கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

ஹெச்.ஜி.ரசூல்


கவிஞர் அய்யப்பமாதவனுடனான ஒரு கவிதை சந்திப்பு கலை இலக்கியப் பெருமன்றம் நாகர்கோவிலில்

கடந்த 24 – 11- 2009செவ்வாய் மாலையில் நடைபெற்றது.தலித்திய ஆய்வாளர் வி.சிவராமன் இந்த சந்திப்பு நிகழ்ச்சியைநெறிப்படுத்தினார்.

அய்யப்பமாதவன் தனது கவிதைபடைப்பின் சாரம் எவ்வாறு வாழ்வின் அபத்தங்களிலிருந்து எழுகின்றனஎன்பது குறித்து விவரித்தார்.துவக்க காலத்தில் சிவகங்கையில் கவிஞர் மீராவின் தொடர்பில் உருவான கவிதை பற்றிய புரிதல் ஹைக்கூ எனும் ஜப்பானிய குறுங்கவிதைவடிவத்திலிருந்து உருவெடுத்ததையும் அழகியஜாடி,

பூக்களை அடுக்கி வைப்போம், அரிசிதான் இல்லையே – என்பது போன்ற கவிதைகள் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகவே தீயின்பிணம் என்றதொருஹைக்கூ தொகுப்பு வெளியானது பற்றி ஞாபகப்படுத்தினார்.அப்போது தான் இதயகீதா என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியதாகவும் இதன்காரணமாகவே பல வாசகர்கள் தன்னை ஒரு பெண் என்று எண்ணி ஏமாந்த சம்பவங்களையும் கூறினார்.

ஒரு கொண்டாட்ட இரவில் அய்யப்பன் என்ற தன் பெயருடன் தன் தந்தையின்

பெயரையும் சேர்த்து இப்பெயரின் உருவாக்கத்தை நண்பர்கள் செய்தனர். என்றார்.

இதுவரை ஆறு கவிதைநூல்கள் வந்திருந்தாலும் அகரம் பதிப்பகத்தின் வெளியீடான நானற்றவேறொருவன்,காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எஸ்புல்லட், இறுதியாக ஆழிபதிப்பகம் வெளியிட்டுள்ள நிசிஅகவல் உள்ளிட்ட கவிதைகள் சிலவற்றின் உருவாக்கச் சூழல் குறித்து விவாதித்தார்.ஒளி இயக்குநர் செழியனுடன் கூடிய நட்பு பற்றியும்குறும்படங்கள் பற்றியும் உரையாடினார். கவிதைகள் எழுதவில்லையெனில்

ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் என்றார்.

தொடர்ந்து ஹெச்.ஜி.ரசூல் அய்யப்பமாதவனின் படைப்புலகம் பற்றி தனது பதிவை முன்வைத்தார்.

சமகால தமிழ்கவிஞர்களில் முக்கியத்துவம் கொண்ட படைப்பாளியா க உருவாகிவந்துள்ளது பற்றியும்

குறிப்பிட்டார்ர். நவீனத்துவப் போக்கின் முக்கியகவிஞர்களில் ஒருவரான நகுலன் குறுங்கவிதைகளின் வடிவத்தில் வாழ்வின் விசாரணையை நடத்தியவர். விடுபட்ட வாழ்வின் கணங்களை ,அசாதாரணங்களை அபத்தங்களை கலைரூபத்தில் பதிவு செய்தவர்.ராமச்சந்தினா கவிதை இந்தவகையில் குறிப்பிடத்தக்கது.

அத்வைத சாயலில் இருந்து விடுபடாத நகுலனின் படைப்பாளுமையையும் கேரளகவிதை வரலாற்றில் குறுங்கவிதைகள்மூலம் தாக்கத்தை உருவாக்கி குஞ்ஞுண்ணியின் கவிதைகளையும் கூட இந்தவகையில் ஒப்பீடு செய்யலாம். அய்யப்பமாதவனிடம் இந்த தொடர்ச்சியைப் பார்க்கலாம். வெள்ளைக்கவிதை- பிளேங்பொயட்ரி வடிவத்தையும் அய்யப்பமாதவன் வெகுவாக கையாண்டுள்ளார். இவரது கவிதைகளின் மற்றொரு அம்சம்புனைவுகளின் மாயத்தன்மையாகும். பலகவிதைகளில் தூண்டில்காரன் மீன் கடல் என்பதான படிமங்கள் ஒரு மாயத்தன்மை அழகியலோடு செயல்பட்டிருப்பதையும் நிசிஅகவல் தொகுப்பு அய்யப்பமாதவனின் படைப்பாளுமையை செதுக்கி காட்டியுள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய கவிஞர் நட சிவகுமார் கால்வினோபோன்ற படைப்பாளிகளின் எழுத்துக்களின் சாயல் ஒரு குறும்பட இயக்குனராக இருப்பதால் அய்யப்பமாதவனின் கவிதைகளில் படிந்திருப்பதாக கூறினார்.

கவிஞர் ஜி.எஸ்.தயாளன் விளிம்பகளின் உலகம் குடி,போதை.காமம் அய்யப்ப மாதவனிடம் படைப்பாகியுள்ளது பற்றி உரையாடினார்.

சிவசங்கர்,ஹாமீம்முஸ்தபா,விஜயகுமார் கண்ணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளும் விமர்சகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கவிஞர் அய்யப்பமாதவன் ஒளி இயக்குநர் செழியனுடன் திரைப்பட துறையில் பணியாற்றுகிறார்.

நாவலாசிரியர் நீலபத்மநாபனின் தலைமுறைகள் நாவல் தற்போது மகிழ்ச்சி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிவருகிறது.இதற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரிமாவட்டத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. கெளதம் இயக்கி நடிக்கும் இப்படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான படபிடிப்பிற்கு வந்த வேளையில் அய்யப்பமாதவனுடனான இந்த உரையாடல் நிகழ்வு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்றது. நாவலாசிரியர் மீரான்மைதீன் இந்த சந்திப்புக்கான் ஏற்பாட்டை செய்திருந்தார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்