங்களின் மூலம் ‘அன்பாதவன்’ தான் கவிஞர் மட்டுமல்ல
ஒரு சிறந்த விமர்சகர் என்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். கவிஞர்கள்
தமிழன்பன், பழமலய் போன்ற கவிதையில் சாதனை படைத்த கவிஞர்களும்
இதழ்தோறும் எழுதுகிறார்கள். இதழ் 3ல் கவிதையிலும் சாதனை காட்டிய
புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற ‘தொழில்’ கவிதையை ‘புதையல்’ என்ற தலைப்பில்
வெளியிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதைகள், நிறைய கவிஞர்கள் என்று படித்து
மாளவில்லை. கவிதைகளுக்கான சிறு ஓவியங்களும் கருத்தை ஈர்க்கின்றன.
‘அணிச்சேர்க்கை’ என்ற தலைப்பில் புதிய, பழைய சிற்றிதழ்களையும் பட்டியலிட்டு
வருகிறார்கள்.

4வது இதழ் ‘பெண் கவிஞர்களின் சிறப்பிதழா’க வர உள்ளது.

மொத்தத்தில் இதுவரை வந்துள்ள இதழ்களிலிருந்து ‘அணி’ வித்தியாசமான,
புதிய சாதனைகளை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ‘அணி’க் குழுவி
னர்க்குப் பாராட்டுக்கள்!

‘அணி’ – இருமாத இதழ்,
ஆண்டு சந்தா ரூ.50/-
10/1 Trivedi & Desai Chawl,
D’Monte Lane, Orlem, Malad-West,
MUMBAI – 400 064.

*****

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்